ஆசிரியரிடமிருந்து…
(ஜூலை-ஆகஸ்டு 2013)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
நீதியை வெளிச்சத்தைப்போல விளங்கச் செய்கிற அன்பின் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
இவ்வருடத்தில் இம்மட்டும் நம்மை வழிநடத்தின தேவன் இனிவரும் நாட்களிலும் நம்மை நடத்துவார். புதிய கல்வி ஆண்டிற்குள் அடியெடுத்து வைத்திருக்கும் நம் பிள்ளைகளுக்காகவும் மேற்படிப்பிற்காக சேர்ந்து பயில முயற்சித்துவரும் பிள்ளைகளுக்காகவும் வேண்டுதல் செய்கிறோம். கர்த்தர் உங்கள் பணத் தேவைகள் அனைத்தையும் சந்திக்க வேண்டுதல் செய்கிறோம். “நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்” (மத்தேயு 21:22).
தொடர்ந்து வேதாகமத்தை போதிக்கும் இவ்வுன்னதப் பணியை இணைக்கரம் நீட்டித் தாங்க அன்பாய் கேட்கிறோம். சத்தியவசன வானொலி, தொலைகாட்சி, இணையதளம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றின் வாயிலாக தாங்கள் பெறும் ஆசீர்வாதம் நன்மைகளை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். இவ்வருடத்தில் பங்காளர் சந்தாவை இதுவரை புதுப்பிக்காதவர்கள் புதுப்பித்து இப்பணியைத் தாங்க அன்பாய் கேட்கிறோம்.
மிஷனரி அருட்பணியை மையமாகக் கொண்டு ஜூலை மாத தியானங்களை சகோதரர் பிரேம்குமார் அவர்கள் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் நம் ஒவ்வொருவருக்கும் ஆத்துமாக்களைக் குறித்தும் நம் தேசத்திற்காக வேண்டுதல் செய்யவும் நமக்கு பாரத்தைத் தரும் என கிறிஸ்துவுக்குள் நம்புகிறோம். நாம் அவரது வருகைக்கு ஆயத்தப்படும் படிக்கு சிறந்த தியானங்களை ஆகஸ்டு மாதத்திற்கு சகோதரி சாந்திபொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு மிகவும் பிரயோஜனமாயிருக்கும்படி வேண்டுதல் செய்கிறோம். தியானங்களை எழுதுகிற தேவனுடைய பிள்ளைகளை உங்கள் ஜெபங்களில் தாங்க அன்பாய் கேட்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்