• Dr.வாரன் வியர்ஸ்பி •
(நவம்பர் – டிசம்பர் 2025)

சிறியது, பெரியது என்று பேராசைகளில் அதிக ஆர்வம் செலுத்தும் உலகில் நாம் வாழுகிறோம். சமுதாயத்திலே எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதனுடைய முக்கியத்தையும், அதனுடைய முடிவையும் எண்ணிக்கைகளாலேயே நாம் நிர்ணயிக்கிறோம். இந்தவித வருந்தத் தக்க மனப்பான்மை கிறிஸ்தவர்களையும் மேற்கொண்டதால் தேவன் காரியங்களை எவ்விதம் அளவிடுகிறார் என்பதை நம்மில் அநேகர் மறந்து போனோம். ஆகையால் மக்கள் குழப்பமடைந்திருப்பதில் ஆச்சரியமில்லை.

ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகை தினம் வருவது நல்லது. ஏனென்றால், தேவன் எக்காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை அது நமக்கு ஞாபகப்படுத்துகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் வரலாற்றை உண்மையாக கவனிப்போமேயாகில், அது ஆண்டவர் காரியங்களை எவ்விதம் அளவிடுகிறார் என்பதை கண்டுபிடிக்க உதவும். அதே நேரம் நாம் உலகத்தின் தப்பான மதிப்பீடுகளினால் ஏமாற்றப்படுவதையும் தடுக்கும்.

முதலாவதாக கிறிஸ்துமஸ் வரலாறு தேவன் பருமனுக்கும் (big) சரீர பெலத்திற்கும் (Strength) முக்கியம் கொடுக்கிறவர் அல்ல என்பதை நினைப்பூட்டுகிறது. வழிதவறிப்போன உலகமக்களை இரட்சிப்பதற்கு அவர் ஒரு பாலகனையே அனுப்பினார். இஸ்ரவேலர் தங்கள் விரோதிகளை சங்கரித்து தங்களை உயர்த்தப்போகிற ஒரு அரசனை எதிர்பார்த்தார்கள். ஆனால் ஆண்டவரோ அவர்களை மீட்க ஒரு சிறிய பாலகனாக வந்தார். இஸ்ரவேலை எகிப்தின் அடிமைத்தனத்தினின்று விடுவிக்க அனுப்பினது ஒரு குழந்தையைத்தான். அது மோசே என்ற குழந்தையாகும், தன்னுடைய ஜனங்களைப் பொல்லாத ஆசாரியர்களின் நடத்துதலிலிருந்து விடுவிக்க இன்னொரு குழந்தையை அனுப்பினார், அவன்தான் சாமுவேல். தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் ஒரு குழந்தைதான் நம்பிக்கையைக் கொண்டுவந்தது. உதாரணமாக தாவீது சாலொமோன், யோசியா, யோவான்ஸ்நானன் முதலியவர்களே.

குழந்தைகள், தேவனளிக்கும் வாக்குகள், அவைகள் தம்முடைய எதிர்காலத்திற்கு தேவன் திட்டம் செய்வதையும், எல்லாக் காரியங்களும் அவருடைய அதிகாரத்திற்குள் இருக்கின்றன என்பதற்கு உறுதியளிக்கின்றன. குழந்தைகள் நல்ல எதிர்பார்ப்புகளை நமது மனதில் எழுப்பும்.

தேவன் தன்னுடைய குமாரனை ஒரு குழந்தையாக அனுப்பியதன் நோக்கம் அவர் காரியங்களை பருமனாலும், பெலத்தினாலும் அளவிடுகிறவரல்ல என்பதை நமக்கு நினைப்பூட்டுவதற்கே. மோசேயினுடைய கண்ணீர் எகிப்து சாம்ராஜ்யத்தையே கவிழ்த்துவிட்டது. சாமுவேலின் பிள்ளைத்தனமான ஜெபங்கள் கடவுளை சேவிக்காத ஆசாரியத்துவத்தை அறவே ஒழித்தது. இயேசுவின் பிறப்பு இவ்வுலகத்தில் பொல்லாங்கனின் ஏற்பாடுகளை முறியடிப்பதையும் குறிப்பிட்டது. ஒரு குழந்தையின் சக்தியை குறைத்து மதிப்பீடு செய்யாதீர்கள்! விசேஷமாக அந்தக் குழந்தை தேவனுடைய குமாரனேயானால்!

உண்மையாகவே, சிறந்த ஆலயங்கள். சிறந்த செய்தியாளர்கள், சிறந்த புத்தகங்கள். சிறப்பான பயன்கள் முதலியவைகளைப் பற்றி கேட்டு சலித்துப் போய்விட்டேன். மக்களையும் ஊழியங்களையும் தேவன் அளவிடும் விதத்தில் நாம் மதிப்பீடு செய்வதில்லை என்பது தெளிவாகிறது. “கடைசி மகத்தான நாளிலே மேலும் கீழுமாக ஒரு பெரிய குலுக்கல் (Shake up and Shake down) இருக்கப் போகிறது. தேவனுடைய பார்வையில் உண்மையான புகழுக்குரியவர் யார் என்பது நான் கணித்திருக்கும் விதம் தவறு என்று காண்பிக்கும்” என்று காலஞ்சென்ற வான்ஸ் கார்னர் கூறியுள்ளார்.

கிறிஸ்துமஸ் சம்பவங்கள், எல்லாக் காரியங்களும் வேகத்துடனும், அவசரத்துடனும் நடக்க வேண்டும் என்ற ஆத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. காலம் நிறைவேறின போது தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார் (கலா.4:5). நீங்கள் வேதாகமத்தை அதிகமாய் வாசித்து தேவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்ட பிறகு தேவன் அவசரப்படுகிறவரல்ல என்பதை அதிகமாய் விளங்கிக்கொள்வீர்கள். நிச்சயமாக தேவன் தன்னுடைய திருச்சபையார் எவ்வளவு சீக்கிரம் சுவிசேஷத்தை எல்லோருக்கும் அறிவிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் அதற்கு கூட தேவனுடைய பெலத்திற்கும் வழி நடத்துதலுக்கும் நாம் அவரில் சார்ந்திருப்பது. அவசியமாயிருக்கிறது.

தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இரட்சகருடைய வருகையைக் குறித்து வாக்களித்தார் (ஆதி.3:15). அதற்குப் பிறகு மேசியா பிறக்கப்போகும் சந்ததியின் தகப்பனாகிய ஆபிரகாமை அழைப்பதற்கு இருபது நூற்றாண்டுகள் காத்திருந்தார். அவருடைய திட்டத்தை அமைதியாக செயல்படுத்திக் கொண்டிருந்தார்.

இஸ்ரவேலர் 400 ஆண்டுகள் எகிப்து தேசத்தில் இருந்தபிறகே அவர்களை விடுவிக்க ஒருவரை அனுப்பினார். அவரை 80 ஆண்டுகள் ஆயத்தம் செய்தார். நாம் “ஆண்டவரே எவ்வளவு காலம்” என்று புலம்புவோம். ஆனால் அவர் காலத்தினால் வரையறுக்கப்படவில்லை. சரித்திரத்தின் போக்கு கண்டு பொறுமையை இழக்கிறவர் அல்ல. ஏன் சரித்திரமே அவரைப்பற்றியது தானே: அவரே அதன் பிரதியை எழுதினார் தன்னுடைய நோக்கங்கள் நிறைவேற்றப்படுவதைப் பார்த்துக்கொள்வார்.”

ஆகவே, அவருடைய ஜனங்கள் காத்திருப்ப தற்குக் கற்றுக் கொண்டால் அவருடைய வேலை எவ்வளவு அதிக சிறப்பாக நடக்கக்கூடும். இப்படிக் கூறுவதால் அருட்பணியும் சுவிஷேசப் பிரபல்யமும் சிறிது காலம் நிறுத்திவைக்கப்படவேண்டும் என்று நான் யோசனை கூறவில்லை. நான் கூறும் ஆலோசனை என்னவென்றால், நாம் நம் வேகத்தை சிறிது குறைத்து பரிசுத்தப்பட நேரம் எடுத்து, தேவன் நம்மிடம் கூற விரும்புவதை கற்கும்வரை அவரில் காத்திருக்க வேண்டும். பெத்லகேமிலே தன்னுடைய குமாரன் பிறப்பதற்கு எல்லாக் காரியங்களையும் ஆயத்தம் செய்ய தேவன் அநேக நூற்றாண்டு காலம் எடுத்தார். நமக்கோ நம்முடைய செயற்குழு கூட்டம் நடத்தும் போது ஐந்து நிமிஷங்கள் அதிகம் ஜெபிக்கக்கூட நேரமில்லாதிருக்கிறோம். நாம் நம் ”காரியங்களை சாதிக்கிறோம்” ஆனால் எங்கே போகிறோம்?

நாம் மாட்டுத்தொழுவத்தை மனதிற் கொண்டு நம்மையே அளவெடுப்போமானால் தேவன் தம்முடைய பருமனுக்கும், பெலத்திற்கும். அவசரத்திற்கும் முக்கியம் கொடுக்கிறவர் அல்ல என்பதை கண்டுபிடிக்கிறோம். அது மட்டுமல்ல; அவர் நம் முடைய செல்வத்திற்கும் முக்கியம் கொடுக்கிறவர் அல்ல. அவருடைய ஒரே குமாரன் ஏழைக் குடும்பத்திற்குள் வந்தார். மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். முன்னணையில் கிடத்தப்பட்டார். அவருடைய ஊழியத்தின் முழுக்காலமும் ஏழை களுடன் ஒருவராகவே இருந்துவந்தார். “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே: அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும் படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே” (2கொரி 8:9).

இக்கடைசி நாட்களில் கிறிஸ்தவம் ஒரு பெரிய தொழிலாகி விட்டது. (Religion is a big business) இந்த அபிப்பிராயத்தை நீங்கள் நம்பாவிட்டால் பெரிய கிறிஸ்தவ மாநாடுகளுக்கு போய்ப் பாருங்கள். சிலுவையின் வறுமையிலிருந்தும், தரைக்குக்கீழ் கட்டப்பட்ட ஆதிக் கிறிஸ்தவர்களின் துன்பங்களிலிருந்தும் நெடுந்தூரம் வந்துவிட்டோம். விசுவாசிகள் என்று சொல்லிக்கொள்ளும் அநேகருக்கு அநீதியான உலகப் பொருட்கள்தான் தெய்வம். இன்று மக்களால் பாராட்டப்படும் பொய் சுவிஷேசம் என்னவென்றால், அவர்களுடைய பணமும் உலகப் பொருட்களுமே. தேவன் அவருடைய ஜனத்தை ஆசீர்வதிக்கிறார் என்பதை நிரூபிக்கின்றனர். இந்த செய்தியை பரப்பிவரும் தீர்க்கதரிசியின் விவாதம் என்னவென்றால், நீ ஆண்டவரை நேசித்து அவருக்கு உண்மையாய் இருப்பாயானால் அவர் உனக்கு சுகம், செல்வம், வல்லமை அளிப்பார் என்பதே. இந்த சுவிஷேசம் பிரசங்கிமாருக்கு பலனளிக்கும். ஏனென்றால், அவர்களைப் பின்பற்றும் கபடமற்ற கூட்டம் ஒன்று தங்கள் பணத்தையெல்லாம் தியாகம் செய்து அவர் கூறுவதை அவருக்கு பலிக்கச் செய்வார்கள். ஆனால் பின்பற்றுபவர்களுக்கு அச்செய்தி பலனளிக்காது. அவர்கள் தங்கள் தலைவர்களைப் பணக்காரராக்குவதற்காக தாங்கள் வறுமையடைகிறார்கள்.

ஒருகாலத்தில் ஆண்டவருடைய சீஷர்கள் கூட பயனளிக்கும் இறையியலில் (Sucess Theology) நம்பிக்கை கொண்டார்கள். “ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும் ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்” (மத் 19:24) என்று ஆண்டவர் இயேசு அவர்களிடம் சொன்னபோது அவர்கள் ஆச்சரியத்துடன் “அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும்” (மத் 19:25) என்று கேட்டார்கள். அதாவது ஐசுவரியம் தேவனுடைய நன்மதிப்பின் அடையாளமாய் இல்லாவிட்டால் பின் எதுதான் அவருடைய அனுகூலத்தைக் காட்டும்? நாம் சீஷர்களுடைய அறிவின்மையை பார்த்து சிரிக்கலாம். ஆனால் உலகத்தின் மக்கள் பட்டினியால் செத்துக்கொண்டிருக்கும்போது நம்முடைய விலையுயர்ந்த கட்டிடங்களின் படங்களை எல்லா இடங்களிலும் பிரசுரிப்பதும். வீடுகளையும் வளங்களையும் விலையுயர்ந்த அனாவசியமான பொருட்களாலும் தட்டுமுட்டுச் சாமான்களாலும் நிரப்பிக்கொண்டும் இருக்கிறோம்.

“பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தியிருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல” என்று நம் ஆண்டவர் எச்சரித்திருக்கிறார் (லூக்.12:15). நீ தொழுவத்தினால் அளவிடப்படும் பொழுது, பொருட்களையும் பணத்தையும் தேவன் காண்கிறது போல காண்பதற்கு கற்றுக்கொள்கிறாய். வாழ்க்கையில் உண்மையிலே முதன்மை வகிக்க வேண்டிய காரியங்கள் எவை என்று கண்டுபிடித்துக்கொள்வாய்.

கடைசியாக நீ பெத்லகேமின் தொழுவத்திற்கு செல்லும்பொழுது கண்டுகொள்ளுகிறது என்னவென்றால், தேவன் மனிதனுடைய பதவிக்கோ, அதிகாரத்திற்கோ முக்கியம் கொடுப்பவர் அல்ல. ஏனென்றால் அவருடைய “குமாரனே அடிமையின் ரூபமெடுத்து… மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலி 2:7, 8).

தம் சபைகளின் பிரச்சனைகளில் ஒன்று என்னவென்றால், சில சபையார்க்கு அவர்கள் விரும்பும் ‘புகழ் பெற்ற பிரசங்கியார்’ (Celebrities) கட்டாயம் வேண்டும். புகழ் பெற்ற ஐசுவரியம் படைத்த சினிமா நடிகர்களைப் பாராட்டத் தயங்கினாலும் ஏதோ காரணத்தினால் கிறிஸ்தவ புகழ் பெற்றோரை குறைவற்றவர்கள், பரிசுத்தவான்கள் என்று நினைக்கிறார்கள். ஒரு நாள் புகழ் பெற்ற ஒரு பாடகரை சில அபிமானிகள் சுற்றிக்கொண்டு மொய்த்தார்கள். இவர்கள் ஜெபக்கூட்டங்களில் பங்கெடுப்பதற்கோ அல்லது இழந்தவர்களுக்கு சாட்சி சொல்வதற்கு வாய்ப்பு கிடைத்தாலோ இவ்வளவு உற்சாகங் காட்டுவார்களா என்று யோசித்தேன். அநேகமாய் காட்டமாட்டார்கள் என்று யோசிக்கிறேன்.

இந்நாட்களில் அநேக ஊழியங்களில் மற்றவர்கள் கண்களுக்கு தங்களில் ஒருவரை சிறப்பாளராக்கிவிட வேண்டும் என்று ஒரே நோக்கம் இருக்கிறது. அமெரிக்காவில் பணங் கொடுத்தால் ஒருவருக்கும் தெரியாத ஒருவனைக்கூட கொஞ்ச நாட்களில் எல்லோருக்கும் தெரிந்த மனிதனாக்கக் கூடிய ஸ்தாபனங்கள் உள்ளன. இவ்விதம் பிரசித்தியடைவது பணத்தாலும் மக்களுடைய ஏவுதலாலுமே ஆகிறது. இப்பொழுதும் நம் மத்தியில் ஆரோனைப்போல பசும் பொன் கன்றுகுட்டிகளை உண்டுபண்ணி, அதை தொழும் உற்சவத்திற்கு அழைக்க மக்களிருக்கிறார்கள். மலையிலிருந்து இறங்கி வந்து உற்சவத்தை குலைப்பதற்கு கோபம் நிறைந்த ஒரு மோசே மிகவும் தேவைப்படுகிறார். ஒருவேளை அவ்விதமாக ஒருவர் எழும்புவாரானால் அவரை சிலுவையில் அறைந்து போடுவார்கள்.

திருச்சபைக்கு பணிவிடை செய்ய வாஞ்சையுடைய தலைவர்களையும் தலைமை வகிக்கக்கூடிய பணிவிடைக்காரர்களும் தேவை என்ற கூற்று உண்மையே. இயேசுவானவர் அதே விதமான தலைவரும் பணிவிடை செய்கிறவருமாய் இருந்தார். அப்போஸ்தலரும் அவருடைய மாதிரியைப் பின்பற்றினார்கள். உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால் அவன் உங்களுக்கு பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருக்கக்கடவன்” (மாற்.10:43).

நான் ஒருமுறை வெகுகாலம் அனுபவமுள்ள மிஷனரி ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் பணித்தளத்திற்கு திரும்புகையில் அவர் எதிர்பார்க்கும் பிரச்சனைகளைப் பற்றி என்னிடம் பகிர்ந்துகொண்டார். “சில தேசிய தலைவர்கள் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு பதவிகளுக்கும் பேராசைப்படுகிறார்கள். இது இருதயத்தை உடைக்கிறது. தனது ஊழியத்திற்கு தடையாயிருக்கிறது” என்றார். ஏன் இவ்விதமாக நடக்கிறது” என்று கேட்டபோது, ஒருவேளை சில மிஷனரிமார்களைப் பார்த்து அந்தவித மனப்பான்மையை கற்றுக்கொண்டிருக்கலாம் என்று பதிலளித்தார்.

இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் வேறென்ன நடத்தலாம். நாம் தொழுவத்தை மனதில் கொண்டு நம்மையே அளவிட்டுக் கொள்ள நீண்ட நேரம் சிந்திப்போம். உலகபிரகாரமாக மனிதரைப் பின்பற்றுவோமாகில் நம் ஆவிக்குரிய ஜீவியத்தை பலவீனப்படுத்தும் காரியங்களில் சிக்கிக்கொள்ளுவோம். ஆனால் விசுவாசத்துடன் தேவன் மதிக்கும் காரியங்களுக்காக ஜீவிப்போமானால், நாம் செழுமையை அனுபவிப்போம். மற்றவர்களுடைய வாழ்க்கையையும் செழுமையாக்க உதவுவோம்.

 மொழியாக்கம்: Bro.Johndurai

சிந்தியுங்கள்! 

தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துவதும், அதை மற்றவர்களுக்கு அறிவிப்பதுமே நாம் இவ்வுலகில் இருப்பதற்கான காரணங்களாகும்!