ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

மார்ச்-ஏப்ரல் 2015

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

மரணத்தையும் பாதாளத்தையும் வென்றவராய் உயிர்த்தெழுந்த இயேசுவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கிறிஸ்துவின் பாடு, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றைச் சிந்திக்கும் இந்நாட்கள் நம்மை உய்த்து ஆராயவும், மனந்திரும்பவும், பரிசுத்தப்படுத்துவதற்கும் ஏதுவாக அமைகிறது. “நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்” (எபேசி.5:16) என்ற வாக்கின்படி ஆவிக்குரிய காரியங்களுக்கு இந்த லெந்து நாட்களை பிரயோஜனப்படுத்துவோம்.

தேவனுடைய இராஜ்யம் விரிவடையும் பணியில் எங்களோடு இணைந்து செயல்படும் பங்காளர்களுக்காக தேவனைத் துதிக்கிறோம். நீங்கள் இவ்வூழியத்திற்கென்று கொடுத்துவரும் உதாரத்துவமான காணிக்கைகளையும் ஊக்கமான ஜெபத்தையும் கர்த்தர் அங்கிகரித்து அபரிமிதமாய் ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்கிறோம். சத்தியவசன வானொலி பணி, தொலைகாட்சி ஊழியம், இலக்கியப்பணி, இணையதளம் ஊழியம் ஆகியவற்றின் வாயிலாக தொடர்ந்து இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியையும் சத்தியத்தையும் ஜனங்களுக்கு அறிவிக்க தேவன் கிருபை செய்யவும் தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படவும் வேண்டுதல் செய்யுங்கள்.

இவ்விதழில் சகோதரி சாந்திபொன்னு அவர்கள் இயேசுவின் சிலுவை மரணத்தின்போது தேவாலயத்தின் திரைச்சீலை கிழிந்த நிகழ்வை மையமாக கொண்டு அருமையான சத்தியங்களை எழுதியுள்ளார்கள். பேராசிரியர் எடிசன் அவர்கள் அரிமத்தியா யோசேப்பின் அர்ப்பணம் பற்றியும், சுவி. சுசி பிரபாகரதாஸ் அவர்கள் அப்போஸ்தலனான யோவான் சிலுவையண்டையில் பெற்ற பொறுப்பைப் பற்றியும் எழுதியுள்ளார்கள். வேத ஆராய்ச்சியாளர் வசந்தகுமார் அவர்கள் சிலுவை சுமத்தலின் சித்தாந்தம் என்ற தலைப்பில் எழுதியுள்ள செய்தியில், சிலுவை சுமந்து இயேசுவை பின்பற்றும்படியாக அழைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ளவேண்டிய அருமையான சத்தியங்களைக் குறித்து எழுதியுள்ளார்கள். Dr.தியோடர் எச்.எஃப் அவர்கள் எழுதிய “விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம்” என்ற தொடர் செய்தியும், சிறுவர் சோலை பகுதியும் இடம்பெற்றுள்ளது.

இச்செய்திகள் அனைத்தும் உங்கள் அனைவருக்கும் ஆசீர்வாதமாகவும் கிறிஸ்துவின் பாடு மரணத்தை அதிகம் சிந்திக்க வைப்பதாகவும் இருக்க வேண்டுதல் செய்கிறோம்.

பங்காளர்கள் நேயர்கள் அனைவருக்கும் சத்தியவசன ஊழியத்தின் சார்பாகவும், ஊழியர்களின் சார்பாகவும் ஈஸ்டர் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்
சத்தியவசனம்