• கே.ப.ஆபிரகாம் •
(மே – ஜுன் 2024)

கே.ப.ஆபிரகாம்
இஸ்ரவேல் தேசமும் எருசலேம் பட்டணமும் வேதாகமத்தின் தீர்க்கதரிசனத்தின் மையமாக அமைந்திருக்கிறது. எருசலேமைக் குறித்த பல தீர்க்கதரிசனங்கள் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் இயேசுகிறிஸ்து கூறின குறிப்பிட்ட மூன்று தீர்க்கதரிசனங்களைக் குறித்தும் அதின் நிறைவேறுதலைக் குறித்தும் இச்செய்தியில் தியானிப்போம்.
தற்போது இஸ்ரவேல் தேசத்தில் ஹமாஸ் அமைப்பினரால் நிகழ்த்தப்பட்ட கோர தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரவேல் தொடுத்த போரானது இன்று உலக நாடுகளையே அதிர வைத்துள்ளது. தற்போது இந்த போர் ஈரான் வரையும் நீண்டுள்ளது. மீண்டும் எருசலேம் உலக செய்தியில் பேசும் பொருளாகியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த யுத்தம் ஒரு உலகப்போராக மாறுமோ என்ற ஐயமும் அநேகருடைய மனதிலும் எழுந்துள்ளது. இஸ்ரவேல் தேசத்தை ஆதரிக்கும் நாடுகளைவிட அதை எதிர்க்கும் நாடுகள்தான் அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் தேவன் எருசலேமிடத்திலும் இஸ்ரவேல் ஜனங்களிடத்திலும் எவ்வளவு அதிகமான பிரியம் வைத்திருக்கிறார் என்பதை 122ஆம் சங்கீதத்தில் காண்கிறோம். எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்கிறவர்கள் சுகித்திருப்பார்கள் என அச்சங்கீதத்தில் தேவன் நமக்கு வாக்குப்பண்ணுகிறார். எனவே தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் இஸ்ரவேல் தேசத்தின் சமாதானத்திற்காக மன்றாட வேண்டியது அவசியமாகும்.
எருசலேமின் சரித்திரத்தில் தாவீதிற்கு இன்றியமையாத இடம் உண்டு. சமஸ்த இஸ்ரவேலின் மேலும் இராஜாவானபோது, தாவீது செய்த முதலாவது காரியம், எருசலேமில் உள்ள எபூசியர்மேல் யுத்தம் பண்ண எருசலேமுக்குப் போனார். பல நூற்றாண்டுகளாய் எருசலேமிலிருந்த எபூசியர்கள், “இதிலே பிரவேசிக்க தாவீதினால் கூடாது என்று எண்ணி, தாவீதை நோக்கி: நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை; குருடரும் சப்பாணிகளும் உன்னைத் தடுப்பார்கள்’ என்று சொன்னார்கள். ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று” (2 சாமு.5:4-7). இவ்வாறு சீயோன் மலையின் பகுதியும் கைப்பற்றப்பட்ட பிறகு, எருசலேம் முழுவதும் இஸ்ரவேலின் ஆதிக்கத்தில் வந்தது. எபூசியர்களின் பிடியிலிருந்த எருசலேமை மீட்டெடுக்க யோசுவா எடுத்த முயற்சி கூடாமற் போயிற்று. ஆனால் தாவீது தனது இராஜ்யபாரத்தில் எருசலேமை புறஜாதிகளினிடத்தினின்று மீட்டு, தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை ஒபேத்ஏதோமின் வீட்டிலிருந்து (1 நாளா.13:14) எருசலேமுக்குள் அதிக விமர்சையோடு கொண்டுவந்து இவ்வாறு எருசலேமில் வாசம் பண்ணினார்.
கர்த்தர் தாவீதின் இராஜ்யத்தை தம்முடைய ஜனத்தின் நிமித்தம் மிகவும் உயர்த்தினார் (1நாளா. 14:2). சேனைகளின் தேவனாகிய கர்த்தர் தாவீதோடேகூட இருந்தார். மேலும் தாவீது மோரியா மலையில் பலி செலுத்துவதற்கு அர்வனாவின் களத்தை 50 சேக்கல் வெள்ளிக்கும் (2 சாமு. 24:24), ஆலயம் கட்டுவதற்கு முழு நிலத்தையும் 600 சேக்கல் நிறை பொன்னிற்கும் (1 நாளா.21: 25) கொண்டார். இப்படியாக தேவனுடைய விருப்பத்தையும் அவரது சித்தத்தையும் நிறைவேற்றினார். அதினால்தான் “என் இருதயத்திற்கு ஏற்றவன்” என்ற நற்பெயரை தாவீது தேவனிடமிருந்து பெற்றார். நம் மீட்பரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவானவரும் “தாவீதின் குமாரன்” என்றும் “தாவீதின் கிளை” என்றும் அழைக்கப்பெற்றார்.
எருசலேமிற்கு அநேக சிறப்பு பெயர்கள் உண்டு. தாவீதின் நகரம் (2சாமு.5:7), தேவ னுடைய நகரம் (சங்.46:4), சீயோன் (சங்.48:2), மகாராஜாவின் நகரம், பரிசுத்த நகரம் (ஏசா.52:1, நெகே.11:1), உண்மையுள்ள நகரம் (ஏசா.1:21), கர்த்தருடைய சிங்காசனம் (எரே. 3:17), நீதிபுரம், சத்திய நகரம் (ஏசா.1:26, சகரி.8:3), பரிசுத்த பர்வதம் (தானி. 9:16,20) என்று பல சிறப்பு பெயர்களால் வேதாகமத்தில் அழைக்கப்படுகிறது. இவ்வாறு மகிமை நிறைந்த பட்டணந்தான் அநேக நேரங்களில் தேவனுடைய கோபாக்கினைக்கும் உள்ளானது. இந்த கடைசி நாட்களின் நிகழ்வுகளும் உலகத்தின் தீர்க்கதரிசனமும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் எருசலேமை மையமாக வைத்தே நிகழ்கிறதைப் பார்க்கிறோம். இயேசுகிறிஸ்து விளம்பின தீர்க்கதரிசனத்தைக் குறித்தும் அதின் நிறைவேறுதலைக் குறித்தும் தொடர்ந்து நாம் தியானிப்போம்.
தீர்க்கதரிசனம் 1:
அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப் பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார் (லூக்கா 19: 41-44).
இயேசுவானவர் தாம் சிலுவைப் பாடுகளை ஏற்றுக்கொள்ளச் செல்வதற்குமுன்பாக எருசலேம் பட்டணத்தைக் குறித்து கண்ணீர்விட்டு அழுகிறதைப் பார்க்கிறோம். ஏனென்றால், கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று என்று எருசலேமைக் குறித்து இஸ்ரவேல் ஜனங்களிடம் இயேசு மனம் வருந்தி கூறி கண்ணீர் விட்டார்.
இஸ்ரவேல் ஜனங்களின்மேல் மிகுந்த அன்பும் கரிசனையுள்ளவராக அவர்களைத் தேடி வந்தார். அவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை சிலுவையில் அறைய ஒப்புக் கொடுக்கும்போது ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள் (மத்-27:25). கி.பி.70இல் டைட்டஸ் என்பவனின் தலைமையிலான ரோமப் படையால் எருசலேம் பட்டணம் தகர்க்கப்பட்டது. தேவாலயம் ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடிக்கு தரைமட்டம் ஆக்கப்பட்டது. இதற்கு சான்றாக இன்றளவும் தேவாலயத்தின் மேற்குபுற சுவர் மாத்திரம் எஞ்சியுள்ளதையும் அதினண்டையில் மக்கள் புலம்பி வருவதையும் நாம் காணமுடிகிறது. தேவனுடைய அன்பையும் கிருபையையும் ஏற்றுக்கொள்ள மனதிராமல் அவரை புறம்பே தள்ளின இஸ்ரேல் மக்கள் உலகமெங்கும் சிதறடிக்கப்பட்டனர். ஆண்டவர் கூறின தீர்க்கதரிசனம் நிறைவேறியது. அப்போதும் இஸ்ரவேலர் இயேசுகிறிஸ்துவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை.
தேவபிள்ளையே, இதைப்போன்று நம்மையும் தேவன் தம்மண்டைக் கூட்டி சேர்க்க விரும்புகிறார். அவர் நமக்கு கிருபையாய் தருகின்ற “நம்மை சந்திக்கும் காலத்தை” அறியாமற் போகும்போதும் அவர் நம்மை அழைக்கும் சத்தத்தை அசட்டை செய்யும்போதும் நமது சமாதானத்தை இழந்து போகிறோம். எனவே அன்பானவர்களே, ஒருவேளை ஆண்டவரைவிட்டு தூரமாக நாம் விலகி சென்றிருப்போமானால் நமக்கு கிடைத்திருக்கிற இந்த நாளாகிலும் சமாதானத்துக் கேற்றவைகளைத் தேடுவோம்.
தகப்பனைவிட்டு தூரம்போன அந்த இளை குமாரன் மறுபடியும் திரும்பிவருகிறவரையும் அந்த தகப்பன் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருந்தான். அவன் தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டு வந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள் (லூக்கா 15: 20-24). அவருடைய அழைப்பை ஏற்று அவரிடம் வருகிற ஒவ்வொருவரையும் இவ்வண்ணமாக ஆசீர்வதித்து தம்மண்டை சேர்த்துக்கொள்கிறார்.
தீர்க்கதரிசனம் 2:
அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக் கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, அவர் சமீப மாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள் (மாற்கு 13:28-29).
இயேசுகிறிஸ்து கூறின தீர்க்கதரிசனத்தின் படியே கி.பி.70ஆம் ஆண்டிலே எருசலேம் தரை மட்டமாக்கப்பட்டு உலகமெங்கும் இஸ்ரவேல் ஜனங்கள் சிதறுண்டு போனார்கள். இவர்கள் நாடற்றவர்களாக உலகத்தின் பல பகுதிகளில் தாங்கொண்ணா பாடுகளையும் துன்பங்களையும் அனுபவித்தனர். இருப்பினும் தேவன் அவர்கள் மேல் கிருபையுள்ளவராக இருந்தார். தேவனுடைய கால கடிகாரத்தில் எருசலேமைக் குறித்த தீர்க்க தரிசனம் இடம்பெற்றிருந்தது. மீண்டும் இஸ்ரவேல் தேசம் உருவாகும் என்றும் எருசலேம் பட்டணம் மீட்கப்பட்டு அதின் தலைநகரமாக திகழும் என இயேசுகிறிஸ்து கூறியிருந்தார்.
இந்த தீர்க்கதரிசனம் 1948ஆம் ஆண்டு மே 14, அன்று நிறைவேறியது. இஸ்ரவேலாகிய அத்தி மரத்தில் இளங்கிளைகள் துளிர்விட்டு அது உலக வரைபடத்தில் மீண்டும் இடம்பெற்றது. உலக மெங்கும் சிதறடிக்கப்பட்டிருந்த இஸ்ரவேல் ஜனங்கள் ஏறக்குறைய 1878 ஆண்டுகளுக்குப் பின்பாக பல தேசங்களிலிருந்து அணிஅணியாய் புறப்பட்டு தங்கள் சொந்த தேசத்திற்கு திரும்பினர். 1967ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தில் எருசலேம் பட்டணம் முழுவதுமாக மீட்கப்பட்டு இஸ்ரவேல் தேசத்தின் ஆளுகைக்குள் வந்தது. 1980ஆம் ஆண்டு எருசலேம் பட்டணமானது இஸ்ரவேல் தேசத்தின் தலை நகரமாக அறிவிக்கப்பட்டது.
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழுஇருதயத்தாலும் உங்கள் முழுஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்று யோசுவா கூறியது போன்று தேவன் இஸ்ரவேலைக் குறித்து சொன்னவை யாவும் இன்றளவும் நிறைவேறி வருகிறதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.
இத்தீர்க்கதரிசன நிறைவேறுதலின் வாயிலாக திருச்சபை மக்களாகிய நாம் அறிந்துகொள்ளக் கூடிய அதிமுக்கியமான செய்தி ஒன்று உண்டு. “இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும் போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள் என்று இயேசு சொன்னார்.” அப்படியென்றால் இஸ்ரவேலாகிய அத்தி மரம் துளிர்த்த 1948ஆம் ஆண்டிலேயே இயேசு கிறிஸ்து வாசலண்டையில் வந்துவிட்டார். எனவே நாம் ஆண்டவருடைய வருகைக்கு எவ்வளவு சமீபமாக இருக்கிறோம் என்பதை அறியவேண்டும். அடுத்ததாக, நாம் எவ்வளவாய் அவருடைய நாளை எதிர்பார்த்து ஆயத்தமாகி காத்திருக்க வேண்டும். மேலும் இயேசுகிறிஸ்து கூறும்போது, “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” (மாற்கு 13:34,35) என்றார்.
தீர்க்கதரிசனம் 3:
எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். அப்பொழுது மனுஷ குமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோ டும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள். …. இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார் (லூக்கா 21:20, 27,28).
இதுவரைக்கும் நாம் நிறைவேறின தீர்க்கதரிசனங்களைப் பார்த்தோம். இந்த தீர்க்கதரிசனமானது இனிமேல் நிறைவேறப்போகிறது. தற்போது இஸ்ரவேலில் நடைபெற்றுவரும் யுத்த மானது இத்தீர்க்கதரிசன நிறைவேறுதலின் ஆரம்பமாக இருக்கிறது. நாளுக்குநாள் இஸ்ரவேல் தேசத்திற்கு நெருக்கடி அதிகரித்து வருகிறதைப் பார்க்கிறோம். ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனியர் களுக்கு ஆதரவாக பல உலகநாடுகள் ஒன்று திரள முற்படுவதை நாம் பார்க்கிறோம். எனவே இது எருசலேம் சேனைகளால் சூழப்படும் என்ற இயேசு கூறிய தீர்க்கதரிசனம் நிறைவேறும் காலமாக இருக்கிறது. மத்திய தரைக்கடல் பகுதியானது நாளுக்கு நாள் போர் பதட்டம் அடைந்து வருவதைப் பார்க்கிறோம். இந்த நிலை நீடிக்குமானால் உலகப்போர் ஏற்பட வாய்ப்பிருப்பதை நாம் உணரமுடிகிறது.
“இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்” என்று ஆண்டவர் கூறினார். ஏற்கனவே நாம் பார்த்தபடி ஆண்டவர் வாசலண்டை வந்து விட்டார். எனவே நாம் சபை எடுத்துக் கொள்ளப்படும் நாட்களுக்கு மிகவும் சமீபமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது உறுதியாகிறது அல்லவா! ஆகவே, நாம் நிமிர்ந்துபார்த்து நம் தலைகளை உயர்த்துவோம். பிரதான தூதனின் எக்காள சத்தம் கேட்கும் காலம் மிகவும் சமீபமாயிற்று. இனி காலம் செல்லாது.
அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று: கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப் போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள் (அப்போஸ்தலர் 1: 11,12).
உங்களுக்குத் தெரியுமா?
ஒரு மனிதன் தனது பணத்தை உபயோகிக்கும் முறை அவனது ஆவிக்குரிய நிலையை எத்தகையது என்பதைக் காண்பிக்கும்!
நினைவுகூருங்கள்!
தேவனின் வழிநடத்துதலை எதிர்பார்க்கின்ற நாம் அவரது வேளைக்காகக் காத்திருக்கவும் தயாராக இருக்கவேண்டும்.