• Dr.தியோடர் எச்.எஃப். •
(நவம்பர் – டிசம்பர் 2025)
ராஜ்யத்தின் ஆலயம் – கடைசியில் சமாதானம்

கடந்த காலங்களில், இஸ்ரவேலர் ஆண்டவரைத் தொழுதுகொள்ள முயற்சித்தபோது, அதிகமான பாடுகள் அனுபவித்திருக்கிறார்கள். அவர்களுடைய முதல் இரண்டு ஆலயங்களும் அழிக்கப்பட்டன. அவர்களுடைய மூன்றாவது ஆலயம், உபத்திரவ காலத்தில் தீட்டுப்படுத்தப்படும். இஸ்ரவேல் தேசம், வருங்காலத்தில் கஷ்டங்களை அனுபவிக்குமானாலும், அந்த தேசம், ஆயிர வருட அரசாட்சியில், தொழுதுகொள்வதின் மகிமையை அனுபவிக்கும்.
உபத்திரவகாலத்தின் முடிவில் தம்முடைய ராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பதற்காக இயேசுகிறிஸ்து உலகத்திற்கு திரும்பவும் வரும்போது, ஏசாயா 2:2,3இல் உள்ள வார்த்தைகளே நிறைவேறும். “கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடி வருவார்கள். திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார். நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில், சீயோனிலிருந்து வேதமும் எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்”.
எருசலேமைக் குறித்த தீர்க்கதரிசனங்கள்:
கிறிஸ்துவின் ஆயிரவருஷ அரசாட்சியின்போது, எப்படி எருசலேம் மையமான இடத்தை வகிக்கும் என்பதைக் குறித்து சகரியாவும் தீர்க்க தரிசனம் கூறி இருக்கிறான். “இன்னும் ஜனங்களும் அநேகம் பட்டணங்களின் குடிகளும் வருவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஒரு பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில்போய், நாம் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம் பண்ணவும் சேனைகளின் கர்த்தரைத் தேடவும் தீவிரித்துப்போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள். அநேக ஜனங்களும் பலத்த ஜாதிகளும் எருசலேமிலே சேனைகளின் கர்த்தரைத் தேடவும், கர்த்தருடைய சமூகத்தில் விண்ணப்பம் பண்ணவும் வருவார்கள். அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்” (சகரி. 8:20-23).
புறஜாதியாரின் காலத்தில் எருசலேமுக்கு நேரிட்ட எல்லா அவமானமும் தீட்டும் சுத்திகரிக்கப்பட்டுவிட்டால், அது ஆரம்பத்தில் எப்படியிருக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டதோ அப்படியே ஆகிவிடும். அதாவது, ஒரு பரிசுத்த நகரமாகிவிடும். வரப்போகிற ஆயிரவருட அரசாட்சியைக் குறித்து ஏசாயா 4:3,4 வசனங்கள் உரைப்பதாவது: “அப்பொழுது ஆண்டவர், சீயோன் குமாரத்திகளின் அழுக்கைக் கழுவி, நியாயத்தின் ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும், எருசலேமின் இரத்தப் பழிகளை அதின் நடுவிலிருந்து நீக்கிவிடும்போது, சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தரித்திருந்து ஜீவனுக்கென்று, பேரெழுதப்பட்டவனெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான்.” ஆகவே, எருசலேம் மிகுந்த இரத்தம் சிந்தப்பட்ட இடமாக இருந்தபோதிலும், இன்னும் சிலகாலம் தொடர்ந்து இரத்தம் சிந்தப்படப்போகும் இடமாயிருந்தாலும், அது முடிவிலே சமாதானமும் பரிசுத்தமும் நிறைந்த ஒரு நகரமாக இருக்கும்.
அதிக மகிமையுள்ளது:
“ஆகாய்” என்ற பழைய ஏற்பாட்டின் புஸ்தகத்தில் ஆயிரவருட அரசாட்சியின் ஆலயத்தைப்பற்றித் தீர்க்கதரிசனம் எழுதப்பட்டிருக்கிறது. அந்த ஆலயத்தின் மகிமை, முதல் இரண்டு ஆலயங்களின் மகிமையைவிட மிகவும் அதிகமாயிருக்குமென்று ஆகாய் தீர்க்கதரிசனம் உரைத்தான். கி.மு.586இல் சாலொமோனின் ஆலயம் அழிக்கப்பட்டுவிட்டது. இஸ்ரவேலர் 70 வருடங்கள் அடிமைகளாய்க் காலம் கழித்திருந்தார்கள். அவர்களில் ஒரு கூட்டத்தார் செருபாபேலைத் தலைவனாகக் கொண்டு ஆலயத்தைத் திரும்பவும் கட்டும்படியாக வந்தபோது, அவர்கள் அஸ்திபாரத்தை மட்டும் போட்டார்கள்; ஆனால், ஆலயம் கட்டி முடியும்வரை, கட்டுமான வேலையைத் தொடர்ந்து செய்யவில்லை.
ஆலயத்தைக் கட்டிமுடிக்கும்படி ஜனங்களைத் துரிதப்படுத்த கர்த்தர் எழுப்பின தீர்க்கதரிசிகளில் ஒருவன் ஆகாய். செருபாபேலின் ஆலயம் சாலொமோனின் ஆலயத்தைப்போல் கம்பீரமான தோற்றமுள்ளதாக இராவிட்டாலும், “ராஜ்ஜியத்தின்” காலத்திய மூன்றாவது ஆலயத்தின் மகிமை எப்படியிருக்குமென்பதை, ஆகாய், அந்த ஆலயத்தோடு ஒப்பிட்டு எழுதுகிறான்: “முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்” (ஆகாய் 2:9).
உபத்திரவ காலத்தில் எருசலேம் முற்றுகை போடப்பட்டாலும் இயேசுகிறிஸ்து உலகிற்குத் திரும்பவருவதன் மூலம் கர்த்தர் தம்முடைய ஜனங்களை விடுவிப்பார். அதற்குப்பின் கிறிஸ்துவே ஆயிர வருட அரசாட்சியில் எருசலேமிலிருந்து அரசாளுவார். வேதாகமத்தில் அடிக்கடி ‘ராஜ்ஜியம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், வெளிப்படுத்தல் 20ஆம் அதிகாரத்தில்தான், அது 1000 வருடம் நீடிக்கும் என்று அறிந்துகொள்கிறோம் (வெளி. 20:1-7). இவ்விதம், அது “ஆயிர வருட அரசாட்சி” என்று சொல்லப்படுகிறது.
சாத்தான் அந்த 1000 வருடங்களும் கட்டப்பட்டிருப்பான் (2ஆம் வசனம்). ஆனால், அந்தக் காலம் முடிந்தவுடன் கொஞ்சகாலம் அவிழ்த்து விடப்படுவான் (7ஆம் வசனம்). அவிழ்த்து விடப்பட்டவுடன் சாத்தான், ஆண்டவருக்கும் அவருடைய சேனைகளுக்கும் எதிராகக் கடைசி மகாப்பெரிய யுத்தத்தில் போர்புரிய ஒரு சேனையைத் திரட்டிச் சேர்ப்பான் – அதுதான் கோக் மாகோகின் யுத்தம் (8ஆம் வசனம்). சாத்தானும் அவன் சேனையும் அழிக்கப்படுவார்கள். சாத்தானுடைய முடிவுத் தண்டனையைப்பற்றி 10ஆம் வசனத்தில் கூறப்பட்டிருக்கிறது. “மேலும் அவர்களை மோசம் போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத் தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.
இயேசு கட்டாயம் மறுபடியும் வரவேண்டும்:
ஏன் இயேசு திரும்பவும் பூமிக்கு வர வேண்டும்? வேதாகமம் அவருடைய இரண்டாம் வருகைக்குப் பல காரணங்களைக் கொடுக்கிறது. ஒரு காரணம், அவர் தேசிய பிரச்சனைகளையும் சர்வதேசப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்காக வருவார். ஏனெனில், அவர் தன்னுடைய ராஜ்ஜியத்தை உலகத்தில் ஸ்தாபிக்கும்வரை, அகில உலக சமாதானம் இருக்காது.
தற்காலத்தில், அநேகர் சமாதானத்திற்காக அதிக ஊக்கத்துடன் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த முயற்சிகளையெல்லாம் குறைத்துவிடக்கூடாதுதான். வெளியரங்கமான போர்களைத் தடுப்பதற்கு அவசியமான ஒப்பந்தங்கள் செய்துகொள்ளுவதற்கு, சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடத்தக்கூடிய மாநாடுகள் அவசியம்தான். ஆனால், இந்தவிதமான கூட்டங்கள் நிலையான சமாதானத்தைக் கொண்டுவரக்கூடும் என்று சமாதானம் வருவதை மக்கள் இலேசாக நினைத்துக்கொள்ளக்கூடாது.
ஏன் யுத்தங்கள் இருந்துகொண்டே வருகின்றன? ஆச்சரியப்படுகிறவர்களுக்கு யாக்கோபு 4:1.2 வசனங்கள் பதிலளிக்கின்றன. “உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினாலல்லவா? நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலை செய்தும் பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற் போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை”. ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனிடமும் பாவசுபாவம் இருப்பதால், யுத்தங்கள் விளைகின்றன. சமாதானத்தின் பிரபுவாகிய இயேசு கிறிஸ்து திரும்பவும் இந்த உலகத்திற்கு வரும் வரை, நிரந்தரமானதும் உலகமுழுவதும் நிலவுவதுமான சமாதானத்தை நாம் அனுபவிக்க முடியாது.
சாத்தானுடைய தலைசிறந்த படைப்பாகிய அந்திக்கிறிஸ்துவை அழிப்பதற்கும் கிறிஸ்து திரும்பவும் வருவார். வேதத்தில் அந்திக் கிறிஸ்துவைப்பற்றிப் பலவிதமான வருணனை கொடுக்கப்பட்டிருக்கிறது. தானியேல் 9:26இல் அவனை “வரப்போகிற பிரபு” என்று சொல்லப்பட்டிருக்கிறது. 2தெசலோனிக்கேயர் 2:3இல் “கேட்டின் மகனாகிய பாவமனுஷன் என்றும், வெளி. 13:2இல் “மிருகம்” என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. உபத்திரவ காலத்தில், சாத்தான் அந்திக்கிறிஸ்துவைக்கொண்டு உலகத்தை ஆளுகை செய்ய முயற்சி செய்வான்.
உபத்திரவ காலத்தின் பின்பாதி காலத்தில், வாங்குகிறவர்களும் விற்பனை செய்பவர்களும் மிருகத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ள வேண்டும் (வெளி. 13:16,17). அந்திக்கிறிஸ்து, ஒரு உலகமார்க்கத்தையும், உலக அரசாங்கத்தையும் ஸ்தாபிப்பதில் வெற்றிபெற்றாலும், கிறிஸ்து மோட்சத்திலிருந்து திரும்பிவரும்பொழுது, அவன் தோற்கடிக்கப்படுவான். அந்த வேளையைக் குறித்து வெளி.19:20இல், “அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது: மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக் கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்”, என்று கூறப்பட்டிருக்கிறது. அந்த ஆயிரம் வருடங்களும் கட்டப்பட்டிருப்பான்” என்று கூறப்பட்டிருக்கிறது.
கிறிஸ்துவினுடைய 1000 வருட அரசாட்சி உலகத்தில் தொடங்குவதற்குமுன், மிருகத்திற்கும் கள்ளத்தீர்க்கதரிசிக்கும் நியாயத்தீர்ப்பு வழங்கப்படும். அந்த அரசாட்சியின் முடிவில், பிசாசானவன், மிருகமும் கள்ளத் தீர்க்கதரிசியும் இருக்கும் அக்கினிக்கடலில் அவர்களோடு சேர்ந்துகொள்ளும்படி தள்ளப்படுவான் (வெளி20,10), மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் அடியோடு நிர் மூலமாக்கப்பட மாட்டார்கள். அவர்கள் ஆயிர வருடங்கள் முடிந்தபின்பும் அக்கினிக்கடலில்தான் இருப்பார்கள்.
கிறிஸ்து உலகத்திற்குத் திரும்ப வரும்போது, ஆதியில் ஏதேன் தோட்டத்தில் இருந்த சூழ்நிலைகளைப் போன்ற சூழ்நிலைகளை அவர் உருவாக்குவார். ஏசாயாவின் புத்தகத்தில் ‘ராஜ்ஜியத்தின் காலத்தைப்பற்றி இப்படிக் கூறப்பட்டிருக்கிறது: “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்” (ஏசா.35:1). மனிதன் விழுந்ததிலிருந்து பூமி பலன் கொடுத்ததைவிட மிகவும் அதிகமாகப் பலன் கொடுக்கும். மிருகராஜ்ஜியத்திலும் சமாதானமிருக்கும். ஏசாயா தீர்க்க தரிசனம் உரைத்ததுபோல், “ஓனாயும் ஆட்டுக் குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப் போல வைக்கோலைத் தின்னும்; புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்கு செய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசா.65:25).
ஆம், கிறிஸ்து தாம் அறிவித்ததெல்லாம் சரியெனக் காட்டுவதற்குத் திரும்ப வருவார். பிலிப்பியர் 2:10,11 இல் முன்னறிவித்திருப்பதுபோல் கிறிஸ்து முழு அதிகாரத்தோடு அரசாளும் ஒருகாலம் வரும். அப்பொழுது, “இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தர் என்று நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்”.
ஒவ்வொருவரும் ஒருநாள் கிறிஸ்துவை ஆண்டவர் என்று நம்பி அறிக்கை செய்வார்கள். இப்பொழுது அவரை ஆண்டவராக ஏற்றுக்கொள்ளுகிறவர்கள், அவருடைய வரப்போகிற ராஜ்ஜியத்தில் அவரோடு அரசாளுவார்கள். இப்பொழுது அவரை ஏற்றுக்கொள்ளாதவர்களும் நியாயத் தீர்ப்பின் நாளில் அவரை ஆண்டவர் என்று ஏற்றுக்கொள்ளுவார்கள். ஆனால், அச்சமயம் அவர்கள் ஆக்கினையிலிருந்து தப்பிக்கொள்ளுவதற்கான காலம் கடந்து போயிருக்கும்.
இரட்சிப்பின் சந்தோஷ செய்தி என்னவென்றால், இப்பொழுது எந்த மனிதனையும் அவன் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுகொள்வதன்மூலம் ஆக்கினைத் தீர்ப்புக்கு ஆளாகாதபடி விடுவித்துவிடலாம். (இவ்வுலக வாழ்க்கை முடிந்தபின், தப்பிக்கொள்ள முடியாது) நீ இயேசு கிறிஸ்துவை உன் சொந்த இரட்சகராக அறிந்திருக்கிறாயா? சமயம் இருக்கும்போதே நீ இரட்சிப்பைப் பெற்றிருக்கிறாய் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்!
(முற்றிற்று)
மொழியாக்கம்: Bro. A.Manuel