சாத்தானை முறியடிப்போம்!

அதிகாலை வேளையில்… (ஜூலை – ஆகஸ்ட் 2022)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: யோபு 7:1-21


அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை … என்றது (ஆதியாகமம் 3:4).


தேவன் தாம் உருவாக்கின நம்முடைய ஆதி பெற்றோரை ஏதேன் என்னும் ஓர் அழகிய தோட்டத்தில் வைத்தார். அங்கே அவர்களுடைய சகல தேவைகளும் சந்திக்கப்பட்டன. தேவனோடு ஐக்கியம் கொள்ளவும், உறவாடவும் அவருக்கு சேவை செய்யும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைத்தன. எப்பொழுதும் எதிர்த்து நிற்கும் எதிரியான சாத்தானும் அவர்களைத் தாக்குவதற்கு ஆயத்தமானாான். இந்த நிகழ்விலிருந்து அவனைத் தோற்கடிக்கத் தேவையான அறிவுரைகளைப் பெற்றுக்கொள்கிறோம்.

சாத்தானுக்கு இடம் கொடாதிருங்கள்:

ஏதேன் தோட்டத்தைப் பாதுகாக்க வேண்டியது, ஆதாமுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு பொறுப்பு (2:15), அதாவது அவன் அதனைப் பாதுகாக்கவேண்டும். “ஜீவ விருட்சத்துக்குப்போம் வழியைக் காவல் செய்ய” என்ற வசனத்தில் உள்ள “காவல்” என்ற சொல்லே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆதாம் தன் மனைவியுடன் இல்லாத வேளையிலே பிசாசானவன் எளிதாக ஏவாளைக் குறி வைத்துவிட்டான். “பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்” என்று எபேசியர் 4:27 நம்மை எச்சரிக்கின்றது. ஒரு சிறிய இடுக்கு கிடைத்தாலும் அவன் அதனூடாக நுழைந்து ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிடுவான். இன்றும்கூட அவனது கூட்டாளிகள் இரகசியமாக நம் எண்ணங்களில் நுழைந்து தொல்லைகள் தருகின்றனர் (2 தீமோ.3:6;யூதா-4). தேவையற்ற இச்சைகளை உருவாக்கிக் கொள்வதோ அல்லது இரக்கமற்ற எண்ணங்களோ தேவனுடைய சித்தத்தைச் செய்ய மறுப்பதற்கு இடமளித்துவிடும்.

சாத்தானின் சலுகைகளுக்கு மயங்காதேயுங்கள்:

பிசாசானவன் ஒரு எத்தன்; தனது இயற்கையான உருவத்தை வெளியே காட்டாத வேஷக்காரன். “சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக் கொள்வான்” (2 கொரி.11:14) நம்மை வழி விலகச் செய்வான். தேவனுடைய வார்த்தைக்கு சந்தேகக் கேள்விகள் எழுப்பும்பொழுதும் வேத எழுத்துக்களின் ஆதாரத்தை மறுப்பதற்கு நம்மை ஊக்கப்படுத்தும்பொழுதும் சாத்தான் கிரியை செய்கிறான் என்று நாம் உறுதியாய்க் கூறமுடியும். நம்மையும் அவன் பார்த்து “தேவன் சொன்னது உண்டோ?” என்று தேவனுடைய வார்த்தையில் சந்தேக வினா எழுப்புவான்; பின்னர் தேவவார்த்தையை மறுதலிப்பான். பின்னர் தனது பொய்யை அதில் புகுத்துவான். ஆனால் நாமோ, “ஆம் தேவன் அவ்வாறுதான் சொன்னார்; நான் அதை மதிக்கிறேன்” என்று கூறவேண்டும். உடனடியாக தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணி அவரது ஞானத்தைத் தேடவேண்டும். நாம் அறிந்த வேதவாக்கியங்களை அவர் நமக்கு நினைவூட்டுவார். எனவே சாத்தானை எதிர்க்க ஆவியின் பட்டயத்தை நாம் உபயோகிக்க முடியும். பிசாசு இயேசுவை சோதித்தபொழுது அவரும் வேத வசனத்தையே பயன்படுத்தினார் (எபே.6:17; மத். 4:1-11). எனவே நம் இருதயத்தில் தேவ வார்த்தையை வைத்திருத்தல் மிக அவசியம்; அப்பொழுது அவனை நிச்சயமாக நாம் மேற்கொள்ள முடியும் (சங். 119:11).

தேவன் அருளிய ஈவுகளை எண்ணிப் பாருங்கள்:

தேவன் இதுவரை தராத ஒன்றை நமக்குத் தருவதாக சில சலுகைகளை அறிவிப்பதே சாத்தானுடைய சோதனையாகும். இயேசுவை பிசாசு சோதிக்கும்பொழுது, “நீர் அவருடைய நேச குமாரன் என்று தேவன் சொன்னார் அல்லவா? அவர் உம்மை நேசித்தால் நீர் ஏன் பசியாயிருக்கவேண்டும்” என்று ஆலோசனை கூறினான். சோதனைகளுக்கு எதிரான எச்சரிக்கைகளை யாக்கோபு 1:12-15 இல் நாம் வாசிக்கலாம். … சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.

இதனைத் தொடர்ந்து நாம் தேவனு டைய நன்மையும் பரிபூரணமான ஈவுகளைப் பெற்றவர்கள் என்பதை நினைவூட் டிக்கொள்ள வேண்டும் (வசனம் 16-18).

… நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜநிப்பித்தார்.

பரலோகப்பிதாவின் சிறப்பான ஆசீர்வாதங்களுக்குப் பதிலாக சாத்தான் மிக மலிவான நன்மைகளை அளிப்பதே அவன் அளிக்கும் சோதனை. இயேசு பசியாறுவதற்கு அங்குள்ள கல்லுகளை அப்பங்களாக மாற்றக் கோரினான். ஆனால் இயேசுவோ அதைவிட ஊட்டச் சத்துமிக்க ஜீவஅப்பமான தேவனுடைய வார்த்தையையே விரும்பினார் (மத். 4:4).

ஏவாள் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டாள் என்று 1தீமோத்தேயு 2:14 கூறுகிறது. ஆனால், ஆதாமோ தெரிந்தே பாவஞ்செய்தான்; ஏனெனில் அவன் தன் மனைவியுடன் ஒத்துப்போக விரும்பினான். அவனது பிடிவாதமான கீழ்ப்படியாமையினால் முழுமனுக்குலமும் பாவத்தில் விழுந்து நியாயத்தீர்ப்புக்கு ஏதுவானது (ரோமர் 5: 12-21). ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கீழ்ப்படிதலும் சிலுவை மரணமும் நம்மை ஆக்கினையிலிருந்து இரட்சித்து நம்மை தேவனுடைய பிள்ளைகளாக மாற்றியது.

பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான் (யாக்கோபு 4:7).

தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள் (எபேசியர் 6:17).

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை