ஓட்டத்தை முடித்தேன்!
தியானம்: 2024 மார்ச் 7 வியாழன் | வேத வாசிப்பு: 2 தீமோத்தேயு 4:1-8

நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன் (2 தீமோத்தேயு 4:7).
ஓட்டப்போட்டிகள் ஆரம்பிக்கும்போது, அந்த ஆரம்பக் கோட்டிலே ஓட்டத்தில் பங்குபெறுவோர் யாவரும் ஓடுவதற்கு ஆயத்தமாகிக் காத்திருப்பர். ஆனால், ஓட்டத்தை ஆரம்பித்த பின்னர், சிலர் பாதியிலேயே விழுந்துவிடுவதுண்டு; சிலர் களைத்துப்போய் மெதுவாக ஓடுவர்; இன்னும் சிலர் தமக்கான ஓட்டப்பாதையை விட்டு விலகி ஓடுவர். ஆனால், யார் இறுதிக்கோட்டை முதலாவதாக தனக்கான ஓட்டப்பாதையில் சரியாக ஓடி சென்றடைகிறாரோ அவரே ஓட்டத்தை முடித்தவராக, வெற்றியாளராக மகுடம் சூடுவார். ஆக, ஓட ஆயத்தமாவதோ, ஓடுவதோ அல்ல; சரியாக ஓடி முடிப்பதே காரியம். ஆனால், நமது ஆவிக்குரிய ஓட்டத்தில், முதலாவது என்பது அல்ல; இறுதி இலக்குவரை சரியாக ஓடுகின்ற ஒவ்வொருவருக்கும் மகுடம் உண்டு. ஆண்டவராகிய இயேசு தமது பிதாவின் சித்தத்தை நிறைவேற்றும்படிக்கு இந்த உலகிற்கு வந்தார். அதுவே அவரது ஒரே நோக்கமாக இருந்தது. இந்த ஓட்டப்பாதையிலே அவருக்குப் பல இன்னல்கள், சோதனைகள், பாடுகள் எல்லாமே வந்தன. ஆனாலும் அவர் அவற்றையெல்லாம் வென்றவராய் ஓட்டத்தை ஓடி முடித்து, இன்று வெற்றி வேந்தனாக பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். கிறிஸ்தவர்களை துன்பப்படுத்தி, அவர்களைக் கொலை செய்யும்படிக்கு அனுமதி பெற்றவனாய், தமஸ்குவுக்குப் புறப்பட்டுப்போகும் வழியில், கிறிஸ்துவால் சந்திக்கப்பட்டு, மனந்திரும்பி, இரட்சிப் படைந்தவர்தான் பவுல். அதன்பின்னர் அவரது வாழ்வின் ஓட்டப்பாதையே மாறியது; இப்போதுதான் அவர் தனக்கான சரியான பாதைக்கு வந்திருந்தார். அந்தப் பாதையில் அவருக்கு மரணதண்டனை காத்திருந்தபோதும், அப்பாதையை விட்டு கடைசிவரைக்கும் அவர் விலகவில்லை.
“நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது” – இது பவுலின் முழக்கம்! இன்று அநேகருடைய கல்லறையிலே இந்த வசனம் எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறோம். ஆனால், அவர்கள் உண்மையிலேயே நல்ல ஓட்டத்தை ஓடி முடித்தார்களா, விசுவாசத்தைக் காத்துக்கொண்டார்களா என்பதை நாம் அறியோம். நாளை நமது கல்லறையிலும் நமக்கு அன்பானவர்கள் இதே வாசகத்தை எழுதலாம்; அதற்கு நாம் தகுதியானவர்களாக இருக்கிறோமா என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.
பிரியமானவர்களே, நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள்; நமது ஓட்டப்பாதைகளும் வேறுபட்டவை. நமக்குரிய பாதையில் செவ்வையாக நேர்த்தியாக ஓடி, நமது இலக்கை அடையவேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்கவேண்டும். தடைகளும், தோல்விகளும் நம்மை பின் தள்ளிப்போட இடமளிக்கக் கூடாது. அன்று பவுலுக்கு நேரிட்ட சோதனை வேதனை நமக்கு நேரிடாது; ஆனால், நம் ஒவ்வொருவருக்கும் தடைகள் வரத்தான் செய்யும். ஆனால், தேவ ஆவியானவர் நம்முடன் இருப்பதால் தைரியமாக ஓடுவோம்.
ஜெபம்: அன்பின் கர்த்தாவே, என் வாழ்வில் என் ஓட்டத்தைப் பொறுமையோடு ஓடி முடிக்கவும் எனக்கான நீதியின் கீரீடத்தை நான் அடையவும் கிருபை தாரும். ஆமென்.