விதைக்கிறவன்

இயேசுகிறிஸ்து விளம்பின உவமை-4

– சுவி.சுசி பிரபாகரதாஸ்
(ஜூலை-ஆகஸ்டு 2011)

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து விதைக்கிறவன் பற்றிக் கூறின இந்த உவமை மத்தேயு 13:3-9 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம். கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. வெயில் ஏறின போதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது. சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

ஆண்டவர் ஏன் உவமைகள் வாயிலாக தன் மக்களோடு பேசினார்? தேவ இராஜ்ஜியத்தின் உண்மைகளை விளக்குவதற்காக உவமைகள் வாயிலாகப் பேசினார். விதைக்கிறவன் விதைக்க புறப்பட்டான். விவசாயிக்கு தன் தொழிலில் உள்ள எதிரி யார்? பறவைகள், முட்செடிகள், கற்பாறையுள்ள நிலம் ஆகிய இவைகள் தான் விவசாயத்தின் எதிரிகள். இவை மூன்றும் பலனைக் கொடுக்காதபடி கெடுக்கிற எதிரிகள். ஆண்டவரிடம் சீஷர்கள் கேட்கிறார்கள்; இந்த உவமையின் பொருள் என்ன?. இதை உணரவில்லையா என்று ஆண்டவர் சீஷர்களைக் கடிந்துகொண்டு உவமைகளை அவர்களுக்கு விளக்குகிறார். நல்ல சமாரியனின் உவமைகளை அவர் தாமே விளக்கினார். விதைக்கிற உவமை இயேசுதாமே விளக்கின உவமையாகும். எனவே இந்த உவமையின்முலம், பல உண்மைகளை நாம் கற்றுக் கொள்கிறோம். இந்த உவமையிலுள்ள பல்வேறு அம்சங்களை பல்வேறு கோணங்களில் நாம் ஆராயப் போகிறோம்.

முதலாவது விதைக்கிறவன் எப்படிப் பட்டவன் என்பதை நாம் கற்றுக்கொள்ள போகிறோம். இவ்விடத்தில் விதைக்கிறவர் யார் என்றால், தாம் என்று இயேசு விளக்குகிறார். விதை எதுவென்றால் அவரது வசனம் என்று விளக்குகிறார். விதைக்கப்படுகிற நிலங்கள் எவையென்றால் மனிதனுடைய உள்ளங்கள் என்று விளக்குகிறார்.

விதைக்கிறவன் எப்படிப்பட்டவன், விதைக்கிற நமது ஆண்டவர் எப்படிப்பட்டவர், விதைக்கிற ஊழியக்காரராகிய நீங்கள் எப்படிப்பட்டவர்கள், விசுவாசிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதைக் குறித்து நாம் சிந்திக்கப் போகிறோம்.

விதைக்கிறவன் எதிர்பார்ப்புகளோடு விதைக்கிறான். எந்த விவசாயியும் விதையை விதைக்கும்போது, எதிர்பார்ப்பு இல்லாமல் விதைக்கமாட்டான். ஏதோ கடமை முறைக்காக விதைக்க மாட்டான். நன்மை வருமோ அல்லது வராதோ என்ற சந்தேகத்தோடு விதைக்க மாட்டான். எந்த விதையை விதைத்தாலும் அது முளைத்து பயிராகி ஏராளமான பலன்களை கொடுக்கும் என்கிற அந்த எதிர்பார்ப்புடன்தான் விதைப்பான். இதேபோலத்தான் நமது ஆண்டவராகிய இயேசுவானவரும் பரலோக இராஜ்ஜியத்தின் உண்மைகளையும், தேவ இராஜ்ஜியத்தின் மகிமையின் தத்துவங்களையும் அவர் மக்களுக்குள் விதைக்கிறார் என்றால் அவருக்கும் மிகுந்த எதிர்பார்ப்புகள் உண்டு. முப்பது, அறுபது, நூறாக பலன் கொடுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்போடு விதையை விதைக்கிறார்.

அருமையானவர்களே, உங்களிடத்திலே ஆண்டவர் மிகுந்த எதிர்பார்ப்புகளோடு விதைத்துக் கொண்டிருக்கிறார். இதோ, உங்கள் மூலமாக தேவநாமம் மகிமைப்படவேண்டும், தேவஇராஜ்ஜியம் கட்டப்படவேண்டும், தேவனுடைய சாட்சியாக நீங்கள் விளங்க வேண்டும் என்கிற காரியத்திற்காக அவர் எதிர்பார்ப்போடு விதைக்கிறார்.

யூத வழக்கத்தின்படி விதைக்கிறவன் நிலத்தைப் பார்த்து விதைக்கிறது இல்லை. ஒருவன் விதைத்துக் கொண்டே போவான், பின்னாலே ஒருவன் உழுதுகொண்டே போவான். உழுதுகொண்டு போகும்பொழுது அந்த நிலத்திலே அந்த விதைகள் அமுங்கி, மறைந்துகொண்டு அது முளைக்கும். பனி பெய்யும்போது, மழை பெய்யும்போது, முன்மாரி பின்மாரி பெய்யும்போது அது முளைத்து செடியாக மாறி பலன் கொடுக்கும். அப்படியானால் விதைக்கும்பொழுது கற்பாறையா, முட்செடியா, வழியருகேயா என்று பார்த்துக் கொண்டு விதைப்பதில்லை. எல்லா இடமும் விதைக்கிறார். எந்த இடத்தையும் பார்த்து விதைப்பதில்லை.

அவ்வாறாக தான் ஆண்டவராகிய கர்த்தரும் நீ நல்லவன் என்று உனக்கு நேராக விதைக்கவில்லை, நீ கெட்டவன் என்று உனக்கு நேராக விதைக்காமல் போனதில்லை. நீ விழுந்து போனாய் என்பதற்காக வேத வசனத்தை உன்னிடம் அனுப்பாமல் இருந்ததில்லை. நீ பின் வாங்கிபோனாய் என்பதற்காக வேதவசனத்தை உனக்கு அறிவிக்காமல் இருந்ததில்லை. நீ நல்லவனோ, கெட்டவனோ நற்செய்தியை அறிந்தவரோ, அறியாதவரோ, ஆண்டவரை ஏற்றுக்கொண்டவரோ, ஏற்றுக்கொள்ளாதவரோ எப்படிப்பட்டவராய் இருந்தாலும் ஆண்டவர் பட்ச பாதம் பாராதபடி உலகத்தில் ஒவ்வொரு மக்களுக்கும் சுவிசேஷ வசனத்தை விதைக்கிறார். ஆண்டவர் நிலத்தைப் பார்த்து விதைப்பதில்லை. எல்லோருக்கும் நற்செய்தி, பரலோக இராஜ் ஜியத்தின் செய்தி சமவாய்ப்பாக கொடுக்கிறார்.

ஆண்டவர் தமது வசனத்தை விதைக்கும்போது,
(1) எதிர்பார்ப்புகளோடு விதைக்கிறார்
(2) சம வாய்ப்பு கொடுக்கிறார்.
(3) பலனை எதிர்பார்க்கிறார்.

முப்பது, அறுபது, நூறு என்று பலனுக்காக காத்திருக்கிறார். இதுதான் விதைக்கிறவராகிய ஆண்டவரின் பெரிய பாரம்!

அருமையானவர்களே, நற்செய்தி ஊழியம் செய்கிற நானும், நீங்களும் சுவிசேஷ அறுப்பு பணியை செய்கிற நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவிதத்திலே ஆண்டவருக்காக பணி செய்து வருகிறோம். நாம் என்ன செய்யவேண்டும்? அவரது சுவிசேஷத்தை, தேவ இராஜ்ஜியத்தின் செய்தியை எதிர்பார்ப்போடு விதைக்க வேண்டும்.

நிலத்தைப் பார்த்து விதைக்க வேண்டாம். எல்லா மக்களையும் பார்த்து சுவிசேஷத்தை சொல்லுவோம். பலனுக்காக காத்துக் கொண்டு இருப்போம். நிச்சயமாய் பலன் வரும். உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதன் பலனைக் காண்பாய் (பிரச.11:1). ஆதிகாலத்திலே மிஷனரிமார்கள் வந்து தேசமெங்கும் பாடுபட்டு, தியாகம் பண்ணி அவர்கள் சுவிசேஷத்தை பிரசங்கம் பண்ணி அந்த விதையை விதைத்தார்கள். அவர்கள் விதைக்கும்போது சூழ்நிலை விரோதமாக இருந்தது, எதிர்மறையாக இருந்தது, நம்பிக்கைக்கு அடையாளமில்லாமல் இருந்தது. ஆனால் விதைக்கிறவன் உவமையைப் போல எதிர்பார்ப்போடு விதைத்தார்கள். நல்லவர், கெட்டவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் எல்லாருக்கும் சேர்த்து விதைத்தார்கள். பலனுக்காக எதிர்பார்த்தார்கள். அந்த பலனை எத்தனையோ ஆண்டுகள் கழித்து நீங்களும் நானும் சந்திக்கிறோம். எனவே விதைக்கிறவராகிய இயேசுவைப் போல நாமும் எதிர்பார்ப்போடு விதைக்கிறவர்களாக மாறுவோம்.

சத்தியவசனம்