சத்திய வசனம் பங்காளர் மடல்
(நவம்பர் – டிசம்பர் 2025)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,
தம்மைத்தாமே வெறுத்து அடிமையின் ரூபமெடுத்து மனுஷசாயலாக இப்பூலகில் வந்து உதித்த இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
இம்மாத சத்தியவசன சஞ்சிகையை சத்தியவசன பங்காளர்களுக்கும், வாசகர்களுக்கும் அனுப்பிவைப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இவ்வருடம் முழுவதும் கர்த்தர் நம்மை செம்மையான வழியில் நடத்திவந்தார். பங்காளர்களும் ஆதரவாளர்களும் வருடம் முழுவதும் மனஉற்சாகமாய் அன்பின் காணிக்கைகளை அனுப்பி ஜெபத்தோடு தாங்கி வந்தீர்கள். அனைவருக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
சத்தியவசன வெளியீடுகள் மூலமாகவும், தொலைக்காட்சி ஊழியங்கள், வாட்ஸ் அப், இணையதளம் மற்றும் YouTube வாயிலாகவும் தொடர்ந்து நற்செய்தியை அறிவித்துவர தேவன் கிருபை செய்து வருகிறார். இவ்வூழியங்கள் வாயிலாக ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்றுவரும் மக்களுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். தாங்கள் பெற்ற நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் எங்களுக்கு எழுதித் தெரிவியுங்கள். தங்கள் உறவினர் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். வரப்போகும் 2026ஆம் ஆண்டிலும் தங்கள் ஆதரவைத் தந்து இவ்வூழியங்களுக்காக ஜெபிக்கவும் அன்பாய் அழைக்கிறோம். பங்காளர்கள் அனைவருக்கும் 2026ஆம் வருட காலண்டரை அனுப்பியுள்ளோம்.
இவ்விதழில் Dr.வாரன் வியர்ஸ்பி அவர்கள் எழுதிய மாட்டுத்தொழுவத்தினால் அளவிடப் படுவோமாக என்ற தலைப்பிலான செய்தியும், இரட்சிப்பைப் பெற்ற நாமே நற்செய்தியை அறிவிக்கவேண்டிய பொறுப்புடையவர்களாயிருக்கிறோம் என்ற சத்தியத்தை கிறிஸ்து பிறப்பும் கிறிஸ்தவனின் பொறுப்பும் என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்களும் எழுதியுள்ளார்கள். மேலும் Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் எழுதியுள்ள காபிரியேல் என்ற தலைப்பிலான செய்தியும், கிறிஸ்துமஸ் நமக்குத் தரும் வாய்ப்புக்கள் என்ற தலைப்பில் சகோ.பிரேம் குமார் அவர்கள் எழுதியுள்ள செய்தியும், வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய தொடர் வேதபாடமும் இடம் பெற்றுள்ளது. Dr.தியோடர் எச்.எப் அவர்கள் வழங்கிய மூன்றாம் தேவாலயம் என்ற செய்தியின் தொடர் வேதபாடம் இந்த இதழுடன் முடிவடைகிறது. மேலும் வருட இறுதியில் நிதானித்து பார்க்க வேண்டிய மூன்று காரியங்கள் என்ற தலைப்பில் சகோ.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் எழுதியுள்ள செய்தியும் இடம் பெற்றுள்ளது. இச்செய்திகள் யாவும் தங்களது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அதிக பிரயோஜனமாயிருக்க ஜெபிக்கிறோம்.
சத்தியவசன ஊழியத்தின் சார்பாக விசுவாசபங்காளர்கள், நேயர்கள், வாசகர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
A.ஜான் துரை
யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, … என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது (மத்.2:6).