சத்திய வசனம் பங்காளர் மடல்
நவம்பர்-டிசம்பர் 2021
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,
தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
இவ்விதழின் வாயிலாக தங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். வருடத்தின் கடைசி பாகத்திற்குள் வந்திருக்கிறோம். கடந்துவந்த மாதங்களில் ஒவ்வொரு கணப் பொழுதிலும் காத்தர் நம்மை பாதுகாத்து பத்திரமாய் நடத்திவந்தார். வரும் காலங்களிலும் அவர் நிச்சயமாய் நம்மோடிருந்து நம்மை பாதுகாப்பார். நம்மை வழிநடத்துவார்.
கொரோனா இரண்டாவது அலையின் பேரழிவிற்கு பின் தேசம் இயல்பு நிலை திரும்பி, பள்ளிகள், கல்லூரிகளும் திறக்கப்பட்டு மாணவர்களும் உற்சாகத்தோடு சென்று வரக்கூடிய நல்ல கால அனுகூலங்களை கர்த்தர் தந்தபடியால் ஆண்டவருக்கே மகிமையைச் செலுத்துவோம். இப்போது அதிகமான கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினாலும் மீண்டும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலைகளிலும் கர்த்தர் தயவாய் நம்முடைய தேசத்திற்கு மனமிரங்கவும், சேதங்கள், அழிவுகள் அதிகரிக்காதபடி தேசத்தின் மக்களை பாதுகாத்தருளவும் தொடர்ந்து ஜெபிப்போம்.
சத்தியவசனம் 2022ஆம் வருட காலண்டர் அச்சுப் பணியிலுள்ளது. வந்தவுடன் அதை பங்காளர்களுக்கு அனுப்பி வைக்கிறோம். கூடுதலாக காலண்டர் தேவைப்படுபவர்கள் காலண்டரின் விளம்பரத்திலுள்ளபடி அதற்கான நன்கொடையை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். சத்தியவசன ஊழியத்தை ஜெபத்தோடு தாங்கிவருகிற அனைத்து பங்காளர்களுக்கும், சத்தியவசன தொலைகாட்சி ஊழியத்தை ஆதரவாளராக இணைந்து ஆதரித்து வருகிற யாவருக்கும் நன்றிகளைக் கூறிக்கொள்கிறோம். இவ்வூழியத்தினாலே தாங்கள் பெற்றுக்கொண்ட ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களது மனபாரங்கள் ஜெபவேண்டுதல்களையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உங்களுக்காக பாரத்தோடு ஜெபிப்போம்.
இவ்விதழை கிறிஸ்துமஸ் சிறப்பிதழாக வெளியிட்டுள்ளோம். இவ்விதழில் அந்த நட்சத்திரம் என்ற தலைப்பில் சகோ.எஸ்.ஜி.யோகநாதன் அவர்கள் எழுதிய சிறப்புச் செய்தியும், விதவையென்றாலும் முதிர்வயதிலும் தேவனை ஆராதித்துக்கொண்டிருந்த அன்னாளைக் குறித்த சிறப்புச் செய்தியை முதுமையிலும் இனிமை கண்ட அன்னாள் என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்களும் எழுதியுள்ளார்கள். உம்முடைய இரட்சண்யத்தை என் கண்கள் கண்டது என்ற தலைப்பில் சகோ. பழனிவேல் ஆபிரகாம் அவர்கள் சிமியோனைக் குறித்து எழுதிய செய்தியும், ஜீவ ஒளி நானே என்ற தலைப்பில் Prof.S.C.எடிசன் அவர்கள் அளித்த செய்தியும், தச்சன் என்ற தலைப்பில் Dr.W.வாரன் வியர்ஸ்பி அவர்களது சிறப்புக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. மேலும் Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய தானியேல் புஸ்தகம் தொடர் வேதபாடத்திலிருந்து அரசகட்டளையா? ஆண்டவன் கட்டளையா? என்ற தலைப்பில் சிறப்பு செய்தி இடம் பெற்றுள்ளது.
இச்செய்திகள் யாவும் தங்களது ஆவிக்குரிய வாழ்வின் ஆசீர்வாதத்திற்கு அதிக பிரயோஜனமாக இருக்க ஜெபிக்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்