கிழிந்த வேதாகமத் தாள்!

சிறுவர் சோலை
(மார்ச்-ஏப்ரல் 2015)

ஒரு மளிகைக் கடைக்காரரிடம் ஒரு வேத புத்தகம் கிடைத்தது. ஆண்டவரைக் குறித்தோ, வேதபுத்தகத்தைக் குறித்தோ சற்றும் கேள்விப் பட்டிராத அந்தக் கடைக்காரர் பொருட்களை பார்சல் கட்டுவதற்காக உள்ள பேப்பர்களோடு அதை சேர்த்து வைத்தார். வேதபுத்தகத்தின் அருமை தெரியாதபடியால் அதிலுள்ள பக்கங்களைக் கிழித்துப் பொருட்களைக் கட்டிக் கொடுத்து உபயோகித்து வந்தார்.

ஒருநாள் அந்த கடைக்கு ஒரு மனிதன் வந்து சில பொருட்களை வாங்கிச் சென்றான். அவன் ஒரு திருடன். அவன் வாழ்க்கையில் சமாதானமும் சந்தோஷமும் நிம்மதியுமில்லாமல் வாழ்ந்துகொண்டிருந்தான். பொருட்களை வாங்கிச் சென்ற அவன் அந்தப் பொருட்களை எடுப்பதற்காக கட்டின தாளைப் பிரித்ததும், “இரத்தம் சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபி.9:22) என்னும் வசனம் அவன் கண்களைக் கவர்ந்தது. மட்டுமல்ல, வசனம் அவனுக்குள் கிரியை செய்ய ஆரம்பித்தது.

தன் பாவ நிலையை உணர்ந்தான். தனக்கு பாவமன்னிப்பில்லையே என்றும், அதை எப்படிப் பெற்றுக்கொள்வது என்றும் அறிய விரும்பி, தன் நிலையை எண்ணி கதறி அழ ஆரம்பித்தான். மறுநாள் காலையில் அதே கடையில் வேறொரு பொருள் வாங்கினான். அதில் சுற்றப்பட்டிருந்த வேதாகம தாளை ஆவலோடு நோக்கினான். “இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்” (1யோவா.1:7-10) என்ற வசனங்களை வாசித்தான்.

அந்த இனிமையான வசனங்கள் இருளடைந்திருந்த அவன் உள்ளத்தில் பெரிய வெளிச்சத்தைக் கொண்டு வந்தது. நம்பிக்கையற்றிருந்த அவன் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையைக் கொண்டு வந்தது. பாவமன்னிப்பிற்கான வழியை அறிந்து கொண்டான். கண்ணீரோடு பாவங்களை அறிக்கையிட்டு, இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டான். கர்த்தருடைய பிள்ளையாக மாறினான்.

ஆம், வேதாகமத்தின் கிழிந்த பக்கங்கள் மட்டுமல்ல; வேதாகமத்தின் ஒரு வசனமாயிருந்தாலும் அதில் தேவனுடைய ஜீவன் இருக்கிறபடியினால் அது ஆத்துமாக்களை கிறிஸ்துவண்டை வழிநடத்த வல்லமையுள்ளதாயிருக்கிறது. வேதவசனங்கள் ஒருபோதும் வெறுமையாய் திரும்புவதில்லை (ஏசா.55:11) .

“உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுவதும் அது என் தியானம்” (சங்.119:97). அருமையான சிறுவர் சிறுமியரே இந்த வசனத்தை நாம் மனப்பாடம் செய்து கொள்வோம். வேதத்தில் பிரியமாயிருப்போம். அதை வாசித்து கைக்கொள்வதற்கு கர்த்தருடைய ஆவியானவர் நமக்கு உதவி செய்வார்.

சத்தியவசனம்