ஆசிரியரிடமிருந்து… (ஜூலை – ஆகஸ்டு 2023)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நித்தமும் நம்மை வழிநடத்திச் செல்கிற இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்விதழின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். உலகில் அன்றாடம் நடைபெறும் சம்பவங்களை நாம் பார்க்கும்போது ஆண்டவருடைய வருகை மிகமிக சமீபமாயிருப்பதை நாம் உணரமுடிகிறது. அவருடைய வருகையிலே காணப்பட எப்போதும் ஆயத்தமுள்ளவர்களாய் இருப்போம்.

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்து பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி அனைவரையும் நிலைகுலைய வைத்தது. இவ்விதமான கோர சம்பவங்கள் இனி நேரிடாதபடியும் ரயில் பயணங்கள் பாதுகாப்பாக அமைவதற்கும் ரயில் இலாகாவில் பணிபுரிகிற ஒவ்வொருவருக்காகவும் நாம் தொடர்ந்து ஜெபிப்போம். மணிப்பூர் மாநிலத்தின் சமாதானத்திற்காக இடைவிடாது ஆண்டவருடைய சமுகத்தில் மன்றாடுவோம். கலவரத்தினாலே இடிக்கப்பட்ட ஆலயங்கள் மறுசீரமைப்பு செய்யப்படுவதற்கும், பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்கள் சோர்ந்துபோகாமல் விசுவாசத்தில் நிலைத்திருப்பதற்கும், காடுகளில் சிதறியிருக்கிற அனைவரையும் பாதுகாத்து தேவன்தாமே அவர்களைப் போஷித்து வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசன வெளியீடுகள் பிரிண்ட் பண்ணுவதற்கு அச்சுத்தாளின் கடுமையான விலை ஏற்றத்தினால் இருமாத வெளியீடுகளின் ஆண்டு சந்தா உயர்த்தப்பட்டுள்ளது. சந்தாதாரர்கள் இதை கவனத்தில் கொள்ள அன்புடன் கேட்கிறோம்.

பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகள் அனைவருக்கும் இந்த கல்வியாண்டு ஆசீர்வாதமாக இருப்பதற்கும், மேற்படிப்புக்காக கல்லூரிகளில் முயற்சி செய்யும் பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்பின பாடத்தைப் படிப்பதற்கு சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கு கர்த்தர் கிருபை செய்யவும் ஜெபிக்கிறோம்.

இவ்விதழில் ஜூலை மாதத்தில் சகோ.தர்மகுலசிங்கம் அவர்கள் தியானங்களை எழுதியுள்ளார்கள். ஆகஸ்டு மாதத்தில் 1-26 நாட்களுக்கு சகோ.வஷ்னி ஏர்ன்ஸ்ட் அவர்கள் எழுதிய தியானங்களும் 27-31 ஆகிய நாட்களுக்கு சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதிய தியானங்களும் இடம்பெற்றுள்ளன. தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகள் அனைவரையும் உங்கள் ஜெபங்களில் தாங்க அன்பாய் கேட்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்