மீட்பதற்காகவே வந்தார்…
தியானம்: 2025 டிசம்பர் 19 வெள்ளி | வேதவாசிப்பு: யோவான் 3:16-21

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் அவரைத் தந்தருளி … அன்புகூர்ந்தார் (யோவான் 3:16).
ஒரு தகப்பன் தன் மகன் கெட்டுப்போக விடுவானா? ஆனால், தன் மகனின் நலனுக்காகத் தன்னையே அர்ப்பணிக்கக்கூடிய தகப்பனை மகன் நம்ப வேண்டும், அவரைச் சார்ந்திருக்க வேண்டும். இப்படியிருக்க, நமது பரமபிதா தமது பிள்ளைகள் கெட்டுப்போக விட்டுவிடுவாரா? இல்லை என்று நமது மனதுக்குத் தெரிந்திருந்தும், நம்மை மீட்கும்படிக்கே அவர் உலகிற்கு வந்தார் என்று விசுவாசித்திருந்தும், ஏன் அவரைத் துக்கப்படுத்த வேண்டும்?
நித்திய வாழ்வு என்பது ஆரம்பமும் முடிவும் இல்லாத வாழ்வு. இது முடிவற்ற ஒரு வாழ்வு, அது தேவ சந்நிதானமாகவோ, தேவன் இல்லாத நரகமாகவோ இருக்கலாம். ஆனால் நித்திய ஜீவனைப் பெற்று தேவனுடன் வாழும் நித்திய வாழ்வு என்பது, குழப்பம் நிறைந்த இந்த வாழ்வின் நீடிப்பு அல்ல; மாறாக, நாம் என்றும் தேவனோடு வாழுவதற்காக கிறிஸ்துவுக்குள்ளாக நமக்கு அருளப்பட்ட தேவனுடைய வாழ்வு. இங்கே கலக்கம் கண்ணீர், சாவு நோவு, பாவம் எதுவும் கிடையாது. “விசுவாசிக்கிறவன் எவனோ” என்னும்போது, இது வெறுமனே அறிவு சார்ந்தது அல்ல; நித்திய ஜீவன் கிறிஸ்துவுக்குள்ளாக அருளப்பட்டிருப்பதால், இந்த வாழ்வுக்கு நாம் தகுதி பெறும்படி நம்மை மீட்க வல்லவர் கிறிஸ்து ஒருவரே என்பதை முழு இருதயத்தோடும் விசுவாசித்து நாம் அவரைச் சார்ந்திருக்க வேண்டும். அதாவது நமது அன்றாட வாழ்வின் சகல காரியங்களிலும், நித்திய வாழ்வில் சேருவதற்கேற்ற கிறிஸ்துவின் ஆளுகைக்குள் இருக்க வேண்டும். அவருடைய வார்த்தையே சத்தியம். நம்மை மீட்பதற்கு அவரே வல்லமை பொருந்தியவர். நம் வாழ்வு இதை வெளிப்படுத்தட்டும்.
சாவுக்கென்று நிறுத்திவைக்கப்பட்ட நமக்கு, “அவன் குற்றமற்றவன், அவனைப் போகவிடு” என்று ஒரு குரல் தொனித்தால், எப்படி இருக்கும்! இதைத்தான் நமக்காக இயேசு செய்துமுடித்தார். இதற்காகவே அவர் மனிதனாக வந்தார். இவை யாவும் நமது அறிவுக்குத் தெரிந்ததே; ஆனால் இது நமது இருதயத்தில் பதிக்கப்பட்டு, கிறிஸ்து நமக்காக கொடுக்கப்பட்டார், இந்தப் பாவ சரீரத்திலிருந்து நம்மை மீட்கவும், நித்திய நித்தியமாகத் தம்முடன் வாழுவதற்கு நமக்கு நித்திய ஜீவனை அருளும்படிக்கும் தமது ஜீவனைத் தந்தார் என்பதை உணர்ந்து, அவருடைய வார்த்தைக்கு ஏற்ப நாம் ஜீவிக்கிறோமா என்பதை சிந்திப்போம். அவர் மாத்திரம் தம்மைப் பலியாக்கி நம்மை மீட்டிராவிட்டால் நமது முடிவு எப்படியிருந்திருக்கும் என்பதையும் சிந்திப்போம். ஆக்கினைத் தீர்ப்புக்கும் நித்திய நரகத்துக்கும் தீர்க்கப்பட்ட நாம் இன்று தேவனுடனான நித்திய வாழ்வுக்குரிய நித்திய ஜீவனைப் பெற்றிருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்! தேவனைத் துதிப்போமா!
ஜெபம்: அன்பின் தேவனே, உம்முடைய வசனத்தைக் கேட்டு குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவனுக்கு கொடுத்த நித்திய நம்பிக்கைக்காக உமக்கு நன்றி. ஆமென்.