ஆசிரியரிடமிருந்து…

சத்தியவசனம் பங்காளர் மடல்

ஜூலை-ஆகஸ்டு 2011

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள பங்காளர்களுக்கு,

தம்முடைய வசனத்தினாலே நம்மைப் பிழைப்பூட்டுகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரியப்படுத்துகிறோம்.

சத்தியவசன ஊழியப்பணிகள் மூலம் தேவன் செய்துவரும் மகத்தான கிரியைகளுக்காகவும், இவ்வூழியத்தை ஜெபத்தினாலும் காணிக்கையாலும் தாங்கிவரும் ஒவ்வொரு பங்காளர்களுக்காகவும் ஆண்டவரை ஸ்தோத்திரிக்கிறோம். சத்தியவசன வானொலிபணி, தொலைகாட்சி ஊழியம் இவற்றின் மூலம் தாங்கள் பெற்றுவரும் நன்மைகளையும், மேலான கருத்துக்களையும் எங்களுக்கு எழுதித் தெரிவிக்க அன்பாய் வேண்டுகிறோம். ஜுன் மாதத்திலிருந்து வெள்ளிக்கிழமை தோறும் காலை 5.30 மணிக்கு பொதிகை சேனலில் மற்றுமொரு சத்தியவசன நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது என்பதை மறுபடியும் நினைவுபடுத்துகிறோம். இந்நிகழ்ச்சி தடையின்றி தொடர்ந்து ஒளிபரப்பப்படவும், தேவன் இதன் தேவைகளைச் சந்திக்கும்படியாகவும் ஜெபிக்க அன்பாய் கேட்கிறோம். சத்தியவசன இணையதள ஊழியத்தை புதுப்பொலிவுடன் பல அம்சங்களோடுப் புதுப்பித்துள்ளோம் www.sathiyavasanam.in சத்தியவசன கட்டுரைகள், தியானங்கள், இன்றைய வாக்குத்தத்தம் ஆகியவற்றை தங்குதடையின்றி இணையதளத்தில் படிக்க இயலும். தங்களுக்கு அறிமுகமானவர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கும் இதை அறிமுகப்படுத்த அன்பாய் கேட்கிறோம்.

இவ்விதழில் விதைக்கிறவன் உவமையை மையமாக வைத்து Dr.உட்ரோகுரோல் அவர்கள் எழுதிய கேட்கிறதற்கு காதுள்ளவன்.. .. என்ற சிறப்புச்செய்தி நம் அனைவருக்கும் ஆசீர்வாதமாக அமையும். விதைக்கிறவராகிய ஆண்டவரின் எதிர்பார்ப்பைக் குறித்து சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் இயேசுவின் உவமையிலிருந்து விளக்கியுள்ளார்கள். நம் ஜெபம் கேட்கப்படாததைக்குறித்தும், அதற்கான காரணங்களைத் தொகுத்து சகோ.நீரியஸ் அவர்கள் எழுதியுள்ள செய்தி நம் ஜெபவாழ்விற்கு அதிக பிரயோஜனமாய் அமையும். முகத்திரைகள் கிழியட்டும் என்ற தலைப்பில் சகோதரி சாந்திபொன்னு அவர்கள் அளித்துள்ள செய்தி நம்மைச் சிந்திக்க வைப்பதாகவும், நமது போலியான வாழ்க்கையை எடுத்துரைக்கிறதாயுமிருக்கிறது. பழைய ஏற்பாட்டு வேதபாடம் ஆசரிப்புக்கூடாரத்தில் கிறிஸ்துவின் சாயலில் Dr.தியோடர் எச்.எப். அவர்கள் பொன் குத்துவிளக்குத்தண்டை பரிசுத்த ஆவியின் ஏழு தன்மைகளோடு ஒப்பிட்டு விளக்கியுள்ள செய்தி நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமான ஒன்றாகும். மேலும் வழக்கம்போல் வெளிவரும் தொடர் செய்திகளும் வெளிவந்துள்ளன. இக்கட்டுரைகள் யாவும் தேவஆசீர்வாதமாய் அமைய ஜெபிக்கும்,

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்