• Dr. ஜான் நியூபெல்ட் •
(ஜனவரி – பிப்ரவரி 2026)
என்னுடைய பெற்றோர் ஜெர்மன் மொழி பேசும் சிறு கிராமங்களில் வளர்ந்தனர். அவை சோவியத் சோசலிச குடியரசுளின் ஒன்றிய (USSR) பகுதியில் இருந்தன. தற்பொழுது அவை உக்ரைன் நாட்டிற்குள் உள்ளன.
அவர்கள் வாழ்ந்த காலங்கள் பயங்கர துன்பமாக இருந்தது. ஜோசப் ஸ்டாலின் தனது இரும்புக்கரம் கொண்டு சோவியத் யூனியனை ஆட்சி செய்தார். சோவியத் மார்க்சியத்தின் கீழ் அவர் மக்களை இரு பிரிவுகளாகப் பிரித்தார். உற்பத்திச் சாதனங்களை வைத்திருந்த நிலச் சுவான்தார்களை மக்கள் ‘பூர்ஷ்வா’ அல்லது முதலாளி வர்க்கம் என்று அழைத்தனர். இவர்கள் அரசின் எதிரிகள். இரண்டாவது குழுவினர் ‘பாட்டாளி வர்க்கம்’ ஆவார். இவர்கள் தங்களது தொழில்களை முதலாளிகளுக்கு விற்றனர். முதலாளித்துவத்தின் ஒடுக்குமுறையைத் தூக்கியெறிய பாட்டாளி வர்க்கம் தூண்டப்பட்டது.
ஆனால் இந்த இரண்டு பிரிவுகளிலும் சேராத ஒரு குழு இருந்தது. இவர்கள் தங்களுக்கென்று சொந்த நிலத்தை வைத்திருந்த விவசாயிகளாவர். இவர்களில் சிலர் செல்வந்தர்களாகவும் இருந்தனர். இந்த பணக்கார நிலக்கிழார்களை ‘குலாக்குகள்’ (kulaks) என்று மக்கள் அழைத்தனர். சில குலாக்குகள் ஏழை விவசாயிகளை கூலிக்கு அமர்த்தினர்; இவர்கள் அரசின் எதிரிகளாகவும் கருதப்பட்டனர். எங்கள் குடும்பத்தைப் போன்ற உக்ரைனில் இருந்த விவசாயிகளையும் குலாக்குகள் என்று ஸ்டாலின் முடிவு செய்தார்.
சொந்த பண்ணைகளை வைத்திருந்தாலும் குலாக்குகள் கம்யூனிச கூட்டுப் பண்ணை மயமாக்குதலை எதிர்த்தனர். 1928 முதல் 1940க்கு இடையில் அனைத்து விவசாய பண்ணைகளும் அரசுக்கு சொந்தமாக கூட்டுப் பண்ணைகளாக மாற்றப்பட்டன. இதை நிறைவேற்ற அநேக ஆயிரமான குலாக்குகள் அரசாங்கத்தால் கொல்லப்பட்டனர். மேலும் இந்த சமுதாயத்தை பட்டினிபோட்டு மில்லியன் கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு ஸ்டாலின் திட்டமிட்டார். வளமை நிறைந்த மண்ணில் பயிர்கள் அதிக விளைச்சலைத் தரும். இந்த பண்ணைகளில் விளைந்தவைகள் அரசால் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களுக்கு உணவு மறுக்கப்பட்டது. தன்னுடைய குடும்பத்தினரின் பசிக்கு வைத்திருந்த தானியங்களையும் அவர்கள் அகற்றினர். அக்குலாக்குகளை மாகாணத்தின் எதிரிகளாகக் கருதினர். அமோக விளைச்சலைக் கண்ட வயல்களின் நடுவே அவர்கள் உணவின்றி பட்டினியால் மரிக்க நேரிட்டது.
என்னுடைய தாத்தாவும் எதிர்புரட்சியாளர் என்று கைது செய்யப்பட்டார். கம்யூனிச காவலர்கள் அவருடைய வீட்டுக்குள் நுழைந்து என் தகப்பனாரை அழைத்துச் சென்றனர். என்னுடைய தந்தையும் அவருடைய உடன் பிறப்புகளும் அதிகமாக அழுதனர். என்னுடைய பாட்டி மீண்டும் அவரது கணவரைக் காண முடியாமல் போனது. அவர் அநேக அடிகள் அடிக்கப்பட்டு, பயங்கரமான குளிரில் விடப்பட்டு மரித்தார் என எங்களது குடும்பத்தினர் கூறுகின்றனர். அது மட்டுமல்ல, என் தகப்பனாருடைய ஒரு சகோதரர் ஊட்டச்சத்து குறைவினால் மரித்தார். பின்வாங்கிச் சென்ற ஜெர்மனியின் படையைப் பின்பற்றி என் பெற்றோர்கள் சோவியத் யூனியனிலிருந்து தப்பிச்சென்றனர். 1954ம் ஆண்டில் கனடாவுக்குச்சென்று அங்கு ஃப்ரேசர் பள்ளத்தாக்கில் குடியேறினர். நான் ஒரு கனடியனாக வளர்ந்தேன். அங்கு என் அம்மா மற்றும் அப்பாவிடமிருந்து அவர்களுடைய குழந்தைப் பருவக்கதைகள் பலவற்றைக் கேட்டேன். அந்த நிகழ்வுகள் பயத்தாலும் திகில்களாலும் நிறைந்திருந்தன. கம்யூனிச முகவர்கள் கிராமங்களுக்குள் நுழையும்போதெல்லாம் எல்லோரும் பயந்தனர். மற்றவர்களைக் காட்டிக் கொடுக்க கிராம உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். அடிக்கடி கைதுகள் நடந்தன. யாரை நம்புவது என்று ஒருவருக்கும் தெரியவில்லை.
கடவுளின் தெய்வீக, அன்பான, நுணுக்கமான இறையாண்மையின் காரியங்களை நான் கம்யூனிச இளஞ்சிவப்பு நிற கண்ணாடிகள் மூலம் அணுகவில்லை என்பதற்காக இதை நான் தெரிவிக்கிறேன். என்னுடைய கண்ணோட்டம் என் மூதாதையர்களின் இரத்தத்தால் நிறமிடப்பட்டுள்ளன. என் தாத்தா சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். கடவுள் இல்லை என்று சொல்ல மறுத்ததற்காக என் தந்தை பள்ளியில் அடிக்கப்பட்டார். என் பெற்றோர் தங்களுடைய ஆரம்பகால அதிர்ச்சிகளால் அவதிப்பட்டனர். இன்று இப்படிப்பட்டவர்களை பிந்தைய மன அழுத்தக்கோளாறு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் Post-Traumatic Stress Disorder (PTSD) என்று அழைக்கிறோம்.
சிறுவயதிலேயே கடவுள் மறுப்பு செய்யாததற்காக என் தந்தை வாங்கிய அடிகளை நான் அடிக்கடி நினைப்பதுண்டு. அவை கொடிய செயல்கள். எட்டுக் குழந்தைகளுக்கு உணவளிக்க வழியின்றி இருந்த என் விதவை பாட்டியின் ஜெபிக்கும் கரங்களை நினைப்பேன். வீட்டிலுள்ள உணவு தீர்ந்ததும், அவர் தனது குழந்தைகளை வட்டமாக கூட்டிச்சேர்ப்பார். அவர்கள் ஜெபம் செய்வார்கள். தேவன் அவருக்குக் கருணை காட்டினார். இதைத் தனது வாழ்க்கையின் இறுதிவரை சாட்சியாக அமைத்திருந்தார். இக்கொடுமையான ஆண்டுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வேளைகளில் அந்நியர்கள் அவருடைய வீட்டு வாசலில் உணவை விட்டுச் சென்றனர். அவருடைய எட்டு குழந்தைகளில் ஏழு பேர் முதுமை வரைக்கும் வாழ்ந்தனர்.
தனக்கும் தனது கணவருக்கும் நிகழ்ந்த எல்லாவற்றிலும் தனது மரிக்கும் நாள் வரைக்கும் எனது பாட்டி தேவனுடைய இரக்கமுள்ள செயல்களுக்காக நம்பிக்கையுடையவராய் இருந்தார். அவர் எல்லாவற்றிலும் நன்மையையே கண்டார். நான் தேவனுடைய பாதுகாப்பைப் பற்றி தற்பொழுது நான் எழுதும் பொழுது அவர் என்னுடன் இருப்பாரெனில் அதை நிச்சயமாக ஆமோதிப்பார். ஒரு முறை நான் கனடாவில் அவருடன் இருந்தபொழுது எதிர்பாராதவிதமாக தன்னுடைய கணவனை கைது செய்த மனிதனைக் கண்டார். அவர் யாரென்று தனக்குத் தெரியும் என்றும், அவர் செய்த தீங்கை நினைவில் வைத்திருப்பதாயும். மேலும், இயேசுவின் நாமத்தில் அவரை மன்னித்துவிட்டதாயும், அவரும் தேவனைத் தேடவேண்டும் என்று விரும்புவதாகவும் அவரிடம் கூறினாள். மிகப் பெரிய உபத்திரவம் மற்றும் ஆழ்ந்த துயர நாட்களிலும் என் பாட்டி தேவனுடைய கரம் நடத்திய சமாதானத்துடன் இருந்தார்.
தீமையும் தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.
இதுவரை தேவனுடைய பாதுகாக்கும் கரத்தைப் பற்றி ஆராய்ந்தோம். ஆனால் மனிதர்கள் பெரிய தீமைகள் சூழ்ந்த உலகில் வாழ்கிறார்கள். ஒவ்வொரு நிமிடமும் அன்பான இயேசு அனைத்தையும் தாங்குவாரெனில் தீமைகள் நிகழ்வதேன்?
கிறிஸ்தவர்கள் பொதுவாக, பொதுவான கிருபையின் கோட்பாட்டை நம்புகிறார்கள். தேவன் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணுகிறார் (மத்.5:45) என்று இயேசு கற்பித்தார். அவர் நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். ஒவ்வொரு நாளும் தகுதியற்ற மனித குலத்தை ஆசீர்வதித்து வருகிறார். நாம் அதை சாதாரணமாக கருதுகிறோம்; நிறைவாயிருக்கும் குளிர்சாதனப்பெட்டி, வெதுவெதுப்பான நீர், மென்மையான படுக்கை, போக்குவரத்து வாகனங்கள், நடைபாதைகள், சட்டத்துக்குட்பட்ட நிலையான அரசாங்கம் போன்றவை மேற்கத்திய நாடுகள் அனுபவிக்கும் சில காரியங்களாகும். இவை நாம் குறைவான தகுதியுடையவர்கள் என்பதற்கான காரியங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள். நன்றியில்லாத மக்களுக்கு தேவன் காட்டும் நன்மைகளே இவை. தேவன் அனைவருக்கும் நல்லவராகவே இருக்கிறார்.
ஆயினும் கடந்த நூற்றாண்டின் இறுதியில் இவ்வுலகில் அநேக துயர சம்பவங்கள் நிகழ்ந்தன. சில எடுத்துக்காட்டுகளை நாம் பாாக்கலாம்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒட்டோமான் துருக்கியர்களின் கையால் சுமார் 2 மில்லியன் கிறிஸ்தவர்கள் மடிந்தனர். ஆனால் இன்றைய நாள் வரைக்கும் அப்படுகொலைக்கு அவ்வொடுக்குபவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.
ஸ்டாலின் குலாக்குகளைக் கொன்றது மாத்திரமல்ல, கடுமையான தொழிலாளர் முகாம்களிலிருந்து சுமார் 20 மில்லியன் மக்களை கொல்லவும், நாடு கடத்தப்படவும் காரணமானார்.
1966ம் ஆண்டு சீன அதிபர் மா சேதுங் துவக்கிய பத்தாண்டு கால கலாச்சாரப் புரட்சி 40 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் உயிரைப் பறித்தது.
ஜெர்மானியின் நாசி கொள்கைகளால் நிகழ்ந்த யூதர்களின் கொடூர கொலை நிகழ்வு ஆவணமாக்கப்பட்டது.
• 1975 முதல் 1978 வரை கெமர் ரூச் படையினர் சுமார் 2 மில்லியன் கம்போடிய மக்களை படுகொலை செய்தனர். இது அந் நாட்டு மக்கள் தொகையில் 25 விழுக்காடு ஆகும்.
• 1994 -ம் ஆண்டு ருவாண்டாவில் 100 நாட்களில் 800,000 டுட்சி இனமக்கள் ஹஜ்ட்டு தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டனர்.
உலகம் சிறிது சிறிதாக முன்னேறி வருகிறது என்று நம்பும் மனிதர்களை நான் சில வேளைகளில் சந்திக்கிறேன். உலக அரங்கில் முன்னரை விட போர்கள் குறைந்துள்ளன. ஆனால் மனித மனங்கள் மாறுகின்றனவா? இருக்கலாம். பிரிவுபட்ட நாடுகளுக்கிடையே தேவனுடைய கருணையால் மனுக்குலத்தின் நீடித்த கால சமாதானம் நிலவுகிறது. அது மனுக்குலத்தின் ஒழுக்கத்தின் முன்னேற்றத்தால் அல்ல; அவருடைய காருண்யமே காரணம். நாம் எப்பொழுதும்போல பாவத்தின் பயங்கரமான ஆழத்தில் விழுந்திருக்கிறோம். மனித மனத்தின் பயங்கரமான எண்ணங்களுக்கு வரையரையே கிடையாது.
தீமை இன்றும் காணப்படுகிறது. இது அடிப்படையான ஒரு வினாவை எழுப்புகிறது. தேவன் தேசங்களை ஆளுகிறார் என்பது மெய்யான கருத்தாயினும் சங்கீதம் 22:28 இராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர் என்று உறுதியான நம்பிக்கையுடன் கூறுகிறது. இயேசுவே ஆண்டவர் என்று வெளிப்படுத்துவது கிறிஸ்தவர்களின் அடிப்படை நம்பிக்கை. அவருடைய இறையாண்மையை அறிவித்து அவர் அனைத்தையும் ஆளுகிறார் என்றும் வெளிப்படுத்துகிறோம். நித்தியமும் அழி வில்லாமையும், அதரிசனமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென் என்று 1தீமோத்தேயு 1:17 உறுதிப்படுத்துகிறது.
ஆயினும் கொடுமையான காரியங்கள் இவ்வுலகில் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை நம்மால் மறுக்கமுடியாது. தேவன் அணுக்கள் முதல் சூரிய குடும்பம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள அனைத்தையும் உருவாக்கி அவை அனைத்தையும் ஆளுகிறாரெனில் இவ்வளவு தீமைகள் காணப்படுவது ஏன்? என்ற வினா எழும்புகிறது. சில இறையியலார்கள் இறைவனை மிகவும் சக்தி குறைவானவர் என்று சித்தரிக்கின்றனர். God at war என்ற புத்தகத்தில் இறைவன் சாத்தானுடன் போரிடுவதே தீமைக்கும் துன்பத்திற்கும் காரணம் என வாதிடுகிறார். அவரது கூற்றின்படி இறைவன் உடனடி வெற்றியைப் பெறாவிட்டாலும், இறுதியில் வெற்றியைப் பெறுவார் என்பதாகும். சாத்தானுடைய சக்தி மிகப்பெரியது; இறைவன் போரில் வெற்றி பெற கால அவகாசம் தேவை. இது மனிதனின் துன்பத்திலிருந்து இறைவனைக் குற்றப்படுத்துவதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இது உண்மையா? இல்லை; வேதாகமம் அவ்வாறு கூறுவதும் இல்லை. தேவனின் கட்டுப்பாட்டுக்கு மீறிய எந்த போரும் அரசாங்கமும் இல்லை. உண்மையில் தேவனுடைய வரம்பற்ற சக்தியை வேதாகமம் வெளிப்படுத்துகிறது.; தேவன் தமக்கு சித்தமான அனைத்தையும் செய்கின்றார் என்று சங்கீதம் 115:3 அறிவிக்கிறது. அப்போஸ்தலானாகிய பவுல் கடவுளின் அருளை முழுமையாக நம்பினார். சீசரின் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுவதற்காக ரோமாபுரியில் ஒரு சிறையில் இருந்தார். அவருடைய நற்செய்தி ரோமுக்கு எதிரான தேசத் துரோகத்தைத் தூண்டிவிட்டதா, பேரரசின் அமைதிக்கு களங்கம் விளைவித்ததா என்பதை உறுதிப்படுத்த அவர் விசாரணையில் இருந்தார். அதன் முடிவு அவருக்கு விடுதலையையோ மரணதண்டனையையோ தரும். ஆனால் பவுல் அதனை ஒருபோதும் துரதிஷ்டமான நிகழ்வு என்று தனது நிருபங்களில் குறிப்பிடவில்லை. மாறாக தன்னை ‘கிறிஸ்துவின் கைதி’ (எபேசியர் 3:1) என்று குறிப்பிடுகிறார். தான் சிறையிலிருப்பது கிறிஸ்துவின் சித்தம் என்று நம்பினார். எனவே தான் அங்கேயே இருக்கவேண்டும் என்று அறிந்து கொண்டார்.
சிறைக்காவலிலும் பவுல் தேவனுடைய சித்தத்துக்கு தன்னை ஒப்புவித்தார். சீசரின் சிறப்பு காவலர்களால் தினமும் சங்கிலியால் கட்டப்பட்டார். இந்த சமயத்தை அவர் நற்செய்தியை அறிவிக்க பயன்படுத்திக்கொண்டார். விரைவில் சீசரின் வீட்டாருக்கும் நற்செய்தி பரவியது. பிலிப்பு பட்டணத்து சிறையில் அவர் சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததால் சீசரின் சிறப்புப்படை வீரர்கள் நற்செய்தியைக் கேட்டிருக்கமுடிந்தது என்று பிலிப்பியர் நிருபத்தில் குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்துவின் இரட்சிப்பின் அன்பை காவலர்கள் அறிவதற்கு ஏதுவாக தேவனுடைய கரம் செயல்பட்டது. கிறிஸ்துவின் துல்லியமான வழியில் பவுலின் துன்பங்கள் இயக்கப்பட்டன. இது வெறும் கருத்துக்கணிப்பு மட்டுமல்ல; தேவனின் பாதுகாப்பும்கூட.
மேற்கத்திய பணக்கார நாடுகளில் உலகின் அரசை குறை கூறுவது ஒரு விளையாட்டு. நானும் அவ்விளையாட்டை விளையாடியிருக்கிறேன். தேவன் ஆளும் உலகில் தேர்தலில் வெற்றி பெறுவதும் தோற்பதும் அவருடைய விருப்பமே.
ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது என்று ரோமர் 13:1 கூறுகிறது. உலக ஜனநாயக நாடுகளில் வாழும் நாம் பெரும்பாலும் அரசின் அதிகாரத்துடன் போராடுகிறோம். நாம் எதிர்த்து வாக்களித்த அரசை தேவன் நியமிப்பாரா? சிறிய கொள்கை வேறுபாடுகள் கிறிஸ்தவர்களை பாதிப்பதில்லை. ஆனால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களாலேயே இத்தீமை விழைகிறது. ஒவ்வொரு ஆண்டும் 80,000க்கும் அதிகமான சிசுக்கள் பிறக்கும் முன்னரே கொல்லப்படுகின்றனர். இது ஓர் ஆழமான தீமை. ஆயினும் இது ஜனநாயக முறைப்படி தெரிந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் கொள்கை.
தற்கொலைக்கு உதவ மருத்துவத் தொழில் அதிகாரிகளை அனுமதித்து அரசு அங்கீகாரம் செய்தது. கனடிய படைகளில் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும், அவர்கள் மரணத்தை விரும்பினால் அதற்கு உதவவும் விருப்பம் தரப்பட்டது. ஒரு முறை மருத்துவ சிகிச்சையை கவனித்து வரும் ஒரு உதவியாளர், தனது தற்கொலைக்கு உதவுவதாக ஒரு மூத்த இராணுவ அதிகாரி கூறினார். அரசாங்கம் மாத்திரமல்ல, நவம்பர் 2022 இல் தி நேஷனல் போஸ்ட் என்ற பத்திரிக்கை இதைப்போல பலர் தற்கொலை செய்துகொள்ள உதவி கோருவதாகக் குறிப்பிட்டது. 61 விழுக்காடு கனடியர்கள் உடனடி மரணத்தை எதிர்கொள்ளாதவர்களுக்கு சில நிபந்தனைகளின் கீழ் தற்கொலை செய்துகொள்ள மருத்துவ ஆலோசனை தருவதை ஆதரிப்பதாக கருத்துக் கணிப்பு சார்பு அமைப்பு பிப்ரவரி 2023 இல் கண்டறிந்தது. மரணத்தை விரும்பும் ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டோம்.
தீமை எல்லா நாடுகளிலும் பரவியுள்ளது. இது ஜனநாயக நாடுகளில் தங்களது மத நம்பிக்கைக்காகவும் அநீதியான சட்டங்களை பின் பற்றாதவர்களைக் கைது செய்யும் நாடுகள் எவ்வளவு அதிகம்? இன்றும் வதை முகாம்கள் என்ற பெயரில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத குடிமக்களை அல்லது மறுசீரமைப்பு முகாம்களுக்கு அனுப்பும் சர்வாதிகார அரசுகள் உள்ளன.
இயேசுவை தேசங்களின் ஆண்டவராக நாம் அறிவிக்கும் பொழுது இவைகளையும் தீமைகளாக எடுத்துக்கொள்ள வேண்டும். தற்கால நிலையை ஆராயாது கிறிஸ்துவின் ஆளுகையை நாம் மத அறிக்கையாக எடுப்பது சரியல்ல.
தேவனுடைய அரசாட்சியின் வேதாகம கண்ணோட்டம்.
தேவனுடைய சட்டத்துக்கு எதிராக தேசங்கள் சட்டங்களை இயற்றுகின்றன. அப்படியெனில் தேவன் தேசங்களை ஆளுகிறார் என்பது எங்ஙனம் உண்மையாகும்? சங்கீதம் 22:27,28 “பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும். ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர்.”
முதல் ஏற்பாட்டில் அரசாட்சி என்பது இஸ்ரவேலைச் சுற்றியுள்ள அனைத்து தேசங்களின் அரசை குறிக்கிறது. இதனை தேசங்களின் அதிகாரம் கர்த்தருடையது என்று நாம் கூறலாம். அதாவது ஆட்சி பொறுப்பில் இருப்பவர்களின் செயல்களை கர்த்தர் கட்டுப்படுத்துகிறார் என்று நாம் கூறலாம். யாத்திராகமத்தில் கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார் என்பதை என்பதை எடுத்துக்காட்டாகக் கூறலாம். மேலும்; ‘நான் என் துறட்டை உன் மூக்கிலும், என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்த வழியே உன்னைத் திரும்பப் பண்ணுவேன்’ என்று அசீரிய அரசர் சனகெரிபுக்கு எதிராக தீர்க்கதரிசி ஏசாயா 37:29 இல் கூறினார். மேலும் அன்று பிறந்திராத ஒரு அரசனைப்பற்றி ஏசாயா 44:28 இல் குறிப்பிடுவது கோரேஸ் அரசனைப் பற்றியதாகும். இவர் பாரசீக சாம்ராஜ்யத்தை ஆண்ட புறமத அரசன். “அவனைப் பற்றி தேவன்: அவன் என் மேய்ப்பன்; எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான்” என்று சொன்னார்.
அப்படியானால் அதிகாரத்தில் அமர்ந்தவர்களுக்கு தனது ஆதிக்கத்தை செலுத்துகிறார் என்று நாம் கூறலாம். வரலாற்றின் அனைத்து காலங்களிலும் தேவன் எல்லா தேசங்களையும் ஆட்சி செய்கிறார். இது உண்மையா என நாம் சந்தேகப்படலாம். இதற்கு சத்தியவேதம் உபாகமம் 32:8 இல் பதில் கூறுகிறது. “உன்னதமானவர் ஜாதிகளுக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டு, ஆதாமின் புத்திரரை வெவ்வேறாய்ப் பிரித்த காலத்தில், இஸ்ரவேல் புத்திரருடைய தொகைக்குத்தக்கதாய், சர்வ ஜனங்களின் எல்லைகளைத் திட்டம் பண்ணினார்.”
இதை விளங்கிக்கொள்ள மோசே இஸ்ரவேலரிடமிருந்து விடைபெறும் உரையை நாம் கற்பனை செய்துகொள்ள வேண்டும். மோசே தான் விரைவில் மரிக்கப்போவதையும் தனக்குப் பின் யோசுவா அவர்களை வழிநடத்துவார் என்பதையும் நன்கு அறிந்திருந்தார். மோசே விடைபெறும் நிகழ்வில் இஸ்ரவேலரின் கோத்திரங்களின் தலைமைப்பதவியை யோசுவாவுக்கு அளித்தார். யோசுவா அவர்களை வாக்களிக்கப்பட்ட தேசத்துக்கு வழிநடத்துவார் என்றும், அவர்கள் எதிரிகளை வெல்லுவார்கள். அவர்களது நில எல்லைகளும் கர்த்தரால் உரிமையாக்கப்படும் என்றும் அவர் உரைத்தார்.
இது மாத்திரமல்ல; இஸ்ரவேலர் செல்லும் இடத்தை ஆயத்தப்படுத்துவதற்காக அண்டை நாடுகளை அறிந்துகொள்ள வேண்டுமென்று மோசே விரும்பினார். அண்டை நாடுகள் அமைவது தற்செயல் அல்ல; தேவனால் முன் குறிக்கப்பட்ட திட்டத்தின்படியே “தேவனுடைய ஜாதிகளுடைய தொகைக்குத் தக்கதாய்” என்று மோசே உரைத்தார். அதாவது இஸ்ரவேலரின் அண்டை நாடுகளை தேவன் ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். மேலும் இவர்கள் தேவனுடைய மக்களுக்கு தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகித்தனர்.
இந்த ஏற்பாட்டின் விளைவினை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். காலப்போக்கில் இஸ்ரவேலர் தங்களை அடிபணியச் செய்யும் அண்டைநாடுகளுடன் பல போர்கள் புரிந்தனர். மேலும் அவர்கள் இஸ்ரவேலரை விக்கிரக ஆராதனைக்கு வழிநடத்திச்சென்று தேவனுடைய கோபத்தை வரவழைக்க காரணமாயினர். மேலும் எல்லையோர நாடுகளின் அவதானிப்புகள் தாங்கள் தேவனுடைய தனித்துவ மக்கள் என்ற கருத்தை நிராகரிக்க வழிவகுத்தன. இஸ்ரவேலின் கடைசி நியாயாதிபதியான சாமுவேலிடம் “சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும்” என்று முறையிட்டனர். இதன் தாக்கத்தைக் கவனியுங்கள். தேவன் வைத்த அண்டை நாடுகள் அவர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.
இஸ்ரவேல் தேசத்தின் புவியியல் நிலையை தேவன் நிர்ணயித்திருந்தார். அது இஸ்ரவேலுக்கு ஒரு மகா பெரிய தேவையைத் தந்திருக்கும். மக்கள் கர்த்தரை நம்பி அவரைப் பற்றிக் கொள்வார்களா? அல்லது அவரைக் கைவிட்டு சுற்றியுள்ள தேசத்தைப் போலாகிவிடுவார்களா? தேவனுடைய உறுதிப்பாட்டின் கிருபை இஸ்ரவேல் மக்களின் மனதில் இருப்பதை சோதிப்பதாய் உள்ளது.
யோசுவாவைத் தொடர்ந்து நியாயாதிபதிகளின் காலம் ஆரம்பமானது. இது இஸ்ரவேலரின் வரலாற்றில் கர்த்தருக்கு நன்றியில்லாத காலமாகக் காணப்பட்டது. இது ஒரு முறை மட்டுமல்ல, அநேக முறை நடந்தது. நியாயாதிபதிகள் 2:20-23 ஐ கவனியுங்கள். “ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டவராகி: இந்த ஜனங்கள் தங்கள் பிதாக்களுக்கு நான் கற்பித்த என் உடன்படிக்கையை மீறி என் சொல்லைக் கேளாதேபோனபடியால், யோசுவா மரித்துப் பின்வைத்துப்போன ஜாதிகளில் ஒருவரையும், நான் இனி அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிடாதிருப்பேன். அவர்கள் பிதாக்கள் கர்த்தரின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படிக்கு, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று, அவர்களைக்கொண்டு இஸ்ரவேலைச் சோதிப்பதற்காக அப்படிச் செய்வேன் என்றார். அதற்காகக் கர்த்தர் அந்த ஜாதிகளை யோசுவாவின் கையில் ஒப்புக் கொடாமலும், அவைகளைச் சீக்கிரமாய்த் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.
இஸ்ரவேல் தேசத்தின் அண்டை நாடுகள் இஸ்ரவேலை சோதிப்பதற்காக விட்டுவைக்கப்பட்டன. அவைகளில் சில நாடுகள் வல்லமையானதும் பயமுறுத்துவதாகவும் இருந்தன. அவர்களுடைய அண்மை அவர்களது இருதயத்தின் உண்மைநிலையை விளக்குகிறது. சங்கீதம் 63 “ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது” என்று கூறுமா அல்லது அந்நாடுகளின் விக்கிரகங்களிடம் சரண டைவார்களா? மீண்டும் மீண்டும் இஸ்ரவேல் அவ்விக்கிரகங்களுக்கு பணிவதாக நாம் வாசிக்கிறோம். அவ்வண்டை நாட்டினர் இஸ்ரவேலரின் இருதயத்தில் ஒளிந்திருப்பதை வெளிப்படுத்தினர்.
தேவன் எவ்வாறு மோசமான நாடுகளையும் ஆட்சி செய்கிறார். சங்கீதம் 46: 8-10 “பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள். அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார். நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.” அவர் தேசங்களுக்குக் கட்டளையிடுகிறார். அவருடைய குறிப்பிட்ட அந்த வேலை முடிந்ததும் அவர் உயர்த்தப்பட்டு மகிமைப்படுவார் என்று இச்சங்கீதம் கூறுகிறது. அவருடைய தெளிவான கட்டளையின்படி நாடுகள் எழும்புகின்றன, விழுகின்றன. போர்களில் வென்று முக்கியத்துவம் பெறுகின்றன.
அவருடைய கட்டளையின்படியே தோல்வியைத் தழுவுகின்றன. சில நேரங்களில் போர்கள் வெடிக்கின்றன, மற்ற நேரங்களில் அமைதி நிலவுகின்றது. இதில் அவருடைய நோக்கம் நிறைவேறுகிறது. அவர் மகிமைப்படுகிறார். அவர் ஜாதிகளைப் பெருகவும் அழியவும் பண்ணுகிறார்; அவர் ஜாதிகளைப் பெருகவும் குறுகவும் பண்ணுகிறார் என்று யோபு 2:23 கூறுகிறது. அத்தேனே பட்டணத்து தத்துவஞானிகளிடம் பேசியபோது அப். பவுலும் இதைப்போன்றே கூறினர். அது அப்.17:26 இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுஷ ஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்.
அதாவது நாடுகளின் எல்லைகளும் அவைகளது தோற்றக் காலங்களும், தற்செயலாகவோ அல்லது அரசியல் காரணங்களாலோ தீர்மானிக்கப்படவில்லை. மாறாக தேவனை அதை திட்டமிட்டிருக்கிறார். பலர் தேவனை நோக்கி தங்களுடைய வழியைச் செலுத்துவார்கள் என்று பவுல் கூறுகிறார். நாடுகளின் வளர்ச்சியானது கிறிஸ்துவின் மூலம் தேவனைக் கணடுபிடிக்கும் ஆண்களையும் பெண்களையும் அதிகப்படுத்தும் விதமாய் வடிவமைத்துள்ளார். தேசங்களுக்குள்ளும் தேசங்களுக்கிடையேயும் நடப்பவை யாவும் தேவனால் ஆளப்படுகின்றன என்று வேதாகமம் கூறியுள்ளதில் ஏதேனும் சந்தேகம் இருக்க முடியுமா? எவ்வளவேனும் இல்லை.
தேவாதி தேவனே அண்ட சராசரங்களுக்கும் ராஜா. அவருக்கே துதி கனம் மகிமை உண்டாவதாக!
மொழியாக்கம்: Bro.Johndurai