• Dr.உட்ரோ குரோல் •
(மே – ஜுன் 2024)

5. வெளிப்படுத்துதலைப் புரிந்துகொள்வது சாத்தியமா? ஆம்!

Dr.உட்ரோ குரோல்

இயேசு யோவானுக்கு விளக்கிய வருங்கால காரியங்களை வெளிப்படுத்தல் புத்தகம் நமக்கு விளக்குகிறது. யோவான் நாடு கடத்தப்பட்டு மத்திய தரைக்கடலில் உள்ள பத்மு தீவில் இருந்தார். தேவன் சகலத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்வதற்கு ஏற்றவிதமாய் இப்புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர் சகலத்தையும் வெளிப்படுத்துவார். எனவே நீங்கள் இப்புத்தகத்தைப் பற்றி ஆறுதல் கொள்ளலாம்.

இப்புத்தகம் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றியது. இது ஆண்டவராகிய இயேசுவிடமிருந்து யோவான் பெற்றுக் கொண்ட தரிசனத்தைப் பதிவு செய்த புத்தகமாகும்.

இயேசுவின் போதனைகள் மற்றும் நாம் அவருக்காக வாழும்விதம் ஆகியவற்றைப் பற்றிய சில வழிகாட்டுதல்களை இப்புத்தகம் தருகிறது. இதனை அநேக விசித்திரமான மர்மமான சின்னங்கள் உடைய புத்தகமாக நீங்கள் பார்க்கவேண்டாம். அவற்றை நீக்கிவிட்டு அக்குறியீடுகள்மூலம் இயேசுவைப் பார்க்க உங்களை நான் அழைக்கிறேன்.

இப்புத்தகத்தின் மையநபர் இயேசுகிறிஸ்துவே; அந்திக்கிறிஸ்து அல்ல. நம்முடைய ஆராய்ச்சி நேரத்தை வேறுபட்ட சின்னங்களிலும் (Symbols) எதிர்கால அடையாளங்களிலும் (Signs) செலவழித்தால் இப்புத்தகம் சுட்டிக்காட்டும் நபரான இயேசு கிறிஸ்துவை நாம் கவனிக்கத் தவறிவிடுவோம். இது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப் பற்றி எழுதப்பட்டது.

இப்புத்தகத்தின் ஆரம்ப வசனங்களை நாம் கவனிப்போம். “சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். இவன் தேவனுடைய வசனத்தைக் குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக் குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்” (வெளி.1:1-2). இந்நூலின் ஆசிரியரான யோவான் தனக்கு இயேசு வெளிப்படுத்தினதை மட்டுமே எழுதியுள்ளார்.

இவர் இயேசுவுடன் கூடஇருந்த 12 சீடர்களில் ஒருவர். இவர் தனது விசுவாசத்துக்காகக் கொல்லப்படவில்லை; நல்ல முதிர்வயதுவரை வாழ்ந்தவர். யோவான் எழுதிய நற்செய்தி நூல், 1 யோவான், 2யோவான் மற்றும் மூன்று யோவான் நிருபங்களையும் இவர் எழுதினார். அவர் இறுதி அழிவுகளைக் கூறும் எதிர்காலத்தைப் பற்றிய புத்தகத்தையும் எழுதினார். இந்த வெளிப்படுத்தல் புத்தகமானது இயேசுகிறிஸ்துவைப் பற்றினது. எதிர் காலத்தில் நடக்கவிருப்பதை வெளிப்படுத்தி, அவர் எவ்வாறு எதிர்காலத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என்பதையும் விளக்குகிறது.

என்னுடைய வாழ்வில் நடக்கும் சில நிகழ்வுகளுக்கு தேவன் ஏன் அவைகளைஅனுமதித்தார்? என்ற கேள்வி எனக்குள் எழும்பும்பொழுது. இந்த வெளிப்படுத்தல் புத்தகத்தை வாசித்து அதற்கான விடையை நான் பெற்றுக்கொள்ளுகிறேன். தேவன் அனைத்தையும் சீரமைக்கப்போகிறார். உலகின் தீயவைகள் நியாயந்தீர்க்கப்படும். இன்று கொள்ளையடிப்பவர்கள், கொலை செய்பவர்கள், அக்கிரமக்காரர்கள் யாவரும் அந்த நியாயத் தீர்ப்பு நாளை எதிர்கொள்வார்கள். ஆனால், அந்த நாளைப் பற்றி வெளிப்படுத்தல் நூல் மட்டுமே நமக்கு விளக்குகிறது. ஆகவே இந்த புத்தகம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இயேசு தமது செய்தியை யோவானிடம் கொடுத்தார். இது எதிர்காலத்தைப் பற்றியது. எனவே இந்த செய்தி எதிர்காலத்தில் இயேசுவைப் பற்றினது. விவரிக்கமுடியாததை நமக்கு விளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என நான் நினைக்கிறேன். எதிர்காலத்தைப் பற்றி அதிக சிரத்தை எடுத்து யோவான் அவைகளை விவரித்ததில் நான் ஆறுதலடைகிறேன்.

வெளிப்படுத்தல் புத்தகத்தை நீங்கள் வாசிக்கும்பொழுது அதின் அனைத்துக் காரியங்களையும் உங்களால் புரிந்துகொள்ள முடியாவிட்டால் கவலைப்படாதேயுங்கள். இயேசு அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார். எதிர்காலம் நிச்சயிக்கப்பட்டாயிற்று. அது பாதுகாப்பானது. தேவன் ஒரு திட்டத்தை வைத்துள்ளார். இவ்வுலகில் தவறு செய்தவர்களை அவர் நியாயந்தீர்க்கப்போகிறார்.

இன்று நாம் கேட்கும் அனைத்து வினாக் களுக்கும் ஒருநாள் விடை கிடைத்துவிடும். தேவன் அனைத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாய்செய்கிறவர். இதுதான் பிரசங்கி 3 நமக்குத் தரும் வாக்குறுதி. யோவான் பார்த்தவைகளில் அநேகம் அவரால் விவரிக்க முடியாதவை. விவரிக்கமுடியாத சிக்கலானவைகளை விளக்குவதற்கு சில குறியீடுகளையும் (Symbols) உரு வகங்களையும் (Metaphors) அவர் பயன்படுத்தியுள்ளார். அடுத்தவரும் பாடங்களில் நாம் அவற்றை ஆராய்வோம். அனைத்தையும் நம்மால் புரிந்துகொள்ள இயலாவிட்டாலும் கவலைப்படாதீர்கள். அநேகர் இப்புத்தகத்தின் ஒவ்வொரு காரியத்தையும் நுணுக்கமாக அறிந்துகொள்ள தங்களுடைய நேரங்களைச் செலவழிக்கிறார்கள். ஆனால், அவர்கள் புத்தகத்தின் மையக்கருத்தினை இழந்துபோகிறார்கள்.

அதன் மையக்கருத்தானது: தேவன் என்ன செய்ய நினைப்பாரோ அதையே அவர் செய்வார். அவர் செய்ய நினைப்பது தடைபடாது. வருங்காலம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. தேவன் அனைத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். இன்றைய செய்தித்தாளிலும், தொலைக்காட்சியிலும் நாம் ஊழலையும் தீவிரவாதத்தையும், அரசியல் பழிவாங்குதலையுமே காண்கிறோம்; இது நம்மை சோர்வுக்குள்ளாக்குகிறது அல்லவா?

ஆனால், வெளிப்படுத்தல் புத்தகம் நமக்கு ஊக்கத்தைத் தருகிறது. அதைப்படிக்கும்பொழுது அந்த உற்சாகத்தை நாம் பெறாவிட்டால் அப்புத்தகம் எழுதப்பட்டதன் காரணத்தை நாம் தவறவிட்டிருக்கிறோம் என்று பொருள். அநேகர் இது தங்களுக்குப் புரியாது என்று எண்ணி அதனை வாசிக்காது விட்டுவிடுகின்றனர். ஆனால், எதிர்காலத்தில் ஆர்வமுடைய ஒவ்வொரு கிறிஸ்தவனும் இப்புத்தகத்தைக் கட்டாயம் வாசித்தாகவேண்டும்; இயேசு கிறிஸ்துவைப்பற்றிய பூரணஅறிவைப் பெற்றுக்கொள்ள விரும்பும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் இதனை வாசிக்கவேண்டும். இயேசுவைப் பற்றி நற்செய்தி நூல்களிலிருந்து நாம் அறியாத அநேக காரியங்களை நாம் இப்புத்தகத்திலிருந்து கற்றுக் கொள்ளலாம்.

நீங்கள் விசுவாசியாக இருந்தால் இப்புத்தகம் உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். ஆனால், இயேசுவை அறியாத மக்களை எண்ணிப்பாருங்கள். நாம் அவர்களுக்காக நமது உயிருள்ளவரை ஜெபிக்கவேண்டும். நம் மூலமாக கிறிஸ்துவின் அன்பை வாழ்வில் காட்டவேண்டும். நற்செய்தியை அறிவிப்பதில் உண்மையான சாட்சியாக நாம் இருக்கவேண்டும்.

ஆனால், அவர்களுக்காக நாம் விசுவாசிக்க முடியாது. அதை அவர்கள்தான் செய்யவேண்டும். அவர்கள் தங்கள் பாவநிலையை ஒத்துக்கொள்ள வேண்டும். தங்களுக்கு ஒரு இரட்சகர் தேவை என்பதை உணர்ந்து, இயேசுகிறிஸ்துவிடம் வர வேண்டும். ஆனாலும் விசுவாசிக்காத சிலர் உண்டு. நம்மால் முடிந்த அளவு அவர்களை கிறிஸ்துவிடம் வரவழைக்கவேண்டும்.

தேவன் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். நம்முடைய வாழ்வில் நாம் காணும் துன்பங்களுக்கும் அநீதிக்கும் ஒரு முடிவு உண்டு. தேவன் அனைவரது வாழ்வுக்கும் பொறுப்பாக இருக்கிறார் என்பது அவர்கள் இரட்சகராகிய இயேசுவிடம் வருவதற்கு மிகப்பெரிய சாட்சியாக அமையும். முதலாம் அதிகாரம் 3ம் வசனத்தில், காலம் சமீபமாயிருக்கிறது என்று உள்ளது. இது வெளிப்படுத்தலில் உள்ள நிகழ்வுகளுக்குப் பொருந்தாது என்பதை நாம் பின்னர் பார்க்கலாம்.

காலம் என்பதைக்குறிக்க கெய்ரோஸ் (Kairos) என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவொரு காலக்கட்டம் அல்லது இறுதிக்காலம் என்று பொருள்படும். யோவானுக்கு இந்த வெளிப்படுத்தலைக் கொடுத்தபின்னர் தேவனுடைய திட்டத்தின் ஒரு புதிய காலம் ஆரம்பித்தது. இப்பொழுது நாம் அதன் இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம்.

ஆண்டவரின் வருகையைப்பற்றி வசனம் 7 கூறுகிறது: “இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமி யின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.” இங்கே இரண்டாவது, “ஆமென்” என்ற சொல் காணப்படுகிறது. “இயேசுகிறிஸ்து வருகிறார்” என்று வெளிப்படுத்தலில் கூறியிருப்பது அவரது இரண்டாம் வருகையைக் குறிக்கும். ஆனால், 19ஆம் அதிகாரத்தில்தான் அதைப்பற்றி நாம் விவரமாகக் காணமுடியும். அவர் வரும்பொழுது அவர் இயேசு என்று அனைவரும் அறிந்துகொள்வர். அவரைக் கண்ணால் காண்பார்கள். அவரைக் குத்திய யாவரும் அவரைக் காண்பார்கள். இது கல்வாரியில் அவரை சிலுவையில் அறைந்த பொழுது அருகாமையில் நின்ற ரோம போர்ச் சேவர்களைக் குறிக்கிறது.

இப்புத்தகத்தில் கூறப்படும், இயேசு யார்? என்பதை வசனம் 8 அடையாளம் காட்டுகிறது. அவர், “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.” அல்பா என்பது கிரேக்க மொழியின் முதல் எழுத்து; ஒமேகா என்பது இறுதி எழுத்து. எனவே “நானே எல்லாவற்றையும் துவக்கினேன்; நானே எல்லாவற்றையும் முடிப்பேன்” என்று கூறுகிறார். ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை நீங்கள் வாசிப்பீர்கள் எனில் தேவனுடைய திட்டத்தை நீங்கள் தெளிவாகக் காணலாம்.

எனவேதான் இந்த புத்தகத்தை வாசிக்க உங்களை நான் உற்சாகப்படுத்துகிறேன். இது சோகமான எதிர்காலத்தைக் குறிக்கும் புத்தகம் அல்ல. இது நம்பிக்கையின் புத்தகமாகும். இவ்வுலகில் நடைபெற்ற அநியாயங்களெல்லாம் ஒரு நாள் நியாயந்தீர்க்கப்படும். வசனம் 9இல் இந்த வெளிப்பாட்டைப் பெற்றுக்கொண்டவர் யோவான் என அடையாளம் காட்டப்படுகிறார். “உங்கள் சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசு கிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.” தான் பத்மு தீவில் இருந்ததன் காரணத்தை இங்கு அவர் விளக்குகிறார். எபேசு பட்டணத்தில் வாழ்ந்துவந்த அவர் அங்கு பத்மு தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்; பத்மு தீவு எபேசு பட்டணத்திலிருந்து 55 மைல் தொலைவிலிருந்த ஆசியா மைனர் (இன்றைய துருக்கி) கடற்கரையருகே இருந்த ஒரு தீவு.

வெளிப்படுத்தலைப் பெறுவதற்கு முன்பு, யோவான் எபேசு பட்டணத்தில் இருந்தார். பத்மு தீவிலிருந்து விடுதலையான பின் மீண்டும் எபேசு பட்டணத்துக்கு திரும்பினார்.

பத்மு தீவுக்கு செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் தயவுசெய்து சென்று வாருங்கள். அது மிகமிக அழகான தீவு. மத்திய தரைக்கடலில் இருந்த அழகான தீவுக்கு ரோம போர்ச்சேவகர்கள் யோவானை நாடு கடத்தியது விசித்திரமே. அவர் தனது விடுமுறையைக் கழிப்பதற்காக அங்கு செல்லவில்லை. அவ்விடத்தில் அவர், எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் காரியங்களின் வெளிப்பாடை தேவனிடமிருந்து பெற்றுக்கொண்டார். யோவான் எதிர்காலத்தில் அனைத்தும் செம்மையாக நடக்கும் என்பதை அறிந்துகொள்ள விரும்பினார்.

வசனம் 11: “நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.”

இனிவரும் பாடங்களில் ஒவ்வொரு சபையைப் பற்றியும் அதற்கு கூறப்படும் செய்திகளை யும் நாம் காண இருக்கிறோம். வெளிப்படுத்தல் புத்தகம் எதிர்காலத்தைப்பற்றிய தீர்க்கதரிசன புத்தகம் மட்டுமல்ல; கடந்தகால வரலாற்றையும் நமக்கு கூறுகிறது. உதாரணமாக எபேசு சபைக்கு எழுதப்பட்ட யாவும் இன்றைய சபைக்கும் பொருந்துகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு எபேசு சபைக்குக் கூறியவற்றையும், இன்றைய உலகில் எபேசு சபையைப்போல் விளங்கும் சபைக்குத் தரப்படும் செய்தியையும் நாம் காணக் கூடியதாக இருக்கிறது.

வசனம் 12: “அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்”. யோவான் தேவனுடைய வெளிப்பாட்டைக் கேட்கிறார். “என்னுடன் பேசியது யார்?” என்று பார்ப்பதற்கு அவர் திரும்பினார். “ஏழு பொன் குத்துவிளக்கு களையும், அவைகளின் நடுவே மனுஷ குமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்” என்றார். “மனுஷகுமாரன் என்பது இயேசுவின் மேசியாத்துவத்தைக் குறிக்கும். இயேசுவோடு மூன்று ஆண்டுகள் வாழ்ந்தவர், அவருடன் எல்லா இடங்களுக்கும் சென்றவர். எனவே யோவானுக்கு இயேசுவின் தோற்றத்தைப் பற்றி நன்கு தெரியும். ஆனால், இங்கு அவரை “நீண்ட அங்கியும் மார்பில் பொன் பட்டையும் அணிந்திருந்தார்” என்று வர்ணிக்கிறார். இது பிரதான ஆசாரியரின் ஆடையைக் குறிக்கும்.

வசனம் 14: “அவருடைய சிரசும் மயிரும் வெண் பஞ்சைப் போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; இது இயேசுவின் ஞானத்தையும் அவரது நியாயத்தீர்ப்பையும் வர்ணிக்கிறது. அவருடைய கண்கள் தீப்பிழம்பு போலச் சுடர்விட்டன. (வெளி.1:14). நற்செய்தி நூல் களில் அவர் இரட்சிப்பின் பணியைச் செய்து வந்தார் என நாம் காண்கிறோம். நற்செய்தியை ஏற்றுக்கொள்ளாதவர்கள் ஒருநாள் அவருடைய நியாயத்தீர்ப்பை எதிர்கொள்ளவேண்டும்.

வசனம் 15-16: “அவருடைய பாதங்கள் உலைக் களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப் போலிருந்தது. தமது வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது. இது சாதுவான ஓர் ஆட்டுக்குட்டியையோ, பெத்லகேம் முன்னணை பாலகனையோ குறிக்கவில்லை.

வசனம் 17: “நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலது கரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;”

வசனம் 18: “மரித்தேன், ஆனாலும், இதோ, சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்”.

வசனம் 19: “நீ கண்டவைகளையும், இருக்கிற வைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது;” என்று காண்கிறோம். வெளிப்படுத்தல் புத்தகத்தை அறிந்துகொள்ள நீங்கள் விண்வெளி ஆராய்ச்சியாளராக இருக்க வேண்டிய அவசியமில்லை. இப்புத்தகத்தில் நீங்கள் மூன்று பகுதிகளைக் காணலாம்.

சில காரியங்கள் யோவான் அப்புத்தகத்தை எழுதிய காலத்தில் நடந்தவையாகும். சில கடந்த காலத்தவையாகும். சில எதிர் காலத்துக்குரியவையாகும். இப்புத்தகத்தில் அநேகக் காரியங்கள் எதிர் காலத்துக்குரியதாகும். ஆனால், நட்சத்திரங்கள், விளக்குத்தண்டுகள், அவற்றின் மத்தியில் காணப் படும் நபர் இவற்றை நீங்கள் புரிந்துகொள்ளவில் லையெனில், வசனம் 20 இல் அதன் விளக்கம் தரப்பட்டுள்ளது.

வசனம் 20: “என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபையின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.”

வெளிப்படுத்தல் புத்தகத்தில் நீங்களும் நானும் புரிந்துகொள்ள முடியாத சில காரியங்கள் உண்டு. ஆனால், பல காரியங்களை நாம் அறிந்துகொள்ள முடியும். நமக்குத் தெரிந்ததை நாம் ஆராய்வோம்; புரியாததை நாம் ஊகித்துக்கொள்ள வேண்டாம்.

தேவன் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்கிறார். எதிர்காலம் பாவத்தைப் பற்றிய நியாயத்தீர்ப்புக்குட்பட்டது. வெளிப்படுத்தல் புத்தகம் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர் காலம் ஆகிய மூன்றினையும் சொல்லுகிறது.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை