மறக்கக்கூடாத ஆரம்பம்

தியானம்: 2025 நவம்பர் 25 செவ்வாய் | வேதவாசிப்பு: 2நாளாகமம் 35:1-7; 16-19

YouTube video

யோசியாவும், எருசலேமின் குடிகளும் ஆசரித்த பஸ்காவைப்போல இஸ்ரவேல் ராஜாக்களில் ஒருவரும் ஆசரித்ததில்லை (2நாளாகமம் 35:18).

முன்னர் எப்படி இருந்தோம், எந்த சேற்றின் பள்ளத்தாக்கிலிருந்து ஆண்டவர் நம்மை தூக்கி எடுத்தார், இன்றைய நமது வாழ்வுக்கு வித்திட்டது எது என்று நமது ஆரம்பங்களை ஒருபோதும் மறக்கக்கூடாது. ஆனால் அது நமக்குள் அழிக்கமுடியாத பெருமையைத் தோற்றுவித்து, நமது அழிவுக்குக் காரணமாகி விடவும் இடமளிக்கக்கூடாது.

இளவயதிலேயே தேவனைத்தேட ஆரம்பித்த யோசியா ராஜா, முதலில் ஆலயத்தைச் சுத்திகரித்து, தீட்டான சகலத்தையும் சுட்டெரித்து, நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதப்பட்ட வார்த்தைகளின்படி நடப்பதாக தானும் ஜனங்களும் உடன்படிக்கைபண்ணி முடித்த பின்னர், எல்லாம் முடிந்தது என்று இருக்கவில்லை. தன் முன்னோர்களின் பூர்வீகத்தைத் தேடினான். அவர்கள் கொண்டாடிய பண்டிகைகள் எவை, காரணம் என்ன, எப்படி கொண்டாடப்பட வேண்டும் என்பதை பிரமாணங்களில் தேடினான். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலை கர்த்தர் எப்படி விடுதலையாக்கினார் என்பதை உணர்ந்தான். அதன்படி முதலில் பஸ்கா பண்டிகையை ஆசரிக்க எழுந்தான். 2நாளா.35:1-19 வரையிலும் வாசிக்கும்போது, எப்படி இவர்கள் பஸ்காவை முழுமனதுடன் ஆசரித்தார்கள் என்பது விளங்கும். இன்று தங்கள் நிலைமைக்குத் தங்கள் மூதாதையினரின் விடுதலையே காரணம் என்பதை உணர்ந்து, கர்த்தர் மோசேக்குப் பணித்து, மோசேயினால் இஸ்ரவேலுக்குப் பணித்தபடியே, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மகிழ்ச்சியுடன் பஸ்காவை ஆசரித்தனர். இதை முன்னெடுத்தவன் இந்த யோசியா ராஜாவே.

நமது முன்னான வாழ்வை நாம் மறக்கக்கூடாது; அதை நினைந்து துக்கப்படவோ, அதற்குத் திரும்பவோ கூடாது. ஆனால் எதிலிருந்து நாம் மீட்கப்பட்டோம் என்பதை நினைக்கவேண்டும். “முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை; இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்” என்று எழுதுகின்ற பேதுரு, முன்னர் அந்தகாரத்திலிருந்த நாம் இன்று தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியும், ஆசாரியக்கூட்டமும், பரிசுத்த ஜாதியும், தேவனுக்குச் சொந்த ஜனமுமாயிருக்கிறோம் என்று விளக்குகிறார் (1பேது.2:9,10). இரட்சிப்பின் சத்தியம் மாறாதது; ஆனால் நமது அனுபவங்கள் வேறாயிருக்கலாம். நாம் பாவச்சேற்றிலிருந்து தூக்கியெடுக்கப்பட்ட அந்த நாளுக்காகவோ, அந்த சம்பவத்திற்காகவோ வருடத்தில் ஒருதடவை அல்ல, தினமும் தேவனை நாம் கொண்டாட வேண்டாமா? சத்துருவின் கோட்டையைத் தகர்த்து இயேசு நம்மை விடுவித்திருக்காவிட்டால் நாம் அழிந்திருப்போமே! அந்தக் கிருபைக்காக தினமும் ஒவ்வொரு விநாடியும் கர்த்தரை ஸ்தோத்தரிப்போமாக.

ஜெபம்: ஆண்டவரே, பாவத்திலிருந்தும் சாபத்திலிருந்தும் எங்களை மீட்டுக்கொண்ட பேரன்பை அனுதினமும் துதித்து உமது நாமத்தை மகிமைப்படுத்த அருள் தாரும். ஆமென்.