அதோ, உன் தாய்!

சுவி.சுசி பிரபாகரதாஸ்
(மார்ச்-ஏப்ரல் 2015)

இச்செய்தியில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையின் அருகே நின்ற அன்பின் சீஷனைப் பற்றியும் அவரது தாயைப் பற்றியும் நாம் தியானிப்போம். இதை யோவான் 19:25-27 ஆகிய வேத பகுதியில் காண்கிறோம்.

ஆண்டவரின் அன்பின் சீடன் என அழைக்கப்பட்ட யோவான் ஆண்டவரை அதிகமாக நேசித்தவன், ஆண்டவராலே அதிகமாக நேசிக்கப்பட்டவன். ஆண்டவருடைய மார்பிலே சாய்ந்துகொண்டு அவ்வளவு நெருக்கமாக அவரை அன்புகூர்ந்த சீஷனாயிருந்தான். ஆண்டவரிடத்தில் ஏதாவது கேள்விகள் கேட்க வேண்டுமென்றால் மற்ற சீடர்கள் யோவானிடத்தில் அணுகுவார்கள். அப்படிப்பட்ட வாய்ப்பைப் பெற்றவன்தான் யோவான்.

இந்த யோவான் சீடன் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சிலுவையிலே தொங்கிக் கொண்டிருக்கும்பொழுது, மற்றவர்களோடு அவனும் சிலுவையண்டையில் நின்று கொண்டிருந்தான். ஆண்டவருடைய கோர காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். “அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேர முதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்” (யோவான் 19:26,27). இப்படிச் சொன்னவுடனே மரியாளை யோவான் தனது தாயாக உடனடியாக ஏற்றுக்கொண்டதை நாம் இந்த வேதபகுதியிலே வாசிக்கின்றோம். அருமையானவர்களே, இயேசுவின் அன்பின் சீடனான யோவானுக்கு இந்த சிலுவை எப்படிப்பட்ட இடமாகக் காணப்பட்டது என்பதை விளக்கிக் காட்ட விரும்புகிறேன்.

முதலாவதாக இந்த சிலுவை என்பது கீழ்ப் படிதலின் இடமாகும். யோவான் 19:27ஆவது வசனம்: “பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்”. ‘அந்நேரமுதல்’ என்கிற வார்த்தை இந்த இடத்தில் முக்கியமானதாகும். அந்த நிமிடத்திலே அந்த மரியாளை தன்னுடைய சொந்த தாயாக ஏற்றுக்கொண்டு பராமரிக்கும் பொறுப்பை ஏற்றான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சிலுவை என்பது கீழ்ப்படிதலின் இடமாகும். கீழ்ப்படிதல் இல்லாமல் தேவனிடத்திலே நாம் ஆசீர்வாதங்களைப் பெற முடியாது. ஆண்டவராகிய இயேசுவானவர் நம்மிடத்திலே கீழ்ப்படிதலை விரும்புகிறார். அவர் நம்மைக் கீழ்ப்படிய அழைக்கிறார். நாம் கீழ்ப்படிய இடங்கொடுக்கும்போது, ஒப்புக்கொடுக்கும்போது ஏராளமான ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம். நம்மைக் குறித்த தேவனுடைய திட்டம் நிறைவேற ஆரம்பிக்கின்றது.

ஆகவே, சகோதரனே சகோதரியே! ஆண்டவர் உன்னுடைய வாழ்க்கையிலே எவ்வளவு காரியங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார், உன்னை அழைத்து வெளிப்படுத்தியிருக்கிறார், தமது வசனத்தின் ஊடாக அதைப் புரிய வைத்திருக்கிறார். இவ்வளவு காரியங்களை அறிந்துகொண்ட நாம், அதற்குக் கீழ்ப்படிய வேண்டுமென அவர் விரும்புகிறார். ஆகவே, சிலுவை என்பது கீழ்ப்படிதலின் இடமாகும்.

யோவான் மூலமாக நாம் கற்றுக்கொள்ளுகிற இரண்டாவது குறிப்பு என்னவென்றால், சிலுவை என்பது உண்மையாகவே பொறுப்புகளை நமக்குத் தருகிற இடமாகும். இன்றைக்கு அநேகர் உறவுகளை ஏற்றுக்கொள்ள ஆசிக்கிறார்கள். உறவுகளைத் தேட விரும்புகிறார்கள். ஆனால், இந்த இடத்திலே உறவுகளைத் தேடுகிற, விரும்புகிற மக்களுக்கு ஆண்டவர் பொறுப்புகளைக் கொடுக்கிறார். மட்டுமல்ல, அந்தப் பொறுப்புகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார். யோவானைப் பார்த்து, “அதோ, உன் தாய்” என்று சொன்னார். யோவானுக்கு புதிய உறவு கொடுக்கப்பட்டது. அந்தப் புதிய உறவோடு புதிய பொறுப்புகளும் அவனோடு இணைந்து கொண்டது. இன்றைக்கு அநேகர் உறவுகளை விரும்புகிறார்கள். ஆனால், பொறுப்புகளை விரும்புகிறதில்லை.

அன்னை தெரசா அவர்கள் கல்கத்தா நகரிலே கைவிடப்பட்ட முதியோர், ஏழைகள், வியாதியுள்ளவர்கள், குஷ்டரோகிகளைக் கண்டபோது அவர்களை எடுத்து அரவணைத்துக்கொண்டு, “கைவிடப்பட்ட இயேசு” என்று சொல்லி அவர்களை ஏற்றுக்கொள்வாராம். அப்படி ஏற்றுக்கொள்வதோடு நின்றுவிடாதபடி, அவர்களை பராமரித்து அவர்களது மரண பரியந்தம் அவர்களுக்குச் செய்யவேண்டிய எல்லாக் காரியங்களையும், பொறுப்புகளையும் செய்வார்களாம். ஏனென்றால், உறவுகளை விரும்பும்போது அத்தோடு பொறுப்புகளும் வருகிறது.

அன்பானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகள் என்கிற உறவுகள் நமக்கு இருக்கிறது. ஊழியக்காரர்கள்-விசுவாசிகள் என்கிற உறவு இருக்கிறது. அதேசமயத்திலே, திருச்சபையார் என்கிற உறவு இருக்கிறது. ஆண்டவருக்கும் நமக்கும் இடையிலே அவருடைய பிள்ளைகள், அவர் தெய்வம் என்கிற ஒரு உறவு இருக்கிறது. இந்த உறவுகளோடு நமக்குப் பொறுப்புகள் உண்டு. என்ன பொறுப்புகள்? கர்த்தருடைய பிள்ளைகளுக்காக நாம் ஜெபிக்க வேண்டும். கர்த்தருடைய பிள்ளைகளுக்கு உதவி செய்யவேண்டும். ஆண்டவரின் சாயலாய் படைக்கப்பட்ட மனுக்குலத்திற்கு ஆண்டவரின் சார்பாக ஏதாவது ஒன்றைச் செய்யவேண்டும். ஆகவே, சிலுவை என்பது பொறுப்புகளைத் தருகிற இடமாகும்.

மூன்றாவதாக, இந்த இடத்திலே சிலுவை யோவானுக்கு ஆறுதலைத் தருகிற இடமாயிருந்தது. இயேசுவின்மேல் அதிக அன்பு வைத்தவன். சிலுவையிலே இயேசுவின் பாடுகளையும் மரணத்தின் அந்த சூழ்நிலையைக் கண்டபோது, அந்த அன்பின் ஆண்டவரை அவன் இழக்கக்கூடிய நிலையிலே இருந்தான். அந்த அன்பின் ஆண்டவர் இருந்த இடத்திற்கு இன்னொரு அன்புகூருகிற ஆள் தேவை. இந்த இடத்தில்தான் ஆண்டவராகிய இயேசுவானவர் அங்கே மரியாளை அவனுக்குக் கொடுக்கிறார். அவளை உன் தாயைப்போல் ஏற்றுக் கொண்டு அன்புகூரவேண்டுமென்கிற பொறுப்பையும், கடமையையும் கொடுக்கிறார். ஆகவே, அன்புகூரவும் ஆறுதலைக் கொடுக்கவும் ஒரு நபர் அவனுக்குக் கொடுக்கப்படுகிறது. இங்கே ஒரு பொருள் கொடுக்கப்படவில்லை, ஒரு இடம் கொடுக்கப்படவில்லை. ஒரு ஆள் தத்துவமுள்ள அன்புக்காக ஏங்குகிற நபர் கொடுக்கப்படுகிறார்.

ஆகவேதான், சிலுவை என்பது அன்புகூருவதற்கு நபர்களைப் பெற்றுக்கொள்ளுகிற இடமாகும். ஆண்டவராகிய இயேசுவின் சிலுவை அண்டையிலே வந்துபாருங்கள், அவருடைய பார்வையோடு இந்த உலகத்தை நீங்கள் கண்ணோக்கிப் பார்ப்பீர்களானால், அன்புகூருவதற்கு ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். அநேக குடும்பங்களிலே தங்களுக்குப் பிரியமானவர்களை இழக்கக் கொடுத்திருக்கிறார்கள். அநேக பெற்றோர்கள் தங்கள் பிரியமான பிள்ளைகளை இழந்திருக்கிறார்கள். அநேக வீடுகளிலே தங்களுடைய பிள்ளைகளை உறவினர்களை விபத்திலே இழந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட மக்களுக்கு அன்பு கூரவும், ஆறுதல் கூறவும் ஆண்டவர் நம்மை அழைக்கிறார். ஆகவேதான், சிலுவை என்பது உண்மையாகவே அன்புகூருகிற இடம் மாத்திரமல்ல, ஆறுதலைக் கொடுக்கிற இடம் மாத்திரமல்ல, அன்புகூருகிற நபர்களைப் பெற்றுக்கொள்ளுகிற இடமாகவும் மாறுகிறது.

ஆகவேதான், இந்த யோவான் சீடன் மூலமாக நாம் சிலுவையை மூன்றுவித கண்ணோக்கமாகப் பார்த்தோம். ஒன்று, சிலுவை கீழ்ப்படிதலின் இடம். இரண்டாவது, சிலுவை பொறுப்புகளைப் பெற்றுக் கொள்ளுகிற இடம். மூன்றாவது, சிலுவை என்பது அன்புகூருகிற நபர்களைப் பெற்றுக்கொள்ளுகிற இடம். இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை ஆண்டவர் உங்களுக்குத் தருவாராக.

சத்தியவசனம்