சத்திய வசனம் பங்காளர் மடல்
(மே – ஜுன் 2024)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
சத்தியவசனம் மே – ஜுன் இதழை வெளியிட தேவன் கிருபைசெய்தபடியால் அவரைத் துதிக்கி றோம். இம்மட்டும் தேவன் இவ்வூழியத்தின் தேவைகளைச் சந்திந்து, அவரது ராஜ்யம் விரிவடையும் பணியில் உதவிசெய்து வருகிறார். ஜீவனுள்ள தேவனண்டை மக்களை வழி நடத்துகிற பிரதான நோக்கம் இவ்வூழியத்தின் மூலம் நிறைவேற ஜெபத்துடன் பிரயாசப்படுகிறோம்.
சத்தியவசனம் பத்திரிக்கைகள் வாயிலாக தாங்கள் பெற்றுவரும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை தேவனுடைய நாம மகிமைக்காக எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் இவ்விதழை அறிமுகப்படுத்த அன்பாய் கேட்கிறோம். தேவன் நம் அனைவருடைய ஜெபத்தைக் கேட்டு நம்முடைய தேசத்தில் நடைபெற்ற தேர்தலானது அமைதியாக நடந்துமுடிய கிருபை செய்திருக்கிறார். தேவனுடைய சித்தத்தின்படி உண்மையான ஆட்சி அமைய தொடர்ந்து ஜெபம் பண்ணுவோம். தற்போது நம் தேசத்தில் மிஷனெரி பணிகளுக்கும், சுவிசேஷ ஊழியங்களுக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையை அறிவோம். குறிப்பாக வட மாநிலங்களில் துன்புறுத்தப்படும் ஊழியர்களுக்காகவும் தொடர்ந்து மன்றாடுவோம்.
இந்தப் புதிய கல்வியாண்டில் சத்தியவசன பங்காளர்கள், சந்தாதாரர்கள், வாசகர்கள் குடும்பங்களில் படித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகளுக்காக பாரத்தோடு ஜெபிக்கிறோம். தேவன் தாமே அவர்களுடைய பணத்தேவைகளையெல்லாம் சந்தித்து அவர்களை வழிநடத்துவார். ஜூலை மாதத்திலிருந்து நம்பிக்கை டிவியில் வியாழன்தோறும் மாலையில் ஒளிபரப்பாகி வந்த சத்தியவசன நிகழ்ச்சிகள் நிதி பற்றாக்குறையினிமித்தம் நிறுத்தப்படுகிறது என்பதைத் தெரியப்படுத்துகிறோம். தொடர்ந்து தொலைக்காட்சி ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து இவ்வூழியங்களைத் தாங்கவும் அன்பாய் அழைக்கிறோம்.
இவ்விதழில் பரிசுத்த ஆவியானவர் செயல்படும்போது … என்ற தலைப்பில் Dr.வாரன் வியர்ஸ்பி அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும், காலங்களைப் பற்றிய சத்தியம் என்ற தலைப்பில் Dr.தியோடர் எச்.எஃப். அவர்கள் எழுதிய தொடர் வேதபாடமும், மறக்கப்பட்டு போகுமா கர்த்தருடைய வார்த்தை? என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய சிறப்புச் செய்தியும் இடம்பெற்றுள்ளது. மேலும் பரலோக வீடு என்ற தலைப்பில் சகோ.எம்.எல்.பிரான்சிஸ் அவர்கள் எழுதிய செய்தியும், இஸ்ரவேல் தேசமும் தீர்க்கதரிசனம் நிறைவேறுதலும் … என்ற தலைப்பில் Bro.K.P.ஆபிரகாம் அவர்கள் எழுதிய செய்தியும், வேதாகமத்தை அறிந்துகொள்ளுதல் என்ற தலைப்பில் Dr.எம்.எஸ்.வசந்தகுமார் அவர்கள் அளித்த செய்தியும், வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து Dr.உட்ரோ குரோல் அவர்கள் வழங்கிய வேதபாடமும் இடம்பெற்றுள்ளது. கட்டுரைகள் அனைத்தும் தங்களது ஆவிக்குரிய வாழ்விற்கு அதிக பிரயோஜனமாய் இருக்கும் என்றே விசுவாசிக்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்