• Dr.தியோடர் எச்.எஃப். •
(மே – ஜுன் 2024)

6. சபை கிருபையின் காலம் – பகுதி 2

சபையின் காலத்தில் பரிசுத்த ஆவியானவர்

Dr.தியோடர் எச்.எஃப்.

பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய அறிவு படிப்படியாக வெளிப்படுத்தப்படுகிறது!

தேவசித்தமும் செயலும் ஒரே நேரத்தில் மனிதனுக்கு வெளிப்படுத்தப்படுகிறதில்லை. தேவை ஏற்படும்போது வெளிப்பாடு கொடுக்கப்படுகிறது.

1. பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவர், ஒரு நபரின் நிலையினை பொருட்படுத்தாது அவர் விரும்பும் நபரின் மீது வந்து அமர்கிறார். அவர் கிரியைசெய்ய விரும்பும்போது, தனது சுய அதிகாரத்தின்படி மனிதர்மீது வருகிறார். இன்றைய நாளினைப்போல ஆவியானவரை பெறுவதற்கு மனிதர்கள் எந்தவித நிபந்தனைகளையும் நிறைவேற்ற வேண்டியதில்லை.

2. பிதாவிடம் ஜெபித்து ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளுமாறு பூமி யில் வாழ்ந்தபோது கிறிஸ்து தமது சீஷர்களுக்குக் கற்பித்தார் (லூக். 11:13).

3. உலக ஊழியத்தின் இறுதியில், நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொ ழுது என்றென்றைக்கும் உங்களோடுகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார் என்று கிறிஸ்து வாக்குப்பண்ணினார் (யோவான் 14:14-16).

4. உயிர்த்தெழுந்த நாளின் மாலையில் தம்முடைய சீஷர்களை மேலறையில் கண்ட இயேசு, அவர்கள் மீது ஊதி “பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார் (யோவான் 20:22). அந்த மாலையில்தானே அவர்கள் ஊழியத்தினைத் தொடங்குவதற்கு முன்பதாக, உன்னதத்திலிருந்து வரும் பெலனால், பரிசுத்தஆவி அவர்கள் மீது எழுத்தின்படி வந்து அமரும்வரை காத்திருக்குமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்கினார் (லூக். 24:49; அப்.1:8).

இனிமேல் வருவதற்கு இது உத்திரவாதம் போல் காணப்படுகிறது. கிறிஸ்து பிதாவினிடத்திற்கு சென்ற பின்னர், பரிசுத்த ஆவியானவர் தாமே மகிமைப் படுத்தப்படுவார்.

5. பெந்தெகொஸ்தே நாளன்று, ஆவியானவர் விசுவாசிகளின் முழுசரீரத்தின் மீது வந்திறங்கினார் (அப்.2:1-4). 33 ஆண்டுகளுக்கு முன்னர், கிறிஸ்துதாமே வந்ததுபோல், திரித்துவத்தின் மூன்றாம் நபராக தோன்றி அது ஒரு உறுதியான வெளிப்பாடாக இருந்தது. பரிசுத்த ஆவியானவரின் இந்த வருகை மீண்டும் நிகழ்வதற்காக அல்ல. பெந்தெகொஸ்தே நாளே அவருடைய வருகையின் நாளென அனைத்து தீர்க்கதரிசனமும் சுட்டிக் காண்பித்தது.

6. சுவிசேஷமானது யூதர்களுக்கு மாத்திரம் பிரசங்கிக்கப்படும்வரை, யூதர்களுக்கு ஒரு சிறப்பான அடையாளமாக ஆவியானவர் அருளப்பட்டார் என்பது பெந்தெகொஸ்தே நாளைக்கு பிறகு சுட்டிக்காட்டப்படுகிறது (அப்.8:17; 9:17).

7. அப்போஸ்தலர் 10ல் காண்பதுபோல் புறஜாதிகளுக்கு சுவிசேஷத்தின் வாசல்களை பேதுரு திறந்தபோது, அங்கிருந்த அனைவர் மேலும் எவ்வித காலதாமதமோ, வேறெந்த நிபந்தனையோ இல்லாமல், கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசத்திதன் பேரில், பரிசுத்த ஆவியானவர் வந்திறங்கினார் (அப்.10:44;11:15-18). சபை காலத்தின் எஞ்சிய காலத்திற்கும் இதுவே நிலையான செயல் முறையாக இருந்தது. (ஒரே ஒரு விதிவிலக்கு வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது – அப்.19:6).

8. “மறுபடியும் பிறந்த” ஒவ்வொரு விசுவாசிக்கும் சில காரியங்கள் உண்மையாக இருக்கிறது.

முதலாவது, பிறப்பு என்பது ஆவியானவரால் ஏற்படுகிறது (யோவான் 3:3-6). பிறகு விசுவாசிக்குள் ஆவியானவர் தங்கி, அவருடைய பிரசன்னத்தால் விசுவாசிகளின் சரீரத்தை பரிசுத்த ஆவியின் ஆலயமாக மாற்றுகிறார் (ரோ மர் 8:9-15; 1கொரி.6:19; கலா.4:6; 1 யோவான் 2: 27). இரண்டாவதாக, கிறிஸ்துவின் சரீரத்தில் பரிசுத்த ஆவியானவரால் விசுவாசி ஞானஸ்நானம் செய்யப்படுகிறார் (1கொரி.12:1-13). மூன்றாவதாக, பரிசுத்த ஆவியானவரால் மீட்கப்படும் நாளுக்கென்று (இரகசிய வருகை எடுத்துக் கொள்ளப்படுதல்) விசுவாசி முத்திரை போடப்படுகிறார் (எபே.1:13; 4:30).

பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்கிறார்!

திரித்துவத்தின் நபராகிய பரிசுத்த ஆவியானவர் எப்போதும் நம்மோடிருந்து, மனிதனுக்காக தேவத்தன்மையின் கிருபையினை, இயக்குனராக அல்லது செயல் தலைவராக பணியாற்றுகிறார். அவர்தான் தேவனை நமக்கு உண்மையாக்கி, கிறிஸ்துவை நமக்குள் உருவாக்கி இறுதியில் நம்மை கிறிஸ்துவிடம் கொண்டுவருகிறார். அவருடைய கிரியை பலவகைப்பட்டது.

1. பரிசுத்த ஆவியானவர் நம்மை உணர்த்துகிற வல்லமை உடையவர் (யோவான் 16:8-11)

அ) அவர் மனிதனின் பாவத்தை கண்டித்து உணர்த்துகிறார் (அப்.2:36-47).

மனிதனுடைய இதயம் திருக்குள்ளது. தேவன் மனிதனைக் கொண்டுள்ள மதிப்பீட்டினை காட்டிலும் எப்போதும் மனிதன் தன்னைக் குறித்து ஒரு உயரிய மதிப்பீட்டை கொண்டிருக்கிறான். நாம் எப்போதும் பிறருடைய குறைகளை காண்கிறோம். ஆனால் நம்முடைய குற்றங்களை நாம் காண்பதில்லை. பாவிகளின் பாவத்தை அவர்களுக்கு உணர்த்த சில சமயங்களில் கிறிஸ்தவர்கள் விவாதம் செய்து முயற்சி செய்கின்றனர். இரட்சிக்கப்படாத ஒருவருக்கு தேவனுடைய வார்த்தை கொடுக்கப்படும்போது, பரிசுத்த ஆவியானவர் அந்த வார்த்தையின் மூலம் பாவத்தைக் குறித்து அவனுக்கு கண்டித்து உணர்த்துவார். அதற்கு தேவன் மனிதனை பயன்படுத்துகிறார். ஆனால், உணர்த்துகிற வல்லமை பரிசுத்த ஆவியானவரிடமிருந்து மட்டுமே வருகிறது.

ஆ) மனிதரின் அவிசுவாச பாவத்தை அவர் கண்டித்து உணர்த்துகிறார் (யோவான் 3:18).

மனிதனை கண்டித்துணர்த்துவதில் மிகக் கடினமான பாவம் இதுதான் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. “விசுவாசத்தினால் வராத யாவும் பாவமே” என்று வேதம் கூறுகிறது(ரோம. 14:23).

இ) “நீதியினைக் குறித்து” அவர் மனிதனைக் கண்டித்து உணர்த்துகிறவர் (யோவான் 16:8).

தங்களுடைய நீதி போதும் என்று பெரும்பாலான மனிதர்கள் சுயதிருப்தி அடைகின்றனர்.

ஆனால் பரிசுத்த ஆவியானவரோ, ஒருவனுடைய நீதி போதுமானதல்ல என்றும், விசுவாசத்திற்குப் பதிலாக தேவன் அவருடைய நீதியினைத் தருகிறார் என்று மனிதனை உணர்த்துகிறார் (ரோமர் 3:21,22).

ஈ) பரிசுத்த ஆவியானவர் “நியாயத்தீர்ப்பைக்” குறித்து கண்டித்து உணர்த்துகிறார் (யோ.16:8).

இயேசுகிறிஸ்துவின் மரணத்தின் மூலமாய் பிசாசானவன் ஏற்கனவே நியாயம் தீர்க்கப்பட்டு விட்டான் என்று மனிதனை ஏற்கச்செய்கிறார் (எபி. 2:14). அவனுக்கு பயங்கர முடிவு உண்டு என்றும் உறுதிசெய்கிறார். பரிசுத்த ஆவியினால் அருளப்படும் ஒப்புரவாக்குதலை அவன் நிராகரித்தால் அவன்மீது நியாயத்தீர்ப்பு வருமென்று மனிதனை உணர்த்துகிறார். இயேசுகிறிஸ்துவே தண்டணையை ஏற்கனவே ஏற்றுக்கொண்டதால், அவன் அதின்வழி செல்லாமல் நித்திய ஜீவனை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என பரிசுத்த ஆவியானவர் மனிதனை உணர்த்துகிறார்.

2.ஆவியானவர் இயேசுவைக்குறித்துச் சாட்சியிடுகிறார் (யோவான் 15:26,27; அப்.5:32).

கிறிஸ்துவை பரிசுத்த ஆவியானவர் நமக்கு வெளிப்படுத்திக் காண்பித்து அவரைக் குறித்து நமது ஆவியில் சாட்சியிடும்போதுதான் கிறிஸ்து நமக்கு உண்மையான அனுபவமாக மாறுகிறார் (1யோவான் 3:24).

3. மனிதனின் மறுபிறப்பில் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்கிறார்.

ஆவியில் மரித்திருக்கிறவர்களுக்கு ஆவிக்குரிய வாழ்க்கையினை பகிர்ந்தளிப்பதுதான் மறுபிறப்பாகும் (தீத்து 3:5). மனித முயற்சியினால் இது சாத்தியமாகாது. ஆனால் விசுவாசிக்கிறவர்களுக்கு இது பரிசுத்த ஆவியானவரால் செய்யப்படும் கிரியை ஆகும். மண்ணில் புதைக்கப்பட்ட விதை துளிர்விட்டு வளருவதற்கு தண்ணீர் காரணமாக இருப்பதுபோல், நாட்டப்பட்ட தேவவார்த்தைகளுக்கு பரிசுத்த ஆவியானவர் ஜீவன் அளிக்கிறார். மனிதர்களின் இதயங்களில் விதைக்கப் பட்ட தேவவார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் கிரியையினால் அவர்களுக்கு நித்தியஜீவன் அளிக்கிறது.

4.பாவத்தின் வல்லமையிலிருந்து மனிதனுக்கு பரிசுத்த ஆவியானவர் விடுதலை கொடுக்கிறார்.

ஆத்துமாவை பரிசுத்தஆவியானவர் மறுபிறப்படையச் செய்தபின்பு, பாவத்தை மேற்கொள்ள ஒரு வாஞ்சையினைக் கொடுத்து பரிசுத்த ஜீவியம் செய்வதை காணச்செய்கிறார். மனிதன் தன்னை பலவீனமாக உணர்வதால், பரிசுத்த ஆவியானவர் பாவத்தின்மீது அவனுக்கு வல்லமை அளித்து, ஒரு தெய்வீக வாழ்வு வாழ வல்லமை தருகிறார் (ரோமர் 8:2). ரோமர் 7:15-8:4இல் பவுலின் அனுபவத்தை நாம் நினைவுகூருவோம். 7ஆம் அதிகாரத்தில் இரண்டு இயற்கை சுபாவங்களுக்கிடையே உள்ள போராட்டம் பற்றி பவுல் பேசுகிறார். இந்த வசனங்களில் நான் என்ற தன்மைப் பெயரினைக் குறைந்தபட்சம் 27 முறை பயன்படுத்துகிறார். பரிசுத்த ஆவியானவர் அங்கு குறிப்பிடப்படவே இல்லை. எட்டாம் அதிகாரத்தில் மனிதன் சார்பாக பரிசுத்த ஆவியானவரின் கிரியைப்பற்றி பேசுகிறார். நான் என்கிற பதம் இரண்டு முறை மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரம் முழுவதும் பரிசுத்த ஆவியானவர் பலமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளார்.

5.கிறிஸ்து நமக்குள் உருவாக பரிசுத்த ஆவியா னவர் கிரியை செய்கிறார்.

விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருத யங்களில் வாசமாயிருக்கவும் (எபேசியர் 3:17). அவர் ஒரு பார்வையாளர் என்பது இதற்கு பொருளல்ல. அவர் நமது ஜீவனாகவே மாறுகிறார். தேவனுடைய நிறைவை பெறும்படி நாம் நிரப்பப்படுகிறோம் என்று பொருளாகிறது. பரிசுத்த ஆவியானவரின் செயல்பாட்டினால், கிறிஸ்துவோடுள்ள ஐக்கியத்தினால் அவருக்குள் நிலைத்திருக்க முடிகிறது. இவ்வாறாக நாம் சோதனைகள் மற்றும் போராட்டங்களின்மீது வெற்றிபெறுகிறோம். இல்லையெனில் அவைகள் நம்மை மேற்கொண்டிருக்கும் (1கொரி.10:13).

பரிசுத்த ஆவியானவர் கிரியையின் மூன்றுவித இரகசியம்!

1. பரிசுத்த ஆவியானவரின் வருகையின் இரகசியத்தை பொறுத்தமட்டில் (மறுபிறப்பு மற்றும் ஞானஸ்நானம்) முதலாவது புதுபிறப்பு என்பது நம்மில் “பரிசுத்த ஆவியானவரின் கிரியை” என்ற உண்மையினை நாம் அங்கீகரிக்க வேண்டும் (யோவான் 3:3-6).

இது மறுபிறப்பின் வல்லமையோடு அவர் ஒருவரின் வாழ்க்கையினுள் வருவதினால் நிகழ்கிறது (ரோமர் 8:9-11; 1கொரி.3:16, தீத்து 3:5,6). ஒரு மனிதன் மறுபடியும் பிறக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் அவனுடைய இதயத்தில் வந்து, கிறிஸ்துவை அவனில் உருவாக்கி, கிறிஸ்துவே அவனுடைய ஜீவனாக உண்மையிலேயே வந்துவிடுகிறார். தேவனுடைய ஆவி இல்லாதவன் தேவனுடைய பிள்ளையாக இருக்க முடியாது.

2. ஆவியானவர் வாசம்செய்தலின் (நிரப்புதல்) இரகசியம்.

அ). பரிசுத்த ஆவியானவரை பெறுவது ஒன்று, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவது என்பது இன்னொன்று. நாம் நமது பாவங்களை அறிக்கையிட்டு விசுவாசிக்கும்போது பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்வில் நுழைகிறார். நமது வாழ்க்கையினை ஒப்படைத்து, விசுவாசிக்கும்போது பரிசுத்த ஆவியானவர் நம்மை ஆட்கொள்ளுகிறார் (யோவான் 4:14, 7:37-39).

ஆ).நாம் மறுபடி பிறந்து பரிசுத்த ஆவியானவர் நமது இருதயங்களில் அரசாட்சி செய்யும்போது, நமது குணங்களை அடக்கும் உண்மையான போராட்டம் தொடங்குகிறது (கலா.5:17).

இ). நமது சரீரங்களை அவருக்கு ஒப்படைக்க வேண்டியது நமது கடமையாகும் (ரோமர் 6:13, 16; 12:1). பரிசுத்த ஆவியானவர் நமது வாழ்க்கையினை முழுமையாக நிரப்பமுடியாமல் போகலாம். இது ஏனென்றால், நம்மை அவருக்கு முழுமையாக ஒப்படைக்காத தவறுதலாகும். ஒப்படைத்தல் என்பது, பத்து அறைகள் உள்ள ஒரு வீட்டில் அறையினை வாடகைக்கு எடுப்பதும், அந்த வீட்டினையே விலைக்கு வாங்குவதற்கும் உள்ள வேறுபாட்டோடு ஒப்பிடலாம். அறைகளை வாங்கினால் ஒன்று அல்லது இரண்டு அறைகளை நீங்கள் பயன்படுத்தலாம். அந்த வீட்டை நீங்கள் சொந்தமாக்கி அனைத்தையும் உங்கள் வசத்தில் கொண்டுவராத வரையில், அனைத்து அறைகளுக்கும் நீங்கள் செல்ல இயலாது. பரிசுத்த ஆவியானவர் உங்கள் வாழ்க்கையில் வந்திருக்கலாம். ஆனால் உங்களின் முழுமையையும் அவரிடம் ஒப்படைக்கப்படாதவரையில் அவர் நிரப்ப முடியாது. பரிசுத்த ஆவியானவர் ஆட்கொள்வதற்கு நாம் காத்திருக்கவேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு கிறிஸ்தவனும் தேவனுக்குக் கீழ்ப்படிந்து அனைத்தையும் அவர் முழு ஆளுகை செய்ய வேண்டும் என அவர் காத்துக்கொண்டிருக்கிறார்.

3. பரிசுத்தாவியானவரின் நிரம்பி வழியச் செய்யும் இரகசியம் (யோவான் 7:37-39).

அ) ஆவியானவர் வரும்போது மனிதன் மறு பிறப்பு அடைகிறான். அவர் பொறுப்பெடுக்கும் போது மனிதன் வல்லமையைப் பெற்றுக்கொள்கிறான். அதின் விளைவாக நிரம்பி வழிகிற அல்லது வெளிக்கொட்டுகிற ஜீவதண்ணீர் புறப்பட்டு வருகிறது. மேலும் ஆவியின் கனி அப்படிப்பட்ட வாழ்க்கையினை அடையாளப்படுத்துகிறது (கலா.5:22,23).

ஆ) வரங்களில் வித்தியாசம் உண்டு. அதின் வெளித்தோற்றங்களில் உண்மையிலேயே வேறுபாடு உண்டு (1 கொரி.12:4-31).

இந்த வரங்கள் அந்த மனிதன் எதற்காக அழைக்கப்பட்டானோ அந்த ஊழியத்தினை செய்வதற்கு தகுதிப்படுத்த கொடுக்கப்படுகின்றன.

இ) பரிசுத்த ஆவியானவரின் நிறைவின் விளைவு வல்லமை (அப்.1:8), ஞானம், அறிவு (யோவான் 14:26) மற்றும் கனிநிறைந்த வாழ்வு (ரோமர் 15:2-7) ஆகியவை ஆகும்.

மொழியாக்கம்: Bro. A.Manuel