இயேசுவின் உயிர்த்தெழுதல் தரும் நம்பிக்கை

Dr.உட்ரோ குரோல்
(மார்ச்-ஏப்ரல் 2015)

இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் பண்டிகையை நினைவுகூரும் உங்களுக்கு மரணத்தை ஜெயித்த ஜீவாதிபதி இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நமக்கு நம்பிக்கையை அளிப்பதாய் அமைந்துள்ளது. இந்த நம்பிக்கையை இயேசுகிறிஸ்து உயிர்த் தெழுந்தபின் அவரை முகமுகமாய் தரிசித்த மக்களிடம் நாம் காணலாம். அவர்களில் பேதுரு, கிலெயோப்பா, தோமா போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். இந்த இதழில் நாம் மகதலேனா மரியாளைப் பற்றி காண்போம். அவள் ஈஸ்டர் நாளின் அதிகாலையில் அந்த கல்லறைக்கு மிகுந்த கலக்கத்துடனும் பயத்துடனும் வந்திருந்தாள். ஆனால் உயிர்த்தெழுந்த ஆண்டவர் அவை அனைத்தையும் மாற்றிவிட்டார்.

கலிலேயாக் கடலின் மேற்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள மக்தலா என்ற சிறிய ஊரைச் சேர்ந்தவள் இந்த மரியாள். மேலும் மகதலேனா மரியாளைப் பற்றி அநேக தவறான கருத்துக்களும் குழப்பங்களும் நிலவுகின்றன என்பதை நாம் அறிய வேண்டும். ஒரு சிலர் மகதலேனா மரியாள் ஒரு பாவி என்றும், இயேசு கிறிஸ்து அவளுடன் நட்பு பாராட்டினார் என்றும் நம்புகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. அவர்கள் வேத வசனத்தைத் தவறாகப் புரிந்துகொண்டதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். ஆதி காலத்து கத்தோலிக்க மதத்தலைவர்கள், லூக்கா நற்செய்தி 7ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாவியான ஸ்திரீயும் அடுத்த அதிகாரத்தில் காணப்படும் மரியாளும் ஒருவரே என்று தவறாக எண்ணிவிட்டனர்.

லூக்கா 7ஆம் அதிகாரத்தில் இந்த பெண்மணி இயேசுகிறிஸ்துவின் பாதங்களில் பரிமள தைலத்தை ஊற்றி, அதைத் தன் தலைமயிரினால் துடைத்தாள் என நாம் வாசிக்கிறோம். ஆனால் மாற்கு நற்செய்தி நூலின் 14ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்படும் மரியாள் இவளல்ல. இவை இரண்டும் வெவ்வேறு சம்பவங்கள். லூக்கா குறிப்பிடும் நிகழ்வு இயேசுகிறிஸ்துவின் ஆரம்ப ஊழியகாலத்தில் கலிலேயாவில் நடந்தது. ஆனால் மாற்கு நற்செய்தியாளர் குறிப்பிடுவது அவரது இறுதி காலத்தில், பாடுபட்ட வாரத்தில் எருசலேமுக்கு அருகான பெத்தானியாவில் நடந்தது.

இவ்விரண்டு விருந்துகளுமே சீமோன் என்பவரின் இல்லத்தில் நடந்தது இக்குழப்பத்துக்கு ஒரு காரணம் எனலாம். லூக்கா குறிப்பிட்டுள்ளது பரிசேயரான சீமோன் வீட்டிலும், மாற்கு குறிப்பிடுவது தொழு நோயாளர் சீமோன் வீட்டிலும் நிகழ்ந்தது. மேலும் லூக்கா நற்செய்தி நூலின் இந்த பெண்மணி இயேசுகிறிஸ்துவுக்கு பின்னால் நின்று அவரது பாதங்களைத் துடைத்தாள் என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் இப்பெண் பாவியாக இருந்ததால் அச்செயலுக்கு இயேசுகிறிஸ்துவே குற்றஞ் சாட்டப்படுகிறார். ஆனால் மாற்கு நற்செய்தி நூலில், இயேசுகிறிஸ்துவின் சிரசில் அந்த தைலத்தை ஊற்றுவதற்குப் பதில் அதனை அதிக பணத்துக்கு விற்று தரித்திரருக்கு கொடுத்திருக்கலாமே என்று மரியாளே குற்றஞ்சாட்டப்படுகிறாள். எனவே மரியாள் தவறாக அடையாளம் காணப்பட்டுள்ளாள். அவள் ஒரு பாவியான ஸ்திரீ அல்ல. இந்த மரியாள் அசுத்த ஆவியால் பீடிக்கப்பட்டிருந்த ஒரு பெண். இவளிடமிருந்து இயேசுகிறிஸ்து ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார்.

இனி, நாம் கலங்கிய உள்ளத்தோடு கல்லறைக்கு வந்த மகதலேனா மரியாளைப் பார்ப்போம். யோவான் 20ஆம் அதிகாரத்தில் மரியாள் இயேசுவின் சரீரத்துக்கு சுகந்த வர்க்கமிட வந்தாள். அது அதிகாலையில் அதிக இருட்டான வேளையாயிருந்தது. கல்லறையின் கல் புரட்டியிருந்ததை அவள் கண்டாள். ஆம், அது இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த நாள். மற்ற நற்செய்தி நூல்களிலிருந்து அவள் அங்கு தனியாக வரவில்லை என நாம் அறிகிறோம். மத்தேயு நற்செய்தியாளர் யாக்கோபு மற்றும் யோசேப்பின் தாய் மரியாளைக் குறிப்பிட்டுள்ளார். மாற்கு நற்செய்தியாளர் சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளைக் குறிப்பிட்டுள்ளார். யோவான் சுவிசேஷத்தில் இரு அதிகாரங்களுக்கு முன்னதாக கிலேயோப்பாவின் மனைவி மரியாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

இந் நான்கு நற்செய்தி நூல்களையும் நாம் இணைத்துப் பார்க்கும்பொழுது, அங்கே நான்கு பெண்கள் வந்ததாக அறிகிறோம். இவர்கள் யாரெனில், “இயேசுகிறிஸ்துவின் தாயாகிய மரியாள், கிலெயோப்பாவின் மனைவியாகிய மரியாள், மகதலேனா மரியாள், பெயர் குறிப்பிடப்படாத இயேசுவின் தாயாகிய மரியாளினுடைய சகோதரி”. மாற்கு நற்செய்தியாளர் இவருடைய பெயர் சலோமே என தந்துள்ளார். மேலும் இவர் செபெதேயுவின் குமாரர்களின் தாய் எனவும் தரப்பட்டுள்ளதால் யாக்கோபும் யோவானும் இயேசுகிறிஸ்துவுக்கு நெருங்கிய உறவினர் என நாம் அறிந்து கொள்ளலாம். இவர்கள் இயேசுகிறிஸ்துவுக்கு நெருங்கிய சீடர்கள்.

மகதலேனா மரியாள் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைக் கண்டவுடன் உடனடியாக ஓடி பேதுருவுக்கும் யோவானுக்கும் சென்று அறிவித்தாள் என நாம் 2ஆம் வசனத்தில் வாசிக்கிறோம். அவர்கள் இருவரும் வந்தனர்; கல்லறையைக் கண்டனர்; அது காலியாக இருந்தது; 10ஆம் வசனத்தில் சீடர்கள் தங்களுடைய இடத்துக்குத் திரும்பிப் போனார்கள் என்று வாசிக்கிறோம். ஆனால் மரியாளோ கல்லறைக்கு வெளியே நின்று அழுது கொண்டிருந்தாள். அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக ஊற்றிக்கொண்டிருந்தது. அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து, இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள். இக்காட்சி அவளுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்க வேண்டும். அவள் கல்லறையினுள் ஒருவரையும் எதிர்பார்த்திருக்கமாட்டாள். இயேசுவைத் தேடினாள். அவரது சரீரம் அங்கு இல்லை.

எனவே அவள் இந்த தூதர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். மேலும் அவர்கள் அவளை நோக்கி “ஸ்திரீயே, ஏன் அழுகிறாய்” என்றார்கள். அதற்கு அவள், “என் ஆண்டவரை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்” (யோவான் 20:13). இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள், ஆனாலும் அவளுடைய விழித்திரைகளை கண்ணீர் மறைத்திருந்ததால் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.

“இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்” (யோவான் 20:15). ஒரு மனிதனின் மரித்துப்போன சரீரம் அதிக எடையுள்ளதாயிருக்கும். அதனை தனி ஒருவரால் எடுத்துச் செல்லமுடியாது. இங்கே விசுவாசமுள்ள ஒரு பெண்ணைப் பார்க்கிறோம். இயேசுகிறிஸ்துவை அதிகமாக நேசித்த ஒரு பெண். ஆனால் அவரை நேரில் காண்கிறாள். அவர் கல்லறையில் இல்லை என்பதை அவளால் நம்ப முடியவில்லை. இம்மரியாளைப் போன்றே அநேக வேளைகளில் நாமும் தனியாக கலக்கம் நிறைந்தவர்களாய், பயத்துடனும் புரியாதவர்களாயும் நம்முடைய எதிர்காலத்தைப்பற்றி அறியாதவர்களாயும் நிற்கிறோம். நமக்கு அதிக தேவையான நேரத்தில் இயேசு நம் அருகே இல்லாதது போன்று பதறுகிறோம்.

அவரை நாம் காணாவிட்டாலும் அவர் நம்மைத் தனியாக விட்டுவிட மாட்டார். அவர் சரியான வேளையில் நம்முடைய வாழ்வில் இடைபட காத்து நிற்கிறார். அவர் நம்மை விட்டு விலகுவதுமில்லை; நம்மைக் கைவிடுவதுமில்லை என்று அவருடைய சத்திய வார்த்தையும் நம்மைத் தேற்றுகிறது. நாம் எதிர்பாராத வேளையில் அவர் சரியான நேரத்தில் நமக்கு உதவி செய்ய ஆயத்தமாயிருக்கிறார். அவர் நம்முடன் இருப்பதை நாம்தான் அறியாமல் கலங்கித் தவிக்கிறோம்.

மகதலேனா மரியாள் துக்கத்தால் கலங்கி நிற்கும் வேளையில் அவளுக்குப் பின்பாக ஒரு குரல் ஒலித்தது. உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் குரலை அவளால் அறிந்துகொள்ள முடியவில்லை. அவரை அவள் கண்டாள். ஆனால் அவர்தான் இயேசு என்பதை அவளால் காண முடியவில்லை. ஆனால் அவர் அவளைப் பெயர் சொல்லி அழைத்தபொழுது அவரைக் கண்டு கொண்டு ஆனந்தித்தாள்.

ஒவ்வொரு முறையும் ஒருவரை பெயர் சொல்லி தேவன் அழைத்து தமது செய்தியை அவருக்கு அளிக்கிறார்.

பழைய ஏற்பாட்டில் எரிகிற முட்செடியின் நடுவிலிருந்து தேவன் மோசேயைப் பெயர் சொல்லி அழைக்கிறார். “மோசே, மோசே உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப் போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி” என்றார் (யாத்.3:4,5).

தமஸ்குவுக்குப் போகும் வழியில் சவுலுக்கு தன்னை வெளிப்படுத்திய இயேசுகிறிஸ்து, “சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்” என்று அவருடனே சொன்னார். அதுபோலவே மரியாளிடமும் தனிப்பட்ட முறையில் அவளைப் பெயர்சொல்லி அழைத்தார். உடனே அவள் அவரை அறிந்துகொண்டாள். இவ்விடத்தில் இயேசுகிறிஸ்து தம்மை மேய்ப்பன் எனவும் தம்மைப் பின்பற்றுவோரை ஆடுகள் எனவும் அழைப்பதை நினைவு கூருவது பொருத்தமானது.

யோவான் 10ஆம் அதிகாரத்தில் இயேசு “ஆட்டுத் தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். வாசல் வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான். வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக் கொண்டு போகிறான்” (வச.1-3) என்று கூறியிருப்பதை இங்கே நாம் நினைவுக்கு கொண்டு வருவோம். இயேசுவுடன் நாம் நெருங்கிய உறவுகொள்ளும் பொழுது அவர் நம்மைப் பெயர்சொல்லி அழைக்கிறார்.

இயேசுகிறிஸ்து தன்னைப் பெயர் சொல்லி அழைத்தவுடன் அவரை அடையாளம் கண்டு கொண்டாள். அவர் உயிருடன் இருக்கிறார் என்று அறிந்துகொண்டாள். அவர் அவளுடன் பேசினார். சந்தேகத்துக்கு இடமில்லாமல் அவர்தான் இயேசு என்றும் அவர் மரித்தோரிலிருந்து உயிருடன் எழுந்தார் என்றும் அறிந்துகொண்டாள்.

“இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்” (யோவான் 20:17,18). நிகழ்ச்சியை நேரில் பார்த்த சாட்சி. அவள் சீடர்களிடம் வந்து ‘நான் அவரைக் கண்டேன். அவர் என்னுடன் பேசினதைக் கேட்டேன்; என்னைப் பெயர் சொல்லி அழைத்தார்’ என்றாள்.

ஏன் இயேசு அவள் தம்மைத் தொடவேண்டாம் என்று கூறினார்? மூலபாஷையில் ஏற்கனவே நடந்து கொண்டிருந்த செயலைக் குறிப்பிடுவதாக அக்கூற்று அமைந்துள்ளது. அவர் எங்கும் போய்விடக்கூடாது என்று அவள் அவரை விடாது பற்றிக்கொண்டாள். தான் அவரை இழந்துவிடக்கூடாது என்ற பயத்தில் அவள் அவ்வாறு செய்தாள். “நான் உனக்கு போதகராக இருந்தேன். இப்பொழுதோ நான் உயிர்த்தெழுந்த ஆண்டவர். எனவே நம்முடைய உறவு மாறிவிட்டது” என்று சொல்வதுபோல அமைந்தது. உயிர்த்தெழுந்த ஆண்டவர் அனைத்தையும் மாற்றுகிறார். இந்த தனிப் பட்ட நெருக்கமான சந்திப்பு, அவளுக்கு தனிப்பட்ட நெருக்கமான கட்டளையையும் தந்தது. “நீ போய் மற்ற சகோதரர்களுக்கு அறிவி” என்பதே அது.

மரியாள் ஒருவேளை அங்கேயே தங்கியிருக்க விரும்பியிருப்பாள். ஆனால் இயேசு கிறிஸ்துவின் நோக்கம் அதுவல்ல; நாம் அவரிடம் வந்து அவரை அறிந்துகொண்டு, அவர் ஜீவிக்கிறவர் என்றும், அவரே ஆண்டவரும் இரட்சகருமாக இருக்கிறார் என்பதை நாம் சிலருக்கேனும் அறிவிக்க வேண்டும் என்பதே இயேசுகிறிஸ்துவின் நோக்கம். நீங்கள் அவரிடம் வராமல் அவரை அறியாமல் மற்றவர்களுக்கு அவரை அறிவிக்க முடியாது.

இருட்டோடே ஆரம்பித்த இந்த அதிகாரம் ஒளியில் முடிந்தது. அழுதுகொண்டிருந்த மரியாள் மிகுந்த மகிழ்ச்சியுடன் திரும்பினாள். இயேசு மரித்துவிட்டார் என்று எண்ணிய மரியாள் அவர் உயிருடன் இருக்கிறார் என்ற உறுதியுடன் திரும்பினாள். மிகவும் மோசமான செய்தியுடன் ஆரம்பமான இவ்வதிகாரம், மிகச் சிறந்த ஒரு செய்தியுடன் முடிவடைகிறது. நாம் மரித்த ஒரு ஆண்டவரையல்ல, உயிருடன் எழுந்த இரட்சகரை தொழுதுகொள்ளும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். அல்லேலூயா!

இன்றைய தேவை நிறைந்த உலகில் கிறிஸ்து ஒருவரே அவை அனைத்தையும் நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார். இச்செய்தியை நாம் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய விசுவாசப் பந்தய சாலையில் அநேக பள்ளங்களும் உண்டு. நமக்கு விசுவாசம் தேவைப்படும் வேளையில் அவை சந்தேகங்களை எழுப்பும். ஆனால் சந்தேகங்களே விசுவாசத்தை உறுதிப்படுத்தும் காரணியாகும். உங்களை ஆண்டவர் பெயர் சொல்லி அழைத்த அனுபவம் உண்டா? ஆண்டவர்மேல் உங்கள் விசுவாசத்தை வளர்த்த நிகழ்வுகள் உண்டா? இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள தேவன் நம்மைத் தெரிந்தெடுத்ததற்காக அவருக்கு நன்றி சொல்லுங்கள். அவரது அன்பை கல்வாரியில் நமக்காக மரித்து உயிர்த்தெழுந்த ஆண்டவரை அனைவருக்கும் அறிவிப்போமா? இதுவே நமது தலையாய கடமையாகும்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்