சகோதரி சாந்தி பொன்னு
(ஜனவரி-பிப்ரவரி 2022)

நான் உன் அருகே கடந்துபோகும்போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நீ உன் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்றேன்; ஆம், உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்று சொன்னேன் (எசேக்கி. 16:6).


இயேசுகிறிஸ்துவின் இன்ப நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பின் வாழ்த்துக்கள்.

பழைய பாடல் ஒன்று, பழைய பாடல் என்று சொல்வதைக் காட்டிலும் மறக்கப்பட்ட அந்த பாடல் வரிகள் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. அதை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

அலைந்திடும் உள்ளம் அமைதியை காண்பது,
இயேசுவின் திருவடி சரணாலயம்!
அன்பினில் வாழ்ந்து துன்புறும்போதும்
இயேசுவின் திருவடி சரணாலயம்!

இந்தப் பாடலுடைய மிகுதி வரிகளும் எல்லாமே சரணாலயம் என்றுதான் முடிகிறது. அந்தப் பாடலுடைய ராகம், அதைப் பாடியவருடைய குரல் எல்லாவற்றையும் கேட்கும்போது உள்ளத்திலே ஒருவிதமான ஆறுதல் இயல்பாகவே வருகிறது. அருமையான ஒரு பாடல்! இலங்கை தேசத்திலே பின்னவளா என்ற இடத்திற்கு உங்களில் அநேகர் போயிருப்பீர்கள். நாட்டுக்கு வருகிற சுற்றுலா பயணிகள் இந்த இடத்தை தவற விடுகிறதே இல்லை. அங்கே Elephnet Orphanage என்று போட்டிருப்பார்கள். காடுகளிலே தனித்துவிடப்பட்ட அல்லது யானைகளின் கூட்டத்தினாலே தள்ளிவிடப்பட்ட, காயப்பட்ட இப்படிப்பட்ட யானைக்குட்டிகள், யானைகளைக் கொண்டுவந்து இந்த இடத்திலே அவர்கள் வளர்க்கிறார்கள். அதை வளர்க்கிறவர்கள் அந்த யானைகளுக்கு நல்ல பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் பார்க்கப் போகின்ற வேளையிலே, குளிப்பதற்கு அந்த யானைகளை வரிசையாக அழைத்துச் செல்லும் காட்சி கண் கொள்ளாத காட்சியாய் இருந்தது. யானைகள் வரிசையாக வரும். அந்நேரத்தில் அவைகள் செய்யும் சேட்டைகளையும் குட்டியானைகள் திருப்பித் தாயை அடிக்கிற காட்சிகளையும் நாங்கள் பார்த்து ரசித்திருக்கிறோம். அவைப் பார்ப்பதற்கு மிகவும் அருமையாயிருக்கும். இதை Orphanage என்றுதான் சொல்லுவார்கள். இன்னொரு விதத்திலே Sanctuary என்றும் சரணாலயம் என்றும் அழைப்பார்கள்.

வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டிலே அடைக்கல பட்டணம் என்றவொரு காரியத்தை நாம் வாசிக்கிறோம். ஆனால், இந்த அடைக்கல பட்டணம் வித்தியாசமானது. குற்றஞ்செய்கிறவர்கள், பாவஞ்செய்கிறவர்கள் அல்லது கொலை செய்கிறவர்கள் இந்த அடைக்கலப் பட்டணத்திலே நுழைந்துவிட்டால் இந்த நபராலே பாதிக்கப்பட்டவர்கள் பழிவாங்க முடியாது. அந்த பட்டணத்திலுள்ள ஆசாரியரின் பாதுகாப்புக்குள்ளே அவர் உயிர் வாழணும். ஆனால் அடைக்கலப் பட்டணத்திற்குள்ளே போகவில்லை என்று சொன்னால் பழிக்குப்பழி வாங்கலாம். இது அடைக்கலப் பட்டணம். இந்த அடைக்கல பட்டணங்கள் கிட்டத்தட்ட ஆறு பட்டணங்கள் வெவ்வேறு கோத்திரங்கள் நடுவே இருந்தன.

இன்று நாம் தப்பித்துக்கொள்வதற்கு அடைக்கலப் பட்டணங்கள் நமக்கு இல்லை. ஆனால், நமக்கு இருக்கிறது சரணாலயம்! இதுவொரு அற்புதமான இடமாகும்! அதாவது, இயேசுவின் திருவடி சரணாலயம்! இந்த சரணாலயத்தைக் குறித்து நான் சிந்தித்தபோது எசேக்கியேல் தீர்க்கதரிசனப் புத்தகத்தில் 16ஆம் அதிகாரத்தில் கர்த்தர் எசேக்கியேல் மூலமாக பாபிலோனிலே சிறைப்பட்டிருந்த மக்களுக்குச் சொல்லப்பட்ட சில வார்த்தைகள் என்னுடைய மனதிலே தோன்றியது. இந்த வார்த்தைகள் சொல்லப்பட்ட காலம் கிறிஸ்துவுக்கு முன் 570-571 ஆம் ஆண்டுகள் என நாம் சொல்லலாம்.

இந்தப் பகுதியிலே சில வசனங்களைமட்டும் நாம் பார்ப்போம். ஆனால், ஒரு சின்ன மாற்றம் செய்து வாசிப்போம். இதிலே உனக்காய் எனச் சொல்லப்பட்டுள்ளதை நான் எனக்காய், என்னுடைய என்று வாசித்துப்பார்ப்போம். ஏனென்றால் ஒரு காலத்தில் இந்த பகுதி என்னுடைய நிலைமையை எனக்கு உணர்த்திய அருமையான பகுதி. நான் இந்த இயேசுவின் திருவடி என்ற சரணாலயத்திற்குள்ளே கொண்டுவந்த காட்சி, கொண்டு வரப்பட்ட காட்சி இந்த அதிகாரத்திலே எழுதப்பட்டிருந்ததை நான் பல வருஷங்களுக்கு முன் படித்தபோது என் கண்களில் கண்ணீர் நிறைந்தது. எசேக்கியேல் 16 ஆம் அதிகாரத்தில் 4 ஆம் வசனம் முதல் சில வசனங்களை என்னை வைத்து வாசிக்கிறேன்.

என் பிறப்பின் வர்த்தமானம் என்னவென்றால், நான் பிறந்த நாளிலே என் தொப்புள் அறுக்கப்படவுமில்லை; நான் சுத்தமாவதற்குத் தண்ணீரினால் குளிப்பாட்டப்படவுமில்லை; உப்பால் சுத்திகரிக்கப்படவுமில்லை; துணிகளில் சுற்றப்படவுமில்லை. எனக்காகப் பரிதபித்து, இவைகளில் ஒன்றையாகிலும் எனக்குச் செய்ய ஒரு கண்ணும் என் பேரில் இரக்கமாயிருந்ததுமில்லை; நான் பிறந்த நாளில் நான் அருவருக்கப்பட்டதினால் வெளியில் எறிந்து விடப்பட்டேன். கர்த்தர் என் அருகே கடந்துபோகும்போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நான் என் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, என் இரத்தத்தில் கிடக்கிற என்னைப் பார்த்து: பிழைத்திரு என்றார்; ஆம், என் இரத்தத்தில் கிடக்கிற என்னைப் பார்த்து: பிழைத்திரு என்று சொன்னார் (எசேக்கி.16:4-6).

இதை வாசிக்கும்போது நீங்கள் நினைக்கக் கூடாது, என்னுடைய தாயார் என்னைப் பெற்று வீதியிலே எறிந்துவிட்டார் என்று. என்னுடைய பாவ நிலைமையை, நம்முடைய அபாத்திரமான நிலைமையை இங்கே நாம் பார்க்கிறோம். இங்கு கர்த்தர் யூத வம்சத்தாருக்கு சொல்லப்பட்ட வார்த்தை. இப்படித்தான் நீ கிடந்தாய், உன்னைப் பார்த்து எல்லாரும் அருவருத்தார்கள். எல்லாரும் உன்னைக் கண்டு தூர விலகிப்போனார்கள். நானோ உன் அருகே வந்து உன்னுடைய அழுக்கோடு நான் உன்னைத் தூக்கி, உன்னைச் சுத்தம் பண்ணி, உன் கறைகளையெல்லாம் நீக்கி நான் உன்னை எடுத்து வளர்த்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எங்கே வைத்து வளர்க்கிறார்? தம்முடைய கூடாரத்திற்குள்ளே வைத்து வளர்க்கிறார். எவ்வளவு அற்புதமான வார்த்தைகள் பாருங்கள்!

அநாதரவாய் எல்லாராலும் தள்ளப்பட்ட நிலையில் இருக்கும்போது யாரும் புரிந்துகொள்ளவில்லையே, அன்பு செலுத்த யாருமில்லையே என்று இருக்கிறீர்களா? உங்களைத் தேடி உங்களுக்கு அருகில் இருக்கிறவர் ஆண்டவர் ஒருவரே! அவர் என்ன செய்கிறார்? தூக்கி பிழைத்துப்போ என்று சொல்லுகிறது மட்டுமல்ல, அவர் அழைத்துக் கொண்டுபோய் தம்முடைய கூடாரத்தில் வைத்து வளர்க்கிறார். இந்தப் பகுதியினுடைய மீதமுள்ள காரியங்களை நீங்கள் வாசித்துப் பாருங்கள். இந்த 16ஆம் அதிகாரத்தில் இருக்கிற வார்த்தைகளை உங்களை வைத்து நீங்கள் வாசித்துப் பாருங்கள். அவர் கொண்டுபோய் எப்படியெல்லாம் அலங்காரம் பண்ணி, எந்தவிதமான மெல்லிய ஆடைகளை உடுத்தி, உங்களை வளர்த்து உங்கள் இளவயது அழகான பருவம் மட்டும் உங்களை அற்புதமாக வளர்ந்து வந்தார் என்று எசேக்கியேல் மூலமாக யூதாவுக்கு அறிவித்த வார்த்தை இன்று எனக்கும் உங்களுக்கும் வருகிறது. ஆண்டவர் எவ்வளவு நல்லவர்! அவர் என்னைத் தூக்கி நிறுத்தி எல்லாப் பருவத்திலும் எங்களை வழிநடத்திக்கொண்டு வந்தவர். அவருடைய சரணாலயம் அவருடைய பாதுகாப்புக்குள்ளே வைத்து நம்மை நடத்துகிற தேவன்.

இந்தப்பகுதியை நாம் பின்னாலே பார்த்தோமானால் இந்த யூதா என்ன செய்தது? இவ்வளவு செய்த கர்த்தரைவிட்டு தூரமாய்ப் போய்விட்டது. ஆனால், ஆண்டவர் தம்முடைய வாக்குறுதியை மறக்கவேயில்லை, நான் திரும்பவும் உன்னைக் கூட்டிவருவேன், உன்னை கூட்டிச் சேர்ப்பேன் என்று சொன்ன ஆண்டவர்தாமே தாமே மனுஷனாக உலகிற்கு வந்து நம்மைச் சேர்த்துக்கொள்ளும்படி இன்றைக்கு எனக்கும் உங்களுக்கும் அருகிலே நிற்கிறார். அவருடைய சரணாலயம் திறந்தபடியே இருக்கிறது. யாரெல்லாம் தங்களது பாவங்களை அறிக்கையிட்டு, ஐயோ! நான் ஒன்றுமில்லை என்று போகிறானோ அவனுக்கு அந்த சரணாலயம் திறந்திருக்கிறது.

இயேசு சொன்ன ஓர் உவமையைச் சொல்கிறேன். உங்களுக்கு தெரிந்த உவமைதான். நல்ல சமாரியனுடைய உவமை. அது வேறு விதமான சந்தர்ப்பத்திலே சொல்லப்பட்டாலும் அங்கே வந்த சமாரியன் ஒருவன், லேவியனும் ஆசாரியனும் விட்டுவிட்டுப்போன அந்த அடிப்பட்ட கள்ளனை, திருடர்களால் அடிப்பட்ட அந்த மனுஷனைத் தூக்கியெடுத்து எண்ணெயும், ரசமும் கொடுத்து அவனைச் சுத்தப்படுத்தி அவனைக் கொண்டுபோய் அந்தச் சத்திரத்தில் விட்டானே. அன்றைக்கு இந்த சமாரியனுடைய அனுக்கிரகத்திலே இந்தச் சரணாலயம் அவனுக்குத் திறக்கப்பட்டு கொடுக்கப்பட்டது. எவ்வளவு அற்புதமான சரணாலயத்திற்குள் இன்று நாம் வந்திருக்கிறோம்.

பிரியமானவர்களே, கலங்கவேண்டாம். நீங்கள் எந்தநிலையில் இருக்கிறவர்களானாலும் கலங்கவேண்டாம். கர்த்தர் உங்களோடுகூட இருக்கிறார். அவர் நம்முடைய சரணாலயமாய் இருக்கிறார். அவர் நம்மை விசாரிக்கிறவராய் இருக்கிறார். அவருடைய கிருபையும் அவருடைய கரமும் உங்களோடு, என்னோடுகூட என்றென்றும் கூடவே இருக்கிறது. இயேசுவின் திருவடி சரணாலயம். அவரை அண்டிச் சேருகிற ஒருவரையும் அவர் புறம்பே தள்ளுகிற தேவனே அல்ல.

வேதாகமத்திலே ஒரு வார்த்தை இருக்கிறது. உபாகமத்திலே அதை வாசிக்கிறோம். யெஷூரனுடைய தேவனைப்போல ஒருவரும் இல்லை; அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின் மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார். அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம் (உபா.33:26,27). அநாதி தேவன் நமது அடைக்கலமானவர். அவருடைய புயங்கள் எப்போதும் நமக்கு ஆதாரமாய் இருக்கிறது.

ஆகையினால் பிரியமானவர்களே, வாழ்க்கைப் போராட்டத்தினாலே தவிக்கிறீர்களா? பிரச்சனைகளினால் தவிக்கிறீர்களா? நமக்கு ஒரு சரணாலயம் உண்டு. அதற்குள்ளே நாம் சென்று விடுவோமானால், மனப்பூர்வமாக நம்மை ஒப்புக்கொடுப்போமானால் அவர் நம்மை சரியான பாதையிலே வழிநடத்துவார். என்ன துன்பமோ, என்ன வேதனையோ அவருடைய சரணாலயம் உங்களுக்காக எப்போதும் திறந்திருக்கிறது. மீண்டும் அந்த பாடல் வரிகளை நாம் சொல்லுவோமா!

அலைந்திடும் உள்ளம் அமைதியை காண்பது,
இயேசுவின் திருவடி சரணாலயம்!
அன்பினில் வாழ்ந்து துன்புறும்போதும்
இயேசுவின் திருவடி சரணாலயம்!