பராக்கிரமசாலி!

அதிகாலை வேளையில்… (மே – ஜுன் 2023)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: நியாயாதிபதிகள் 6:11-14

அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார் (நியாயாதிபதிகள் 6:14).

ஒருவேளை நாம் கிதியோனின் அயலகத்தாராய் இருந்திருந்தால், ஒருநாள் அவர் இஸ்ரவேலின் பெரிய தளபதியாகவும், புகழ்பெற்ற நியாயாதிபதியாகவும் மாறுவார் என நினைத்திருக்கமாட்டோம்; ஆனால் அதுவே நிகழ்ந்தது. கிதியோன் திராட்ச ஆலைக்கு அருகே இருந்த களத்தில் இரகசியமாக கோதுமையைப் போரடித்துக் கொண்டிருந்தபோது, “பராக்கிரமசாலியே” (நியா.6:12) என்று அவனை கர்த்தருடைய தூதன் அழைத்ததைக் கேட் டதும் அவன் அதிர்ச்சிக்குள்ளானான்.

பாகாலின் பீடத்தைத் தகர்த்து தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டவேண்டும் என்று தைரியமாக அவன் கூறியது அவனுடைய நண்பர்களுக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கியிருக்கும். அவன் ஒரு சிறிய படையைத் திரட்டி மீதியானியரைத் தோற்கடித்தான். பயந்த அவன் தைரியசாலியானான். அவனுடைய இந்த மாற்றத்தின் இரகசியம் யாது? அவன் தேவனால் அனுப்பப்பட்டான். அவர் தம்முடைய வாக்குறுதியைக் காத்துக்கொள்வார் என நம்பினான். நாம் யார் என்பதோ, நம்மால் என்ன முடியும் என்பதோ முக்கியமல்ல. நாம் தேவனால் அனுப்பப்பட்டோமா என்பதே முக்கியம்.

தேவனுடனான முதல் சந்திப்பில் வெளிப்பட்ட கிதியோனுடைய அவிசுவாசம் அனைத்தையும் பாழாக்கிவிடுவது போல் இருந்தது. “கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்”. தேவனை நோக்கிப்பார்த்து அவருக்குக் கீழ்ப்படியாமல் தன் சூழ்நிலையைப் பார்த்ததே கிதியோன் செய்த தவறு ஆகும். எந்த சூழ்நிலைகளும் நமது சர்வவல்ல தேவனை ஒரு போதும் பாதிக்காது; ஏனெனில் இயலாதவற்றையும் செய்ய அவர் அதிகாரமுடையவர். உண்மையான ஜீவனுள்ள தேவனை விசுவாசித்து நீங்கள் வாழ்ந்தால் வினா எழுப்பமாட்டீர்கள். அவருடைய வாக்குறுதியை நம்புவீர்கள்.

கிதியோன் தன் நிலையைப் பார்த்து இன்னும் அதிகமாக அதைரியமடைந்தான்.”அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்” (வச.15). ஆனால் தேவன் அவனை “பராக்கிரமசாலியே” என்று அழைத்து விட்டார். தேவன் கூறுவது அனைத்தும் உண்மையாகவே இருக்கும்.

“ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமை பாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்” (1கொரி.1: 27- 29).

கிதியோன் தேவனால் தகுதி பெற்றான், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட நாமும்தான்!

எபிரெயர் 11:32இல் தங்களை அனுப்பின தேவனுக்காக பெரிய காரியங்களைச் செய்து அவரை மகிமைப்படுத்திய விசுவாச வீரர்களின் பட்டியலில் கிதியோனும் இடம் பெற்றுள்ளார். தேவன் நம்மை அனுப்பும்பொழுது அவரும் நம்முடன் வருகிறார்; நம்முடன் தங்குகிறார். “இதோ நான் உங்களுடன் கூட இருக்கிறேன்” என்று வாக்களித்த தேவன் அவர்களைத் தாங்கினார். அவருடைய வாக்குறுதி இன்றும் நம்மைத் தாங்குகிறது. தேவன் ஆபிரகாமுக்கு வாக்குறுதி அளித்தார் (ஆதி.26:3), யாக்கோபுக்கு (ஆதி. 31:3), மோசேக்கு (யாத்.3:12), யோசுவாவுக்கு (யோசுவா 1:5,9) எரேமியாவுக்கு (எரே.1:8,19), அப்.பவுலுக்கு (அப்.18: 9-10) கிறிஸ்தவ விசுவாசி ஒவ்வொருவருக்கும் (எபி.13:5-6) இவ்விதமான வாக்குறுதி அளித்துள்ளார். “உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா˜”, “நான் உன்னோடே இருக்கிறேன்” என்ற வாக்குறுதிகள் எந்த ஒரு கிறிஸ்தவனையும் தைரியசாலியாக்கிவிடும்.

என் நண்பர் அனுப்பிய ஒரு சிறு கவிதை இந்த தியானத்தின் சுருக்கத்தை விளக்குவதாக அமைந்துள்ளது.

சூழ்நிலையைப் பார்த்தால் அது துயரத்தைத் தரும்;
சுயத்தைப் பார்த்தால் அது மனச்சோர்வை அளிக்கும்;
ஆனால் விசுவாசத்தோடு இயேசுவைப் பார்த்தால்
அது உங்களுக்கு ஆசீர்வாதத்தை அளிக்கும்.

“விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபிரெயர்12:1-2).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை