சிலுவை சுமத்தலின் சித்தாந்தம்!

சகோ.எம்.எஸ்.வசந்தகுமார்
(மார்ச்-ஏப்ரல் 2015)

கிறிஸ்தவ வாழ்வு சிலுவை சுமக்கும் வாழ்க்கையாகும். நாம் இயேசுகிறிஸ்துவை உண்மையாய்ப் பின்பற்றிச் செல்பவர்களாயின், சிலுவை சுமக்காதவர்களாக இருக்க முடியாது. “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” (மாற்கு 8:34) என்று இயேசுகிறிஸ்து தெளிவாகத் தெரிவித்திருப்பதிலிருந்து, சிலுவை சுமக்காமல், அவரைப் பின்பற்றிச் செல்லமுடியாது என்பதனை அறிந்துகொள்ளக் கூடியதாயுள்ளது. எனினும் சிலுவை சுமத்தலின் சித்தாந்தம் என்ன என்பதனை அநேகர் அறியாதிருப்பதனால், இயேசுவின் இந்தக் கட்டளையைக் கைக்கொள்ளாதவர்களாகவே இருக்கின்றனர்.

இயேசுகிறிஸ்து, தன்னைப் பின்பற்றி வருபவர்கள் சிலுவையை எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்று கூறியதன் அர்த்தம், அவரைப் பின்பற்றுபவர்கள் மரத்தினால் ஒரு சிலுவையைச் செய்து அதை சுமந்துகொண்டு செல்லவேண்டும் என்பதல்ல. இயேசு உருவக மொழியிலேயே (figure of speech) இக்கட்டளையைக் கொடுத்துள்ளார். எனவே, சொல்லர்த்தமாய் (literally) இதைத் தவறாக நாம் புரிந்து கொள்ளக்கூடாது. இயேசுகிறிஸ்துவினுடைய காலத்தில் ஒரு மனிதன் சிலுவையைச் சுமந்து கொண்டு வீதியிலே சென்றால், அவன் மரண தண்டனையை அனுபவிக்கப் போகின்றான் என்பதனை மக்கள் அறிந்துகொள்வார்கள்.

எனவே, இயேசுகிறிஸ்து சிலுவையை எடுத்துக்கொண்டு வரும்படி கூறியது, தற்கொலை செய்துகொள்ள வரும்படி அழைக்கிறார் எனும் அர்த்தத்தைத் தருவதைப் போன்று உள்ளது. இக்கருத்து திருமறை உபதேசத்துக்கு முரணானது. எனவே, இயேசு கிறிஸ்து உருவக மொழியையே இங்கு உபயோகித்துள்ளார் என்பதனை மறவாது, அதனடிப்படையில் இக்கட்டளையை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இயேசுகிறிஸ்துவின் இக்கட்டளையை சரியான விதத்தில் புரிந்துகொண்டு, சிலுவை சுமத்தலின் சித்தாந்தத்தைப் பிழையற விளக்கிய பெருமை அப்போஸ்தலனாகிய பவுலையே சேரும். சிலுவை சுமத்தலைப்பற்றிய இயேசுவின் உபதேசத்தை பலரும் பலவிதமாகத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கையில், இந்தத் தப்பபிப்பிராயங்களை நீக்கி, உண்மையை உலகுக்கு விளக்கும் வண்ணம் பவுல், தான் கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தில், “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்” (கலா.5:24) என எழுதியுள்ளார்.

பவுலினுடைய விளக்கத்தில் இருந்து நாம் அறிந்துகொள்வது யாதெனில், சிலுவையைச் சுமந்துகொண்டு இயேசுவைப் பின்பற்றிச் செல்வதென்பது, நமது மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைவதாகும். அதாவது, நமது மாம்சமும் மனதும் விரும்பும் பாவ ஆசைகளைப் பூர்த்தி செய்யாமலிருப்பதாகும். “மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது” (கலா.5:17). எனவே, நாம் மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறையாவிட்டால், மாம்சத்தின் கிரியைகளே (கலா. 5:19-21) நம்மில் காணப்படும். இவை நாம் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதற்கு தடையாய் அமைவதனால் (கலா.5:21), நாம் இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாயின், மாம்சத்தின் கிரியைகளை உருவாக்கும் மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்தவர்களாயிருக்க வேண்டும். அப்போது மட்டுமே இயேசு கிறிஸ்து கூறியவண்ணம், நாம் நம்முடைய சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்றிச் செல்பவர்களாயிருப்போம்.

சிலுவையை எடுத்துக்கொண்டு செல்வதை பவுல், மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைவதற்கு ஒப்பிட்டிருப்பதிலிருந்து, இயேசுவின் இக்கட்டளையானது, நம்முடைய நடைமுறை வாழ்வுக்கான பிரயோகத்தை அறிந்துகொள்ளக் கூடியதாயுள்ளது. சிலுவை மரணத்தின் அம்சங்கள், நம் மாம்சத்தையும், அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைவதைப்பற்றிய சத்தியங்களை நமக்கு அறியத்தருவதனால் அவைகளைத் தனித்தனியாக ஆராய்ந்து தியானிப்போம்.

(அ) கொடிய குற்றங்களுக்கான மரண தண்டனையாகும்

ரோம சாம்ராஜ்ஜியத்தில், கொடிய குற்றங்களை செய்தவர்களுக்கே சிலுவை மரணமானது தண்டனையாக வழங்கப்பட்டது. ஒரு மனிதனுக்கு சிலுவை மரணம் விதிக்கப்படுகிறதென்றால் அவன் கொடூரமான, மூர்க்கமான, பயங்கரமான, கொடிதான குற்றத்தைச் செய்தவனாகவே இருப்பான். இல்லையென்றால், அவனுக்கு வேறுவகையான தண்டனைகளே கொடுக்கப்படும். எனவே மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைவதைப் பற்றி பவுல் கூறும்போது, நமது மாம்சமும் அதன் ஆசை இச்சைகளும் பயங்கரமான, கொடூரமான, மூர்க்கமான குற்றங்களைச் செய்கின்றது என்பதை நமக்கு உணர்த்துகிறார். எனவே நமது மாம்சத்தின் கிரியைகளை அழிப்பதற்காக நாம் அதை சிலுவையில் அறைய வேண்டும் என்பதனையே நமக்குத் தெரிவிக்கின்றார் என்பதனை மறுப்பதற்கில்லை.

மாம்சத்தின் ஆசை இச்சைகள் நிறைவேற்றப்படுவதினால் ஏற்படும் மாம்சத்தின் கிரியைகளான “விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காம விகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே” (கலா.5:19-21) இவை யாவும் பெரிதான குற்றங்களாகும். ஏனெனில், இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரிப்பதில்லை (கலா.5:21) என வேதம் கூறுவதனால், இப்படிப்பட்டவைகளைச் செய்யத் தூண்டும் மாம்சமும் அதன் ஆசை இச்சைகளும் கொடிதான குற்றங்களைச் செய்ய ஏதுவாயுள்ளது என்பதை உணர்ந்தவர்களாக அவைகளை நாம் சிலுவையில் அறைய வேண்டும்.

(ஆ) சிலுவை தண்டனை படிப்படியாக மரணத்தை ஏற்படுத்தும்

சிலுவை மரணத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் மற்றுமொரு விஷயம், ஒரு மனிதனை நாம் சிலுவையில் அறைந்தால் அவன் உடனடியாக மரித்துவிடமாட்டான். படிப்படியாகவே அவன் மரணமடைவான். கொஞ்சம் கொஞ்சமாகவே அவனுடைய உயிர்போகும். அதேபோலத்தான், நாம் நமது மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்தாலும், அவை உடனடியாக மரிக்காத படியால் நாம் பாவமற்றவர்களாக மாறிவிடமாட்டோம். ஆனால் படிப்படியாக மாம்சத்தின் ஆசைகளும் இச்சைகளும் குறைவடைந்து செல்லும். சிலுவை மரணம் படிப்படியாக ஏற்படும் மரணம் என்பதை பவுல் அறிந்திருந்தபடியால், அவர் மாம்ச ஆசை இச்சைகளை சிலுவையில் அறைவதைப் பற்றி எழுதும்போது, “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்து கொன்று விட்டார்கள்” என எழுதாமல் “சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, அவர்கள் மாம்சத்தின் ஆசை இச்சைகளை சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். அது இன்னும் மரிக்காமல் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கின்றது, படிப்படியாக மரித்துக்கொண்டிருக்கிறது எனத் தெரிவிக்கிறார்.

மாம்சத்தின் ஆசை இச்சைகளை நாம் சிலுவையில் அறைந்திருந்தாலும், அவை இன்னும் மரிக்கவில்லையெனும் உண்மையை மறந்தவர்களாக நாம் ஜீவிக்கக்கூடாது. நாம் இந்த உலகில் இருக்கும்வரை பாவ சுபாவம் நம்மை விட்டு நீங்குவதில்லை. எனினும் நாம் அதை சிலுவையில் அறைந்துள்ளமையினால், படிப்படியாக அதனது வல்லமை குறைவடைந்து வருகின்றது. கொஞ்சம் கொஞ்சமாக அது மரணமடைந்து வருகின்றது.

(இ) சிலுவை மரணம் பயங்கரமான வேதனை தருவதாகும்

சிலுவை மரணத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் இன்னுமொரு விஷயம், அது பயங்கர வேதனையைத் தரும் மரணமாகும். இது படிப்படியாக ஏற்படும் மரணம் என்பதனால், கைகளிலும் கால்களிலும் ஆணிகள் அடிக்கப்பட்ட நிலையில் தொங்கிக்கொண்டிருப்பது சித்திரவதைக்கொப்பான வேதனையைத் தரக்கூடியது. மாம்சத்தின் ஆசை இச்சைகளைச் சிலுவையில் அறைதலிலும் இத்தகைய வேதனையையே நாம் அனுபவிக்கின்றோம். ஏனெனில் மாம்சத்தின் ஆசை இச்சைகள் பாவத்தில் இன்பத்தைக் கண்டமையினால், அதை விட்டுவிட்டு, அந்த இன்பங்களை அனுபவிக்காமலிருப்பது நம் மனதுக்கு வேதனையைத் தருவதொன்றாகும்.

பொதுவாக, சிலுவை சுமத்தல் பாடுகளையே குறிக்கும். சிலுவையில் நாம் நம் மாம்சத்தின் ஆசை இச்சைகளை அறைந்தவர்களாக ஜீவிக்கும்போது, வேதனைகளை அனுபவிக்காமலிருக்க முடியாது. மோசேயைப்போல நாமும், “அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்து கொண்டு,” (எபிரேயர் 11:25). சிலுவை மரணம் பயங்கர வேதனையைத் தரும் என்பதை உணர்ந்தவர்களாக, மாம்ச ஆசை இச்சைகளை நாம் சிலுவையில் அறைய வேண்டும்.

(ஈ) சிலுவை மரணம் பரிதாபமற்ற முறையிலான மரணமாகும்.

சிலுவை மரணமானது கொடிய குற்றங்களைச் செய்தவர்கட்கு கொடுக்கப்படும் மரண தண்டனையாய் இருப்பதனால், அது பரிதாபமற்ற முறையிலான மரணமாயுள்ளது. ஒரு மனிதனைச் சிலுவையில் அறைந்து கொல்வது உண்மையிலேயே ஈவிரக்கமற்ற ஒரு செயலாகும். எனினும் கொடிய குற்றவாளிகட்கு இத்தகைய மரணமே ஏற்றது என்பதனால் இந்த முறையானது பரிதாபமற்றதாயுள்ளது. எனவே பவுலின் அறிவுறுத்தலில் இருந்து நமது மாம்சமும் அதன் ஆசை இச்சைகளும், கீழ்த்தரமானதும் இழிவானதும் கொடியதுமான குற்றங்களைச் செய்வதனால், அதற்காக நாம் பரிதாபப்படக்கூடாது. சிலுவையில் அறைவதே ஏற்ற செயல் என்பதை எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும்.

ஒரு மனிதனை சிலுவை மரத்தில் கட்டி, அவன் கைகளிலும் கால்களிலும் ஆணிகள் அடித்து தொங்க வைப்பது உண்மையில் கொஞ்சம்கூட பரிதாபமே இல்லாத ஒரு செயல். இருந்தாலும் குற்றவாளி அத்தகைய தண்டனைக்கே தகுதியுடையவனாயிருப்பதனால், எவருமே பரிதாபப்படுவதில்லை.

அதேபோலதான் நாமும், நமது மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைவதையிட்டு பரிதாபப்படக்கூடாது. மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகையாயிருப்பதனால் (ரோமர் 8:7) பரிதாபப்படுவது பாவமாகும். நம்முடைய மாம்சத்தின் ஆசைதானே என இரக்கப்படக்கூடாது. பரிதாபமற்ற முறையிலான சிலுவை மரணத்தை நாம் அதற்கு கொடுக்கவேண்டும்.

சிலுவை மரணமானது பரிதாபமற்றதாய், சிலுவையில் அறையப்பட்டவன் படிப்படியாக மரிப்பதனால், அவனுடைய மரணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும்வரை காவலாளர்கள் அவ்விடத்தை விட்டு நகரமாட்டார்கள். அவன் மரிக்கும்வரை அங்கேயே இருப்பார்கள். இல்லையென்றால் சிலுவையில் அறையப்பட்டவன் மீது பரிதாபம் கொண்ட எவராவது வந்து, ஆணிகளைக் கழற்றி, சிலுவையில் இருந்து எடுத்துக்கொண்டு போய் பிழைக்க வைத்துவிடலாம். இதேபோல, நாம் சிலுவையில் அறைந்த நம்முடைய மாம்ச ஆசை இச்சைகளுக்காக பரிதாபப்பட்டு, அறைந்த ஆணிகளைக் கழற்றி, சிலுவையில் இருந்து எடுத்துவிட்டால், மாம்சத்தின் ஆசை இச்சைகள் பழைய நிலையை அடைந்து, அதனுடைய பாவக்கிரியைகளைச் செய்ய ஆரம்பித்துவிடும். காவலாளர்கள் சிலுவையில் அறையப்பட்டவன் மரிக்கும்வரை அவனை சிலுவையில் தொங்க வைத்திருப்பதைப் போல், நாமும் பரிதாபப்படாமல், மரிக்கும்வரை மாம்ச ஆசை இச்சைகளை சிலுவையிலேயே வைத்திருக்க வேண்டும். மாம்சமானது இழிவான காரியங்களைச் செய்வதனால் அது பரிதாபமற்ற முறை யிலேயே மரிக்க வேண்டும்.

(உ) சிலுவை மரணமானது பகிரங்கமான முறையில் ஏற்படும் மரணமாகும்.

சிலுவை மரணத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் இறுதியான விஷயம் அது பகிரங்கமாய் ஏற்படும் மரணமாகும். சிலுவையில் அறையப்படுபவன் யார் என்பதை அநேகமாக எல்லோரும் அறிந்துகொள்வார்கள். குற்றவாளிக்கு சிலுவை மரணம் தண்டனையாக வழங்கப்பட்டபின், அவன் மரத்தினால் செய்யப்பட்ட சிலுவையைத் தூக்கிக்கொண்டு, சிலுவையில் அறையப்படும் இடம்வரை செல்லவேண்டும். இவ்வாறு அவன் வீதி வழியே செல்லும்போது மக்கள் அனைவரும் அவன் யார் என்பதனை அறிந்துகொள்வார்கள். குற்றங்களுக்கு காரணமாயிருந்தவன் மரிக்கப் போவது அவர்களுக்கு தெரிந்துவிடும்.

நமது மாம்சத்தின் ஆசை இச்சைகளை நாம் சிலுவையில் அறைவதும்கூட இவ்வாறு மக்களால் அறிந்துகொள்ளப்படுகிற ஒன்றாகும். நமது பழைய வாழ்க்கையைப் பற்றி அறிந்த மக்களால், தற்போது நமது வாழ்க்கை மாற்றமடைந்ததொன்றாகவும், பாவங்கள் விடப்பட்ட ஒரு வாழ்வாகவும் இருப்பதை அறிந்துகொள்ள ஏதுவாயிருக்க வேண்டும். பாவமார்க்கத்தை விட்டு நல்வழியில் செல்கிறோம் என்பது, நமது நடவடிக்கைகள் எடுத்துக் காட்டும் சாட்சியாயிருக்க வேண்டும். இது நம் மாம்ச ஆசை இச்சைகள் சிலுவையில் அறையப்பட்டுள்ளது என்பதற்கான பகிரங்க சாட்சியாக அமையும். நமது பழைய பாவ மாம்சம் மரணத்தை நோக்கிச் செல்கின்றது என்பதனை நம்மைச் சுற்றியுள்ளோர் அறியவேண்டும்.

இயேசுகிறிஸ்துவின் கட்டளையைக் கைக்கொண்டு, சிலுவை சுமத்தலின் சித்தாந்தத்தை அறிந்தவர்களாக, அவரைப் பின்பற்றிச் செல்கிறவர்களாய் நாம் இருக்கின்றோமா? சிலுவை மரணத்தின் மேற்கண்ட அம்சங்களை மனதிற்கொண்டவர்களாக, நாம் மாம்சத்தை யும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்த கிறிஸ்தவர்களாக ஜீவிக்க வேண்டியது நமது கடமையாகும். அப்போது மட்டுமே சிலுவை சுமக்கும் கிறிஸ்தவர்களாக நாம் திகழ்வோம்.

சத்தியவசனம்