• Dr.வாரன் வியர்ஸ்பி •
(மே – ஜுன் 2024)

Dr.வாரன் வியர்ஸ்பி
கனடாவில் நடந்த கோடைகால வேதாகம மாநாட்டில் கலந்துகொண்ட ஒரு விருந்தினர், தினமும் குளிக்கும்போது அவள் உபயோகித்த சோப்பிலிருந்து பொங்கி வந்த நுரையைக் கண்டு பூரித்துப்போனாள். அந்த சோப் அடங்கிய ஒரு அட்டைப்பெட்டியை வாங்க முடியுமா என்று மேலாளரிடம் கேட்டார். அவள் வீட்டிற்கு வந்ததும், அவளிடம் அட்டைப்பெட்டி நிறைய சோப்பு இருந்தது. ஆனால் அவள் தனது வீட்டில் அந்த சோப்பை உபயோகித்தபோது நுரை வரவில்லை. நுரை அதிகமாக வருவது சோப்பினால் அல்ல, நாம் உபயோகிக்கும் தண்ணீரில்தான் உள்ளது என்ற இரகசியத்தை அறிந்துகொண்டாள்.
தவறாக வழிநடத்தப்பட்ட இந்த பெண்ணைப் போலவே, இன்றைய சபைகளில் உள்ள பல நேர்மையான மக்கள் ஆழமானதும் மற்றும் மேற்பரப் பில் உள்ள அத்தியாவசியமானதுமான காரியங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக தற்செயலான சம்பவங்களில் கவனம் செலுத்துகின்றனர். இது பரிசுத்த ஆவியின் கோட்பாடுக்கும் மற்றும் பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்தாவியானவர் ஊற்றப்பட்ட சம்பவத்திற்கும் பொருந்தும். அந்த நாளில் அதிசயமான விஷயங்கள் நிச்சயமாக நடந்தன, ஆனால் வெளிப்புற அடையாளங்களை மட்டும் நாம் பார்க்காமல், அந்த அற்புதங்களில் உள்ள செய்தியை தவறவிடாமல் கவனமாக இருக்கவேண்டும்.
அப்போஸ்தலர் 2:1-13 வரையுள்ள இந்த வேத பகுதியில் காணப்படும் காற்று (வச.2), அக்கினி (வச.3) மற்றும் திராட்சரசம் (வச.13) ஆகிய மூன்று சின்னங்களின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால், தேவ ஆவியானவர் நமக்கும் நமது திருச்சபைக்கும் என்ன செய்ய விரும்புகிறார் என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ளலாம்.
காற்று (The Wind):
பரிசுத்த ஆவியானவர் வந்தபோது விசுவாசிகள் எங்கிருந்தார்கள் என்று நமக்குச் சொல்லப்பட வில்லை. ஒருவேளை அவர்கள் மேல் அறையில் இருந்திருக்கலாம் அல்லது ஆலயத்தின் ஏதாவது ஒரு பகுதியில் இருந்திருக்கலாம். திடீரென்று பலத்த காற்று வீசும் முழக்கம் அவர்களுக்குக் கேட்டது. ஆனால், அவர்கள் காற்றை உணரவில்லை, அவர்கள் அதன் சத்தத்தை மட்டுமே கேட்டனர். ஆனால், அது அவர்களுக்கு உயிர் கொடுக்கும் வல்லமையை உணர்த்தியது.
தேவனுடைய ஆவியைப் போலவே, காற்றும் நமது கண்களுக்குத் தெரியாதது. ஆனால், அது வல்லமையுடையது. எபிரெய மற்றும் கிரேக்க மொழிகளில், “காற்று” என்பதற்கான வார்த்தை யும் “ஆவி”க்கான வார்த்தையும் ஒன்றே. இயேசு ஆவியானவரின் கிரியையைக் காற்றின் மர்மமான இயக்கத்திற்கு ஒப்பிட்டார் (யோவான் 3:8). உங்களால் காற்றை உணர முடியும், அது என்ன செய்கிறது என்பதைக் காணமுடியும். ஆனால், உங்களால் அதை விளக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது.
காற்று வாழ்வின் ஆதாரம். நாம் வாழும் உலகில் காற்றின் அசைவு இல்லாவிடில், உயிரினங்கள் இறந்துவிடும். காற்று நமக்கு புத்துணர்ச்சியைக் கொண்டுவருகிறது மற்றும் மாசுபாட்டை எடுத்துச் செல்ல உதவுகிறது. இன்று நமது சபைகளில் “ஆவியின் காற்று” நமக்கு எவ்வளவு தேவை! வானத்தின் காற்றின் வல்லமையும் புத்துணர்ச்சியும் நம்மீது வீச வேண்டும்.
அக்கினி (The Fire):
பரிசுத்த ஆவியானவர் அக்கினியால் இங்கு அடையாளப்படுத்தப்படுகிறார். மக்கள் “அக்கினி மயமான நாக்குகளைப்” பார்த்தனர் என்பதை நினைவிற்கொள்க. ஜி.கேம்பெல் மார்கன் அக்கினி மயமான நாவு சபையின் சிறந்த பிம்பம் என்று கூறினார், ஏனெனில் இது திருச்சபையின் ஊழியம் உண்மையில் என்னவென்பதை வெளிப்படுத்துகிறது. மேலும் நற்செய்தியின் செய்தியை முழு உலகிற்கும் விளக்கிக்காட்டுகிறது.
நீங்கள் நெருப்பைப்பற்றி நினைக்கும்போது, முதலாவது, நமக்கு பரிசுத்தத்தைப் பற்றி நினைவூட்டுகிறது. தேவனுடைய ஆவியானவர் செயல்படும்போது, அவர் பாவத்தை அம்பலப்படுத்தி, அதை எரித்துப்போட முயல்வார். உண்மையில், பரிசுத்த ஆவியின் பெயர்களில் ஒன்று “சுட்டெரிப்பின் ஆவி” (ஏசா.4:3) என்பதாகும். இரண்டாவதாக நெருப்பு நமக்கு அனலை நினைவூட்டுகிறது. ஆவியானவர் நம்மைக் கட்டுப்படுத்தும்போது, நாம் ஒருவருக்கொருவரும் மற்றும் தேவன்மீதும் அதிக அன்பு உள்ளவர்களாக இருப்போம்.
மூன்றாவதாக, அக்கினி வல்லமையைப் பற்றி பேசுகிறது, நாம் கிறிஸ்துவுக்காக சாட்சியளிக்க வேண்டுமானால் ஆவியானவரின் வல்லமை நமக்குத் தேவை (அப்போஸ்தலர் 1:8). இறுதியாக, அக்கினி நமக்கு வெளிச்சத்தையும் தருகிறது. தேவனுடைய வழிநடத்துதலைப் பின்பற்ற நாம் நாடும்போது, தேவனுடைய ஆவியானவர் தேவனுடைய வார்த்தைக்கும், நம்முடைய பாதைக்கும் வெளிச்சம் கொடுக்கிறார்.
அக்கினியும் காற்றும் இணையும்போது தீப் பிழம்பு ஏற்படுகிறது! “பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.” என்று கர்த்தராகிய இயேசு சொன்னார் (லூக்கா 12:49). இந்த அக்கினியை நாம் முழுஉலகத்துடனும் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று தேவன் விரும்புகிறார்.
திராட்ச ரசம் (The Wine):
பரிசுத்த ஆவியைக் குறிக்கும் மூன்றாவது படம் “புதிய திராட்சரசம்.” கூட்டத்திலிருந்த சந்தேகம் கொண்டவர்களில் சிலர், “மதுவினால் நிறைந் தவர்கள்” (வச.13) என்று விசுவாசிகளைப் பற்றி கூறினார்கள். ஏன் அப்படிச் சொன்னார்கள்? ஏனென்றால், ஆவியால் நிரப்பப்பட்ட கிறிஸ்தவர்கள் தேவனின் அற்புதமான செயல்களுக்காகப் புகழ்வதையும், வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்து வந்த தேவபக்தியுள்ள யூதர்கள் தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை கேட் டனர். இது உண்மையில் ஒரு அதிசயமாகும்!
இன்றைய காலகட்டத்தில் சராசரி ஒரு ஆலய ஆராதனைக்கு இரட்சிக்கப்படாத ஒரு மக்கள் கூட்டம் வருகை தருவார்களானால், அவர்கள் அங்கு ஆராதிப்பவர்களைப் பார்த்து இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று குற்றஞ் சாட்டுவது சந்தேகமே! ஏனென்றால் நாம் ஆவியானவரால் நிரப்பப்பட்டு, தேவனைத் துதிக்கும் துதியால் நிரம்பி வழிவதில்லை. ஆவியானவரால் நிறைந்திருக்கும்படி பவுல் நமக்குக் கட்டளையிடுகிறார் (எபே.5:18). மேலும் இந்த ஆவியின் நிறைவுக்கான சான்றுகளில் ஒன்று கர்த்தரைப் புகழ்ந்து பாடுவது என்று பவுல் சுட்டிக்காட்டுகிறார். யூதர்களுக்கு, திராட்சரச மதுவானது மகிழ்ச்சியின் அடையாளமாக இருந்தது (சங். 104:15). மற்றும் ஆவியின் கனியின் ஒரு அம்சமானது “மகிழ்ச்சி” ஆகும் (கலா. 5:22).
அப்படியானால், ஆவியானவர் நம் வாழ்க்கைக்கும் நமது சபைக்கும் கொண்டுவர விரும்பும் மூன்று அற்புதமான வரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன: முதலாவது, காற்றின் புத்துணர்ச்சி மற்றும் வல்லமை. இரண்டாவது, அக்கினியின் பரிசுத்தம் மற்றும் அனல். மூன்றாவது, அவரது நிறைவினால் வரும் மகிழ்ச்சி. எல்லாக் காரியங்களும் “கண்ணியமாகவும் ஒழுங்கும் கிரமமாகவும்” செய்யப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும் (1 கொரி.14:40), மேலும் இந்த சத்தியத்திற்கு மாறாக தயாரிக்கப்பட்ட மாற்று போதனைகளைக் குறித்து நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
ஆனால் நாம், நம் வாழ்க்கையை ஆவியான வருக்குத் திறந்து கொடுத்து, அவர் நம்மைக் கட்டுப்படுத்த அனுமதித்தால், அவர் நம் வாழ்வில் ஒரு புதிய புத்துணர்ச்சியையும் வல்லமையை யும் மகிழ்ச்சியையும் கொண்டுவருவார், மேலும் இயேசுகிறிஸ்து நம்மூலம் மகிமைப்படுவார்.
நினைவுகூருங்கள்!
ஜெபமே நமக்கும் தேவனுக்கும் இடையில் நல்ல உறவை ஏற்படுத்துகிறது.