• சகோ.ஆ.பிரேம்குமார் •
(நவம்பர் – டிசம்பர் 2025)

விசேஷ ‘கிறிஸ்துமஸ் மலிவு விற்பனை’ என்ற விளம்பரத்தை கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் எங்கும் காணக்கூடியதாயிருக்கிறது. பட்டாடைகள் தொடங்கி பட்டாசுவரை விளம்பரங்கள் வியாபித்திருக்கிற காலமிது. வீதியெங்கும் விலாசமில்லாத சிறுகடைகள் விழித்தெழும்பும் காலமிது. கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களில் நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை கிறிஸ்தவர்கள் பயன்படுத்துகிறார்களே இல்லையோ, வியாபாரிகள் அதிக இலாபமடைய, இக்காலத்தைப் பயன்படுத்துகிறார்கள். கிறிஸ்தவர்களாகிய நமக்கு கிறிஸ்துமஸ் பல வாய்ப்புகளை அள்ளி வீசுகிறது. இவ்வாய்ப்புகள் சிலவற்றை கவனிப்போமா?

(1) கிறிஸ்துமஸ் பண்டிகையின் நாயகனை அறியும் வாய்ப்பு

கிறிஸ்துமஸின் நாயகன் கிறிஸ்து. அவரைப் பற்றி அறிந்தவர் இவ்வுலகில் பலர். ஆனால், அவரைத் தனிப்பட்ட விதத்தில் அறிந்தவர்களோ சிலர். ஒருவரைப்பற்றி தனிப்பட்ட விதத்தில் அறிந்திருப்பதற்கும், அந்த ஒருவரை அறிந்திருக்கிறதற்குமிடையில் மிகப்பெரிய வித்தியாசமிருக்கிறது. என்னுடைய புத்தகங்களை வாசித்து என்னைப்பற்றி அறிந்தவர்கள் சிலரை நான் நேரடியாக சந்தித்தபோது அவர்கள் ஆச்சரியப்பட்டதுண்டு. அவர்கள் மனக்கண்முன் என்னைப் பற்றி இருந்த தோற்றமோ வேறு, அவர்கள் கண்ட தோற்றம் வேறு. ஒருவேளை வயதுசென்ற வழுக்கை தலைகொண்ட ஒருவர்தான் இந்த பிரேம்குமார் என்று அவர்கள் எண்ணியிருக்சுலாம். அவர்கள் எண்ணங்களுக்கு எதிர்மாறாக என்னைக் கண்டபோது, என்னோடு நேரடியாகப் பேசியபோதே நான் யார் என்பதையும் எப்படிப்பட்டவன் என்பதையும் அறிந்து கொண்டனர். இதனை வாசிக்கும் அன்பர்களில் பலர் சிறுவயது தொடங்கி கிறிஸ்துவைப்பற்றி அறிந்திருக்கலாம். ஆனால், கிறிஸ்துவைத் தனிப்பட்ட விதத்தில் அறிந்திருக்கிறார்களா? கிறிஸ்து பிறந்தபோது, மூன்று வேளை ஜெபித்து, வேதம் வாசித்து, கற்பித்து, வாரத்திற்கு இருமுறை தவறாமல் உபவாசித்த மதவாதிகள் அவரைக் கண்டுகொள்ளவுமில்லை, அவரை அறிந்து கொள்ளவுமில்லை. மதவாதிகளால் தேவாலயத்துக்குள்கூட அனுமதிக்கப்படாத மேய்ப்பர்கள் அவரைக் கண்டு கொண்டனர்.

ஊழியத்திற்காகச் சென்றிருந்த கிறிஸ்தவ போதகர் ஒருவரைப் பார்த்து ஒருவர் சில கேள்விகளைக் கேட்டார். “உமக்குள் உண்மையான சாட்சி இருக்கிறதா? தேவ ஆவியானவர், நீர் தேவனுடைய பிள்ளைதான் என்பதாகச் சாட்சி கொடுக்கிறாரா?” என்று கேட்க, இக்கேள்விகளுக்குப் பதிலுரைக்கத் தயங்கிய அந்தப் போதகரிடம், “நீர் கிறிஸ்துவை அறிந்திருக்கிறீரா?” என்று கேட்டார். ஆம், அவர் உலக இரட்சகரென்று நான் அறிவேன் என்று கூறினார் அப்போதகர். ஆம். அவர் உலக இரட்சகர்தான், ஆனாலும் உம்மை இரட்சித்திருக்கிறாரா˜ என்று கேட்க, என்னை இரட்சிப்பதற்காக அவர் மரித்தாரென நான் என்ணுகிறேன் என்றார். கேள்வி கேட்டவர் இறுதியாக “உமது சொந்த அனுபவத்தில் நீர் இதை அறிந்திருக்கிறீரா?” எனக் கேட்டபோது நான் அறிந்திருக்கிறேன் என்பதாக பதிலளித்தார் அப்போதகர். ஆனால், அவர் அவ்விடத்தில் கூறியது உண்மையல்ல என்பதை அவரே ஒப்புக் கொண்டபின்னர் ஒருநாள் ரோமர் நிருபத்திற்கு மார்ட்டின் லூத்தர் எழுதிய முகவுரை வாசிக்கப்படுவதைக் கேட்டபோது உண்மையாகவே கிறிஸ்துவைத் தனிப்பட்ட விதத்தில் அவர் அறிந்துகொண்டார். அப்படி அறிந்துகொண்டவர் வேறு யாருமல்ல, மெதடிஸ்ட் சபையின் ஸ்தாபகர் ஜான்வெஸ்லிதான்.

கிறிஸ்துவைத் தனிப்பட்ட விதத்தில் சொந்த இரட்சகராக அறிந்து அனுபவித்திருக்கிறீர்களா? அப்படி அறிந்திருந்தால், அவரை அறிவதை அத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டாம். வேத பண்டிதர் பவுலே கிறிஸ்துவை இன்னும் ஆழமாக அறிய விரும்பினார் (பிலி 3:10).

கலாநிதி. தியோடர் எச்.எப் அவர்கள் விளக்கியதைப்போல், இருவர் திருமணம் முடிக்கும்போது ஒருவரையொருவர் அறிந்திருப்பதைவிட கணவன் மனைவியாக பல வருடங்கள் வாழும்போது மிக நெருக்கமாக ஒருவரையொருவர் அறிந்துகொள்கிறார்கள். அதுபோல, இரட்சிக்கப்பட்ட ஆரம்ப காலத்தினைவிட அதிகமாக இன்னும் நாம் கிறிஸ்துவை அறிய வாஞ்சிப்போமா?

(2) கிறிஸ்துமஸ் பண்டிகையின் நற்செய்தியை அறிவிக்கும் வாய்ப்பு

கிறிஸ்துமஸ் ‘காலத்தில் நற்செய்தியை அறிவிக்க நமக்கு ஏராளமான வாய்ப்புகள் உண்டு. சாதாரண காலத்தில் கிறிஸ்தவர்களாகிய நமக்கு இடங்கொடாத பத்திரிக்கைகளும், வானொலியும் தொலைக்காட்சியும்கூட கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் கிறிஸ்தவக் கட்டுரைகள், நிகழ்ச்சிகள் இடம்பெற இடங்கொடுக்கின்றன. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி கிறிஸ்துமஸின் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கலாமே! கிறிஸ்துமஸ் கீதங்களைப்பாடி வலம் வருகையில் சபையார் வீடுகளுக்கு மட்டும் போய் பாடுவதை விட்டு, அந்நியர் மத்தியிலும் போய் பாடி சுவிசேஷத்தையும் அறிவியுங்கள். அப்படி விசுவாசிகள் வீடுகளுக்குப் போவதாயிருந்தால் அயலகத்தாரையும் அங்கு வர வழைத்து சுருக்கமாக சுவிசேஷத்தையும் அறிவியுங்கள்.

கிறிஸ்துமஸைத் தள்ளிவிட்டு கொண்டாடப்படும் கிறிஸ்துமஸை மாற்றி, கிறிஸ்துவை நாயகனாக நடுமையத்திற்குக் கொண்டுவந்து கிறிஸ்துமஸை அர்த்தமுள்ளதாக மற்றவருக்கு அறிவிப்போமா?

(3) கிறிஸ்துமஸ் பண்டிகையில் நலிந்தோரை ஆற்றும் வாய்ப்பு

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே அவர் பணி குறித்து ஏசாயா தீர்க்கதரிசி கூறுகையில் அவர் பணி, தரித்திரரையும் சிறைப்பட்டவரையும் ஒடுக்கப்பட்டவரையும் இருதயம் நொறுங்குண்டவரையும் உள்ளடக்கியது என்பதை வெளிப்படுத்துகிறார் (ஏசா. 61:1-31), லூக்காவும் கிறிஸ்துவின் ஊழியத்தைக் குறித்து விவரிக்கையில் அவர் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், அந்நியர், நோயாளிகள், ஏழைகள் போன்றவர்கள்மேல் காட்டிய விசேஷ அக்கறையை எடுத்துக்காட்டுகிறார்.

இந்தக் கிறிஸ்துமஸ் காலங்களில் ஏழைகளையும் நாம் நினைப்போமா? ஒருமுறை ஒரு சிறுவன் தனக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அணிய காலணி இல்லையே எனக் கவலை கொண்டவன், வெளியே ஒருவன் காலணி அணிய காலே இல்லாமல் இருப்பதைக்கண்டு தான் காலணி வேண்டும் என்று பெற்றோரிடம் அடம்பிடித்தது தவறென்று உணர்ந்தான். இந்தக் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் நமக்கு இல்லாததை நினைத்து வருந்துவதைவிட்டு நமக்கிருப்பதில் சிலவற்றை இல்லாதவருடன் பகிர்ந்துகொள்வோமா? கிறிஸ்துமஸ் காலத்தில் குடும்பத்தோடு கூடி மகிழும் நாம், அரவணைக்க அன்னையற்று எனக்கும் அம்மா அப்பா இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் எனப் பெற்றோரின் அன்புக்காக அநாதை விடுதிகளில் ஏங்கும் சிறுவர்களையும் நினைப்போமா? அவர்களுக்கென்று ஒரு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடத்தலாமே! பெற்று வளர்த்த பிள்ளைகளால் அனாவசியத் தொந்தரவாகக் கருதப்பட்டு எவர்களுக்காக வாழ்ந்தார்களோ, அவர்களால் வயோதிப இல்லங்களில் தனிமையையும் கடந்தகால நினைவுகளையும் மட்டுமே நண்பர்களாகக் கொண்டு வாழும் வயோதிபப் பெரியவர்களைப் போய் சந்தித்து அவர்களோடு சில நிமிடங்கள் பேசலாமே!

வானமே எல்லையென்று வானத்தில் சிறகடித்துப் பறக்க எண்ணி சிறகொடிந்து சிறைச் சாலைகளில் அடைபட்டுக் கிடப்பவர்களையும் நினைப்போமா? வைத்திய சாலைகளில் வேதனையோடிருப்பவர்களையும் நினைப்போமா? உடைமைகளை இழந்து உறவுகளுக்குத் தூரமாகி அகதி முகாம்களில் அவதிப்படுபவர்களையும் நினைப்போமா? மேற்குறிப்பிட்டவற்றில் எதனையாவது செய்ய முயற்சிப்போமா? இது கட்டாயமல்ல. வேண்டுகோள். கிறிஸ்துமஸ் தினம் நாம் குடும்பமாக ஒன்று கூடும் தினம். அந்த சந்தர்ப்பத்தை தவறி விடுவதெப்படி? என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம். டிசம்பர் 25 ஆம் தேதிதான் இதனைக் கட்டாயம் செய்யவேண்டும் என்று நான் கூறவில்லை. கிறிஸ்துமஸ் காலத்தை இதற்குப் பயன்படுத்தலாமே என்கிறேன்.

கிறிஸ்துமஸ் நமக்குப் பல வாய்ப்புகளை அளிக்கிறது. அவற்றைப் பயன்படுத்துவதும் பயன்படுத்தாமலிருப்பதும் உங்கள் கைகளில் இருக்கிறது. இந்த கிறிஸ்துமஸ் உங்களுக்கு அர்த்தமுடையதாக மாற என் வாழ்த்துக்கள்.