தேவனுக்காகக் காத்திருத்தல்!

அதிகாலை வேளையில்… (ஜூலை-ஆகஸ்டு 2012)
Dr.உட்ரோ குரோல்

விடியற்காலத்திலே கர்த்தருடைய வார்த்தை
எனக்கு உண்டாகி… எசேக்.12:8

சில சமயங்களில் ஆர்ப்பாட்டக் குழுவினர் பல்வேறு வாசகங்கள் எழுதிய அட்டைகளை கரங்களில் ஏந்திக்கொண்டு, அரசு அலுவலகங்களுக்கு முன்னர் கோஷங்கள் எழுப்புவதையும், சாலையோரங்களில் உண்டியல் ஏந்தி நிதி திரட்டுவதையும் நாம் கண்டிருக்கிறோம் அல்லவா? சுயவிளம்பரத்துக்காகவும், மற்றவர்களுடைய கவனத்தைத் திருப்பவும் மக்கள் வித்தியாசமான காரியங்களைச் செய்கின்றனர். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியான எசேக்கியேலும் இவ்வாறு மக்களின் கவனத்தைத் தன்பால் இழுக்க சில காரியங்களைச் செய்ய தேவனிடமிருந்து கட்டளைபெற்றார். எரேமியா மற்றும் தானியேல் தீர்க்கதரிசிகளின் காலத்தைச் சேர்ந்த இவர் ஓர் ஆசாரியன் (எசேக்.1:3).

ஆனால் இவ்வூழியத்தைச் செய்ய முடியாதபடி யோயாக்கீன் இராஜாவின் காலத்தில் எசேக்கியேல் சிறை பிடிக்கப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டார் (2 இராஜா.24:10-16). அங்கே கேபார் நதியண்டையில் சிறைபிடிக்கப்பட்டவர்களின் நடுவில் இருந்தார். ஐந்தாண்டு காலம் கழிந்த பின்னர் பாபிலோனுக்கு வந்தார். அப்பொழுது அவருக்கு ஏறக்குறைய முப்பது வயதாகியிருந்தபொழுது தேவனிட மிருந்து தீர்க்கதரிசன அழைப்பைப் பெற்றார்.

இச்சிறையிருப்பின் இருண்ட காலத்தில் எசேக்கியேல் தீர்க்க தரிசனம் உரைத்தபோது, அங்கிருந்த யூதமக்கள் தேவசத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை. எனவே தேவசெய்தியினை வார்த்தைகளாகவோ, உவமைகளாகவோ மக்களிடம் பேசுவதற்குப் பதிலாக அதனை செயல்விளக்கமாக்கிக் காட்டினார். தேவனுடைய நகரமாகிய எருசலேமுக்கு தேவன் செய்ய இருந்ததை நாடகபாணியில் நடித்துக் காட்டினார்.

எசேக்கியேல் கலக வீட்டாரின் நடுவில் தங்கியிருப்பதை நினைப்பூட்டி அங்கிருந்து அவர் பிரயாணப் படவேண்டும் என்பதை தேவன் கூறினார். சிறையிருப்புக்குப் போகிறவனைப் போல் உன் சாமான்களை நீ பகற்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாக வெளியே வைத்து, நீ சாயங்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல் புறப்படுவாயாக. அவர்களுடைய கண்களுக்கு முன்பாக நீ சுவரிலே துவாரமிட்டு, அதின் வழியாய் அவைகளை வெளியே கொண்டுபோவாயாக (எசேக்.12:4,5) என்று தேவன் அவருக்குக் கட்டளையிட்டபடியே செய்தார். சிறைப்பட்டுப்போகும்போது சாமான்களைக் கொண்டுபோவது போல என் சாமான்களைப் பகற் காலத்தில் வெளியே வைத்தேன்; சாயங்காலத்திலோ கையினால் சுவரிலே துவாரமிட்டு, மாலை மயங்கும் வேளையிலே அவைகளை வெளியே கொண்டுபோய், அவர்கள் கண்களுக்கு முன்பாக அவைகளைத் தோளின்மேல் எடுத்துக்கொண்டு போனேன் (எசேக்.12:7).

விடியற்காலத்திலே கர்த்தருடைய வார்த்தை எசேக்கியேலுக்கு உண்டாயிற்று. இரவு முழுவதும் காத்திருந்த அவர் மறுநாள் காலையில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு தனது அசாதாரண செயலுக்கு விளக்கத்தைக் கொடுத்தார். இவ்வதிகாரத்தில் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி என்ற சொற்றொடர் ஐந்துமுறை காணப்படுகிறது. ஆம், ஐந்துமுறை அவர் தேவனுடைய வார்த்தைக்குக் காத்திருக்க வேண்டியதாயிருந்தது. தனது வீட்டில் சகல வசதிகளுடனும் காத்திருப்பது எவருக்கும் துன்பத்தைத் தராது. ஆனால் போக்குவரத்து மிகுந்த சாலையோரத்தில் தேவனுக்காகக் காத்திருப்பது மிகவும் கடினமே.

தேவசெய்திகளும் அவரது நோக்கங்களும் சிலவேளைகளில் காலதாமதமாக வெளிப்பட்டாலும், அவரது மாபெரும் திட்டங்கள் ஒருபோதும் துரிதப்படாது. பிலிப்ஸ் புரூக்ஸ் என்ற ஆங்கிலேய தேவ செய்தியாளர் மிகவும் அமைதியானவர்; ஆயினும் தேவனுடைய வார்த்தைக்குக் காத்திருந்தபொழுது அவர் அநேக பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதாயிருந்தது. கூண்டுக்குள் அடைக்கப்பட்ட மிருகத்தைப் போல அவர் ஒருநாள் தனது அறையின் தரையை சினத்துடன் உதைத்துக் கொண்டிருந்தார். அதன் காரணத்தை அவருடைய நண்பர் வினவினார். எனது காரியம் மிகவும் அவசரம்; ஆனால் தேவனோ அதில் அவசரப்படாமல் இருக்கிறார் என்று பதிலளித்தார். ஆம், தேவனுக்காக காத்திருக்க பொறுமை அவசியம்.

கையில் சுமையுடன் சுவரில் ஏற்படுத்தப்பட்ட துளையின் வழியாகப் புகுந்து வருவதும், தேவனுடைய குரலுக்காகக் காத்திருப்பதும் எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கு மிகக் கடினமாகவே இருந்தது. தேவன் முதன்முறை பேசின பின்பு மறுநாள் காலையில்தான் இரண்டாம்முறை பேசினார். எசேக்கியேல் தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியே செய்தார். திரளான மக்கள் தன்னைக் காணும்படியாக எருசலேமின் தெருவில் அவர் பொறுமையுடன் காத்திருந்தார்.

தேவனுடைய வழிநடத்துதலை நாம் புரிந்துகொண்டாலும் புரியாவிட்டாலும் அவர் நம்மை நடத்துகிறார் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். செல் அல்லது நில் என்ற கட்டளைகளைவிட காத்திரு என்ற கட்டளைக்குக் கீழ்ப்படிவது மிகக் கடினமாம். ஆனால் தேவனுடைய மனிதனாகிய எசேக்கியேல் தனக்கு மறுகட்டளை வரும்வரை இரவு முழுவதும் பொறுமையாகக் காத்திருந்தார்.

நாம் தேவனுக்காக எவ்வளவு காலம் காத்திருக்கிறோம்? இன்றைய தினம் அவர் பாதத்தில் காத்திருக்கிறோமா? அவரை நம்புகிறோமா?

அதிகாலை கீதம்:

நம் ஜெபம் கேட்கப்படாததின் காரணத்தை
ஆராய முயல்வது அறிவீனம்! – ஆண்டவரின்
அனாதி ஞானத்தை நம்பி அவர் அன்புக்குக்
கீழ்ப்படிவதே தேவையான விசுவாசம்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை