• Dr.உட்ரோ குரோல் •
(நவம்பர் – டிசம்பர் 2025)
13. தம்முடைய ஆலயத்திற்குள் கிறிஸ்து பிரவேசிக்க இயலாதபோது…

நமது கண்களால் பார்ப்பதை அடிப்படையாகக் கொண்டே நாம் அநேக முடிவுகளுக்கு வருவது இயல்பானது. சபை கூட்டத்தின் அளவு, வசதிகள், இசையின் சத்தம், ஆலயத்தில் பாடகர் குழு இருந்தால் அதன் எண்ணிக்கை, இவைகளை வைத்தே அச்சபை தேவனை உண்மையாகப் பிரியப்படுத்துகிறது என்பதைக் காட்டும் அளவைகளாக வைத்துள்ளோம். ஆனாலும் வெளிப்படுத்தலில் நாம் பார்த்த சில சபைகள் இவை அனைத்தையும் கொண்டிருந்தாலும் தேவனால் கண்டிக்கப்பட்டன. எனவே சபை கட்டிடத்தின் அளவு, பங்குகொள்வோரின் எண்ணிக்கை, பண வரவு இவைகள் ஒரு சபையை வரையறுக்காது.
இன்று மீண்டுமாக நாம் லவோதிக்கேயா சபைக்கு வருவோம். 21ம் நூற்றாண்டின் சபையைப்போல இருந்தாலும், வெளி. 3:1 அடிப்படையாகக் கொணடு, வேறொரு கோணத்தில் நாம் இதனை ஆராய்வோம்.
மற்ற சபைகளைப்போன்றே இதுவும் இருந்தது. இதன் இருப்பிடம், செயல்முறைகள், செழிப்புக்குக் காரணங்கள், மக்களின் தொழில் – கருப்பு கம்பளி, அதிசயமான சுகமளிக்கும் கண்ணுக்குப் போடும் மருந்து விற்பனை ஆகியனவற்றைக் கடந்த முறை வாசித்தோம். இன்று அச்சபையை ஆண்டவராகிய இயேசுவின் கண்ணோட்டத்தில் பார்ப்போம். லவோதிக்கேயா சபையின் உள்ளே பிரவேசிக்க விரும்பி வாசலில் நின்று கதவைத் தட்டும்பொழுது இயேசு எதை எதிர்பார்க்கிறார்?
வெளி.3:20 இல் “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்;” என்று லவோதிக்கேயா சபையிடம் கூறுகிறார். கிறிஸ்துவை சபைக்கு வெளியே நிற்க வைத்தது எது? கிறிஸ்துவை உள்ளே நுழையாதபடி அவருக்குக் கதவை அடைத்தது எது? இன்று அதன் காரணிகளைக் காண்போம்.
வசனம் 15 இல் “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்” என்று இயேசு கூறுகிறார். அதாவது இச்சபைக்கு அர்ப்பணிப்பு குறைவாக உள்ளது. அவர்கள் தங்களை எதற்கும் அர்ப்பணித்துக் கொள்ளவில்லை. அவர்கள் குளிராகவோ அனலாகவோ இல்லை. கடந்தமுறை பாமுக்கலே (Pamukkale) என்ற மலைப்பிரதேசத்தின் உஷ்ண நீரூற்றுகளைப் பற்றிக் கூறியிருந்தேன். இதைத்தான் இங்கு இயேசு குறிப்பிட்டிருக்க வேண்டும்.
வசனம் 17 இல் “நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருட னும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவிய சம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லை யென்றும் சொல்லுகிறபடியால்” என்கிறார். இங்கு அவர்களுக்கு அர்ப்பணிப்பு இல்லை, பகுத்தறிவும் இல்லை. தாங்கள் மோசமானவர்கள் என்பதையும் அவர்கள் அறியாதிருந்தார்கள். அவர்களுக்கு அனைத்தும் நன்றாக நடந்து வந்து கொண்டிருந்தது. அவர்களைப்பற்றி கதைகள் எழுதுகிறார்கள், தொலைக்காட்சி ஊழியர்களும் அங்கு இருக்கின்றனர்; அவர்களுடைய போதகர்கள் நன்கு அறியப்பட்டிருந்தனர். அவர்களுடைய சபை செல்வம் நிறைந்து காணப்பட்டது. அநேக நன்மையான காரியங்கள் நடைபெற்றாலும் அவர்கள் தாங்கள் மோசமான நிலையில் உள்ளனர் என்பதை அறியாது இருந்தனர்.
சிமிர்னா சபை தன்னை ஏழை என எண்ணினாலும் (வெளி.2:9). அது பணக்கார சபை. ஆனால் இங்கு லவோதிக்கேயா சபை தன்னை பணக்கார சபை என்று எண்ணினாலும் அது உண்மையிலேயே ஏழையான சபையாக இருந்தது. அந்த மக்களுக்கு பகுத்தறிவு இல்லாததால் இந்த சபையைப் பற்றி உண்மையான மதிப்பீட்டை எவராலும் கூற இயலவில்லை. எனவே, 1. அவர்களுக்கு எந்த அர்ப்பணிப்பும் இல்லை. 2. அவர்களுக்குப் பகுத்தறிவும் இல்லை.
வசனம் 18 இல் “நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக் கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்” என்று வாசிக்கிறோம். அவர்களுக்குத் தெளிவான பார்வையும் இல்லை. தேவன் தங்களுக்காக எண்ணியிருப்பதை அவர்களால் காணவும் முடியவில்லை. சபையின் எதிர்காலத்தைப் பற்றிய எந்தவித திட்டமும் இல்லை.
அவர்கள் தங்களுடைய சொந்த நிகழ்ச்சிகள், சொந்த காரியங்கள் என்று தங்களுடைய சொந்த கட்டிடத்துக்குள் முடங்கியிருந்தார்கள். தங்களைச் சுற்றியிருந்த அழிந்துபோய்க்கொண்டிருந்த உலகத்தைப் பற்றி காணமுடியாது இருந்தார்கள். தன்னிறைவு பெற்ற ஆலயத்தின் ஆபத்து இதில்தான் இருக்கிறது. நமது ஆலயத்தின் இசைக்குழு நன்றாக இருக்கிறது; அதில் அனைத்தும் உள்ளது. எனவே வெளிப்புற இசைக்கலைஞர்களை அழைக்கவேண்டாம். நம்மிடம் சிறந்த போதகர்கள் இருக்கிறார்கள்; எனவே வெளியே இருந்து பேச்சாளர்களை அழைக்க வேண்டாம். இவ்வாறாக சுய நிறைவு பெற்றவர்களாய் தமது சொந்த தேவைகளை மாத்திரம் பார்த்துக்கொண்டு சுற்றியுள்ளவர்களின் தேவைகளைப் பார்க்காவிட்டால் இச்சபைக்கு நேரிட்டதே உங்களுக்கும் நேரிடும்.
லவோதிக்கேயா சபைக்கு அர்ப்பணிப்பு, பகுத்தறிவு, தரிசனம் ஆகியன இல்லாததே இதன் பிரச்சனை.
வசனம் 19 இல், “நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு” என்றுள்ளது. லவோதிக்கேயா சபையினர் தங்களுடைய பாவத்தைக் குறித்து மனந்திரும்பவில்லை. எனவே இயேசு அவர்களை மனந்திரும்புமாறு கெஞ்சுகிறார்.
அவர்கள் தாங்கள் செய்த பாவத்துக்கு மனந்திரும்பினார்கள் என்பதற்கு நிரூபணம் இல்லை. ஆனால் இடிந்துபோன அந்நகரத்தின் சிறு பகுதிகள் அதற்கு சாட்சியாக நமக்குக் கிடைத்திருக்கின்றன. இது மிகச்சிறிய நிலப்பரப்புதான். ஆனால் அவர்கள் தங்களுடைய பாவங்களுக்காக மனம்வருந்தி மனந்திரும்பியதற்கான சாட்சியங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. இந்த சபைக்கு பிரச்சனை இருந்தது. நமது சபைக்கும் இதுபோன்ற பிரச்சனைகள் உண்டு.
வசனம் 20 இல் “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்.” சபையின் காரியங்கள் யாவும் சிறப்பாக நடந்தேறினாலும் இச்சபை இயேசுவை வெளியில் நிற்கவைத்து விட்டது. அவர் வாசலண்டையில் நின்று உள்ளே வர அனுமதி கேட்கிறார். ஆனால் ஒருவரும் அதற்குப் பதிலளிக்கவில்லை.
இயேசுவை சபைக்கு உள்ளே வைக்காதிருந்தால் உங்கள் தலைவரின் பிரசன்னத்தை இழப்பதே அதற்கான தண்டனை. சபையாகிய சரீரத்தின் தலை கிறிஸ்துவே என்பதை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். “நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” (யோவான் 15:5). இதனை லவோதிக்கேயா சபை அறியவில்லை. தலை இல்லாமல் சரீரம் மாத்திரம் இயங்கிக் கொண்டிருந்தது. தலை வெளியே இருந்தது. அவர்கள் அவரை உள்ளேவிடவில்லை. சபை தலைவரின் பிரசன்னத்தை மறுத்தது. அது சிறந்த போதகரின் அறிவுரைகளையும் இழந்தது.
லூக்கா 11:28இல், “தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள்”; என்றும், யோவான் 14:26இல் “என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” என்றும் கூறினார். இன்றைய சபையில் பல திறமையான போதகர்கள் நம்மிடையே உண்டு. அவர்கள் தேவனுடைய வல்லமையை அதிகமாகப் பெற்றிருக்கின்றனர். ஆனாலும் தேவ வல்லமையைப் பெறாதவர்களும் உண்டு. நீங்கள் கிறிஸ்துவை உங்கள் சபைக்கு வெளியே வைத்திருந்தால் தலைவரை மட்டுமல்ல; திருச்சபையின் சிறந்த போதகரையும் வெளியே நிற்க வைத்திருக்கிறீர்கள். இதுவே லவோதிக்கேயா சபைக்கு கிடைத்த தண்டனை.
ரோமர் 5:1-2 நாம் விசுவாசத்தின் மூலமாகவே இயேசுகிறிஸ்துவின் வழியாக தேவனை அடையமுடியும். இயேசுவை நான் சபைக்கு வெளியே வைத்திருந்தால் தேவனுடன் என்னை இணைக்கும் கடவுச் சொல்லையே நான் இழந்து விடுகிறேன். இயேசுவை சபைக்குள்ளே அழைக்க பல நல்ல காரணங்கள் உண்டு அதுபோலவே அவருக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் காரியங்களை நாம் செய்யாமலிருக்க உறுதியாயிருக்கவேண்டும். நீங்கள் கலந்துகொள்ளும் ஆலயம் சிறியதோ அல்லது பெரியதோ, எந்த பிரிவைச் சேர்ந்ததாயினும் சரி, அது லவோதிக்கேயா சபையைப் போன்றதாயிருக்க வேண்டாம். அதன் மையப்பிரச்சனை என்னவெனில், கிறிஸ்து தம்முடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்க முடியவில்லை.
வெளி 3:20 “இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்”; என்று இயேசு தெளிவாகக் கூறியுள்ளார். இந்த 21ம் நூற்றாண்டு சபையை எவ்வாறு சீர்ப்படுத்துவது என்பதை அறிய நான் எந்த போதகரிடமோ, வேதபோதகர்களிடமோ செல்லமாட்டேன். அவர் ஆண்டவராகிய இயேசு மாத்திரமே. அவர்தான் சபையை வரையறுக்கிறவர், இயக்குபவர், சீர்ப்படுத்துபவர். சபை வெளியே எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தாலும் உள்ளே கிரியை செய்வது இயேசு மாத்திரமே.
“இதோ நான் கதவருகே நின்று, தட்டிக் கொண்டிருக்கிறேன். நீ என்னை என்னுடைய சபைக்குள்ளே அனுமதிக்கவேண்டும். அதைச் செய்வாயானால் சபை உனக்கு செய்வதைவிட அதிகமான நற்காரியங்கள் உனக்குக் கிடைக்கும்”.
ஒரு பக்தர் என்னிடம்,”நீங்கள் வாரந்தோறும் சபையை நடத்தி, அநேக நிகழ்ச்சிகளைக் கொடுத்தாலும், பரிசுத்த ஆவியானவர் அங்கு இல்லையெனில், அது கிறிஸ்துவின் சபையாக இருக்காது” என்றார். அநேக வருடங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல ஆலயங்கள் தேவன் தங்கள் மத்தியில் இல்லை என்பதை அறியாதிருக்கிறார்கள். அவர்கள் நல்லமுறையில் இயங்கிக் கொண்டிருக்கும் இயந்திரங்கள். அனைத்து பிரிவினருக்கும் நிகழ்ச்சிகளை அளிக்கிறார்கள். ஆனால் அவர்களோ தூய ஆவியானவரைச் சார்ந்து இல்லை. தங்களை உயர்த்தாமலும் கிறிஸ்துவை மகிமைப்படுத்தாமலும் இருக்கும் அர்ப்பணிப்பை இழந்துவிட்டார்கள். இவ்வாறு செய்வதால் இரட்சகரை அவருடைய சபைக்கு வெளியே நிறுத்தி விடுகிறார்கள்.
இதுவரை வெளிப்படுத்தல் விளக்கிய ஏழு சபைகளைப் பற்றி நாம் ஆராய்ந்தோம். நம்மைச் சுற்றியுள்ள சபைகளை இத்துடன் ஒத்துப் பார்க்கவே நான் முயன்றேன். ஒவ்வொரு சபையும், சிறியதோ அல்லது பெரியதோ இச்சபைகளில் ஒன்றினைப்போலவே இருக்கும். நீங்கள் செல்லும் சபை எத்தகையது நாம்தான் முடிவெடுக்க வேண்டும். நாம் சாத்தானின் முறையையோ கிறிஸ்துவின் முறையையோ பின்பற்ற வேண்டும். இவ்விரு முறைகளில் ஒன்றினை நீங்கள் பின்பற்றும்பொழுது அவைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளையும், அவை செல்லும் திசைகளையும் நீங்கள் கவனிக்க வேண்டும். இது சபையின் அளவையோ சபை மக்களின் தொகையையோ நிலப்பரப்பையோ சார்ந்தது அல்ல. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்துள்ளார்களா? அவரைப் பின்பற்றுகிறார்களா? இல்லையா? என்பதை ஆராயவேண்டும். சாத்தானுக்கும் ஆண்டவராகிய இயேசுவுக்கும் உள்ள தொழில்முறை வேறுபாட்டை கண்ணோக்கவேண்டும். இதற்கு வெளிப்படுத்தல் புத்தகத்தைவிட வேறு சிறந்தது எதுவுமில்லை. பரிசுத்த வேதாகமத்தில் சாத்தானைப் பற்றி முதன்முதலில் ஆதியாகமம் 3ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். ஆனால் அதற்கு முன்பதாகவே அவனுடைய காரியங்கள் நடந்தேறின. எசேக்கியேல் 28:16 இல், தேவன் லூசிபரை நோக்கி, “நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னைத் தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன்” என்று கூறினார்.
முதலாவது சாத்தான், காப்பாற்றுவதற்கென்று அபிஷேகம் செய்யப்படட முதன்மையான தேவதூதனாகிய கேருப். தேவனுடைய சிங்காசன அறையில் அவனது இருப்பிடம் இருந்தது. இங்கிருந்து அவனுடைய வரலாறு ஆரம்பமாகிறது. ஆனால் வெளிப்படுத்தல் 12: 7-9 இல் சாத்தான் விண்ணகத்திலிருந்து இவ்வுலகத்துக்கு தள்ளப்படுகிறான். “வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம் பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம் பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத் தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள் என்று வாசிக்கிறோம்.
வெளி. 20:1-3 இல், “ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கி வரக்கண்டேன். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின் மேல் முத்திரைபோட்டான்” என்று எழுதப்பட் டுள்ளது. பரலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சாத்தான், பூமிக்குத் தள்ளப்பட்டான்; பின்னர் பாதாளக்குழிக்கு தள்ளப்பட்டான். வசனம் 7 இல் “அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும் படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும். அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்து கொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.”
சாத்தானின் வாழ்வு ஒவ்வொரு முறையும் கீழ்நோக்கியே சென்றது. நீங்கள் சாத்தானுடைய முறையைப் பின்பற்றினால் தோல்வியே அடைவீர்கள். இனி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை நோக்குவோம். அவர் தம்மைத்தாமே வெறுமையாக்கி சிலுவையின் மரணபரியந்தம் தம்மைத் தாழ்த்தினார். அதிலிருந்து அனைத்தும் உயர உயரச் சென்றது. இயேசுகிறிஸ்துக்கு உண்மையாயிருந்து அவரைப் பின்பற்றுகிறவர்களும் உயர் நிலையை அடைவார்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை.
“கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடே எழுப்பி, உன்னதங்களில் அவரோகேூட உட்காரவும் செய்தார்” (எபே. 2:6). “மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது” (1கொரி.15:54). “மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப் படுத்திக்கொண்டு” (யூதா 1:20) நாம் விசுவாச வார்த்தைகளால் தேறினவராகிறோம் (1தீமோ. 4:6). எனவே “பரலோகத்தில் நமக்காக நம்பிக்கை வைக்கப்பட்டிருக்கிறது” (கொலோ. 1:4). “இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது” (2 தீமோ. 4:8) “பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர் கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” (1தெச. 4:17). சிலுவையிலிருந்து இயேசுவின் வாழ்வு உயர்ந்துகொண்டே செல்லுகிறது. இப்பொழுது உங்களுக்கான வாய்ப்பு தரப்பட்டுள்ளது. தோற்றுப்போனவனை நீங்கள் பின்பற்றுவீர்களா அல்லது வெற்றி வீரர் கிறிஸ்துவைப் பின்பற்றுவீர்களா? சில வேளைகளில் நாம் சபையை செயல்படுத்தும்பொழுது துரதிர்ஷ்டவசமாக உலக வழக்கின்படி நடத்துகிறோம். இது பிசாசின் வழி. நாம் ஆண்டவருடைய வழியில் செல்லவில்லையெனில் அது நம்மை அழிவுக்கு நேராய் நடத்தும். இந்த ஏழு சபைகளிலிருந்து ஒவ்வொரு சபையும் வெற்றி பெற்ற தன் சபை மக்களால் மகிழ்ச்சியுற்றது. ஆனால் அவர்கள் ஆண்டவருடைய வழியை முழுவதுமாகப் பின்பற்றவில்லை.
இயேசுவின் வாழ்வு உயர உயரச் சென்றது; ஆனால் பிசாசின் வாழ்வு கீழ்நோக்கியே சென்றது. வெளிப்படுத்தல் புத்தகத்தில் 4 முதல் 19 ம் அதிகாரம் வரை உள்ள பகுதி; எதிர்காலத்தில் வரவிருக்கும் உபத்திரவங்களைப் பற்றிக் கூறுகிறது. நாம் யாரைப் பின்பற்றுகிறோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். நாம்தான் தீர்மானிக்கவேண்டும். நீங்கள் மேல்நோக்கி முன்னேறுகிறீர்களா அல்லது கீழ்நோக்கி செல்லுகிறீர்களா? உங்களது தீர்மானம் என்ன? நித்திய வாழ்வா? அல்லது நித்திய அழிவா? சிந்தித்து செயல்படுங்கள்.
மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை