விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம்

Dr.தியோடர் எச்.எஃப்
(மார்ச்-ஏப்ரல் 2015)

அத்தியாயம்-1

மத்தேயு 16:18இல் கூறப்பட்டிருக்கும் வார்த்தைகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும். “மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.” மேலும் யோவான் 16:33இல் இப்படிப் பார்க்கிறோம், “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்”.

1யோவான் 4:4இல் “…உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.”

ஒரு கிறிஸ்தவன் எப்போதும் சாத்தானையும் அவனுடைய சத்துவங்களையும் நினைத்து பயந்துகொண்டிருக்கத் தேவையில்லை. ரோமர் 8:31 நமக்குத் தைரியம் ஊட்டுவதைக் கவனியுங்கள்: “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?”. பவுல் விசுவாசிகளுக்கு எழுதுகிறார். இந்த வசனத்தில் ‘இருந்தால்’ என்னும் சொல்லுக்கு ‘இருக்கிறபடியால்’ என்னும் பொருள் உண்டு. அதாவது, இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட நாம் அனைவரும் தேவன் நம் பட்சத்தில் இருக்கிறார் என்று பவுல் முன்பகுதிகளில் எழுதியிருப்பதை அறிவோம்.

எனவே தேவன் நம் பட்சத்தில் இருக்கிற படியால், ஒருவரும் நம்மை எதிர்த்து நிற்க முடியாது என்று அறிகிறோம். இதை விளக்கும் வண்ணம் பவுல் மேலும் கூறுவதைக் கவனியுங்கள். ரோமர் 8:32 “தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” இங்குதான் நாம் நிற்கிறோம். இயேசு கிறிஸ்துவுக்குள் நமக்கு உள்ள நம்பிக்கை இதுவே! தொடர்ந்து பவுல் கூறுவதைக் கவனியுங்கள்.

வசனம் 33 “தேவன் தெரிந்துகொண்டவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்”.

வசனம் 34 “ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலது பாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.”

இந்நிலையில் சாத்தான் நம்மீது எவ்விதக் குற்றச்சாட்டுகளையும் கூறமுடியாது. ஏனென்றால் நாம் இயேசுகிறிஸ்துவை நம்முடைய இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கிறபடியால் நாம் தேவனால் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். சாத்தான் நம்மீது குறை கூறினாலும் பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் நம்முடைய இரட்சகர் நமக்காகப் பிதாவிடம் பரிந்துபேசுகிறவராக இருக்கிறார். நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நம்முடைய அனைத்துப் பாவங்களுக்கும் உரிய பிராயச்சித்தத்தைச் செலுத்தியிருக்கிறார். எனவே சாத்தானோ, வேறு எந்தச் சக்தியோ நம்மீது குற்றஞ்சுமத்த முடியாது. இந்தச் சத்தியங்களையெல்லாம் மனதிற்கொண்டு, இயேசு கிறிஸ்துவுக்குள் நம்முடைய ஸ்தானம் எது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு நாம் இப்போது எபேசியர் 6ஆம் அதிகாரம் 10 முதல் 20 வசனங்களைப் பார்ப்போம்.

இந்தப் பகுதியில் ஒவ்வொரு விசுவாசியும் பங்கு கொள்ள வேண்டிய ஆவிக்குரிய போராட்டம் உள்ளது. நாம் போராட்டத்தில் வெற்றியடையத் தேவையான சக்தியும், பலமும் எங்கிருந்து வருகின்றன என்றும், அதற்கு உதவும் உபகரணங்கள் எவை? எங்கிருந்து கிடைக்கின்றன என்பதையும் இந்த வேதப்பகுதி வெளிப்படுத்துகிறது. இந்த யுத்தம் செய்யப்படவேண்டிய கொள்கைகளையும் வழிமுறைகளையும் நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இயேசு கிறிஸ்து நமக்கு சம்பாதித்து வைத்திருக்கிற வெற்றியை நாமும் தனிப்பட்ட முறையில் பெற்று அனுபவிக்கச் சில நிபந்தனைகள் உள்ளன.

வெற்றி ஏற்கெனவே பெற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். இயேசு சாத்தானைத் தோற்கடித்து, நமக்காக வெற்றியைத் தேடித் தந்துள்ளார். எனவே நமது பொறுப்பும், கடமையும் ஜெயங் கொண்டவர்கள் என்ற நிலையில் வாழ்ந்து காட்டுவதாகும். நாம் நமது சத்துருவின் கையில் தோல்வியை அனுபவிக்கக்கூடாது. அவன் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்டவன். சாத்தானுடைய எந்தவிதமான தாக்குதலையும் நாம் தைரியமாக எதிர்கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்துவுக்குள் நமது நிலையும், ஸ்தானமும் என்னவென்பதை நாம் அறிந்திருக்கும்வரை நம்மை மேற்கொள்ளச் சாத்தானுக்கு எந்த வாய்ப்பும் இல்லை.

மற்ற எல்லாவற்றுக்கும் அடிப்படை ஒரு விசுவாசிக்கு வெற்றி பற்றிய வாக்குத்தத்தமே. இதை நாம் ரோமர் 8:35-39 வசனங்களில் பார்க்கிறோம். இந்தப் பகுதியில்தான் பவுல் நம்மிடம் “கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?” (வச.36) என்னும் கேள்வியைக் கேட்கிறார். பல காரியங்களைக் குறிப்பிட்டபின் இந்தக் கேள்விக்குப் பவுலே ஒரு விடையையும் கூறுகிறார்: “இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.” (வசனம் 37)

நாம் முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் ஆவது எப்படி? எபேசியர் 6:10 முதல் 20 வரை உள்ள வசனங்களை நாம் கருத்துடன் வாசிக்கும்போது இதற்கான விடை தெரியவரும். உலகிலுள்ள எந்த சக்தியும் “…நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்” (வசனம் 39) என்னும் வசனம் எவ்வளவு அற்புதமானது?

மேலும் பவுல் இயேசுகிறிஸ்துவில் நமக்கு இருக்கும் வெற்றியைக் குறித்து கொரிந்தியருக்கு நினைவுபடுத்துகிறார்: 1 கொரி.15:57 “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.” மேலும் 2கொரி.2:14ஆம் வசனத்திலும் இதை உறுதிப்படுத்துகிறார்: “கிறிஸ்து வுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப் பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்”.

எபேசியர் 6:10 முதல் 20 வரை உள்ள வசனங்கள் இத்தகைய போராட்ட வெற்றியை நாம் பெற எல்லாவகையிலும் போதுமானதாக தேவன் வைத்திருக்கிற சர்வாயுதவர்க்கம் என்னும் உபகரணங்களை நமக்கு அறிமுகம் செய்கின்றன.

அத்தியாயம் 2
போராட்டத்தைச் சந்திக்க விசுவாசியின் பெலன்.

இயேசுகிறிஸ்துவுக்குள் நாம் யார்? நம் நிலை என்ன? என்பதைக் கூறிவிட்டு, நாம் அதை நடைமுறையில் செயல்படுத்திக் காட்ட வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டு பவுல் இவ்வாறு கூறுகிறார்: “கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்” (எபே. 6:10). இந்த வசனத்தின் மூலம் பரலோகத்தின் பலமும், சத்துவமும், வல்லமையும் நாம் பெற்றுப் பயன்படுத்தும்படி நம்மிடம் இருக்கிறது என்று அறிகிறோம். தேவனிடத்தில் நம் நிலை – அவருடைய பிள்ளைகள் என்பதைப் பவுல் முதல் மூன்று அதிகாரங்களிலும் தெளிவாக எடுத்துக் கூறிவிட்டு, அதனால்தான் இந்த சத்துவமும், வல்லமையும், பலமும் நாம் பெற்று அனுபவிக்கக் கூடியதாய் இருக்கிறது என்கிறார். கிறிஸ்துவுக்குள் நமக்கு இருக்கும் நிலை காரணமாகத்தான் நாம் இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க முடியும். இந்தப் பதவி விசுவாசத்தின்மூலம் நமக்குக் கிடைப்பது. தேவன் தாம் செய்வதாகச் சொல்வதைச் செய்து நிறைவேற்றுவார் என்னும் நம்பிக்கையுடன் அவரிடம் நாம் வைக்கும் விசுவாசமாகும்.

இதே கொள்கை வேதாகமம் முழுவதும் காணப்படுகிறது. இஸ்ரவேலர் கானான் தேசத்தில் பிரவேசித்தபோது, தேவன் யோசுவாவிடம் கூறினார்: “நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்” (யோசுவா 1:5,6). மோசேயின் தேவனாயிருந்தவர் யோசுவாவின் தேவனாகவும் இருந்தார். அவரே நம்முடைய தேவனாகவும் இருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். மேலும் தேவன் யோசுவாவைத் திடப்படுத்தும் வண்ணம் இப்படிக் கூறுகிறார்: “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (யோசுவா 1:9).

எபேசியர் 6:10இல் “கடைசியாக” என்னும் சொல், விசுவாசிகளின் வாழ்க்கையைக் குறித்து அவர் சொல்லும் வார்த்தையைக் குறிக்கும். பவுல் கூறுகிறார், “ஆண்டவரில் பலமுள்ளவர்களாயிருங்கள்” என்று. இதில் அவர் நாம் ஆண்டவரிடமிருந்து பலத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறவில்லை. நாம் ஆண்டவருக்குள் பலமுள்ளவர்களாகக் காணப்பட வேண்டும். ஆனால் நாம் ஆண்டவருக்குள் பலமுள்ளவர்களாயிருக்க வேண்டும். இயேசுகிறிஸ்துவுக்குள் நமது நிலை என்னவென்பதை அறிந்துணர்ந்து, அதன்படி வாழ வேண்டும். நாம் இதைச் செய்யும்போது ஆண்டவர் நம்மை எந்தப் போராட்டத்தையும் சந்திக்கும்படி வல்லமையினாலும், பலத்தினாலும் இடைக்கட்டிக் கொண்டேயிருப்பார். நாம் ஆண்டவருக்கருகில் நிற்க இயலாது. ஆனாலும் நாம் ஆண்டவருக்குள் பெலனடைந்து கொண்டு இருக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

நாம் அவரை இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது, நாம் அவருக்குள் இருக்கிறோம். அவரே நமது பெலனாய் இருக்கிறார். எபேசியர் நிருபத்தில் “அவருக்குள்” (IN) என்னும் சொல் முக்கியமானது. கிறிஸ்துவின் சரீரமாம் திருச் சபையில் ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் பலத்தைக் கிறிஸ்துவுக்குள் பெற்றிருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் வெளிப்படுத்துகிறது. அதனால்தான் பவுல் பிலிப்பியர் நிருபத்தில் இப்படிக் கூறுகிறார், “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலி.4:13) என்னால் எல்லாவற்றையும் செய்யமுடியும் என்கிறார்.

கிறிஸ்துவே கர்த்தர்

எபேசியர் 6:10ஆம் வசனத்தில் “கர்த்தர்” என்னும் பெயர்ச் சொல்லைக் கவனியுங்கள். எபேசியர் நிருபம் முழுவதிலும் எங்கும் பயன்படுத்தப்பட்டிருக்கும் சாதாரண பெயர், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் திரியேக தேவனின் இரண்டாவது நபராகிய ‘கிறிஸ்து'(குமாரன்)வையே குறிக்கிறது. அவருடைய முழுப்பெயர் ‘கர்த்தராகிய இயேசுகிறிஸ்து’ என்பதாகும். இந்தப் பெயரின் மூன்று பகுதி களுக்கும் தனித்தனியே ஒருபொருளும், கருத்தும் உண்டு. ‘இயேசு’ என்பது அவருக்குப் பூமியில் கொடுக்கப்பட்ட பெயர். அவர் பிறந்தபோதே இந்தப் பெயர் அவருக்குக் கொடுக்கப்பட்டது. இது அவர் செய்த மீட்புப்பணியைக் குறித்தது. கர்த்தருடைய தூதன் யோசேப்புக்குத் தோன்றி, “அவள் (மரியாள்) ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்” (மத்.1:21).

‘கிறிஸ்து’ என்பது அவருக்குப் பரலோகத்தில் உள்ள பெயர். “மேசியாவைக் கண்டோம்” என்று அந்திரேயா தன் சகோதரனிடம் கூறினான். “மேசியா” என்பதற்குக் ‘கிறிஸ்து’ என்று அர்த்தமாம் (யோவா.1:41). இது அவருக்குப் பரலோகத்தில் உள்ள வேலைகளையும், அவர் மேசியாவாக இந்த உலகத்துக்கு வருவதையும் குறிக்கும். இரட்சிக்கப்பட்டிருக்கும் நிலையை நாம் வலியுறுத்தும்போது, வேதாகமம் அடிக்கடி பரலோகப் பெயரான ‘கிறிஸ்து’ என்ற நாமத்தைப் பயன்படுத்துகிறது. கலாத்தியர் 2:20இல் இப்படிப் பார்க்கிறோம்: “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்பு கூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக் கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.”

‘கர்த்தர்’ (ஆண்டவர்) என்னும் நாமம் திரித்துவத்தில் அவருடைய நிலையை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, அவர் தேவன் – நமக்கு ஆண்டவராக இருப்பதையும் காட்டுகிறார். அவர் தமது சீஷர்களிடம் கூறியதையும் நினைத்துப் பாருங்கள்: “நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்” (யோவான் 13:13). இயேசுகிறிஸ்து தேவனாயிருக்கிறபடியால், அவரே நமது வாழ்க்கையின் ஆண்டவராகவும், எஜமானராகவும் இருக்க வேண்டும்.

‘ஆண்டவர்’ என்னும் அவருடைய நாமம் இயேசுகிறிஸ்துவின் வல்லமையை வெளிப்படுத்துகிறது. இந்த உலகத்துக்குத் திரும்ப வந்து, தமது சத்துருக்களைச் சங்கரித்துத் தமது இராஜ்யத்தை நிலைநாட்டவரும் காலத்தைக் குறித்துப் பேசும்போது, வேதாகமம் கூறுகிறது: “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது” (வெளி. 19:16). ஒரு விசுவாசிக்கு இயேசு இப்படித்தான் இருக்கிறார். அவர் நமது பாவங்களுக்கு மீட்புப் பெற்றுத்தந்தது மட்டுமல்ல, நம் சத்துருக்களைத் தமது வல்லமையினால் மேற்கொண்டுமிருக்கிறார். தமது மரணத்தின் மூலம் அவர் சாத்தானின் வல்லமையை முறியடித்திருக்கிறார். எனவே நாம் அவனால் தோற்கடிக்கப்படுவதில்லை.

(தொடரும்)

மொழியாக்கம்: G.வில்சன்

சத்தியவசனம்