சிலுவையின் மரணப்பரியந்தமும் கீழ்ப்படிந்தார்!

சகோ.ஆ.பிரேம் குமார்
(மார்ச்-ஏப்ரல் 2015)

“அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரண பரியந்தம், அதாவது
சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி,
தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலி.2:8).

பழங்காலங்களில் ராஜாக்கள் மாறுவேடம் பூண்டு நாட்டு மக்களின் மத்தியில் போய் அவர்களில் ஒருவராக நடமாடுவதுண்டு. பார்ப்பவர்கள் அவரை ராஜா என்று அடையாளம் காண்பதில்லை. சாதாரண மனிதர் என்றே எண்ணுவதுண்டு. ராஜா தான் ராஜா என்பதை சாதாரண உடையினால் மறைப்பது போல மாம்சம் என்ற போர்வையில் வந்த இயேசுகிறிஸ்து தனது தெய்வத்தன்மையை மனிதத் தன்மைக்குள் மறைத்திருந்தார். அவர் மனுஷனாகையில் தெய்வீகத் தன்மையை இழந்துவிடவில்லை. அது அவர் மனுஷத்தன்மைக்குள் மறைக்கப்பட்டிருந்தது. எனவே அவரைப் பார்த்தவர்கள் அவரை மனிதனாகக் கண்டார்களே ஒழிய மனிதனாக வந்த தெய்வம் என்று இனங்கண்டுகொள்ளவில்லை. அவர் சில இடங்களில் தமது மகிமையை வெளிப்படுத்தியபோதிலும் (மத். 17:1-8) அவர் மகிமை அவர் மனுஷீகத்திற்குள் மறைந்திருந்ததால் மற்றவர் அவரை மனிதனாகவே எண்ணினார்கள்.

பிரபல்யமான ஆங்கில எழுத்தாளரும் ஆங்கில இலக்கியத் துறையில் வல்லுனருமான ‘பெர்னாட் ஷா’ ஒருமுறை ஒரு போஜன சாலைக்கு உணவருந்துவதற்காகப் போயிருந்தார். அவர் தனது கண்ணாடியை கொண்டு போகத் தவறியதால் உணவுப் பெயர்ப் பட்டியலை வாசிக்குமாறு உணவு பரிமாறுபவரைக் கேட்டார். அதற்கு அவர் ஒருவித வெட்கம் கலந்த சிரிப்புடன் “நானும் உங்களைப்போல எழுத வாசிக்கத் தெரியாதவன்” என்றார். ஆங்கில இலக்கியத்தில் வல்லுனரும் பிரபல எழுத்தாளருமான பெர்னாட் ஷாதான் இவர் என்பதை அந்த உணவு பரிமாறுபவர் இனம் கண்டுகொள்ளவில்லை. யோவானும் இயேசுவைக் குறித்து எழுதுகையில், “அவர் உலகத்தில் இருந்தார்,… உலகமோ அவரை அறியவில்லை” (யோவான் 1:10) என்று எழுதுகிறார். ஆம்! இயேசுவை மக்கள் மனிதனாக வந்த தெய்வம் என்று அறிந்துகொள்ளவில்லை. ஒரு சாதாரண மனிதராகவே நோக்கினார்கள். பவுலும் அவர் மனுஷரூபமாக காணப்பட்டதாக எழுதுகிறார்.

அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டதுடன் “மரணபரியந்தம் அதாவது சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார்” என வாசிக்கிறோம். இயேசு மனுஷரூபம் எடுத்ததோடு நின்றுவிடவில்லை. அவர் தன் வாழ்நாள் முழுவதும் பிதாவுக்குக் கீழ்ப்படிந்தார். பிதாவிற்குக் கீழ்ப்படிந்து அவரது சித்தத்தை செய்வதே இயேசுவின் போஜனமாக இருந்தது. பிதாவிற்கு சமமாக இருந்தவர் அடிமையாக இறங்கி வந்து தன் வாழ்நாள் முழுவதும் கீழ்ப்படிந்தார்.

நமது வாழ்வில் கீழ்ப்படிதல் இன்றியமையாத ஒன்று. “கீழ்ப்படிதல் ஒரு மனப்பாங்காக ஆரம்பித்து கிரியையில் வெளிப்பட்டு காலப்போக்கில் அது வாழ்க்கை முறையாக மாறவேண்டும்” என்றார் கெரி ஒலிவர். “கீழ்ப்படிதல் என்பது நாம் செய்யுமாறு நமக்குக் கூறப்பட்டதைச் சரியான மனப்பாங்குடன் செய்வது” என்றார் லிண்டா குரோல். இன்று மற்ற அநேக காரியங்களில் அக்கறை செலுத்தும் சிலர் கீழ்ப்படிதலை அலட்சியம் செய்வது வேதனைக்குரியது. நமது வாழ்வில் கீழ்ப்படிதல் இல்லாவிட்டால் நமது உபவாசமும், ஜெபமும் வீணானதாக இருக்கும். நாம் எவ்வளவு காரியங்களைச் செய்கிறோம் என்பதில் அல்ல, எவ்வளவு தூரம் கீழ்ப்படிகிறோம் என்பதிலேயே தேவன் அதிக அக்கறையுள்ளவராக இருக்கிறார்.

இன்று சிலர் கர்த்தரின் சத்தத்திற்கு கீழ்ப்படியாமல் அவிசுவாசிகளைத் திருமணம் முடிக்கிறார்கள். சிலர் தேவனுக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் மனுஷரைப் பிரியப்படுத்துவதையே முக்கியமாக கருதுகிறார்கள். இன்னும் சிலர் தேவன் சொல்லுவதற்கு முழுவதுமாக கீழ்ப்படியாமல் சில காரியங்களுக்கு மாத்திரம் கீழ்ப்படிந்து அதில் திருப்தி கொள்கிறார்கள். அரைகுறையான கீழ்ப்படிதலும் கீழ்ப்படியாமையே. தேவன் நூறு சதவீதமாக கீழ்ப்படியுமாறு சொல்கையில் 90 சதவீதம் கீழ்ப்படிந்தாலும் அது கீழ்ப்படியாமையே. இதற்கு சவுல் ஒரு நல்ல உதாரணம். அவன் தேவன் சொன்னதற்கு முழுவதும் கீழ்ப்படியாமல் சிலவற்றைத் தவிர்த்து மீதியானவற்றைச் செய்தான். ஆனால் தேவன் அவரைக் கீழ்ப்படியாதவனாகவே கருதினார் (1சாமு.15).

கீழ்ப்படிதல் எப்பொழுதும் ஆசீர்வாதத்தையும், கீழ்ப்படியாமை எப்பொழுதும் தண்டனையையும் கொண்டுவரும் (உபா.11:26-28). நாம் எவ்வளவு தூரத்திற்கு தேவனுக்கு கீழ்ப்படிகிறோமோ அவ்வளவிற்கு தேவன் தம்மை இன்னும் இன்னுமாக நமக்கு வெளிப்படுத்துவார். “கீழ்ப்படியும் கிறிஸ்தவனே முதிர்ந்த கிறிஸ்தவன்” என்ற கெரி ஒலிவரின் கூற்று எவ்வளவு உண்மை. கீழ்ப்படிதலில் சொல்லப்பட்ட காரியத்திற்கு முழுவதும் கீழ்ப்படிவதும் சரியான நோக்குடன் கீழ்ப்படிவதும் காலம் தாழ்த்தாமல் கீழ்ப்படிவதும் அவசியம். இன்று அநேகர் தேவன் சொன்னதைச் செய்யாமல் சொல்லாததை செய்கின்றனர். மற்றும் சிலர் உற்சாக மனதுடன் கீழ்ப்படியாமல் முறுமுறுப்புடன் கீழ்ப்படிகின்றனர். இன்னும் சிலர் உடனே கீழ்ப்படியாமல் காலந்தாழ்த்துகின்றனர். இவை யாவும் தவறானதாகும்.

விசுவாசத்திற்கும் கீழ்ப்படிதலுக்கும் இடை யில் நெருங்கிய தொடர்புள்ளது. விசுவாசிப்பவனே கீழ்ப்படிபவன். அத்துடன் புதிய ஏற்பாட்டில் கீழ்ப்படிதல் தேவனோடுள்ள உறவோடு தொடர்புகொண்டு வருகிறது. தேவன் பேசுகிறார். அதற்குப் பிரதிக் கிரியையாக கீழ்ப்படிதல், மனிதனிடம் எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தேவன் கட்டளையிட்டுள்ளார் என்பதினால் மாத்திரமல்ல, அவர் நம்மேல் பாராட்டிய அன்பிற்கு நன்றியறிதலாகவும், நாம் அவர்மேல் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடாகவும் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். இயேசு பிதாவை நேசித்ததைக் கீழ்ப்படிதலில் வெளிப்படுத்தினார். அதனையே போதித்தார். “ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்…” (யோவான் 14:23).

கீழ்ப்படிதல் எப்பொழுதும் இலகுவாயிருப்பதில்லை. சிலவேளைகளில் மிகவும் கடினமாயிருக்கும். இயேசுவுக்கும் கீழ்ப்படிதல் இலகுவாயிருக்கவில்லை. ஆனாலும் கீழ்ப்படிந்தார். சிலுவையின் மரணபரியந்தம் கீழ்ப்படிந்தார். இயேசு சிலுவைக்குப் போவதற்கு முன்பாகவே பிதாவுக்குக் கீழ்ப்படிந்ததினால் சமயத் தலைவர்களின் எதிர்ப்பிற்கும் இன்னும் பல பிரச்சனைகளுக்கும் முகங்கொடுத்தார். அந்தப் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் தேவனுக்குக் கீழ்ப்படிந்தார். சிலுவைக்குப் போவதும் அவருக்கு இலகுவாயிருக்கவில்லை.

இன்று சிலுவை என்பது ஒரு புனிதச் சின்னம். ஆனால் அன்று அது அவமானச் சின்னம். இயேசுவின் காலத்தில் ரோமர்கள் வழங்கும் அதி கொடூரமான தண்டனை சிலுவை மரணமாகும். தூக்கிலிடும் கயிறு நமக்கு எவ்வளவு பயத்தை ஏற்படுத்துமோ, அப்படியே சிலுவை மரணமும் அவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்தியது. ரோம எழுத்தாளர்கள், “சிலுவை என்ற சொல் ரோமப் பிரஜைகளின் உடலுக்கு மட்டுமல்ல, சிந்தனைக்கும் கண்களுக்கும் காதுகளுக்கும் தூரமாயிருப்பதாக” என்று எழுதியிருக்கிறார்கள். யூதரைப் பொறுத்தவரையில், “சிலுவையில் தூக்கப்பட்டவன் சபிக்கப்பட்டவனாகவும் இஸ்ரவேலின் சுதந்தரத்திற்கு புறம்பானவனாகவும் கருதப்பட்டான்” (உபா.21:23). சிலுவை அவமானத்தின் சின்னமாக கருதப்பட்டது (எபி.12:2).

அதுமட்டுமல்ல, சிலுவையில் அறையப்பட்ட மற்றவர்கள் போல, இயேசு சரீரத்தில் மட்டும் வேதனை அனுபவிக்கவில்லை; ஆவியிலும் வேதனை அனுபவித்தார். ஏனெனில் மனிதர்மேல் விழவேண்டிய தேவனுடைய கோபாக்கினையின் பாத்திரம் அவர்மேல் விழுந்தது. எனவேதான் கெத்சமனேயில் இயேசு, “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது…” (லூக்.22:42) என்றார். அவர் அந்த வேதனையை அனுபவிக்க வேண்டியிருந்ததுடன் இவ்வளவு காலமும் ஒன்றாயிருந்த பிதாவின் உறவும் அத்தருணத்தில் முறிய இருந்ததால் அதனைத் தாங்க மிகவும் கஷ்டப்பட்டார். நம் பாவங்கள் சிலுவையில் அவரைச் சூழ்ந்துகொள்ள நம் பாவங்களுக்கான தண்டனை அவர்மேல் விழுந்தது. வேறு வார்த்தையில் சொல்வதானால் அந்த சிலுவையில் இயேசு நரகவேதனை அனுபவித்தார்.

அவமானத்தின் சின்னமாகிய கொடூர சிலுவையில் பாவத்திற்கான தண்டனையை அனுபவிப்பது அவருக்கு இலகுவாக இருக்கவில்லை. ஆனாலும் கீழ்ப்படிந்தார். சிலுவையில் அறையப்படும் வேதனையைவிட பாவத்தின் தண்டனையை அனுபவிப்பது மிக மிகக் கடினமாக இருந்தது. ஆனாலும் கீழ்ப்படிந்தார். சிலுவையில் தூக்கப்பட்டவன் எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி கிறிஸ்து நமக்காக சாபமானார் (கலா.3:13). அவருடைய கீழ்ப்படிதலின் சிறப்பு என்னவென்றால், யூதரால் வெறுக்கப்பட்டு அவமானச் சின்னமாகிய அந்தச் சிலுவையில் கொடூரமாகக் கொல்லப்படும் நிலை வந்தபோதும் கீழ்ப்படிந்தார். தூக்குத் தண்டனைச் சாதனமாகிய சிலுவையும் ஒரு புது அர்த்தத்தைப் பெற்றது. பிதாவின் சித்தத்திற்கு தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்தார். மிகவும் வல்லமையான தேவன் அற்ப மனிதருடைய கரங்களில் வேடிக்கைப் பொருளாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படும் அளவிற்கு தன்னை ஒப்புக்கொடுத்தார்.

இதனை வாசிக்கும் சகோதரனே, சகோதரியே, நீ உன்னை முற்றிலும் தேவனுக்கு ஒப்புக்கொடுப்பாயா? தேவனுக்குக் கீழ்ப்படிவது எவ்வளவு கடினமாயினும் அதனைச் செய்ய முடிவெடுப்பாயா? கீழ்ப்படிதலுக்கு மாதிரியாக இயேசுவையே நோக்குவாயா? கிறிஸ்தவர்களின் வாழ்வு கீழ்ப்படிதலின் வாழ்வாக அமையவேண்டும். ஏனெனில், கிறிஸ்தவர்களுக்கு வாழ்வளித்தவர் மரணபரியந்தம் கீழ்ப்படிந்தார். கிறிஸ்தவர்கள் சிலவேளைகளில் கீழ்ப்படியத் தவறலாம். ஆனால் அவற்றிற்காக மனஸ்தாபப்பட்டு மன்னிப்புக்கோரி இனி அந்தத் தவறை செய்யாமலிருக்கத் தீர்மானிக்க வேண்டும். கிறிஸ்தவனின் வாழ்வு கீழ்ப்படிதலின் வாழ்வாக அமையவேண்டும். வேண்டுமென்றே கீழ்ப்படிய மறுப்பது கலகமாகும். கீழ்ப்படியாமையில் தொடர்ந்து ஜீவிப்பது தண்டனையை வருவிக்கும்.

சிலவேளைகளில் கீழ்ப்படிவதற்கு என்னால் முடியாது. நான் தவறிவிடுவேன். கீழ்ப்படிவதற்கு எனக்கு பெலனில்லை என்று நாம் நினைக்கலாம். ஆனால் தேவன் ஒரு காரியத்தைச் செய்யுமாறு நம்மிடம் சொன்னால் அதைச் செய்வதற்கு வேண்டிய பெலத்தையும் தருவார். அவர் கட்டளையோடு பெலனும் தருகிறார் என்றால் நாம் கீழ்ப்படியாமல் இருக்கலாமா? அநேக வேளைகளில் நாம் தேவனுடைய வல்லமையை மறந்து நமது பெலத்தில் கீழ்ப்படிய எண்ணி தோல்வியுறுகிறோம். நம் வாழ்வை முழுவதும் ஆண்டவரின் ஆளுகைக்கு ஒப்புவித்து தேவனை நம்பி அவர் பெலத்தில் பிரயாசப்படுவோம். நாம் முறுமுறுப்போடு தேவன் கட்டளையிட்டுவிட்டாரே, கீழ்ப்படியாவிட்டால் தண்டிப்பாரே என்று கீழ்ப்படியக்கூடாது. நாம் அவர்மேல் வைத்துள்ள அன்பினாலும், அவர் நமக்குச் செய்தவற்றிற்கு நன்றியறிதலாகவும் அவருக்கு கீழ்ப்படிய வேண்டும். அவர் நமக்காக தம்மைத் தாமே கொடுத்ததால் நாமும் அவருக்காக நம்மைக் கொடுத்து கீழ்ப்படிதலின் மூலம் அவர்மேல் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துவோமா?

இயேசு கொடிய சிலுவையில் மரண பரியந்தமும் கீழ்ப்படிந்தார். இன்று நீ உன் வாழ்க்கையை ஆராய்ந்து பார். நீ கீழ்ப்படியத் தவறிய சந்தர்ப்பங்களை எண்ணிப்பார். நீ உன் பெற்றோருக்குக் கீழ்ப்படியாமல் இருக்கிறாயா? அப்படியாயின் பெற்றோருக்குக் கீழ்ப்படியுமாறு கட்டளையிட்ட தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருக்கிறாய். (பெற்றோர் தேவனுக்கெதிரான காரியத்தைச் சொன்னால் மாத்திரம் அதற்குக் கீழ்ப்படிய அவசியமில்லை). நீ அரசாங்கத்திற்குக் கீழ்ப்படியாமல் இருக்கிறாயா? (அரசு தேவனுக்கு எதிரான காரியங்களை செய்ய சொல்லாத இடங்களில்) அப்படியானால் நீ தேவ வசனத்திற்குக் கீழ்ப்படியாமல் இருக்கிறாய். நீ உனக்கு மேலிருக்கும் அதிகாரிகளுக்குக் கீழ்ப்படியாமல் இருக்கிறாயா? (கிறிஸ்துவின் வசனத்திற்கு முரணானவற்றைச் செய்யச் சொல்லாத பட்சத்தில்) அப்படியானால் நீ அதிகாரத்திற்குக் கீழ்ப்படியுமாறு சொன்ன தேவனுக்கு கீழ்ப்படியாமல் இருக்கிறாய். நீ உன் வாழ்வை ஆராய்ந்து பார். நீ கீழ்ப்படியத் தவறிய இடங்கள் எவையென சிந்தித்துப்பார். மற்றவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்குமாறு தேவன் கட்டளையிட்டுள்ளார். அதில் நீ தவறியுள்ளாயா? நான் பரிசுத்தராயிருப்பதுபோல, நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று தேவன் கட்டளையிட்டுள்ளாரே. நீ பாவங்களை அறிக்கையிட்டு விட்டுவிடுகிறாயா? அல்லது அவற்றில் நிலை கொண்டுள்ளாயா?

இயேசு பிதாவின் சித்தத்திற்கு தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்தார். இன்று நீ உன் சுய சித்தத்தின்படி ஜீவிக்கிறாயா? அல்லது உன் சுய சித்தத்தை தேவனுக்கு ஒப்புக்கொடுத்து அவர் சித்தப்படி ஜீவிக்கிறாயா? இயேசு தன்னை முற்றிலும் தாழ்த்தினார். தேவனுக்கு சமமாயிருத்தல் என்ற நிலையிலிருந்து அடிமை என்ற நிலைக்கு தன்னைத் தாழ்த்தினார். நமது வாழ்வில் அந்த விதமான தாழ்மை காணப்படுகிறதா?

“பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” (1பேதுரு 5:5) என வேதம் கூறுகின்றது. எனவே மனத்தாழ்மையை அணிந்து மற்றவர்கள் முன்னிலையில் தாழ்மையுடன் காணப்படுகின்றோமா? அல்லது நம்மை உயர்த்துகிறோமா? மற்றவருடன் பேசுகையில் எத்தனை முறை நம்மை உயர்த்துகிறோம். நமக்கு எல்லாம் தெரியும் என்றும் நாம் உயர்வானவர்கள் என்றும் காட்ட முற்படுகிறோம். இதைக்குறித்து நாம் வெட்கப்படவேண்டும். நமக்குப் பெருமை வரும்போதெல்லாம் தாழ்மையே உருவான இயேசுவை நோக்கிப் பார்க்கவேண்டும். நம் குரு தாழ்மையானவர் என்றால் அவரைப் பின்பற்றும் நாம் பெருமை யுடன் ஜீவிக்கலாமா?

இன்று நாம் பணம், பதவி, அந்தஸ்து என்று தேடி அலைகின்றோம். கிறிஸ்தவ ஊழியர்கள் கூட பதவிகளையும் மற்றவர்கள் தம்மை உயர்வாக எண்ணுவதையும் விரும்பிக் கொண்டிருக்கிறார்கள். மிகப்பெரிய பதவி வகித்த இயேசு கிறிஸ்து (தேவனுக்கு சமமாயிருப்பது) தன் உயரிய நிலையையும், தன் உரிமைகளையும் சிலாக்கியங்களையும் விட்டுவிட்டு அடிமையாக மாறினார்.

ஆனால் தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட நாம், தேவன் கிருபையாக நமக்குத் தந்துள்ள வரங்களையும், தாலந்துகளையும் அறிவையும் குறித்து மேன்மை பாராட்டுகிறோம். கிறிஸ்துவை நம் வாழ்வைவிட்டு எடுத்துவிட்டால் நம் நிலை எப்படியிருக்கும் என்று அறியத் தவறுகின்றோம். கிறிஸ்து நமக்குத் தந்தவற்றிற்கு நாம் மேன்மை பாராட்டுவது எவ்வளவு தவறானது!

கிறிஸ்து ஊழியம் கொள்ளும்படி வரவில்லை. ஊழியம் செய்யும்படி வந்தார் (மாற்கு 10:45).

சத்தியவசனம்