பல தவறுகளுக்கு ஆரம்பம்
தியானம்: செப்டம்பர் 3 திங்கள்; வாசிப்பு: ஆதியாகமம் 3:8-11
‘…தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே
இருக்கிறாய் என்றார்.’ (ஆதியாகமம் 3:9)
ஒரு தெரிந்தெடுப்பு பல தவறுகளுக்குக் காரணமாயிற்று. தேவகட்டளையில் நிலைத்திராத ஆதாம் தன் மனைவிக்கு இணங்கி செய்யக்கூடாததைச் செய்தான். இதன்விளைவாக இருவரும் நிர்வாணிகளானதை உணர்ந்தனர். இதனால், தேவசத்தத்தைக் கேட்டதும் கலங்கினார்கள். தேவனை சந்திக்க முடியாமல் இருவரும் ஒளித்துக்கொண்டார்கள். அப்பொழுது கர்த்தர், “ஆதாமே நீ எங்கேயிருக்கிறாய்” என்றார். தான் நிர்வாணியாயிருப்பதால் பயந்து ஒளிந்திருப்பதாகக் கூறினான் ஆதாம். ஆனால், ஆதாம் தான் நிர்வாணி என்பதைமட்டும் தெரிவித்தானேயன்றி, எப்படி நிர்வாணியானான் என்பதைக் கூறவில்லை. ஆயினும் கர்த்தர், “….புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ” என்று மறுபடியும் கேட்டார். ஆதாமின் தெரிந்தெடுப்பு, தொடர்ச்சியான பல தவறுகளுக்கு வழிகாட்டியது. முதல் தெரிந்தெடுப்பு, செய்யக்கூடாததைச் செய்தது. இரண்டாவது தவறு, உண்ணக் கூடாது என்று கர்த்தர் சொன்னதை மீறி அந்தக் கனியை உண்டுவிட்ட உண்மையை மறைத்து, தன் நிர்வாண நிலைமையை மாத்திரம் கூறியது.
இன்றும் நம்மில் எத்தனைபேர் ஆதாம்போல் இருக்கிறோம்? இதில் கவனிக்க வேண்டிய முக்கியவிஷயம், ஒன்றன்பின் ஒன்றாக தவறுகளைச் செய்யும்போது, தம்மை யாருமே பார்க்கவில்லை என்பதுபோல நிம்மதியாக சுகபோகமாக வாழ்ந்துகொண்டிருப்பார்கள். தவறான வழியில் பணம் சேர்ப்பதும், மற்றவனை வஞ்சித்து சொத்து, விலைமதிப்புள்ள பொருட்களைச் சேர்த்துக் கொள்வதும், குறுக்கு வழியில் வேலைகளைப் பெற்றுக்கொள்வதும், தவறான சான்றுப் பத்திரத்தைக் காண்பித்து தவறான முறையிலே வீடுகள் சொத்துக்கள் வாங்குவது போன்ற பல தவறுகளை தேவனை அறியாத ஜனங்கள் மட்டுமல்ல, தேவனுடைய பிள்ளைகள் என்று தம்மைச் சொல்லிக் கொள்கிறவர்களும் செய்வது துக்கத்துக்குரியது. அதிலும் இவர்கள் தம்மை யாருமே காணவில்லை என்று நினைத்து, ஒன்றன்பின் ஒன்றாகப் பல தவறுகளைப் பயமின்றிச் செய்து கொண்டிருப்பது வேதனைக்குரியதல்லவா!
தேவனோ நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அவர் சகலத்தையும் அறிந்தவர், சகலத்தையும் காண்கின்றவர். மனிதனின் சிந்தை, இருதயத்தின் நினைவு, அவனது நிலைமை, செய்கை, பேச்சு அனைத்தையுமே அறிந்தவர். இப்படியான தேவன் அன்று ஆதாமை மட்டுமல்ல இன்று நம்மையும், “நீ எங்கேயிருக்கின்றாய்?” என்று பெயர் கூறி அழைத்தால், என்ன பதில் கூறுவோம்? உண்மை பேசுவோமா? இல்லையா? நம்மை ஆராய்ந்து பார்ப்போம். சத்தியத்திலே நிலைத்திருக்க நம்மை அர்ப்பணிப்போமாக.
ஜெபம்: “தேவனே! தவறுமேல் தவறுசெய்யாது, உண்மைத்துவத்தோடு வாழ உமது கிருபையை ஈந்து, என்னை உணர்வுள்ளவனாக்கி வழிநடத்தும். ஆமென்.”