ஆசிரியரிடமிருந்து… (மார்ச் – ஏப்ரல் 2023)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

அண்ட சராசரங்களையும் படைத்து பாதுகாத்து நடத்திவருகிற இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தேவகிருபையால் புதிய மாதத்திற்குள் வந்திருக்கிறோம். காலம் சமீபமாயிருக்கிறது (வெளி.22:10). ஆண்டவராகிய இயேசு கடைசிநாட்களில் சம்பவிக்கும்படி சொல்லிச்சென்ற பூமியதிர்ச்சி, யுத்தங்கள், கொள்ளைநோய் இவைகள் யாவும் நிறைவேறிக்கொண்டு இருக்கின்றன. கடந்த நாட்களில் துருக்கி – சிரியா, நியூசிலாந்துவில் நடைபெற்ற நிலநடுக்கத்தையும், கோரவிளைவுகளையும் நாம் அறிந்திருக்கிறோம். தொடர்ந்து இந்தகாரியங்களுக்காக பாரத்தோடு மன்றாடுவோம்.

அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழில் வெளிவரும் தினசரி வேதவாசிப்பு அட்டவணைப்படி ஒருவருடத்திற்குள் பரிசுத்த வேதாகமத்தை 2022ஆம் ஆண்டில் வாசித்து முடித்தவர்களின் பெயர்களை 7ஆம் பக்கத்தில் பிரசுரித்துள்ளோம். இந்த ஆண்டிலும் எல்லா பங்காளர்களும் ஒருவருடத்திற்குள் வாசித்து முடிப்பதற்கு உற்சாகப்படுத்துகிறோம். இந்த தியானங்கள் சத்தியவசன வாட்ஸ் அப், YouTube, இணையதளம், ஆகியவற்றிலும் பிரசுரமாகிவருகிறது. தங்கள் நண்பர்கள் உடன் விசுவாசிகளுக்கு தாங்கள் இதை அறிமுகப்படுத்தி அவர்களும் பயன்பெற உதவிடுங்கள்.

இந்த கல்வியாண்டிலே பங்காளர் குடும்பத்திலுள்ள அரசுத்தேர்வு, கல்வி இறுதி யாண்டு தேர்வு எழுத உள்ள எல்லாப் பிள்ளைகளுக்காகவும் ஜெபிக்கிறோம். நீண்ட நாட்களாக சந்தாவைப் புதுப்பிக்காதப் பங்காளர்கள் புதுப்பித்து ஊழியத்தைத் தாங்க அன்பாய் வேண்டுகிறோம்.

இவ்விதழில் மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களிலும் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் தியானங்களை எழுதியுள்ளார்கள். மார்ச் மாதத்தில் நம்மைநாமே ஆராய்ந்து பார்க்கும்வண்ணமாக லெந்து நாட்களுக்கேற்ற சிறப்புத் தியானங்களையும் ஏப்ரல் மாதத்தில் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்தும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால் நாம் பெற்று அனுபவிக்கிற நித்திய இரட்சிப்பின் அனுபவங்களையும் ஆழமான தியானங்களாக எழுதியுள்ளார்கள். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக நீங்களும் ஜெபியுங்கள். இத்தியானங்கள் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு ஆசீர்வாதமாக அமைய ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்