பழைய ஏற்பாட்டு வேதபாடம்
Dr.உட்ரோ குரோல்
(ஜனவரி-பிப்ரவரி 2022)

தானியேல்

4 ஆம் அதிகாரம்

‘தான்’ என்ற பெருமைகொண்டு வாழ்ந்த மனிதர்களில் நேபுகாத்நேச்சார் அரசரும் ஒருவர். ஆனால், பரலோக தேவனே ஆளுகிறவர் என்பதை அவர் அறிந்துகொண்ட காலமும் வந்தது. வல்லமையான ஓர் அரசனுக்கும் சர்வவல்ல தேவனுக்கும் இடையே நடந்த மோதலை தானியேல் அழகாக விவரித்துள்ளார். தேவ பக்தனாகிய தானியேல் ஒரு வேற்றுசமய அரசனுக்கு ஆலோசகராகவும், அரசாங்கத்தில் உயர்ந்த பதவியை வகித்தவருமாக இருந்தார். உன்னத தேவனுக்கு தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தவராய், ஆபத்துகளின் நடுவிலும் ஒரு வல்லமையான சாட்சியாக வாழ்ந்தார். தேவன் தானியேலுக்கு சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவையும் அருளினார்.

பொதுவாக பழைய ஏற்பாட்டில் தேவன் தம்முடைய செய்தியை மனிதனுக்கு சொப்பனங்கள் மூலம் வெளிப்படுத்தினார். தேவமனிதர்கள் மூலமாகவோ அல்லது அவர் நியமித்த சில மனிதர்கள் மூலமாகவோ அச்சொப்பனங்களின் விளக்கங்கள் அறிய வந்தன. எனவே தேவன் சொப்பனங்களை மட்டுமல்ல, அதனை ஒரு மனிதனுக்குக் கொடுத்து, அவர் தெரிந்துகொண்ட மற்றொரு மனிதனுக்கு அதன் விளக்கத்தையும் வெளிப்படுத்தினார்.

இன்று தானியேல் புத்தகத்தில் காணப்படும் மூன்று அரசர்களைப் பற்றி நாம் ஆராய்வோம். அநேக சரித்திர சம்பவங்கள் அதில் இருந்தாலும் நாம் இவ்விதழில் நான்காம் அதிகாரத்தைக் கூர்ந்து படிப்போம்.

நான்காம் அதிகாரம் மிகமிக ஆணவமும் அகந்தையும் நிறைந்த ஓர் அரசனைப்பற்றியும் அவனது அழிவைப்பற்றியும் விவரிக்கிறது. அவனது பெருமை அவனுக்கு அழிவைத் தேடித் தந்தது. 43 ஆண்டுகளாக நேபுகாத்நேச்சார் அரசாண்டான்; அது ஒரு நீண்ட கால ஆட்சியே. எனவே அவர் அதிக பெருமையடைவது மிக எளிதானதே. தங்களுடைய முயற்சியால் வாழ்வில் உயர்ந்தோர் பொதுவாக பெருமையுடையவர்களாகவே திகழ்வர்.

ட்டெட் டேர்னர் என்பவர் தொலைக்காட்சி மற்றும் ஊடகத்தகவல் தொடர்பு துறையில் மாபெரும் வெற்றி கண்டவர்; அதேவேளையில் அதிகப் பெருமையுடையவராயும் இருந்தார். கருக் கலைப்பை எதிர்ப்பவர்களை முட்டாள்கள் என்று அழைத்தார். பத்து கட்டளைகள் பழமையாகப் போய்விட்டன என்று அறிவித்தார். ஒருமுறை பாப்திஸ்துகளிடம் “நான் நரகத்துக்குச் சென்று கொண்டிருக்கிறேன்; நரகத்துக்குச் செல்ல எனது மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார். இதுவே வெற்றி மற்றும் பெருமையின் முடிவாகும். நேபுகாத்நேச்சாரும் இவரைப் போன்றவரே; பல வெற்றிகளைக் கண்டவர். அதுவே அவரது மனமேட்டிமைக்கு வழிவகுத்தது. இவ்வரசர் மற்றொரு சொப்பனம் கண்டார். அதனை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. தானியேல் 4:4இல் “நேபுகாத்நேச்சாராகிய நான் என் வீட்டிலே சவுக்கியமுள்ளவனாயிருந்து என் அரமனையிலே வாழ்ந்துகொண்டிருந்தேன்” என்று கூறுகிறார். வளமையும் வசதியும் அவரது பெருமைக்கு வழிவகுத்தன. மனநிறைவுடனும் செழிப்புடனும் வாழ்ந்தார். ஆனால், ஓர் இரவில் பயங்கரமான ஒரு கனவினைக் கண்டார்.

“நான் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; அது எனக்குத் திகிலை உண்டாக்கிற்று; என் படுக்கையின்மேல் எனக்குள் உண்டான நினைவுகளும், என் தலையில் தோன்றின தரிசனங்களும் என்னைக் கலங்கப்பண்ணிற்று” என வசனம் 5 கூறுகிறது. பாபிலோனில் பயங்கரமான கனவுகளுக்கு பொருளை விளக்கும் ஒரு மனிதரை அணுக வேண்டும். தானியேலால் மாத்திரமே அதனை நிறைவேற்றமுடியும் என அவ்வரசர் அறியாதிருந்தார். ஏனெனில் அடுத்த வசனத்தில் “ஆகையால் சொப்பனத்தின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்காகப் பாபிலோன் ஞானிகளையெல்லாம் என்னிடத்தில் கொண்டு வரும்படி கட்டளையிட்டேன்” என்று சொன்னார்.

இரண்டாம் அதிகாரத்தில் அரசர் பாபிலோனிய ஞானிகள் அனைவரையும் அழைத்து தான் கண்ட கனவினையும் அதன் பொருளையும் கூறும்படி ஆணையிட்டார். ஆனால், அவர்களால் இயலவில்லை. தானியேலால் மாத்திரமே அதை செய்யமுடிந்தது. எனவே இம்முறை அவர்களுக்கு சிரமம் தரவேண்டாம் என எண்ணினார். வசனம் 7இல் “அப்பொழுது சாஸ்திரிகளும், ஜோசியரும், கல்தேயரும், குறி சொல்லுகிறவர்களும் என்னிடத்திலே வந்தார்கள்; சொப்பனத்தை நான் அவர்களுக்குச் சொன்னேன்; ஆனாலும் அதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கமாட்டாமற் போனார்கள்” என நாம் வாசிக்கிறோம். வசனம் 8இல் “தானியேல் என்னிடத்தில் கொண்டு வரப்பட்டான்; அவனிடத்தில் நான் சொப்பனத்தை விவரித்துச் சொன்னேன்” என்று உள்ளது. நேபுகாத்நேச்சார் மாபெரும் மன்னராய் அநேக வெற்றிகளைக் கண்டிருந்தும், மனநிறைவு பெற்று வளமுடன் வாழ்ந்து வந்தாலும், அவர் பல தெய்வ வணக்கத்தைக் கொண்டிருந்தார். ஒரே ஒரு தேவன் உண்டு; ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் தேவனே மெய்யான தேவன். இவ ரைத் தனிப்பட்ட முறையில் தேவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மேலான முடிவுக்கு அவர் வரவில்லை. என்னே பரிதாபம்!”

“சாஸ்திரிகளின் அதிபதியாகிய பெல்தெஷாத் சாரே” என்று தானியேலை அழைக்கிறார். “பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதென்றும்” என்று கூறியதிலிருந்து அவர் இன்னும் பிற தெய்வ வணக்கத்தை உடையவராயிருந்தார் எனத் தெரிகிறது. அந்த தரிசனம் நம்ப முடியாத ஆச்சரியத்தைக் கொடுத்தது. அது நேபுகாத் நேச்சாருக்கு பயத்தை உண்டாக்கியது. இரண்டாம் அதிகாரத்தில் தாம் கண்ட கனவினால் அவர் மகிழ்ச்சியடைந்தார். அந்த பெரிய சிலையின் தலை தான் என்று அறிந்ததாலும், மிகப் பெரிய சாம்ராஜ்யத்தின் அரசர் என்பதாலும் மற்ற ராஜ்யங்களுக்கும் தானே தலை என்பதாலும் நேபுகாத்நேச்சார் பெருமை கொண்டார்.

இந்த அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ள கனவினைப் பார்ப்போம். “நான் படுத்துக்கொண்டிருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால்: இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன். அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லைபரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. அதின் இலைகள் நேர்த்தியும் அதின் கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின் கீழே வெளியின் மிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கினது; அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்துச் சகல பிராணிகளும் அதினாலே போஷிக்கப்பட்டது.”

ஓர் ஆச்சரியமான மரம்; மிகப்பெரியது. அது வானபரியந்தம் எட்டினது; உயரமான மரம்; அதன் கிளைகள் பரந்து விரிந்திருந்தது. பறவைகள் அம் மரத்தில் கூடுகட்டி வாழ்ந்தன. மிருகங்கள் அதன் நிழலில் பாதுகாப்புக்காகவும் ஓய்வுக்காகவும் தங்கின. வெயிலின் வெப்பத்துக்கு அம்மரத்தின் கீழ் ஒதுங்கின. அக்காட்டிலுள்ள அனைத்து மரங்களிலும் அது பெரிய மரமாயிருந்தது.

பெருமையுடைய நேபுகாத்நேச்சார் தான் அந்த மரமாக இருக்கலாமோ என எண்ணியிருக்கலாம்; எனவே அக்கனவின் பொருளை விளங்கிக்கொள்ள அவர் ஆவலாயிருந்தார். இவ்வகை மரமானது அசாதாரணமானது. கலிபோர்னியாவிலுள்ள பெரிய ஊசியிலை மரங்கள் சுமார் 300 அடி உயரமாக வளரக்கூடியவை. அது ஒரு கால் பந்து மைதானத்துக்கு அல்லது 30 அடுக்கு மாடி உயரக்கட்டிடத்துக்கு ஒத்த உயரமுடையவை. பொதுவாகவே மரங்கள் பெரிதானவை. ஊசியிலை மரமோ அதிக உயரத்துக்கு வளரக்கூடியவை. வடகலிபோர்னியாவின் சியேரா நிவேடா மலைத் தொடரின் மேற்கு பகுதியில் இவ்வகை மரங்கள் காணப்படுகின்றன. அதன் சுற்றளவு சுமார் 150 அடியாக உள்ளது. எத்துணை பெரிய மரம்!

தானே இம்மரம் என நேபுகாத்நேச்சார் எண்ணிக்கொண்டார். அம்மரத்தின் முதல் பகுதியைப்பற்றி அவர் அக்கறை கொள்ளவில்லை; ஆனால், வசனம் 14இல் அம்மரத்துக்கு நேரிட்டது முக்கியமானது. வானத்திலிருந்து வந்த ஒரு பரிசுத்தவான் “உரத்த சத்தமிட்டு: இந்த விருட்சத்தை வெட்டி, இதின் கொப்புகளைத் தறித்துப் போடுங்கள்; இதின் இலைகளை உதிர்த்து, இதன் கனிகளைச் சிதறடியுங்கள்; இதின் கீழுள்ள மிருகங்களும் இதின் கொப்புகளிலுள்ள பட்சிகளும் போய்விடட்டும்” என்று கூறியது அவருக்கு சஞ்சலத்தை உண்டாக்கியது. அத் தூதன் “இம்மரத்தை நாங்கள் வெட்டிப் போடப் போகிறோம்” என்றார்.

ஒரு துர்ச்செய்தியிலும் ஒரு நற்செய்தியிருந்தது. “ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் பூமியில் இருக்கட்டும்; இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும் புல்லிலே தங்குவதாக” என்று வசனம் 15 இல் காண்கிறோம். அடிமரம் பூமியில் அழிக்காமல் விட்டுவிடுவதன் பொருள் என்னவெனில் நேபு காத்நேச்சாரின் இராஜ்யம் அழிந்துபோனாலும் அது மறுபடியும் வளர்ச்சியடையும் என்பதாகும்.

இம்மரத்தை வெட்டுவதனால் என்ன பயன்? தேவன் ஒருவரே சர்வ வல்லவர்; மனிதர்களின் செயல்பாடுகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்; இராஜாக்களைத் தள்ளி இராஜாக்களை ஏற்படுத்துகிறவர் என்பதைத் தெளிவு படுத்துவதே தானியேலின் புத்தகத்தின் கருத்தாகும். நேபுகாத்நேச்சார் தன்னை யாரும் வெல்லமுடியாது என்ற அகந்தையில் இருந்தார். யாரும் தன்னை தொடமுடியாது என்ற மமதை கொண்டிருந்தார். சர்வலோகத்தின் ஆண்டவரை முகமுகமாய் எதிர்க்கும் பெருமைக்காரர்களின் முடிவை அவர் அறிந்துகொள்ளவில்லை.

“அவனுடைய இருதயம் மனுஷ இருதய மாயிராமல் மாறும்படி, மிருக இருதயம் அவனுக்குக் கொடுக்கப்படக்கடவது; இப்படியிருக்கிற அவன்மேல் ஏழு காலங்கள் கடந்து போகவேண்டும்” என்று வசனம் 16 கூறுகிறது. ஏழு காலங்கள் எனில் ஏழு வருடங்களைக் குறிக்கும். அப்பொழுதுதான் அக்கனவு வந்த காரணத்தையும் மரம் வெட்டுண்டதையும் அவர் கூறுகிறார்.

“இராஜாவே, நீர்தான் இப்பூமியில் வல்லமையுள்ளவர்; அதிகாரம் பெற்றவரும் நீரே; எனவே நீங்கள் பெருமையடையக் காரணங்கள் உண்டு; ஆனாலும் தேவன் ஒரு நொடிப் பொழுதில் உமது ராஜ்யத்தை எடுத்துப்போட முடியும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். ஆனால், தேவன் நீதியுள்ளவர்; ஆயினும் கிருபையுள்ளவர். தேவன் மரத்தை வெட்டிப்போட்டாலும் அதன் அடிமரத்தை வெட்டாமல் விடுவார்” என்று கூறியிருக்கக்கூடும்.

இக்கனவின் பொருள் சரியானது என நேபு காத்நேச்சார் நினைத்திருப்பாரா?; வசனம் 19இல் “தானியேல் மிகவும் திகைத்து சிந்தித்துக் கலங்கினான். எனவேதான் அரசர் அவனைப் பார்த்து பெல்தெஷாத்சாரே, சொப்பனமும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கப்பண்ண வேண்டியதில்லை என்றான். கனவுக்கும் தானியேலுக்கும் தொடர்பில்லை; அது தன்னைப் பற்றியது, தானே கலங்கவேண்டும் என்று அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இது நேபுகாத்நேச்சார் அரசருக்கு மிக மோசமானதாகும். வசனம் 19 முதல் 27 முடிய தானியேல் அக்கனவுக்கு அர்த்தம் அளிக்கிறார்.

வசனம்-21: நேர்த்தியான அதின் இலைகள் அழியும்.

வசனம்-22: அதின் மிகுதியான கனிகள் ஒழியும். அம்மரம் அளிக்கும் உணவு ஆதாரங்கள் அழியும் என்று விளக்கிய தானியேல், தொடர்ந்து “ராஜாவே, அந்த மரம் நீர்தான்” என்கிறார்.

4:26ஆம் வசனமே தானியேல் புத்தகத்தின் மையக்கருத்து என நான் கருதுகிறேன். தானியேல் புத்தகத்தின் புதிருக்கு இங்கே நாம் விடை காண்கிறோம். நேபுகாத்நேச்சார் ஓர் அகந்தையுடையவர். தன்னை மிஞ்சியவர் யாருமில்லை என அவர் எண்ணினார். அனைவரும் தன்னிடம் ஆகாரத்துக்காகவும் பாதுகாப்புக்காகவும் தன்னைத் தேடி வருகிறார்கள் என்பதில் மகிழ்ச்சியுற்றார். அனைவருக்கும் அரசன் என அவர் எண்ணினாலும் அவர் இந்த உலக அரசுக்குமட்டுமே அரசன்.

வசனம் 26 “ஆனாலும் விருட்சத்தின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டும் என்று சொல்லப்பட்டது என்னவென்றால்: நீர் பரம அதிகாரத்தை அறிந்தபின், ராஜ்யம் உமக்கு நிலைநிற்கும்” என்று கூறுகிறது.

தானியேல் புத்தகத்தின் மையக்கருத்தான ஆட்சி தேவனுடையது என்ற இரு சொற்களையும் உங்களுடைய எண்ணத்தில் பதிய வைத்துக்கொள்ள விரும்புகிறேன். ஆம், தேவன் அனைத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். இவ்வுலகத்தின் காரியங்களில் தேவன் தலையிடாதது போன்று தோன்றினாலும் அவர் உங்கள் தனிப்பட்ட வாழ்வில் செயலாற்றிக் கொண்டே இருக்கிறார். பரலோகம் ஆட்சி செய்கிறது. உங்களுடைய வாழ்வை தேவன் பொறுப்பெடுத்திருக்கிறார். உங்கள் குடும்பம் நமது தேசம் யாவும் அவர் பொறுப்பில் இருக்கிறது. ஒருவனை உயர்த்தி ஒருவனைத் தாழ்த்துகிறார். உங்கள் வாழ்வின் சூழ்நிலையை ஒரே நிமிடத்தில் அவர் மாற்றிப் போடமுடியும். ஆம், ஆளுகை தேவனுடையது!

நேபுகாத்நேச்சார் இக்கனவின் பொருளால் மகிழவில்லை. அவருடைய பெருமையின் முடிவை 28ஆம் வசனம் முதல் நாம் பார்க்க முடியும். இதெல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின்மேல் வந்தது. பன்னிரண்டு மாதம் சென்ற பின்பு, ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனை மேல் உலாவிக்கொண்டிருக்கும்போது “இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்” (வச.30).

நாம் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். நேபுகாத்நேச்சார் ஒரு சொப்பனம் கண்டார். தானியேலை அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிக்கொண்டார். தானியேலும் அதனை விளக்கினார். “நீர்தான் அந்த பெரிய மரம், ஆனால் நீங்கள் வெட்டப்பட்டுப் போவீர்கள்” என்றார்.

ஆயினும் நேபுகாத்நேச்சார் தன்னைத் தாழ்த்தவில்லை. பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் அரமனை தோட்டத்தின் மேல் உலாவிக்கொண்டிருந்தார். தன்னுடைய ராஜ்யத்தைக் கண்டு மிகப்பெருமையுடன் “நான் கட்டின மகா பாபிலோன்” என்று கூறிக்கொண்டார்.

நேபுகாத்நேச்சார் பெருமைகொண்ட ஒரு அரசனாக, அழிந்து போகப்போகிறவராக இருந்தாலும் தேவன் அதைப் பொறுத்துக்கொண்டார். ஏனெனில் தேவன் இரக்கமும் நீடிய பொறுமையுமுள்ளவர். ஆட்சி தேவனுடையது! தான் வாக்களித்த அனைத்தையும் அவர் நிச்சயமாகவே நிறைவேற்றுவார். நேபுகாத்நேச்சார் அதனை அறிந்துகொள்ள வேண்டும். பெருமைகொண்ட மனிதனின் காரியங்களையும், அப்பெருமை தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து விலக்கம் அளிக்காது எனவும் அவர் தெரிந்துகொள்ள வேண்டும்.

அமெரிக்க குத்துச் சண்டைவீரர் முகமது அலி என்பவரைப்பற்றி நான் வாசித்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. அவர் வாலிபனாக இருந்தபொழுது மிகவும் பெருமையுடையவராய் இருந்தார். தன்னுடைய காசியஸ் கிளே என்ற பெயரை முகமது அலி என்று மாற்றிக்கொண்டார். அனைத்துப் போட்டிகளிலும் அவர் வெற்றி பெற்றார். ஒரு நாள் இவர் ஒருமுறை விமானப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். தனது இருக்கையில் அமர்ந்ததும் விமான பணிப்பெண் அவரிடத்தில் வந்து இருக்கைப் பட்டியை (Seat Belt) அணிந்துகொள்ள நினைவூட்டினார். “மாமனிதனுக்கு இருக்கைப் பட்டி தேவையில்லை” என்று அலி அவளிடம் கோபமாகக் கூறினார். அதற்கு அந்த பெண் “மாமனிதனுக்கு விமானமும் தேவையில்லை” என்று பதிலுரைத்தாள்.

ஆம், நம்மைவிட உயர்ந்தவர் ஒருவர் உண்டு என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். “தேவன் இருக்கிறாரா என்பதைப்பற்றி நான் கவலைப்படவில்லை; நரகத்தைப்பற்றியும் நான் கவலைப்படவில்லை” என்று இன்றும் அநேகர் கூறுகின்றனர். தானியேல் புத்தகம் கூறும் ஆட்சி தேவனுடையது என்பதை நாம் ஒருபொழுதும் மறந்துபோகக்கூடாது. ஒருநாள் வரும். தேவன் கூறிய அனைத்தும் நிறைவேறும்.

இவ்வதிகாரத்தின் 33ஆம் வசனத்தில் நேபுகாத்நேச்சாரைப் பற்றிக் கூறப்பட்டவை நிறைவேறியதை நாம் வாசிக்கிறோம். “அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறை வேறிற்று; அவன் மனுஷரினின்று தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான்; அவனுடைய தலைமயிர் கழுகுகளுடைய இறகுகளைப் போலவும், அவனுடைய நகங்கள் பட்சிகளுடைய நகங்களைப் போலவும் வளருமட்டும் அவன் சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.” இவ்வாறுதான் நடக்கும் என்று தேவன் முன்னரே அறிவித்திருந்தார்.

திடீரென்று அவர் மனநிலை பாதிக்கப்பட்டார். ஏழு ஆண்டுகள் பைத்தியமாக இருந்தார். ஒரு மிருகத்தைப்போல காடுகளிலும் வயல்களிலும் அலைந்து திரிந்தார். அவருடைய தலைமயிர் வளர்ந்து பின்னிக்கொண்டு ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டது. அது கழுகின் இறகு போலவும் தோற்றமளித்தது. அவருடைய நகங்கள் நீளமாக வளர்ந்து பறவைகளின் நகங்கள் போல இருந்தது. இவர் ஒருகாலத்தில் பூமியிலிருந்த பெருமைக்கார அரசன். பெருமை நிறைந்த மனிதர்களை எவ்வாறு கையாள்வது என்று தேவன் அறிவார். அதுதான் இங்கேயும் நடந்தது.

பெருமையுள்ளவர்களைத் தண்டிப்பதில் தேவன் ஆர்வப்படுவதில்லை. அவர்களையும் இரட்சிக்கவே விருப்பமுடையவராய் இருக்கிறார். வசனம் 34இல் ஒரு புது நேபுகாத்நேச்சாரை நாம் காண்கிறோம். “அந்த நாட்கள் சென்றபின்பு, நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பி வந்தது; அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்.”

கடந்த அதிகாரங்களில் நேபுகாத்நேச்சார் “நான்” என்ற தன்மை சொல்லை பயன்படுத்தியிருந்தார். தற்பொழுது மற்றவர்களையல்ல என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினார்.

இங்கே நேபுகாத்நேச்சார் உண்மையை அறிந்துகொண்டார். அதாவது ஆட்சி தேவனுடையது, தன்னையும் அவரே ஆளுகிறார். யாராலும் தடுக்கமுடியாத ஒரு திட்டத்தை தேவன் வைத்திருக்கிறார். பூமியின் குடிகளெல்லாம் ஒன்றுமில்லை; வானத்தின் சேனைகளையும் அவர் தம்முடைய விருப்பப்படியே செய்கிறார்.

முன்னாள் கடற்படைத் தலைவரும் அமெரிக்க அதிபர் நிக்சனின் ஆலோசகராகவும் இருந்த சக்கால்சன் என்பவர் சிறையிலடைக்கப்பட்டார். அங்கே அவர் ஆட்சி தேவனுடையது என்பதை அறிந்துகொண்டார். பளுதூக்கும் போட்டியின் வெற்றியாளரான ஜார்ஜ் போர்மன் என்பவரும் தனது வாழ்வில் ஆட்சி தேவனுடையது என்பதைக் கண்டுகொண்டார்.

ஆஸ்கர் செர்வன்டிஸ் என்பவரின் வாழ்வில் நடந்ததைப் பார்ப்போமா. ஆஸ்கர் என்பவர் மிக ஒரு கொடூரமான குற்றவாளி. பல பயங்கரமான குற்றங்களுக்காக 17 முறை சிறையிலடைக்கப்பட்டார். மனநலமருத்துவர்களும் மனதத்துவ நிபுணர்களும் அவருக்கு ஆலோசனை கூறினர். அவருக்கு யாரும் உதவ முடியாது. அவரைப்பற்றி கவலைப்படாதீர்கள் என்று அனைவரும் கூறிவிட்டனர்.

ஒரு சில காலம் அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார். இயேசுகிறிஸ்துவை அறிந்துகொண்ட ஒருவர் அவருக்கு ஆட்சி தேவனுடையது என்பதைக் கூறினார். ஆச்சரியமாக அவர் இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டார். உடனடியாக அவர் திரும்பிச் சென்று தனது சிறை நண்பர்களுக்கு உதவ நினைத்தார். அவர் சிறைச்சாலை ஊழியத்தைச் சிறப்பாகச் செய்தார். ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வியாழக்கிழமை சிறைச்சாலைக்குச் செல்வார். அது அங்கு ஆஸ்கர் இரவு என்று அழைக்கப்பட்டது. சிறைக்கைதிகள் கூடிவந்து மிக மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் பாடுவார்கள். ஆஸ்கரின் இரண்டு மணிநேர பிரசங்கத்தையும் பொறுமையுடன் கேட்பார்கள். ஏனெனில் அவர்கள் வாழ்வில் சிறப்பான மாற்றம் பெற்ற ஒரு மனிதனைக் கண்டனர். தன்னுடைய பெருமை நித்தியத்துக்குக் கொண்டு செல்லாது, தேவனால் மாத்திரமே அது கூடுமென ஆஸ்கர் அறிந்துகொண்டார். ஆஸ்கருடைய வாழ்வு முழுவதுமாக மாறியது. உளவியல் அறிஞர்களும் மனதத்துவ நிபுணர்களும் பலமுறை முயன்றும் தோற்ற காரியங்களை தேவன் ஒரே நொடியில் செய்து முடித்தார்.

நேபுகாத்நேச்சாரின் வாழ்க்கையிலிருந்து எவ்வளவுதான் பெருமையுடையவர்களாயிருந்தாலும் ஒரு நேரம் வரும். விண்ணகம் ஆட்சி செய்கிறது என்பதை மக்கள் அறிந்துகொள்வார்கள். பூமியில் வல்லரசனாக இருந்தவர் அதை அறிந்துகொள்ள ஏழு ஆண்டுகள் மன நிலை பாதிக்கப்பட்டு மிருகத்தைப்போல தவழ்ந்தார். ஆம், தேவன் அரசாளுகிறார்.

தேவனுடைய அரசாட்சியைப்பற்றி வியக்கத்தக்க கருத்து இது. எவரும் எதுவும் அவருடைய கட்டுப்பாட்டை மீற முடியாது. தேவனை எதிர்க்காமல் அவருக்கு பயந்து நடக்கவேண்டும். நீதியான வாழ்வே சிறந்த மெய்யான ஆறுதலைத் தரும்.

தேவன் ஆளுகையில் ஒரு மனிதனை வைக்கும்பொழுது நாம் அவரை மதிக்கவேண்டும். அவரை நாம் விரும்பாமல் இருக்கலாம். அவரது கருத்துக்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாய் இருக்கலாம். ஆனால், அவருக்குப் பின்னாக தேவனின் முழு ஆளுகையும் உள்ளதென்பதை நாம் அறிந்து அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை