சகோதரி சாந்தி பொன்னு
(நவம்பர்-டிசம்பர் 2021)
ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம் பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள் … அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள் (லூக்கா 2:37,38).
வாழ்விலோ தனிமை, வயதிலோ முதுமை,
ஆனாலும், மனதிலே அப்படியோர் இனிமை!
எங்கிருந்து வந்ததது; யார் சொல்லித் தெரிந்தது
ஆராதனையில் களித்திருந்து, ஆண்டவனை
நினைத்திருந்து, நேரம் தவறவில்லை, நிமலனைத்
தரிசிக்க காலம் தாழ்த்தவில்லை, இரட்சகரை அறிவிக்க.
நீதிபரர் வருகிறார், செய்தியையும் அறிவாயே;
நினைத்தேங்கி மகிழ்வாயோ, நிதம் பயந்து சாவாயோ!
ஆராதனையில் களித்திரு, ஆண்டவனை நினைத்திரு
ஆகாமல் போனாலும், நீ, ஆகாயத்தில் எழும்பிடுவாய்.
மறுபடியும் ஒரு கிறிஸ்துமஸ் காலம்; மறுபடியும் ஒரு கொண்டாட்டம். நல்லது. இயேசு பிறந்தார் என்பதை நினைந்து பார்ப்பது மிக நல்லது. ஆனால், வெகுவேகமாக மாறிக்கொண்டே போகிற இந்த உலகவாழ்வில், மாறிக்கொண்டிருக்கும் நமது வாழ்வின் பருவநிலைகள், சந்திக்கும் சூழ்நிலைகள் மத்தியில், இயேசு பிறந்தார் என்ற இந்த கிறிஸ்துமஸ் செய்தி என் ஆத்துமாவில், என் ஆவிக்குரிய வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா அல்லது ஆகக் குறைந்தது அதைக் குறித்து நாம் சிந்திக்கிறோமா என்ற கேள்வியை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.
கடந்த கிறிஸ்துமஸ் நாட்களைப் பார்க்கிலும் இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் நான் இன்னும் ஆண்டவரைக் கிட்டிச்சேருவேனா, அல்லது சேர்ந்திருக்கிறேனா என்று சிந்திப்பது நல்லது. ஏனெனில் இந்நாட்களில் நாம் எதெதெற்கோ முக்கியத்துவம் கொடுக்கிறோம். எதெதெனாலோ கவரப்படுகிறோம். நாம் எங்கே போகிறோம் என்ற சிந்தனையின்றியே உலகத்தின் வஞ்சகத்தினால் இழுவுண்டுபோகிறோம். நமது எதிர்பார்ப்பு என்ன? நமது சிந்தனையை நிறைத்திருப்பது என்ன? நாம் எதைக் குறித்து அதிகமாக சிந்திக்கிறோமோ, எதைக் குறித்து அதிகமாக வாஞ்சிக்கிறோமோ அதுதான் நம் வாழ்வை நடத்துகிறதாய் இருக்கிறது. இந்தக் கிறிஸ்துமஸ் நாட்களில் நமக்காகவே வந்து பிறந்த கிறிஸ்துவை வாஞ்சிக்கிறோமா? அல்லது வெறும் கொண்டாட்டங்களையும் ஆரவாரங்களையும் வாஞ்சிக்கிறோமா? என்பதை நிதானித்துப்பார்ப்பது நல்லது.
அன்னாள்
இயேசுகிறிஸ்து பிறந்த நாட்களின் சம்பவங்களின் மத்தியில் ஒரு வயதில் மூத்தவரான ஒரு தாயாரை நாம் வேதாகமத்திலே சந்திக்கிறோம். இவருடைய கோத்திரத்தைக் குறித்து லூக்கா கவனமாக எழுதியுள்ளார். “…ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டிய ருசிவர்க்கங்களை அவன் தருவான்” (ஆதி.49: 20) என்று தகப்பன் யாக்கோபினால் அறிவிக்கப்பட்ட, யாகோபின் மகனாகிய ஆசேரின் கோத்திரத்தில் வந்த பானுவேலின் குமாரத்தியாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசிதான் இவர் (லூக்கா 2:36).
தனிமையிலும் கிறிஸ்துமஸ்:
இந்த அன்னாள் ஒரு விதவை. ஏழு வருடங்கள் மாத்திரம் புருஷனுடன் வாழ்ந்து கன்னிப்பிராயத்திலே விதவையாகிவிட்டவர். அந்நாட்களில் விதவைகள் எல்லா விதத்திலும் கவனிக்கப்பட்டார்கள். அவர்களுடைய தேவைகள் கவனிக்கப்பட்டதோ இல்லையோ, அவர்களுடைய உத்தமம் மிக கவனமாகக் கவனிக்கப்பட்டது. கணவனை இழப்பது, அதிலும் இளவயதிலே கணவனை இழப்பது, இன்னும் அதிகமாகச் சொன்னால் பிள்ளைகளே இல்லாமல் கணவனை இழந்துவிடுவது, ஒரு பெண்ணுக்கு எத்தனை துன்பமான துயரமான வேதனை மிகுந்த காரியம் என்பது சொல்லித் தெரியத்தேவையில்லை. வாழ்வின் நம்பிக்கையே சிதைந்து நாசமாகிவிடும். மனக்கசப்பு, கோபம், எரிச்சல், தாழ்வு மனப்பான்மை என்று பலவித மனப்போராட்டங்களை சந்திக்க நேரிடும். பல வேளையும் தேவன் மீதே கசப்புக்கொள்ள வைத்துவிடும். எத்தனை உறவுகள் இருந்தாலும் தனிமை என்ற கொடிய உணர்வு சாதாரணமாகவே நம்மைக் கொன்றுபோடும். அப்படியிருக்க வயது முதிர்ந்த காலத்தில் அது எத்தனை தடுமாற்றத்தைக் கொடுக்கும் தெரியுமா? இது பெரிய கொடுமைதான்!
ஆனாலும், இத்தனிமையின் துயரம், மனக் கசப்படையச் செய்வது மாத்திரமல்லாமல், இன்னுமொரு காரியத்தையும் அது செய்யவல்லது என்பதையும் நாம் மறுக்கமுடியாது. சில நாட்கள் போராட்டமாய் இருந்தாலும், நாளடைவில் ஒருவித மென்மையும், அன்பும், தனிமையிலும் துயரத்திலும் இருக்கும் மற்றவர்கள் பேரிலே ஒரு பரிவும் உள்ள மனதையும் அதனால் தோற்றுவிக்க முடியும். மனக் கசப்பா, அன்புள்ள உள்ளமா, எது நம்மை ஆட்கொள்ளுகிறது என்பது, நம் வாழ்வில் தேவன் எங்கே இருக்கிறார், நாம் அவரை எப்படிக் காண்கிறோம் என்பதிலேயே தங்கியிருக்கிறது.
இந்த அன்னாள் தனிமையாகிவிட்ட தன் வாழ்வை சீரழியவிடவில்லை. ஜெபத்தாலும் வேண்டுதலாலும், ஆராதனையாலும் தன் நாட்களை நிரப்பினாள். எதற்கோ காத்திருப்பது போல தேவாலயத்தைவிட்டு நீங்காமல் தேவனையே ஆராதித்துத் தொழுதுகொண்டிருந்தாள். அவளுடைய சிந்தனை முழுவதும் தேவன் நிறைந்திருந்தார். அவள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கவில்லை. மற்றவர்கள்பேரில் பொறாமை கொண்டிருக்கவில்லை. எனக்கு ஏன் இப்படி நடக்கவேண்டும் என்று அவள் தேவனை நிந்திக்கவில்லை. அவள் தேவனைத் தேடினாள். நேசித்தாள். அவருக்காகக் காத்திருந்தாள். காத்திருந்த அவளுக்குக் கிறிஸ்துமஸ் வந்தது!
பிரியமான சகோதர சகோதரியே, உனக்கும் வாழ்க்கையில் பலவித தோல்விகள் தனிமைகள், துன்ப துயரங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றால் நீ ஆளப்படாதபடிக்குப் பார்த்துக்கொள். ஏன் என்று கேட்பதை விட்டுவிட்டு, இந்தத் தனிமை வாழ்விலும் நான் என்ன செய்யலாம் என்று சிந்திக்கப்பார். தேவன் உனக்கு அநீதி செய்தார் என்று நினைக்காதே. அன்னாள் மாதிரி நீ வரப்போகிறவருக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. ஏனெனில் அவர் வந்து, தம்மையும் நமக்காகத் தந்தும் விட்டாரே! அந்த அன்பை நினைந்து பார். அந்த அன்பரை ஆராதித்துத் துதித்திரு. அதுதான் உனக்கு கிறிஸ்துமஸ். தனிமையிலிருக்கும் உனக்காகத்தான் அன்று கிறிஸ்து பிறந்தார். அவர் இன்று உன் உள்ளத்திலே பிறக்கட்டும்.
நம்பிக்கையற்ற முதுமையிலும் கிறிஸ்துமஸ்
இப்பொழுதெல்லாம் இளவயதிலேயே வாழ்க்கையில் சலிப்படைந்து, ‘செத்துப்போனால் என்ன’ என்று அலுத்துக்கொள்கிறவர்கள் பலர். அப்படியானால் முதுமைக்காலத்தைப்பற்றி சொல்லவேண்டியதில்லை. சாவு வராதா என்று, கிறிஸ்துவைக் காணவேண்டும் என்று ஆவலிலல்ல; பாடுள்ள, தனிமையான, பிள்ளைகளால் கைவிடப்பட்ட, வருத்தம், வியாதி நிறைந்த இந்த வாழ்வை முடித்துக்கொள்ள, அல்லது பாடுள்ள இந்த உலகிலிருந்து தப்பித்துக்கொள்ள வகை தேடியே சாவை விரும்புகிற பல முதியோர்களை நாம் காண்கிறோம். மாத்திரமல்ல, இந்தக் கிறிஸ்துமஸ் நாட்களில் இந்த முதியவர்கள் கவனிக்கப்பட வேண்டிய முக்கியஸ்தர்கள் என்பதை அநேகர் சிந்திப்பதில்லை.
வயது ஏற ஏற, முதுமை வரும். இந்த முதுமை நமது சரீரத்தைப் பெலவீனப்படுத்திவிடுகிறது. அடுத்தவர்களில் தங்கி வாழவேண்டிய நிலைமைக்குத் தள்ளிவிடும். இந்த முதுமை சரீரத்தை மாத்திரமல்ல, இருதயத்தையே பிழிந்துவிடும். அதிலும் முதுமையிலே மனத்திருப்தியும் எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் பலருக்குக் குறைந்துவிடுகிறது. அதிலும் கைவிடப்பட்டுவிட்டேனே என்று எண்ணிவிட்டால் போதும்; இனியென்ன சாவுதானே என்று எண்ண வைக்கும். மொத்தத்தில் நம்பிக்கை அற்றுப்போகும். வாழ்வில் ஒரு வித எதிர்பார்ப்பும் இன்றி சலிப்படைய வைக்கும்.
ஆனால், அன்னாள் அப்படி இருக்கவில்லை. இந்த விதவைக்கு இப்போது வயது எண்பத்து நான்கு. தேவன் தன்னைக் கைவிட்டார் என்றோ, தன்னைவிட்டுத் தூரவிலகிவிட்டார் என்றோ அவள் நினைக்கவில்லை. நினைத்திருந்தால் அந்த வயதிலும் அவள் தேவாலயத்தைவிட்டு விலகாமல் இருந்திருப்பது ஆச்சரியமே! இரவும் பகலும், தன் வாழ்வின் நம்பிக்கையானவரை அன்னாள் ஆராதித்தார். தன் பெலமானவரை ஆராதிக்கும்படி உபவாசத்திலும் ஜெபத்திலும் தரித்திருந்தார். தன் நம்பிக்கையை சிறிதேனும் அன்னாள் இழந்து போகவில்லை. வயது சென்றாலும், மரணம்தான் நெருங்கினாலும் இன்னும் இன்னும் தேவனைக் கிட்டிச்சேருவேன் என்ற நம்பிக்கை இன்னும் இன்னும் அவருக்குள் வளர்ந்துகொண்டே இருந்தது. நம்பிக்கையற்ற சூழ்நிலையிலும் தன் நம்பிக்கையை இழந்துபோகாத இந்த அன்னாளுக்குக் கிறிஸ்துமஸ் வந்தது.
சகோதரி, பலவித சூழ்நிலைகளினால் உன் வாழ்வில் நம்பிக்கை இழந்து தவிக்கிறாயா? அல்லது முதுமை நிலையிலிருந்து நம்பிக்கையற்றுப்போய் இதை வாசித்துக்கொண்டிருக்கும் அருமை அம்மா ஐயா, என்ன கிறிஸ்துமஸ் என்று கண்கலங்குகிறீர்களா? தேவன் உங்களுக்குத் தூரமானவர் அல்ல. பரலோகின் மேன்மைகளை விட்டு, அவர் உங்களைத் தேடி வந்தவர். அவர் உங்களை விட்டுவிடுவாரா? நம்பிக்கை என்பது நீங்கள் ஒன்றின்மீது வைக்கும் நம்பிக்கை அல்ல; அது ஒருநாளைக்கு நம்மைக் கைவிட்டுவிடும். நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆண்டவர்மீது நம்பிக்கை வைப்பதுதான் மெய்யான நம்பிக்கை! அது அவரையே காணச்செய்யும் அளவுக்கு நம்மை அழைத்துச் செல்லும். அந்த நம்பிக்கை இருந்தால் அதுதான் உங்களுக்கும் கிறிஸ்துமஸ்!
என்றைக்கும் கிறிஸ்துமஸ்
இந்த அன்னாள் ஒரு தீர்க்கதரிசி என்று எழுதப் பட்டுள்ளது. தீர்க்கதரிசி என்றதும் வருங்காரி யத்தை அறிவிப்பவர்கள் என்றுதான் நாம் நினைப்பதுண்டு. அதிலும் மேலாக அவர்கள் தேவனோடு வாழ்ந்து, தேவனுக்காகப் பேசுபவர்கள்; அவரது சாட்சியை சத்தியத்தை அறிவிக்கிறவர்கள் என்பதையும் நாம் நினைவுகூரவேண்டும்.
இந்த அன்னாள், நம்பிக்கையோடு காத்திருந்த அன்னாள், விதவையாயிருப்பினும் முதுமையிலும் கசப்புக்கொள்ளாமல் தேவனை ஆராதித்திருந்த அன்னாள், காத்திருந்த நம்பிக்கையைக் கண்டாரா? ஆம், கண்டார். குழந்தை இயேசுவை தேவாலயத்திற்குக் கொண்டுவந்தபோது, அந்நேரத்திலே அன்னாளும் வந்தார். கர்த்தரைக் கண்டாள். இவர்தான் இயேசு என்று பரிசுத்த ஆவியானவராலே உணர்த்தப்பட்டார். அந்த முதுமையிலும் அவர் எத்தனை பாக்கியவதி என்று பாருங்கள்! மாத்திரமல்ல, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் இயேசுவைக் குறித்து சாட்சி பகர்ந்தார்.
சகோதர சகோதரியே, உங்கள் வாழ்வில் நீங்கள் இயேசுவை அனுபவிக்கிறீர்களா? ருசி பார்த்திருக்கிறீர்களா? வருங்காலத்தைச் சொல்லும் வரத்தைப் பெற்றிருக்கவில்லையே என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். கண்டதையும் கேட்டதையும் அனுபவித்ததையும் சாட்சியாகக் கூறி அறிவிக்கலாமே. உங்கள் துக்கத்தோடும் தனிமையோடும் போராடிப் போராடி ஏன் இளைத்துப் போகவேண்டும்? எப்பொழுதெல்லாம் ஆண்டவரைக் கூறி அறிவிக்கிறோமோ, அந்த ஒவ்வொரு நேரமும் நமக்குக் கிறிஸ்துமஸ்தான்! அந்த சந்தோஷத்தை எந்த ஒரு காரியமும், எந்தவொரு கொண்டாட்டமும் தரவே முடியாது.
இனி அதிக காலம் கிறிஸ்துமஸ் கொண்டாடிக் கொண்டிருக்கமாட்டோம் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் கிறிஸ்துவின் வருகையின் காலம் சமீபித்துவிட்டதை நாள்தோறும் நடைபெறும் காரியங்களும், வேதத்தின் வார்த்தைகளும் நமக்கு உறுதிப்படுத்துகின்றன. ஆகவே, சகோதர, சகோதரிகளே, இனி உங்களுக்கு தனிமை இல்லை. ஏனெனில், நாம் நித்தியமாய் வாழ வென்றே சிருஷ்டிக்கப்பட்டவர்கள்; அழைக்கப்பட்டவர்கள். ஆகவே, இழந்துபோயிருக்கும் உங்கள் நம்பிக்கையைக் கட்டியெழுப்புங்கள். ஏனெனில் வானத்திலே கிறிஸ்து வரும் நாள் சமீபித்து விட்டது. அவருக்காகக் காத்திருக்கும் உங்கள் நம்பிக்கை பொய்த்துப்போவதில்லை.
ஆகவே, ஜெபத்திலும் தியானத்திலும் ஆராதனை யிலும் தரித்திருங்கள்.
கிறிஸ்துவின் வருகைக்காகக் காத்திருப்போம்.
அவர் வரப்போகிறார் என்ற செய்தியையும் சேர்த்து, கிறிஸ்துவின் அன்பைக் கூறி அறிவிப்போம்.
அப்போது ஒவ்வொரு நாளுமே நமக்கு கிறிஸ்துமஸ்தான். இது எத்தனை சந்தோஷம் தெரியுமா?
அன்பின் வாசகர்களுக்கு என் அன்பான
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.