மனந்திரும்பிய மனாசே

தியானம்: 2025 நவம்பர் 21 வெள்ளி | வேதவாசிப்பு: 2இராஜா.21:1-17; 2நாளா.33:11-16

YouTube video

கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான் (2நாளாகமம் 33:13).

தண்டனைகளும் அடிகளும்போல மனிதனைச் சீர்ப்படுத்த வேறு எந்த ஆயதமும் சரிவராது. மறுபுறத்தில் தன் தவறுகளை உணர்ந்தோ, அல்லது தண்டிக்கப்படும்போதோ, மெய்யாகவே மனந்திரும்புகிற எவரையும், முன் செய்த அட்டூழியங்கள் நிமித்தம் வெறுத்துவிடாமல், மன்னித்து ஏற்றுக்கொள்கின்ற மனதுருகுகின்ற கர்த்தரே நமது கர்த்தர். அதற்காக அவருடைய மனதுருக்கத்தை நமக்குச் சாதகமாக்கிக் கொள்ளக்கூடாது. அப்படிச் செய்தால், அதையும் கர்த்தர் அறிவார். மெய்யான மனந்திரும்புதல் பெரிய மாறுதலை நிச்சயம் கொண்டுவரும்.

‘கர்த்தரிடத்தில் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல ஒருவனும் இருந்ததில்லை” என்று பெயரெடுத்த எசேக்கியாவின் மகன்தான் மனாசே. இவன் ராஜாவாகும்போது பன்னிரண்டு வயது. வயது ஏற ஏற வாலிப வயதின் மிடுக்கோ என்னவோ, எசேக்கியா தகர்த்துப்போட்ட அத்தனை பாகால் மேடைகள் விக்கிரகங்களை இவன் மீண்டும் எழுப்பி, எருசலேம் தேவாலயத்தையே தீட்டுப்படுத்தினான். கர்த்தரைவிட்டு வானத்தின் சேனையெல்லாம் வணங்கினான். கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்து, மக்களையும் வழிதப்பிப்போகப் பண்ணினான். கர்த்தர் அவர்களுடன் பேசினார்; ஆனால் அவர்கள் கவனியாதே போனார்கள். இதனால் கர்த்தர் அசீரியாவை வரவழைத்து, மனாசேயைப் பிடித்து, சங்கிலியால் கட்டி, பாபிலோனுக்குக் கொண்டுபோய்விட்டார்கள். இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன்னை மிகவும் தாழ்த்தினான் என்று வாசிக்கிறோம். கர்த்தர் அவன் கெஞ்சுதலைக் கேட்டு அவனைத் திரும்பவும் எருசலேமுக்கு வரப்பண்ணினார். அப்பொழுது மனாசே விழிப்படைந்து, கர்த்தரே தேவன் என்று அறிந்து, தான் இதுவரை விட்ட அத்தனை தவறுகளையும் சரிப் பண்ணி, கர்த்தருடைய பலிபீடத்தையும் செப்பனிட்டு, பலிகளையும் செலுத்தி, மக்களையும் சரியான வழிக்குத் திருப்பினான்.

தம்மிடத்தில் வருகிற எவரையும் புறம்பே தள்ளாத தேவன் நமது தேவன். மாத்திரமல்ல, “மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்” என்று இயேசுவே சொல்லியிருக்கிறார். கர்த்தர் மனதுருக்கமுள்ளவர். உள்ளபடியே அவரிடத்தில் வருவதற்கு நாம் தயக்கம் காட்டவேண்டிய அவசியம் இல்லை. அவர் தண்டித்தால் நாம் தாங்கமாட்டோம். எமது சுயநீதிகளை அறுத்தெறிந்துவிட்டு, நமது தவறுகளை உணர்ந்து, கர்த்தரிடத்தில் திரும்புவோம். மன்னிப்பு மாத்திரமல்ல, அவருடைய பிள்ளைகள் என்ற நிச்சயமும் நமக்குண்டு அல்லவா.

ஜெபம்: கர்த்தாவே, எனது வாழ்வில் மனந்திரும்ப வேண்டிய அவசியம் இல்லை என்ற கர்வம் எங்களில் காணப்படாதபடி முற்றிலுமாய் எங்களை அர்ப்பணிக்கிறோம். ஆமென்.