கேட்கிறதற்குக் காதுள்ளவன்….

Dr.உட்ரோ குரோல்
(ஜூலை-ஆகஸ்டு 2011)

சிருஷ்டி கர்த்தராகிய தேவன் நமக்கு கொடுத்த செல்வங்களுள் சிறந்ததாகக் கருதப்படுவது செவியாகும். அதுவும் இரு செவிகளைக் கொடுத்துள்ளது இன்னும் சிறப்புடையதாக அமைகிறது. தாயின் குரலுக்கு சேய் அமைதிப்படும்; மேய்ப்பனின் குரலுக்கு ஆடுகள் செவிகொடுக்கும். ஆனால் சில வேளைகளில் சில குரல்களுக்கு நமது செவி கேளாமல் போய்விடுகிறது. திருமண வீட்டில் அலறும் ஒலி பெருக்கியின் பாடல்களுக்கு நம் செவிகள் அடைபட்டு உற்றார், உறவினரோடு அளவளாவி மகிழ்கிறோம் அல்லவா? சிலரது பேச்சில் நாம் உறங்கிவிடுவதும் உண்டு. அவ் வேளைகளில் நமக்கு காதுகள் இருந்தும் அவை செயல்படுவதில்லை. நமது கேட்புத் திறனையும் அதற்கு நாம் செயல்படுவதைப்பற்றியும் நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து விதைக்கிறவனைப் பற்றிய உவமை மூலமாக நன்கு விளக்கியுள்ளார்.

கலிலேயாக் கடலோரத்தில் ஒரு படகில் ஏறி இயேசுகிறிஸ்து ஜனங்களுக்குப் போதித்தார். மாற்கு 4:3-8 என்ற வேதபகுதியில் இந்த உவமையை நாம் வாசிக்கிறோம். மத்தேயு, மற்றும் லூக்கா ஆகிய மூன்று நற்செய்தி நூல்களிலும் இது காணப்படுகிறது. ஆனால் அந்த உவமையைப் பற்றிய விளக்கத்தை தமது சீஷர்களுக்கு மட்டுமே விளக்கினார். தேவ வசனமாகிய விதை நான்கு வகையான இடங்களில் விதைக்கப்படுகிறது.

வழியருகே விழுந்த விதை:

விதைக்கிறவன் தூவிய விதைகளில் சில வயலின் வழியருகே விழுந்தன. வயலின் ஓரங்களில் மனிதர்கள் நடந்து செல்லுவதால் பொதுவாக அந்த இடம் உழப்பட்டிருக்காது; மண் இறுகியிருக்கும். எனவே அவ்விதை மண்ணுக்குள் செல்லமுடியாத நிலை. மண்ணின் மேலேயே கிடந்ததால் ஆகாயத்துப் பறவைகள் வந்து அந்த விதைகளைத் தின்றுவிட்டன. அந்த விதைகளினால் விதைத்தவனுக்கு எந்த ஒரு உபயோகமும் இல்லை.

இது போன்றே தற்காலத்தில் வேதவசனங்கள் அநேக இடங்களில் பிரசங்கிக்கப்படுகிறது. மக்களும் திரள் கூட்டமாய் வந்து ஆர்வமாய்க் கேட்கின்றனர். ஆனாலும் பலர் அதைக் கேட்டுவிட்டு ஒரு மாறுதலும் அடையாமல் வந்தவிதமாகவே திரும்பிச் சென்று விடுகின்றனர். தேவனுடைய வசனம் அவர்கள் இருதயத்துக்குள்ளும் ஆத்துமாவுக்குள்ளும் நுழைய வாய்ப்பு கிடைக்கவில்லை. நீ கேட்ட சத்தியம் நல்லதுதான். உன்னுடைய மார்க்கமும் மதமும் முக்கியமானவைகள். அவைகளில் உள்ள நல்லவற்றை நீ பின்பற்று. எல்லா மதங்களும் ஒரே இறைவனைத்தான் போதிக்கின்றன. இந்த வேதாகமம் சொல்லும் காரியங்களை நீ பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி சத்துருவாகிய சாத்தான் அவர்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தி வசனத்தை எடுத்துப் போட்டு விடுகிறான்.

கற்பாறை நிலத்தில் விழுந்த விதை:

சில விதைகள் வயலின் அருகே உள்ள கற்பாறை நிலத்தில் விழுந்தன. அங்கே அவ்விதை முளைப்பதற்குத் தேவையான மண், நீர், காற்று மற்றும் சூரிய ஒளி ஆகியவை கிடைத்தன. எனவே அவைகள் முளைக்க ஆரம்பித்தன. ஆனால் அவைகளின் வேர்கள் ஆழமாய் செல்ல முடியாதபடி கற்பாறைகள் தடுத்துவிட்டன. எனவே சூரிய ஒளியின் வெப்பக்கதிர்கள் அதின் மேல் பட்டவுடன் அவைகள் ஆழமாய் செல்ல முடியாததால் அச்செடிகள் கருகிவிட்டன. இது போலவே இரண்டாம் வகை மக்கள் வசனத்தைக் கேட்டவுடன் அதிக உற்சாகம் அடைகின்றனர். ஆனால் அவர்கள் கேட்ட வசனம் வேர்விட்டு வளருவதில் தடைகள் வருகின்ற பொழுது விசுவாசம் அழிந்துவிடுகிறது. அதாவது சில சந்தேகங்கள் எழும்பும் போதோ, அல்லது அறிவியல் கோட்பாடுகளைக் கேள்விப்படும் பொழுதோ அவர்களது விசுவாசம் ஆழமாய் இராதபடியினால் வசனம் வளர்ந்து பலன் தரமுடியாதபடி கருகிவிடுகிறது.

முள்ளுள்ள இடங்களில் விழுந்த விதை:

சில விதைகள் அவ்வயலின் அருகே உள்ள முள்ளுள்ள இடங்களில் விழுகின்றன. விதைகள் வேர்விட்டு வளருகின்றன. வளர்ச்சியில் ஒரு குறைவுமில்லை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல முட்கள் வேகமாக வளர்ந்து அச்செடிகளை வளரவிடாமல் செய்துவிடுகின்றன. வேர் இருந்தாலும் அச்செடிகளுக்குத் தேவையான உணவுகளைத் தயாரிக்க அவைகளுக்கு சூரிய ஒளி மற்றும் காற்று ஆகியவை கிடைக்காதபடி அம்முட்செடிகள் நெருக்கிப் போட்டமையால் அவைகள் பெலவீனப்பட்டு வாடிவிட்டன. இதுபோலவே வேதவசனங்களைக் கேட்டவர்கள் மகிழ்ச்சியுடனே ஏற்றுக்கொள்ளுகின்றனர். ஆனால் உலகக் கவலைகள் அவர்களை நெருக்கும்போது அவ்வசனத்தின்படி நடக்க அவர்களால் முடியவில்லை. எனவே வசனம் வளர இயலாது வாடிவிடுகின்றனர்.

வேதாகமத்தை நான் கருத்தூன்றி வாசித்து, ஆழ்ந்து தியானிக்கும்பொழுது ஒரு நாளிதழை வாசிப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்படுகின்றது என்று நான் அடிக்கடி சொல்லுவதுண்டு. சத்திய வேதத்தின் இப்பண்பு என்னைக் கவர்ந்ததொன்று. உலகில் நடக்கும் காரியங்கள் யாவும் இப்புத்தகத்தில் காணப்படுகின்றது. இந்த நூற்றாண்டில் நமக்கு கவலையளிக்கும் மூன்று காரியங்கள் யாவை என நாம் ஆராய்ந்து பார்த்தால் அது மாற்கு 4:19 ல் காணப்படுகிறது. வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப் பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலனற்றுப் போகிறார்கள்.

முதலாவதாக உலகக் கவலைகள்: கவலை யில்லாத மனிதர் இப்புவியில் எவருமில்லை என்று அநேகர் கூறுகின்றனர். குடும்ப உறவுகளில் பிரச்சனை, வியாதி, பணக்கஷ்டங்கள், வறுமை என பல்வேறு காரியங்கள் வேதவசனத்தைக் கேளாதபடி மனிதர்களை திசை திருப்புகின்றன.

இரண்டாவதாக ஐசுவரியத்தின் மயக்கம்: தேவனுக்கென்று செலவிட எனக்கு நேரமில்லை; இன்று எனக்கு ஒரு கூடுகை, நாளை ஒரு சந்திப்பு, இரவு ஒரு செயற்குழு கூட்டம்; இன்னின்ன இடங்களுக்குச் செல்ல வேண்டும்; இன்னின்ன மக்களைப் பார்க்க வேண்டும்; எனவே நேரமே இல்லை என்று சிலர் கூறுவர். உலகக் காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் தேவனுடைய பாதத்தில் காத்திருக்க அவர்களுக்கு நேரம் இல்லை.

மூன்றாவதாக மற்ற காரியங்களில் உண்டாகிற இச்சை: வேதத்தை வாசிக்க எனக்கு அதிக வாஞ்சையுண்டு, ஆனால் நேரமில்லை; நேரமிருந்தால் கட்டாயம் வாசிப்பேன் என்று சிலர் சாக்கு சொல்லுவதுண்டு. ஒரு நாளைக்கு 24 மணிநேரம் உண்டே, வேதத்தில் ஒரு அதிகாரத்தை வாசித்து தியானிக்க உங்களுக்கு எவ்வளவு நேரம் தேவை? ஒவ்வொருநாள் காலையும் நடைபயணம் செல்லவும், உணவு உண்ணவும், செல்லப்பிராணிகளைக் கொஞ்சவும், இரவில் 3 மணிநேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கவும் நேரம் செலவிடும் உங்களுக்கு வேதத்தை வாசிக்க நேரம் கிடைக்கவில்லை என்று சொல்லுவது நியாயமில்லை.

நல்ல நிலத்தில் விழுந்த விதை:

இறுதியாக சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தது. அவை ஒன்று முப்பதும் அறுபதும் நூறுமாக பலன் தந்தது. நீங்களும் நூறு மடங்கு பலன் தரவேண்டுமெனில் சத்தியவசனமாகிய வேதத்தில் அதிக நேரம் செலவிடவேண்டும். அதனை வாசித்து, தியானித்து, ஆராய்ச்சி செய்யவேண்டும். ஆவியானவரின் ஒத்தாசையை வேண்டினோமானால் அவர் வேதத்தின் அதிசயங்களை விளக்கிக் காட்டுவார். தேவனுடைய வார்த்தையில் நாம் செலவிடும் நேரமும் அவருடைய சத்தத்தை கேட்கும் அளவும் நேர்விகிதத்தில் அமையும்.

தேவனுடைய சத்தத்தை கேட்கமுடியாதபடி நமது செவியை விலக்கும் காரியங்கள் இரண்டு. ஒன்று, பாவம். நம்முடைய வாழ்வில் பாவம் காணப்படுமாயின் தேவனுடைய சத்தத்தை நாம் கேட்கமுடியாது. தேவனுடைய ஒலி அலையிலிருந்து நாம் வேறுபடுகின்றோம். சாத்தான் வசனத்தை எடுத்துப் போட்டு விடுகிறான். பாவத்தில் வாழ்பவர்கள் தேவசத்தத்தைக் கேட்காமல் சாத்தானின் சத்தத்தைக் கேட்பவர்களாய் வாழ்கின்றனர்.

இரண்டாவது, பெலவீனமான ஒலிஅலை. நமது அறையில் எடுக்காத வானொலி அலை வரிசை வேறு இடத்திலோ அல்லது வெளியிலோ நன்கு எடுப்பதுபோல, நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் பெலவீனர்களாய் இருப்போமானால் தேவ சத்தத்தைக் கேட்பதில் நமக்கு சிரமம் ஏற்படும். எனது விருப்பமும் தெரிந்தெடுப்பும் வித்தியாசப்படுமெனில் என் செவி தேவசத்தத்தை கேட்காதபடி அடைபட்டுவிடும். தேவன் பேசுவது நமக்கு பிரியமில்லையெனில் நமது செவியை நாம் அடைத்துக் கொள்ளுகிறோம். ஆண்டவரே, என்னோடு பேசும் என்று அவரை நச்சரிக்கிறோம்.

நாம் தேவனுடைய சத்தத்தைக் கேட்பதற்காக குறிப்பிட்ட நேரத்தில் காத்திருப்பது நலம். சில வேளைகளில் அவர் நம்முடன் பேசும் பொழுது நம்முடைய இருதயம் கடினப்பட்டிருக்கும்; சில வேளைகளில் உலகக் கவலைகள் நம்மை நெருக்கி நிற்கும்; சில வேளைகளில் நம்மில் காணப்படும் பாவம் அவர் சத்தத்தை தடுத்திருக்கும். ஆனால் நமக்காகத் தம்முடைய ஜீவனைத் தந்தவருடைய செவியோ நம்முடைய கூப்பிடுதலுக்கு எப்போதும் காத்திருக்கிறது. நாமும் அவர் பாதத்தில் காத்திருந்து அவருடைய சத்திய வார்த்தைகளை வாசிக்கும் பொழுது அவர் நம்முடன் பேசுவது நிச்சயம்.

தேவனுடைய வார்த்தையை கேட்க நம்மால் முடியும், அந்த மன்னாவை நாம் உட்கொள்ள முடியும், விசுவாசிக்க முடியும். வார்த்தையினால் வாழமுடியும், கனிகளைத் தரமுடியும். இவ் விதமான ஒரு வாழ்வைத்தான் தேவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்.

நம்மில் அநேகர் முதல் மூன்று நிலையை அடைகின்றனர்.

முதல்நிலை மக்கள் பாவத்தில் இருப்பதால் அவர்கள் தேவனுடைய சத்தத்தின் அலை நீளத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத பரிதாப நிலையில் உள்ளனர்.

இரண்டாம்நிலை மக்கள் வார்த்தையை கேட்கின்றனர். ஆனால் அவர்கள் உலக சத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தேவ குரலின் அலைநீளம் பெலவீனமாக உள்ளது. துன்பங்களும் தொல்லைகளும் வரும்போது வசனம் வாடிவிடுகிறது. தேவனுடைய வார்த்தைக்கு நேரம் கொடுத்தாலும் அது கடமைக்காக செய்வதேயாகும். தேவன் அவர்களுக்குப் போதிக்க அவர்கள் இடம் கொடுப்பது இல்லை.

மூன்றாம்நிலை மக்களோ வசனத்தைக் கேட்டு அதனை முழுவதுமாக நம்புவது இல்லை. இவர்கள் தங்களது எண்ணங்களையும் கருத்துக்களையும் அதில் இணைத்து வசனத்தின் முழுகருத்தையும் புரிந்துகொள்ளாதவர்கள்.

நான்காம்நிலை மக்கள் தேவ சத்தத்தைத் துல்லியமாக, தெளிவாகக் கேட்பவர்களாவார்கள். அவர்களுடைய இருதயம் வசனத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அடைந்ததாய் இருக்கும். என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது (யோவா.10:27). எனவே கர்த்தருடைய சத்தத்தை தெளிவாய்க் கேட்டதால் இயேசுவைப் பின்பற்றினார்கள். கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்; கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள் (சங்.89:15). அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங்.112:1). தொலைக்காட்சி பெட்டியையோ இணையதளத்தையோ தேடிப்போய் நாம் மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்ள முடியாது. தேவனுடைய வார்த்தையை வாசித்து, அதை தியானிக்கும்போது மாத்திரமே மகிழ்ச்சியும் ஆனந்தமும் நமக்கு கிடைக்கும் என்பது அதிக நிச்சயம். நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள் (யோவா.13:17). அறிந்திருப்பது மட்டுமல்ல அவைகளின்படி செய்யவும் வேண்டும்.

அன்பான சகோதரனே, சகோதரியே நீங்களும் தேவகுரலைக் கேட்க வாஞ்சையாயிருக்கிறீர்களா? அவரது வார்த்தையாகிய வேதத்தின் மூலம் அவர் பேசுகிறார். அதனை அடிக்கடி வாசியுங்கள். அது உங்கள் சுவாசமாக மாறட்டும். அவர் உங்களுக்குச் சொல்லியிருக்கும் காரியங்களுக்குக் கீழ்ப்படியுங்கள். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். வாழ்க்கை வளம் பெறும். தேவனுடைய சத்தத்தைக் கேட்பது எத்தனை ஆனந்தபாக்கியம்! வார்த்தையின் மூலம் நம்மோடு உறவாடும் வார்த்தையான தேவனுக்கு மகிமையும் கனமும் உண்டாவதாக!

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்