முகத்திரைகள் கிழியட்டும்!

சகோதரி சாந்தி பொன்னு
(ஜூலை-ஆகஸ்டு 2011)

சமீபத்தில் இலங்கை வந்திருந்த லோகோஸ் என்ற கப்பலில் ஏராளமான புத்தகங்களைக் கண்காட்சிக்காக வைத்திருந்தார்கள். அவற்றில் 2005ஆம் ஆண்டு பதிப்பான WEAR THE CROWNS (கிரீடத்தை அணிந்துகொள்) என்ற ஆங்கிலப் புத்தகமும் ஒன்று. அதிலே திடுக்கிடும் தகவல் ஒன்று எழுதப்பட்டிருந்தது. அதாவது, கடந்துபோன 19 நூற்றாண்டுகளாக சுவிசேஷத்தினிமித்தம் கொல்லப்பட்டவர்களின் முழுத்தொகையைப் பார்க்கிலும் இந்த 20ஆம் நூற்றாண்டில் மாத்திரம் மரித்தவர்களின் தொகை அதிகம் என்றும், சில ஆதாரங்களின் அடிப்படையில் வருடாவருடம் ஏறத்தாழ 1,60,000க்கும் மேற்பட்ட விசுவாசிகள் சுவிசேஷத்தினிமித்தம் தங்களைப் பலியாக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் எழுதப்பட்டிருந்தது. இதைக் குறித்து ஊடகங்கள் அதிகமாக அலட்டிக்கொள்வதில்லை. நமக்கும் அறிந்துகொள்ள ஆர்வம் இல்லை. வேறு வழிகளில் தற்சமயமாக நாம் கேள்விப்பட்டாலும்கூட, நமது வீட்டுக் கதவுகள் தட்டப்படும்வரைக்கும் நமக்கு இவை வெறும் செய்திகள்தான். நமது வாழ்வு, நமது இனம், நமது சொகுசு, இதுதான் நமது தேவை. பல நவீனங்களால் உலகம் நம்மை நிரப்பி, சிந்திப்பதற்கே நேரமற்றவர்களாக மாற்றிப்போட்டது. பெருமை, ஆடம்பரம், அந்தஸ்து என்று பலவித அழகான வசீகரமான முக்காடுகளை இந்த உலகம் நமக்குத் தந்திருக்கிறது. நாமும் அவற்றைப் போட்டுக்கொண்டு வெளிவாழ்வில் பெருமையோடு உலா வருகிறோம். உள் வாழ்விலோ நமது இருதயத்திற்கு முக்காட்டைப் போட்டுவிட்டு உண்மையை உணராதபடிக்கு மனதைக் கல்லாக்கி விடுகிறோம். இதனால் நமது வாழ்வின் இலக்கையே மறந்துவிடுகிறோம். அது என்ன நமது வாழ்வின் இலக்கு? இயேசுவைத் தரித்துக்கொள்ளவேண்டும்; கிறிஸ்துவின் சாயலைத் தரித்துக்கொண்டு அவருடைய மகிமையிலே சேர்ந்துகொள்ள வேண்டும் (ரோ. 8:28-30). இதற்காக நாமும் ஆயத்தமாகி, பிறரையும் தயார் செய்வதைத் தவிர இந்த உலகில் நமக்கு வேறு என்ன வேலை?

மோசே போட்டுக்கொண்ட முக்காடு:

ஆகையினால்தான் பவுலடியார், ஒழிந்து போவதின் முடிவை இஸ்ரவேல் புத்திரர் நோக்கிப் பாராதபடிக்கு, மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை (2கொரி.3:13) என்று ஆணித்தரமாக எழுதியுள்ளார். அது என்ன மோசே போட்டுக்கொண்ட முக்காடு? சீனாய் மலையிலே கற்பனைகளைப் பெற்றுக்கொண்ட மோசே திரும்பிவந்தபோது, இஸ்ரவேல் புத்திரர் கன்றுக்குட்டியொன்றை வணங்கி ஆர்ப்பரித்ததைக் கண்டு, ஆத்திரமடைந்து அந்தக் கற்பலகைகளை உடைத்துப்போட்டது நமக்குத் தெரியும். பின்னர், இரண்டாம் தடவையாக, முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொண்டு, கர்த்தர் சொன்னபடி மலையின்மேல் ஏறினார் மோசே. அங்கே அவர் நாற்பது நாட்களாக புசியாமல் குடியாமல் கர்த்தரோடே இருந்தார். மோசே அந்த சாட்சிப் பலகைகளை எடுத்துக்கொண்டு மலையிலிருந்து இறங்கியபோது, கர்த்தரோடே இருந்ததால் தன் முகம் பிரகாசித்திருந்ததை மோசேயே அறியாதிருந்தார். ஆனால், ஜனங்கள் அதைக் கண்டு பின்வாங்கினார்கள். மோசே அவர்களைக் கிட்ட அழைத்து, கர்த்தர் சொன்னதையெல்லாம் அவர்களோடே பேசிச் சொன்னார். மோசே, கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும்போது முக்காடு போட்டுக்கொள்வதில்லை. திரும்பிவரும்போது மக்கள் அவரது முகத்தின் பிரகாசத்தைக் கண்டார்கள். மக்களோடு பேசிமுடித்தபின்பு, திரும்பவும் கர்த்தரோடே பேசும்படிக்குப் போகும்வரைக்கும் மோசே தன் முகத்திலே முக்காடு போட்டுக் கொள்வார். இதுதான் நடந்தது (யாத்.34:27-35).

இந்தப் பகுதியைக் குறித்துத்தான் பவுலடியார் கொரிந்து சபைக்கு எழுதுகிறார். விக்கிரக ஆராதனைகளாலும் சீர்கெட்ட வாழ்க்கை முறைகளாலும் பயமுறுத்தலுக்குள்ளான கொரிந்து சபையானது தனது விசுவாசத்தில் நிலைத்திருக்க அன்று மிகவும் போராடவேண்டியதிருந்தது. அதற்காகவே பவுல் முதலாம் நிருபத்தை எழுதினார். ஆனால், கள்ளப் போதகர்களும், தவறான போதனைகளும் பவுலின் அப்போஸ்தல ஊழியத்தையும், அவருக்கிருந்த அதிகாரத்தையும் குறித்து மக்களை சந்தேகப்பட வைத்தது. கொரிந்து சபையும் தன் விசுவாசத்தில் ஆட்டம் கண்டது. இதன் காரணமாக தேவன் தன்னில் வைத்திருக்கும் அதிகாரத்தை ஆணித்தரமாக விளங்கவைக்க எழுதப்பட்டதுதான் இந்த இரண்டாம் நிருபம். இந்த வகையில் பவுலடியார் மோசேயின் ஊழியத்தையும், இன்று தனக்கும் கிறிஸ்தவ விசுவாசிகளுக்கும் கொடுக்கப்பட்ட புதிய உடன்படிக்கையின் ஊழியத்தையும் ஒப்பிட்டு 2கொரி.3:3-18 வரையிலான பகுதியிலே விளக்கியிருப்பதை நாம் காண்கிறோம்.

மோசேயின் ஊழியமும் பவுலின் ஊழியமும்:

மோசே செய்த ஊழியம் மகிமையானது; நியாயப்பிரமாணம் அவசியமானது. அதுவே அன்று தேவஜனத்திற்குப் பாவத்தை அறியும் அறிவைக் கொடுத்தது (ரோ.3:20). ஆனால், செய் என்றும் செய்யாதே என்றும் எழுதப்பட்ட அந்த நியாயப்பிரமாணம் முழுவதையும் ஒருவன் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான் (யாக்.2:10). இப்படியாக, நியாயப் பிரமாணம் ஒரு மனிதனை விடுவிக்கமுடியாததால், இயேசுகிறிஸ்து கிருபையாக இறங்கி வந்து, தம்மைப் பலியாகத் தந்து நம்மை இன்று விடுவித்திருக்கிறார் என்று பவுல் விளக்குகிறார். அந்த புதிய உடன்படிக்கையின் ஊழியராக தாம் நியமிக்கப்பட்டிருப்பதை உறுதிப் படுத்தினார்.

அப்படியானால் மோசேயின் ஊழியம் தவறா? இல்லை. கற்பலகைகளிலே எழுத்துக்களால் எழுதப்பட்டதும், நிலையற்றதுமான நியாயப் பிரமாணம், கோபாக்கினையை உண்டாக்குகிறதுமாயிருந்தது. அது மரணத்திற்கேதுவான ஊழியத்தையேச் செய்தது. அப்படிப்பட்ட மோசேயின் அந்த ஊழியமே பிரகாசமுள்ளதாயிருந்தது என்பதையே பவுல் விளக்குகிறார். அந்த ஊழியம் தவறல்ல, அற்றுப்போகவுமில்லை. இயேசுவானவர், நியாயப்பிரமாணத்தை அழிக்கவல்ல, நிறைவேற்றவே வந்தார். இப்படியிருக்க மங்கிப்போனதும், ஒழிந்துபோகும் மகிமையையுடையதும், ஆக்கினைத் தீர்ப்புக்குரியதுமான அந்த ஊழியமே பிரகாசமுடையதாயிருந்தால், இருதயத்திலே எழுதப்பட்டதும், ஆவிக்குரியதும், நிலையானதும், நித்தியத்திற்கு நடத்துகிறதும், நீதியைக் கொண்டிருக்கிறதுமான கிறிஸ்துவினாலுண்டான புதிய உடன் படிக்கையின் ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுடையதாயிருக்கும் என்றும் இந்த ஊழியம் மோசேயின் ஊழியத்திலும் குறைந்ததல்ல என்பதையுமே பவுல் சுட்டிக்காட்டுகிறார். அந்த மகிமையின் ஊழியத்தையே பவுல் செய்தார். இன்று நமக்கும் அந்த ஊழியமே கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த இடத்திலே பவுலடியார் நமக்கு மோசேயின் சம்பவத்தை எடுத்து, இரண்டுவித காரியங்களை விளக்குகிறார். ஒன்று மோசே முகத்தில் போட்டுக்கொண்ட முக்காடு. இரண்டாவது, இஸ்ரவேலர் தங்கள் இருதயத்திற்குப் போட்டுக்கொண்ட முக்காடு.

முகத்தின் முக்காடு:

மோசே கர்த்தருடைய பிரசன்னத்தில் இருந்தபோது, அவருடைய முகம் பிரகாசித்தது. அந்தப் பிரகாசத்தை மக்கள் கண்டார்கள். ஆனால், அந்தப் பிரகாசம் மங்கிப்போகிற பிரகாசமாயிருந்ததால், மக்கள் அதனைக் காணாதபடிக்கு, அடுத்த தடவை தேவ பிரசன்னத்துக்குள் போகும்வரைக்கும் மோசே தனது முகத்தின்மேல் ஒரு முக்காட்டைப் போட்டுக் கொண்டார். ஏனெனில் அவருடைய முகத்தில் இருந்தது மங்கிப்போகும் பிரகாசம், ஒழிந்து போகும் பிரகாசம்.

ஆனால், கிறிஸ்துவின் ஊழியம் மங்கிப்போகிறதில்லை, அது நிலையானது. ஆகையால், அந்த ஊழியத்தைப் பெற்றுக்கொண்ட தேவ பிள்ளைகள் தங்கள் முகங்களில் முக்காடுகளை அல்லது முகமூடிகளைப்போட்டு தங்கள் முகங்களை, அதாவது தங்கள் வெளிவாழ்க்கைகளை மறைத்து போலித்தனம் செய்யவேண்டிய அவசியமில்லை. நாம் கிருபையினாலே பிரகாசிக்கப்பட்டவர்கள். இன்று தேவனுடைய வார்த்தையானது கற்பலகைகளில் எழுதப்படவில்லை; நமது சதையான இருதயத்தில் எழுதப்பட்டிருக்கிறது. எந்த மனுஷராலும் அதை வாசிக்கும்படி நாங்களே இன்று நிருபங்களாக அழைக்கப்பட்டிருக்கிறோம். இது மனுஷனால் உண்டானதல்ல, தேவனாலே உண்டானது. இப்படியிருக்க கலப்பான செய்திகளையும், துப்புரவற்ற செய்திகளையும், மக்களைத் திருப்திப்படுத்திக் கவருகின்ற போலியான செய்திகளையும் நாங்கள் கொடுப்பதில்லை என்கிறார் பவுல். நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவர்களாதலால், மிகவும் தாராளமாய்ப் பேசுகிறோம் என்று முழங்கினார் பவுல். சத்தியத்தை சத்தியமாகப் பேச பவுல் தயங்கவில்லை. அதற்காகத் தன் தலை வெட்டப்படுவதையும் அவர் எதிர்க்கவில்லை.

ஆனால் இன்று, பலவித முகமூடிகளைப் போட்டுக்கொண்டு நாம் ஏன் திரியவேண்டும்? ஏறத்தாழ 23 வருடங்களுக்கு முன்னர் நானும் பலவித முகமூடிகளால் என்னை மறைத்துக் கொண்டவள்தான். ஆனால், இந்த முகமூடி என்னில் இருந்த பிரகாசம் மங்கிப்போவதை மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்காகப் போடப்பட்டது அல்ல; மாறாக, என் வாழ்வில் இருந்த இருளைப் பிறர் பார்க்காதபடிக்கு நான் போட்டுக்கொண்ட முக்காடு அது. நான் ஒரு கிறிஸ்தவள், நல்லவள், உதவி செய்கிறவள், தாராளமாகக் கொடுப்பவள், வேலை ஸ்தலத்தில் மிகவும் கைராசியுடையவள், இப்படி எத்தனை முகமூடிகள். இவற்றால் மக்கள் கவரப்பட்டனர். ஆனால், மீட்கப்படாத என் உள்வாழ்வு? அதை யாரறிந்தார்? அவை யாவும் முக்காடுகளாகவே எனக்குப் பயன்பட்டன என்பதை நான் அப்போது உணரவில்லை.

ஆனால், எப்போது கிறிஸ்துவண்டை நான் இழுக்கப்பட்டேனோ அப்போது கிறிஸ்து அந்த முகத்திரைகளைக் கிழித்தெறிந்தார். இன்று பயமில்லை, கர்த்தர் என்னைப் பாவத்திலிருந்து இரட்சித்தார் என்று சொல்வதில் வெட்கமில்லை. ஏனெனில் இந்தப் பிரகாசம் தேவன் நிரந்தரமாகவே நமக்குத் தந்திருக்கிறார். நாம் பொய் சொல்லவோ, கவர்ச்சியான போதகங்களைச் செய்யவோ நம்மை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ளவோ தேவையில்லை. நாம் பெற்றிருக்கும் இந்த மகிமைப் பிரகாசம் மங்கிப்போவதில்லை. ஆகையால் நாம் போலித்தனங்களைவிட்டு, தேவன் நம்மைத் தமது நிருபங்களாக இந்த உலகில் உலாவருவதற்கு வைத்திருப்பதை உணர்ந்து தைரியமாகப் பேசலாமே; தைரியமாக சாட்சிகளாக வாழலாமே; தைரியமாக வார்த்தையில் வைராக்கியமாய் நிற்கலாமே. ஏன் தயக்கம். நான் கிறிஸ்தவன், சபையிலே அந்தஸ்திலே இருக்கிறவன், உயர் பதவி வகிக்கிறவன் இப்படி எத்தனை முகமூடிகள். பதவிகளும் பட்டங்களும் தேவ தயவினாலேயே நமக்குக் கிடைக்கின்றன. இவற்றை நாம் முகமூடிகளாக்கக்கூடாது. நமது உண்மையான முகங்களை மறைத்திருக்கும் முகத்திரைகளைக் கிழித்தெறியும்படி இன்றே கிறிஸ்துவண்டை திரும்புவோமாக.

இருதயத்தின் முக்காடு:

இரண்டாவது, அன்று நியாயப்பிரமாணம் சுட்டிக்காட்டிய கிறிஸ்துவை, அவரால் உண்டாகும் மீட்பை, அன்றைய இஸ்ரவேலரால் கண்டுகொள்ளமுடியவில்லை. மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள் வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே என்கிறார் பவுல் (2கொரி.3:15). ஆம், இன்றும் பலியாய் வந்த கிறிஸ்துவைக் கண்டுகொள்ள யூதர்களால் முடியவில்லை. இதற்கு அவர்களுடைய கடின இருதயமே காரணம். நாங்கள் யூதர், நமது மதமே உலகிலே சிறந்ததும் முதற்தரமுமானதும், யெகோவா தேவன் நம்முடைய தேவன், நம் மூலமாகவே உலகிற்கு இரட்சிப்பு என்ற காரியங்கள் அவர்களது இருதயத்திற்கு முக்காடாயிற்று. இதனால் பெருமை, வைராக்கியம், கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளமுடியாத தன்மை இவையாவும் சேர்ந்து அவர்களது இருதயத்தைக் கடினப்படுத்திவிட்டது. இந்த முக்காடு கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது என்கிறார் பவுல்.

என் வாழ்விலும் கிறிஸ்துவைக் காணாதபடிக்கு சுயவிருப்பங்கள், உலக காரியங்கள், பல போலித்தனங்கள், சுயபரிதாபம் போன்ற பலவித முக்காடுகள், கடவுளாகிய கிறிஸ்துவை மீட்பராகக் காணாதபடிக்கு என் இருதயத்தைக் கல்லாக்கியிருந்தது. ஆனால், கிறிஸ்துவிடம் திரும்பியபோது, அவர் அவற்றையெல்லாம் கிழித்தெறிந்தார். கிழித்தெறியும்போது மிகவும் கஷ்டம்தான். ஆனால் கிழிக்கப்பட்ட பின்னர் உண்டான விடுதலையை விளக்க வார்த்தைகள் இல்லை.

பவுலின் முக்காடுகள்:

பவுலடியாரும் பலவித முக்காடுகளுக்குள் தம்மை மறைத்துக்கொண்டவர்தான். யூதன், எபிரேயன், கமாலியேலிடம் கல்வி கற்றவன், மத வைராக்கியமுள்ளவன், சனகெரிப் சங்கத்தின் இளம் அங்கத்தினன், இப்படியாக எத்தனையோ முகமூடிகள். இதனால் அவருக்குள் ஒரு பெருமை, அகங்காரம், வைராக்கியம் எல்லாம் சேர்ந்து அவருடைய இருதயத்தைக் கடினப்படுத்தி, இருதயத்திற்கும் ஒரு முக்காட்டைப் போட்டு மறைத்துவிட்டது. ஆனால், நீ துன்பப் படுத்துகிற கிறிஸ்து நானே என்ற சத்தம் கேட்டபோது, இந்த முகத்திரைகள் யாவும் ஒன்றன்பின் ஒன்றாகக் கிழிந்தன. அவர் விடுதலையானார்; தைரியமாகப் பேசினார். இதன் பலனாக கிறிஸ்துவுக்காய், சுவிசேஷத்திற்காய் இரத்தசாட்சியாக தலை வெட்டப்பட்டு மரிக்கவும் அவர் தயங்கவில்லை.

திறந்த கண்ணாடியின் முன் திறந்த வாழ்வு:

நாம் முக்காடுகள் நீங்கப்பெற்றவர்களானால் நாம் ஆவியானவருக்குள் விடுதலை பெற்றிருக்கிறோம். இப்போது மறைவு இல்லை. போலித்தனம் இல்லை. திறந்த முகத்தோடு திறந்த கண்ணாடிக்கு முன்னே பார்ப்பதுபோல நமது வாழ்க்கை இருக்கிறது, இருக்கவேண்டும். நம்மைக் காண்கிறவர்கள் அந்தத் திறந்த முகத்திலே கிறிஸ்துவைக் காணவேண்டும். நமது வாழ்விலே கிறிஸ்துவின் மகிமை வெளிப்படவேண்டும். நாம் பெற்றுக்கொண்ட பிரகாசம் மங்கிப்போவதில்லை. மகிமையின் மேல் மகிமையடைந்து மறுரூபமடைவதால், அந்தப் பிரகாசம் அனுதினமும் வளர்ச்சியடைகிறது. இயேசுகிறிஸ்துவை, அவருடைய குணாதிசயங்களை, அவரது சிந்தையை நாம் தரித்துக்கொண்டு, அவரைப்போலாகி, அவரோடு இணைகின்ற இந்த ஓட்டத்திலே நாம் முன்னேறிக்கொண்டே இருக்கவேண்டும். இதுதான் பரிசுத்தாவியானவருக்குள்ளான விடுதலை. பரிசுத்தாவியானவர் நமக்குள்ளே வாசம் பண்ணுகிறார் என்று பாடல் பாடினால் போதாது. அவருக்குள்ளான விடுதலை நமது உள் வெளி வாழ்க்கைகளிலே வெளிப்படுகிறதா என்பதுதான் கேள்வி?

நமது முகத்திரைகள் கிழியட்டும்:

இப்படியிருக்க, இன்று ஏன் பல முக்காடுகளும் முகத்திரைகளும்? ஏன் உள்ளே ஒருவித வாழ்வு, வெளியே இன்னொரு போலித்தனமான வாழ்வு? கவர்ச்சியான, கபடமான போதனைகளை நாடி ஏன் நாம் ஓடவேண்டும்? நமக்கு விடுதலை தந்த சத்தியத்திற்காக நாம் ஏன் வைராக்கியமாய் வாழுவதில்லை. நமக்குத் தேவன் கொடுத்த அந்த அதிகாரம் எங்கே? பவுலடியார் ஒரு அப்போஸ்தலன் என்றால், நாம் கிறிஸ்துவுக்கு ஊழியர் இல்லையா? பவுலுக்கு மகிமையின் ஊழியத்தைக் கொடுத்த அதே கிறிஸ்துதானே நமக்கும் ஆண்டவர். அவருக்கு விடுதலையளித்த அந்த பரிசுத்த இரத்தம் தானே நம்மையும் இரட்சித்தது? அப்படியிருக்க ஏன் நமது வாழ்வில் வளர்ச்சி இல்லை. நாம் அப்பப்போ சீனாய்மலைக்கு ஏறி பிரகாசத்தைப் பெற்றுக்கொள்கிறவர்கள் அல்லவே, அது மங்கிப்போக. நியாயப்பிரமாணம் காட்டிய இயேசுவை, இஸ்ரவேலர் கண்டுகொள்ளாதபடி அவர்களது இருதயம் கடினப்பட்டது. ஆனால், ஆண்டவர் நம்மீது காட்டிய கிருபையை நாம் என்னவென்று சொல்ல. இன்று நமக்குக் கிறிஸ்துவைத் தெரியும். அவர் அருளிய இரட்சிப்பு தெரியும். அவருடைய உறவைத் தெரியும். அவருடைய வார்த்தை நமது கைகளிலே இருக்கிறது. அப்படியிருக்க, அந்த வார்த்தையினால் நமது இருதயத்தை நிரப்பாமல், உலகத்திற்கு நமது இருதயத்தை விற்றுப்போடலாமா? நமது முகப்பிரகாசங்கள் மங்கிப்போக இடமளிக்கலாமா? கிறிஸ்துவிடம் திரும்புவோம். அவர் நமது முகத்திலும் இருதயத்திலும் உள்ள முகத்திரைகளைக் கிழித்துப்போட நம்மை ஒப்புவிப்போம். நமக்கூடாக தமது பிரகாசம் இந்த உலகில் பிரகாசிக்கட்டும் என்று நம்பித்தானே அவர் நம்மைத் தமது பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டார். அப்படியிருக்க நாம் ஏனோதானோ என்று ஜீவிக்கலாமா? எழும்புவோம், சத்தியத்திற்காக எழும்புவோம். கர்த்தரே, தமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் தமது வார்த்தையை அவர் மகிமைப்படுத்தியிருக்கிறார் (சங்.138:2). அப்படியிருக்க, அந்த வார்த்தையை, அதனாலுண்டாகும் பிரகாசத்தை நாம் நினையாமற்போகலாமா?

நமது முகங்கள் பிரகாசிக்கட்டும். அந்தப் பிரகாசம் அன்றாடம் வளரட்டும். ஆண்டவரோடு அதிக நேரம் ஜெபங்களில் செலவழிக்க நம்மை அர்ப்பணிப்போமாக. வார்த்தையைப் படித்து உட்கொள்ள இன்னும் அதிக நேரத்தைக் கொடுப்போமாக. முகத்திரைகள் நிலையானது அல்ல. அது உரிக்கப்பட்டுப்போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அன்று இஸ்ரவேலுக்குக் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதம் இன்று நம்முடையதாகட்டும். கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே (எண்.6:24-26) ஆமென்.

சத்தியவசனம்