பேராசிரியர் S.C.எடிசன்
(நவம்பர்-டிசம்பர் 2021)
யோவான் சுவிஷேசம் 8ஆம் அதிகாரம் 12 ஆம் வசனத்தில், மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னை பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் சத்திய வசன நேயர்களுக்கு என் அன்பின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! இந்த நாளிலும் தேவனாகிய கர்த்தர் உங்கள் வாழ்க்கையின் இருண்ட பகுதிகளை எல்லாம் வெளிச்சம் ஆக்குவாராக.
நானே, உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறேன் என்று சொன்னதிலே, வெளிச்சத்திற்கும் தேவனுக்கும் இடையிலே ஒரு சம்பந்தம் இருப்பதைக் காண்கிறோம். தேவனில்லாத இடத்தில் இருள்தான் இருந்தது. தேவன் உலகத்தை சிருஷ்டித்தபொழுது ஆதியிலே வார்த்தை இருந்தது, பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தின்மேல் இருள் இருந்தது. தேவன் பேசின முதலாவது வார்த்தை எது என்றால் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். உலகத்திலே முதலாவது தேவன் உண்டாக்கினது இந்த வெளிச்சத்தைத்தான். இந்த வெளிச்சம் இல்லையேல் ஒன்றுமே இருக்காது; இருக்கவும் முடியாது. உலகம், அது உயிரோடு இருக்கவேண்டுமென்றால், உலகம் ஜீவிக்க வேண்டுமென்றால் அதற்கு வெளிச்சம் தேவை. நானே, அந்த வெளிச்சத்தை கொடுக்கிற ஒளியாய் இருக்கிறேன் என்கிறார் இயேசுகிறிஸ்து!
கர்த்தர் என் வெளிச்சமானவர் நான் யாருக்கு பயப்படுவேன் என்று சங்கீதக்காரனாகிய தாவீது 27ஆம் சங்கீதத்தில் பாடுகிறதைப் பார்க்கிறோம். இன்னும் நாம் பார்ப்போம் என்றால், ஏசாயா 9 ஆம் அதிகாரத்தில் முதல் இரண்டு வசனங்களில் இயேசு மனிதனாக பிறக்கும்பொழுது என்ன நடக்கும் என்பதையும் இயேசு வசித்த கலிலேயப் பகுதியைப் பற்றியும் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஏசாயா தீர்க்கதரிசனமாக உரைத்துள்ளார்:
“ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புற ஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்” என்று. இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது (வச.2).
இதன் அர்த்தம் என்னவென்றால், தேவனை அறியாத மக்களுக்கு தேவன் தம்மை வெளிப்படுத்துகிறார். பிதா யாரென்று அறியாமல் மோசேயினிடத்தில் இஸ்ரவேலர்கள், “தேவன் எங்களோடு பேச வேண்டாம், நீர் பேசும்” என்று சொன்னார்கள். அப்படி பயந்திருந்த ஜனங்களுக்கு இயேசு ஒளியாக வந்து, பிதாவையும் அவர் நம்மிடத்தில் அன்புகூருவதைப்பற்றியும் அவர்களுக்குச் சொல்லி அவர்களது வாழ்விலிருந்த இருளை வெளிச்சம் ஆக்கினார். இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது (மத்.4: 15-16) என்று மத்தேயு குறிப்பிடுகிறார்.
இந்த உலகத்திலே, பலவிதமான இருள்கள் இருக்கின்றன. வெளிச்சம் இருளுக்கு பகை என்று நம் அனைவருக்கும் தெரியும். ஒரு அறையில் இருள் இருந்தால் என்ன இருக்கிறதென்றே தெரியாமல் அங்கு மிகவும் இருட்டாக காணப்படும். ஒரு சிறு தீக்குச்சியைக் கொளுத்தி அங்கு சிறு வெளிச்சம் வந்தாலே போதும். உடனே அந்த இருள் அங்கு மறைந்து எல்லாவற்றையும் நாம் பார்க்க முடியும். இதுதான் ஒளியின் தன்மை! ஒளியின் முக்கியமான வேலை என்னவென்றால் இருளை நீக்குவது. இராத்திரி ஒரே இருட்டாக இருக்கிறது. அதினால் வெளியில் போக பயப்படுகிறோம். ஆனால், காலையிலே சூரியன் உதித்தவுடன் பூமியெங்கும் வெளிச்சம் வருவதினால் நாம் சந்தோஷப்பட்டு இடறாமல் நாம் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்வோம். அப்படியே, இயேசு நமக்குள் வரும்போது நம்முடைய உள்ளத்திலும் இருக்கும் இருளும் ஓய்ந்துவிடும். இப்போதும் நாம் 3 வகையான இருளைக் குறித்தும் அதை ஒளியாகிய இயேசு நம்மைவிட்டு அகற்றுகிறார் என்பதைக் குறித்தும் பார்ப்போம்.
1. பாவ இருள்
நமக்குள் இருக்கக்கூடிய முதலாவது இருள் பாவ இருள். இந்த பாவம் நமது மனக்கண்களை குருடாக்கி நாம் தேவனை அறியமுடியாதபடி தடுத்துப் போடுகிறது. சிற்றின்பங்களும் பொருளாசைகளும் ஆகிய இவற்றால் இருதயத்தை இருட்டாக்கி, தேவனுடைய பரிசுத்தமும் அன்பும் தாழ்மையுமாக வெளிச்சத்தின் குணங்கள் காணப்படாதபடிக்கு, இந்த பாவம் நம்முடைய இருதயத்தை இருளாக்கிவிடுகிறது. ஆனால் இயேசுவாகிய ஒளி எனக்குள் வரும்பொழுது என்ன நடக்கிறதென்றால் அவர் இந்த பாவத்தை மன்னிக்கிறார். எப்பொழுது இயேசு இந்த பாவத்தை மன்னித்து நான் செய்த பாவத்தை அவர் தான் செய்ததாக ஏற்றுக்கொண்டு எனக்கு தன்னுடைய நீதியைத் தருகிறாரோ அந்த க்ஷணத்திலேயே! என் பாவ இருள் என்னை விட்டுப்போய் எனக்குள் நீதியின் வெளிச்சம் பிரகாசிக்கிறது. அதனால்தான் இயேசு நானே மெய்யான ஒளி என்று சொன்னார்.
சகோதரனே! சகோதரியே! இதை நம்பு. இயேசு உன்னுடைய இருதயத்திற்குள் முதலாவது அவர் உண்டாக்க விரும்புவது இரட்சிப்பின் வெளிச்சத்தைத்தான்! இந்த பாவமன்னிப்பின் வெளிச்சத்தைத்தான் அவர் உனக்குள் உண்டாக்க விரும்புகிறார். ஆகையால் சகோதரனே, சகோதரியே! இயேசுவை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் பொழுது, உங்கள் இருண்ட வாழ்வும் நம்பிக்கை அற்றுப்போன வாழ்வும் கவலையினால் சோர்ந்து போன உங்களது வாழ்வும் அது பிரகாசமானதாக்கப்பட்டு நிச்சயமாய் மாறும். இயேசு இதைத் தான் நமக்கு வாக்குப் பண்ணியிருக்கிறார்.
2. பயமாகிய இருள்
இரண்டாவதாக, மனிதனை சாதாரணமாக பிடித்திருக்கிற ஒரு இருள் என்னவென்றால் அது பயம். அதாவது, மரணபயம். ஜீவகாலமெல்லாம் மரணபயத்தில் அகப்பட்டு இருக்கிறவர்களை விடுவிக்கும்படி இயேசு சிலுவையிலே மரித்து மரணத்தை ஜெயித்தார். மரணபயம் எல்லாருக்கும் உண்டு. புகழ்பெற்ற ஒருவரிடம் நீங்கள் எந்த காரியத்திற்கு அதிகம் பயப்படுகிறீர்கள் என்று கேட்டபொழுது அவர் சொன்னார், ‘நான் மரணத்தைக் குறித்துப் பயப்படுகிறேன்’. எல்லாருக்குமே மரணபயம் உண்டு. ரோட்டில் நடந்து போகும் போதே ஏதாவது Accident நடந்துவிடுமோ? எங்கேயாவது தவறி விழுந்து மண்டையில் அடி பட்டு மரித்துவிடுவோமோ? இதுபோன்ற பயம் வாலிபர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், வயதானவர்களுக்கு அதிகம் இருக்கும். காரணம் அவர்கள் முதிர்ச்சி அடைந்திருப்பதினால் தங்களுக்குள் உள்ள ஜீவன் எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதை அறிந்திருக்கிறார்கள். வாலிபர்கள் இதை அறியமாட்டார்கள். ஆகவே, இந்த மரணபயம் எல்லாருக்கும் உண்டு.
சில ஆண்டுகளுக்கு முன்னதாக வேலூர் கிறிஸ்தவ மருத்துவமனையில் 8 வயதான ஒரு புறஜாதியான சிறுமி ஒரு கொடிய வியாதியினால் சேர்க்கப்பட்டாள். அவளுடைய உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்தன. அவளுடைய கல்லீரல் செயலிழந்தது. அவளுடைய ஈரல் liver அது செயல்படவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய ஜீவன் போய் கொண்டிருந்தது. அப்பொழுது அங்கே இருந்த இரண்டு நர்சுகள், இவளுடைய இருதயமும் தனது செயல்பாட்டை இழந்துகொண்டு இருக்கிறது. இரண்டொரு நாட்களில் இவள் மரித்துபோவாள் என்று பேசிக் கொண்டனர். அது எப்படியோ அந்த பிள்ளையின் காதில் விழுந்துவிட்டது.
அந்த நேரம் முதல் அந்த பிள்ளைக்கு ஒரு பயம் வந்துவிட்டது. ஐயோ! நான் சாகப் போகிறேன் எனக்கு பயமாய் இருக்கிறதே என்று அழுதாள். அவள் தனது தகப்பனார் மிகவும் தைரியசாலி. எனவே அவர் தன்னோடுகூட வருவார் என்று நினைத்தாள். மரணமென்றால் என்னவென்று அந்த பிள்ளைக்குத் தெரியவில்லை. தன் தகப்பனிடம், அப்பா எனக்கு தனியாக சாவதற்கு பயமா இருக்கு, என்கூட வருவீர்களா எனக் கேட்டாள். அதற்கு அவர்: நீ சாகமாட்டாய்; அதினால் தைரியமாயிரு. நான் உனக்கு சாக்லெட் வாங்கிட்டு வாரேன்னு போய்விட்டார். அதற்கு அந்த சிறுமி, எங்க அப்பா எப்பவுமே இப்படித்தான், அவர் நழுவிருவாரு. ஆனால், எங்க அம்மா என்னை ரொம்ப நேசிக்கிறாங்க. அவங்க என்கூட நிச்சயமா வருவாங்கனு. அவங்ககிட்ட கேட்டாள்: ஏம்மா எனக்கு சாக பயமா இருக்கு, என்கூட வருவீங்களா? அவங்க அம்மாவுக்கு பதில் சொல்ல முடியுமா? முடியவில்லை.
அந்த தாயார் இயேசுவை அறியாதவர்கள். அங்கே இருந்த ஒரு ஜெப ஆலய வாசலில் (Chappel) விழுந்து அழுது, இயேசுவே என் பிள்ளையைக் காப்பாற்றும் என்று ஜெபம் பண்ணினார்கள். இயேசு அந்த தாயின் ஜெபத்தைக் கேட்டார். ஆனால் அவங்க கேட்டபடி பிள்ளைக்கு உயிர் கொடுக்கவில்லை. ஆனால், இயேசு அந்த பிள்ளையிடம் வந்தார். அந்த பிள்ளை யாரோ ஒருவர் வெள்ளை உடையில் வருவதைப்பார்த்து நீங்கள் யாரென்று கேட்டாள்? அவர் சொன்னார்: நான்தான் இயேசு. பயப்படாதே, நான் இந்த மரணத்தின் பாதையில் சென்றிருக்கிறேன், எனக்கு அதைப் பற்றி தெரியும், நான் உன்கூட வருகிறேன் என்றார். அந்த நிமிடத்திலேயே அந்த பிள்ளைக்கு மரணத்தின் பயம் அற்றுவிட்டது. அந்த பெண்ணின் தாயார் அவளிடம் வந்தபோது, “அம்மா, இப்போது எனக்குப் பயம் இல்லை, இயேசு என்னிடம் வந்தார்; அவர் என் கூட வருவேன் என்று கூறியிருக்கிறார்”. ஆகவே நீங்கள் அழாதீர்கள் என்றாள். அந்த தாயார், என் மகளுக்கு ஏதோ மூளைக் குழம்பிவிட்டது; ஏதோ பிதற்றுகிறாள் என்றார்கள். ஆனால், அந்த பிள்ளையின் முகத்திலே ஒரு பெரிய அமைதியும் சந்தோஷமும் காணப்பட்டது. அப்படியே அந்த இராத்திரியில் அவள் மரித்துப் போனாள்.
சகோதரனே, சகோதரியே நீங்கள் இயேசுவை அறியாமல் இருக்கலாம். உங்கள் வாழ்க்கையிலுள்ள பாரத்தினாலும் பயங்களினாலும் நீங்கள் அழுதுகொண்டிருக்கலாம். நாளையத் தினத்தைக் குறித்து கவலைப்படாதீர்கள் என்று சொன்ன இயேசு நாளைய தினத்திலும் உங்களோடுகூட வருவார். அவர் வெளிச்சமாயிருக்கிறபடியால் உங்களுக்குப் பாதையைக் காட்டுவார். அவரை நம்புங்கள். அவர் மெய்யான ஒளியாய் இருக்கிறார். பயம் என்னும் இருளை இயேசுவாகிய ஒளி நீக்குகிறது!
3. அறியாமை என்னும் இருள்
மூன்றாவதாக, அறியாமை என்னும் இருளை இயேசு நம்மைவிட்டு விலக்குகிறார். ஆத்துமா அறிவற்றிருப்பது நல்லது அல்ல. அந்த ஆத்துமா தேவனை அறியவேண்டும். இயேசு பூமிக்கு வந்த பொழுது, “பிதா அன்பானவர், அவர் மனதுருக்கம் உள்ளவர், அவர் நம்மை நேசிக்கிறவர்” என்கிற தத்துவத்தை (Concept) சொன்னபடியால், ஜனங்கள் பிதாவைக்குறித்து அறிந்து கொண்டார்கள். இயேசு பூமியில் பிறந்தபொழுது அவர் மெய்யான ஒளியாக இருந்து தன்னை விசுவாசிக்கிற ஒவ் வொரு இருதயத்திற்குள்ளும் அறிவாகிய ஒளியைத் தந்து, அவர் பிதாவை அறிந்துகொள்ளவும் பரம ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளவும் அவர் நமக்கு உதவிச் செய்தார். “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” என்று யோவான் 17ஆம் அதிகாரம் 3ஆம் வசனத்தில் இயேசு கூறுகிறார். இயேசுகிறிஸ்து ஒளியாக இருந்து அந்த தேவனைக் குறித்து நமக்கு போதிக்கும்பொழுது நாம் தேவனை அறிகிறோம். அந்த அறிவு நித்திய ஜீவனை; அதாவது முடிவில்லாத பரலோக வாழ்க்கையை நமக்குத் தருகிறது. இயேசு ஒளியாய் இல்லை என்றால், நமக்கு இந்த பாக்கியம் கிடைத்திருக்காது.
சகோதரனே, சகோதரியே, உங்கள் வாழ்க்கையிலே பாவ இருள் ஆண்டு கொண்டிருக்கிறதா? இயேசுவாகிய ஒளி அதை நீக்கும். பயம் உங்களை ஆண்டுகொண்டு எதையும் செய்ய முடியாமல் தடுத்துக்கொண்டிருக்கிறதா? இயேசுவாகிய ஒளி உங்கள் பாதைக்கு வெளிச்சமாய் இருந்து. உங்களை நடக்கச் செய்யும். நீங்கள் இடறல் அடையமாட்டீர்கள். ஒளியில் நடக்கிறவன் இடறல் அடையமாட்டான்.
இயேசுவாகிய ஒளியைப் பின்பற்றுகிறவன் நித்திய ஜீவனை நிச்சயமாய் அடைந்துகொள்ளுவான். அவன் பிதாவையும் அறிந்திருக்கிறபடியால் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறபடியால் அவன் முடிவில்லாத சந்தோஷமான வாழ்வைப் பெற்றுக்கொள்ளுவான்.