• சகோதரி சாந்தி பொன்னு •
(நவம்பர் – டிசம்பர் 2025)

இன்னுமொரு கிறிஸ்மதுஸ் நாட்களுக்குள் நாம் வந்துவிட்டோம். இந்த நாட்களைக் காலம் என்று சொல்வதா, நினைவுகூருதலின் நாட்கள் என்று சொல்லுவதா? காலம் அல்லது சீசன் என்னும்போது அது மாறிமாறி வரும் போகும். இன்று நமது கிறிஸ்தவ வாழ்வும் ஏதொவொரு காலத்தின் பிடிக்குள் அகப்பட்டிருக்கிறதா, கொண்டாட்டங்களில் இசைந்துவிட்டதா என்ற கேள்வி எழும்புகிறது. ஆனால் அதற்கு யார் பதில் கொடுப்பார்கள்?

கிறிஸ்துமஸ் குறித்து ஏதாவது சொல்லும்படி ஒரு பெரியவரிடம் கேட்டபோது, ‘இந்தத் தேதி மட்டும் காலண்டரில் இல்லாவிட்டால் தூரதேசத்திலிருக்கும் பிள்ளைகள் என்னைப் பார்க்க வருவார்களோ என்னவோ’ என்று அலுத்துக் கொண்டார். ஒரு குடும்பத் தலைவியிடம் கேட்டபோது, ‘எவ்வளவு வேலை தெரியுமா? கேக் அடிக்கணும், உணவு வகைகள் செய்யணும். வருகிற உறவினரைக் கவனிக்கணும், வேண்டாம் என்றிருக்கும்’ என்று சற்று சின்னதாக சினந்துகொண்டாள். குடும்பத் தலைவனோ, ‘போனஸ் கிடைக்காவிட்டால் அவ்வளவுதான்’ என்று மெதுவாக சிரித்துக்கொண்டார். வாலிபப் பிள்ளைகளோ, ‘ரொம்ப குதூகலமான நாட்கள் அவைதான். கிறிஸ்துமஸ் கேரல் என்ன! ஆராதனைக்கான பாடல் பயிற்சிகள் என்ன! சாப்பாடுகள் என்ன’ அடுக்கிக்கொண்டே போனார்கள். குழந்தைகள் சொன்ன பதிலையோ எழுதியே முடியாது. புதுச் சட்டையில் தொடங்கியது அவர்களுடைய குதூகலம். சபைக்குப் போனால், அக்டோபர் மாதமே கிறிஸ்துமஸ் கேரல் பயிற்சிகள் ஆரம்பித்து, ஆலய அலங்காரங்கள் – சென்ற வருடம் கொண்டாட்டம் முடித்து மூலையில் முடக்கிவிட்ட செயற்கை கிறிஸ்துமஸ் மரமும் அலங்காரங்களும் அப்போது வெளியே எடுக்கப்படும் – விசேஷ ஆராதனைக்கு பாடற்குழுவுக்கான உடையின் நிறம் தீர்மானிக்கப்படும்வரை எல்லாமே நடக்கும். இவை தப்பா? இல்லை. இது ஒருபுறம் இருக்க, ஞாயிறு பாடசாலைப் பிள்ளைகளுக்கான பயிற்சிகள், பரிசுப் பொருட்கள் என்று இன்னொருபுறம் ஆசிரியர்கள் போராட, சபையினருக்குக் கொடுக்கும் கேக் யார் பொறுப்பெடுப்பார் என்ற தர்க்கம் வரைக்கும் எல்லாம் நடக்கும். இது தப்பா? இல்லவே இல்லை. ஒரு சிலர் ஏழைகளுக்கும் கிராமத்துப் பிள்ளைகளுக்கும் ஏதாவது கொடுக்கவேண்டும் என்று ஏவப்பட்டு அதையும் சபையில் அறிவிப்பதும் நடக்கும். இது தப்பா? இல்லை.

ஆனால் இதுவா கிறிஸ்துமஸ்? ‘இயேசு எங்களுக்காகத்தானே வந்து பிறந்தவர். அதை நினைவுபடுத்திக் கொண்டாடுவது தவறா?’ என்று சிலர் பிரச்சனையைக் கிளப்புவார்கள். அவர்கள் கேள்வியிலும் தப்பில்லை. ஆனால், இம்முறை நமது பிள்ளைகளுக்கு ஆலயத்தில் கொடுக்கும் பரிசுப் பொருட்களைச் சேகரித்து, ஆண்டவரை அறியாத இடத்தைத் தெரிந்தெடுத்து, அங்கே போய், அங்கிருக்கும் பிள்ளைகளுக்கு நமது பிள்ளைகளின் கைகளால் கொடுத்தால் என்ன என்று ஆலோசனை சொன்னால், வந்துவிடும் தர்க்கமும் சண்டையும். ஒருநேர உணவுகூட இல்லாமல் தவிக்கின்ற ஏராளமான குடும்பங்களைச் சந்தித்தால் என்ன என்று கேட்டால், அது எப்பவும் செய்யலாமே என்ற பதில் வரும்.

கிறிஸ்துமஸ் என்றால் என்ன என்று ஒரு ஞாயிறு பாடசாலையில் கேட்டபோது, அப்பா தூரத்திலிருந்து வீட்டுக்கு வருவார், அம்மா கேக் செய்வா, புதுச்சட்டை பட்டாசுகள் பரிசுகள் என்று பல பதில்கள் எழுந்தன. இந்தப் பதில்களைப் பிள்ளைகள் மனதிலே பதிக்கிறவர்கள் யார்? பெரியவர்களும் பெற்றோர்களுமான நாமேதானே. ஆனால் ஒரு பதினொரு வயதுப் பையன் எழுந்தான். ‘கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்து யாவருக்கும், அதாவது Christ For the mass’ என்றான். தம்பி யார் உனக்கு இதனைச் சொல்லிக்கொடுத்தது என்று கேட்டபோது, அவன் ‘எங்க பாட்டி’ என்று பெருமையுடன் சொன்னான்.

கிறிஸ்துமஸின் ஆரம்பம்:

கிறிஸ்மஸ் கொண்டாட்டம் எப்போ ஆரம்பித்தது? இயேசு பிறந்தபோதா? அல்லது தேவதூதர்களின் பாடலின் பின்னரா? அல்லது, இயேசு பரத்துக்கு ஏறிப்போன பின்னர் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் காலத்திலா? அவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடினார்கள் என்று வேதாகமத்தில் எங்கும் பார்க்க முடியவில்லை. இயேசு பெத்லகேமிலே பிறந்தபோது, இயேசு பிறப்பு என்பது ஆரம்பித்தது என்றாலும், அது ஒரு கொண்டாட்டமாக மாறியது கி.பி.336ம் ஆண்டளவில்தான். அதாவது கான்ஸ்ரன்ரைன் என்ற ரோம சக்கரவர்த்தியினாலேயே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அது சூடு பிடித்தது 9ம் நூற்றாண்டில் என்று அறியப்படுகிறது. இன்னும் சொன்னால், இயேசு டிசம்பர் 25ல் பிறக்கவில்லை என்பது இன்று நமக்கும் தெரியும். அப்படியானால் இந்த டிசம்பர் 25 எப்படி வந்தது. அது ஒரு வானுலக சூரிய தெய்வ வழிபாட்டின் தேதியாகும். இந்தச் சக்ரவர்த்தி, இயேசுவே கடவுள் என்று அறிய வந்தபோது, அந்த விக்கிரக கொண்டாட்ட தேதியை இயேசுவின் பிறப்பின் பண்டிகையாக மாற்றிவிட்டான். மாறாக, பரிசுத்த வேதாகமம் இயேசு பிறப்பைக் கொண்டாடு, கொண்டாடாதே என்று எதுவும் விதிக்கவில்லை.

ஆனாலும், நாம் சற்று தரித்து, ஆண்டவர் வந்து பிறந்ததால் நாம் ருசிக்கின்ற அவருடைய அன்புக்கும், அவர் தந்த நம்பிக்கைக்கும் மகிழ்ச்சிக்குமாக அவருக்கு ஒரு நாளில் நன்றி கூறுவதில் தவறில்லை. நாம் பரிசில்களைப் பரிமாறும்போது, தேவனாகிய கர்த்தர் தமது குமாரனாகிய இயேசுவை நமக்குப் பரிசாக அருளியதை நாம் அனுபவிக்கிறோம். ஆனால் உண்மையில் அந்த உணர்வில்தான் நாம் யாவையும் செய்கிறோமா என்பதை நாமே நம்மைக் கேட்டுப்பார்ப்பது நல்லது.

அநாதி தீர்மானம்

இயேசுவின் பிறப்பு எங்கே எப்போ தீர்மானிக்கப்பட்டது? ‘அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து…’ (1பேது.1:20) என்கிறது வேதாகமம். ஆரம்பத்தையும் முடிவையும் அறிந்திருக்கிற அநந்த ஞானமுள்ள தேவன், மனுக்குலத்திற்கான மீட்பையும் மீட்பரையும் உலகத் தோற்றத்திற்கு முன்னரே தீர்மானித்துவிட்டார். அவர் தாம் மனிதனை தமக்காக தம்முடன் உறவாட தமது சாயலிலே படைத்தாலும், அவன் விழுந்து போவான் என்றும், அவனுடைய இரட்சிப்பு மற்றும் நித்தியத்தில் சேர்க்கப்படுவதற்கான சகலத்தையும் அவர் ஆதி முதலாய் தீர்மானித்துவிட்ட இந்த தேவாதி தேவனுடன் மனுஷன் துணிகரமாகப் போராடுவது என்ன? இன்னும் சொன்னால் மனிதன் படைக்கப்பட்டு, பாவத்தில் விழுவதற்கு முன்னரே அவனுக்கான மீட்பு குறிக்கப்பட்டாயிற்று, ஆமென்.

அடுத்தது, தீர்மானிக்கப்பட்ட இரட்சகரின் வருகை முதன் முதலில் அறிவிக்கப்பட்டது எப்போ? ஒரே பதில், ஏதேன் தோட்டத்தில் என்பதுதான். மனிதன் பாவத்தில் விழுந்தபின்னர், தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்துக் கூறியது: …உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார் (ஆதி.3:15). இங்கே இரண்டு சம்பவங்களைப் பார்க்கிறோம். ஒன்று சாத்தான் இரட்சகரின் குதிங்காலைச் சுரண்டுவான். இங்கே குதிங்கால் என்பது உயிருக்குச் சமானம். நம்முடைய குதிங்காலின் நரம்பு வெட்டப்பட்டால் சாவைத் தடுக்கமுடியாது என்பது நாம் அறிந்ததே.

ஆக. தேவாதி தேவன் தாமே தமக்குள்ளிருந்து தாமாக ஒரு இரட்சகராக, பரிசுத்த பிள்ளையாக வந்து பிறந்து, மனிதனைக் கட்டிவைத்துள்ள பாவசங்கிலியை முறித்தெறிந்து அவனை மீட்பதற்கு, அவர் பலியாகவேண்டியது, பாவத்திற்கான நிவர்த்தி செய்யப்பட வேண்டியது அவசியமாயிருந்தது. அதாவது, அவர் தமது இரத்தத்தைச் சிந்தவேண்டும், அதாவது அவர் கொல்லப்பட வேண்டும். கொல்லுவதற்குரிய செய்தியைக் கர்த்தர் யாரிடம் கூறினார்? ‘நீயே அவர் குதிங்காலை நசுக்குவாய்’ என்பதே அந்த செய்தி. இதைக் கர்த்தர் சொன்னது சாத்தானிடம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்ற தேவனாகிய கர்த்தர் பாவித்தது இந்த சாத்தானையே. சாத்தான் தீமையின் பிறப்பிடம். அன்று யூதர்கள் அவரைச் சிலுவைக்கு ஒப்புவித்தாலும், போர்வீரர் அவரைச் சிலுவையில் அறைந்து தொங்கவிட்டாலும், அங்கே கிரியை செய்தது தீமையின் கரமே என்பதை நாம் உணர வேண்டும். அன்று, இயேசுவும் அவரோடு அறையப்பட்ட கள்வரும் இன்னமும் இறக்காவிட்டால்…. அவர்கள் கால்களை முறிப்பதற்காக வந்த போர்வீரர், வேதவாக்கியங்களின்படி இயேசுவின் எலும்பு எதுவும் முறிக்கப்படாதபடி, அவர் தாமே மரித்துப்போயிருந்ததைக் கண்டனர்.

இப்போ, இயேசுவின் மரணத்தால் இரட்சிப்பின் திட்டம் தோற்றுப்போனதா? இல்லை. பாவத்தின் சம்பளமாகிய மரணம் விழுங்கப்பட்டது. இயேசு மரித்ததால்தான் உயிரோடெழுந்தார். அவர் உயிரோடெழுந்தபோது சாத்தான் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டான். இயேசு உயிரோடெழுந்திராவிட்டால் இன்று நாம் அவருடைய பிறப்பை நினைவுகூருவோமா? கிறிஸ்துமஸ் என்றதொரு பண்டிகையைத்தான் கொண்டாடுவோமா? ஆகவே இந்தப் பண்டிகையின் அஸ்திபாரமாகிய அவருடைய மரணத்தையோ உயிர்ப்பையோ நாம் மறந்துவிடக்கூடாது. ஆனால் வரலாற்றுக் கதை இத்துடன் முடியவில்லை.

இன்று நமது பொறுப்பு என்ன?

தேவனுடைய முதலாவது அநாதி திட்டம் நிறைவேறி முடிந்தது. இனி இரண்டாவதாகவும் இறுதியாகவும் நடக்கப்போகும் சங்கதிதான் மிக முக்கியமானது. ‘அவர் உன் தலையை நசுக்குவார்’ என்று கர்த்தர் உரைத்த தீர்க்கதரிசனத்தின்படி, இரட்சகர் ராஜாதி ராஜாவாக வந்து சாத்தானின் தலையை அதாவது அவனுடைய அதிகாரத்தை நசுக்குவார். அவன் நித்தியமாய் அக்கினியில் தள்ளப்படுவான். அவனோடேகூட அவனுடையவர்களும் தள்ளப்படுவார்கள். இது வேதசத்தியம். தேவனுடைய இந்த இரண்டாம் திட்டத்தின் நிறைவேறுதலில் இன்று கிறிஸ்தவர்கள் என்றிருக்கிற நமது பொறுப்பு என்ன?

பாவத்தின் கிரயத்தைச் செலுத்தி, தம்மை மரணத்திலூற்றுவதற்கென்றே பிறந்த இயேசுவை இன்று நாம் எந்த இடத்தில் வைத்திருக்கிறோம். பிறக்கின்ற ஒவ்வொரு உயிரும் மரிப்பது தவிர்க்கமுடியாதது. ஆனால் மரிப்பதற்கென்றே பிறந்தார் இயேசு என்பதை அவர் பிறப்பில் நினைவுபடுத்தவேண்டியது அவசியம் அல்லவா! உயிர்த்த இயேசு மீண்டும் வருவார்.

இவ்விதமாக இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்புக்கும், அவருடைய இறுதி வெற்றிக்கும் இடையில்தான் இன்று நாம் வாழுகிறோம். இயேசு தமது ஊழியத்தை ஆரம்பிக்கும்போது செய்த முதல் பிரசங்கம்: மனந்திரும்புங்கள்; பரலோகராஜய்ம் சமீபித்திருக்கிறது என்பதேயாகும். ஆக அவருடைய முதல் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடையிலான காலப் பகுதி பரலோக ராஜ்யத்தின் பணிக்கானது என்பது நமக்கு விளங்கட்டும். விழுந்துபோன உலகில் வாழுகின்ற விழுந்துபோன மனிதர் தங்களுடைய இரட்சகரை அறிந்து ஏற்று, பாவத்தின் பிடியிலிருந்து விடுபட்டு, தாம் இனி உலகத்துக்கு அல்ல, தேவராஜ்யத்துக்கே சொந்தமானவர்கள் என்ற உறுதியைப் பெற்று கர்த்தருக்காகவே ஜீவிக்க அழைக்கப்படுகின்ற காலப்பகுதி இதுதான். அந்த அழைப்பைப் பெற்று வாழுகின்ற நம்மிடம் கர்த்தர் ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறார் என்பதை கொண்டாட்டங்கள் மறைத்துப் போடுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

‘உம்முடைய ராஜ்யம் வருவதாக’ என்று ஜெபிப்பதிலிருந்து, மக்களை அந்த ராஜ்யத்தின் புத்திரராக அழைப்பது வரைக்கும் இந்தப் பொறுப்பைக் கர்த்தர், அன்று தமது சீஷரிடமும், இன்று தம்முடைய பிள்ளைகளாகிய நம்மிடமும்தான் கொடுத்திருக்கிறார். மாறாக, தேவ தூதரிடம் அல்ல. இயேசு பிறந்த செய்தியை ஆட்டு மேய்ப்பருக்கு வெளிப்படையாக அறிவிக்கத் தெரிந்த தேவதூதருக்கு, ‘இயேசு உங்களுக்காகவே மரித்தார், உயிர்த்தார்’ என்று சொல்ல முடியாதது ஏன்? ஒன்றை அனுபவிக்கிறவனாலேதான் அதன் தார்ப்பரியத்தை ருசியை அறிய முடியும், பிறருக்கும் அறிவிக்கமுடியும். பாவத்திலிருந்து மீட்பைப் பெற்ற ஒருவனால்தான், அழிவுக்குள்ளாகும் மற்ற ஆத்துமாக்களைக் குறித்த பாரம் வரும். ஆகவே இந்தப் பணியை இரட்சிப்பைப் பெற்ற நம்மால் மாத்திரமே செய்ய முடியும். அதிலும் பெயருக்குக் கிறிஸ்தவனால் இது முடியாது. இந்த மாபெரும் இரட்சிப்பின் செய்தியை எங்கும் எடுத்துச் செல்லும் பொறுப்பை கர்த்தர் நம்மை நம்பி நம்மிடம் கொடுத்துள்ளார். நாமே இந்தப் பணியின் வேலையாட்கள்.

உலகத்தின் முடிவின் அடையாளத்தைக் குறித்து இயேசு பல காரியங்களைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட்டு, ‘ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும். அப்போது முடிவு வரும்’ என்றார் (மத்.24:14). இதையே தான் இயேசு பரத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது, தம்முடைய சீஷரிடம், ‘நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி’ (மத். 28:19) என்று கட்டளையாகக் கொடுத்தார். இதுவே மகா கட்டளை என்று இன்று சொல்லிக்கொள்ளும் நாம், தனியாகவோ குடும்பமாகவோ சபையாகவோ இதற்குக் கீழ்ப்படிந்து நடக்கிறோமா?

இயேசு பிறந்தார் என்பது மெய்யென்றால், அவருடைய ராஜ்யத்தின் சுவிசேஷம் எங்கும் சொல்லப்படவேண்டும் என்பது சத்தியம். அதுதான் கிறிஸ்துமஸ், அதுதான் இயேசு பிறப்பின் தார்ப்பரியம். நாம் தூர இடங்களுக்குப் போக முடியாவிட்டாலும், அன்றாடம் சந்திப்பவர்கள், நம்மைச் சுற்றிலும் வாழுகிறவர்கள், வீதியில் வாழும் மனிதர் என்று ஏராளமானவர்கள் நம்மைச் சூழ்ந்திருக்கிறார்களே. இவர்களுக்கு இயேசு பிறந்த செய்தியை நாம் எடுத்துச் செல்லத் தயங்குவது ஏன்? அல்லது நாமே நமக்குச் சொல்லிச் சொல்லி, ஆண்டவர் நம்மிடம் தந்த பொறுப்பை உதாசீனம் செய்கிறோமா? ஒரு சிலர் மெய்யாகவே மக்களை நாடிச் சென்று ராஜ்யத்தின் பணியைச் செய்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ‘மீட்கப்பட்டேன்’ என்று சொல்லிக்கொள்கிற ஒவ்வொருவனுக்கும் இந்தப் பொறுப்பு உண்டு. இந்தப் பொறுப்பை செவ்வனே முடித்து ஆண்டவரைச் சந்திக்கும்போது, அவர் நிச்சயமாக, ‘உண்மையுள்ள ஊழியக்காரனே, உன் எஜமானின் சந்தோஷத்தில் பிரவேசி’ என்று நம்மை அன்போடு வரவேற்பார். அந்த நாள், அந்த இன்ப நாளை மனதில் கொண்டு, கிறிஸ்து பிறந்ததால் கிறிஸ்தவர்கள் நமக்களிக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்ற எழுந்து போவோமா!

வாசகர்கள் அனைவருக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!