ஆசரிப்புக்கூடாரத்தில் கிறிஸ்துவின் சாயல்

Dr.தியோடர்.எச்.எஃப்
(ஜூலை-ஆகஸ்டு 2011)

பொன் குத்துவிளக்கு

பரிசுத்த ஆவியின் ஏழு அம்சங்கள்

பரிசுத்த ஆவியின் அம்சங்கள் ஒவ்வொன்றையும் குத்துவிளக்கின் ஒவ்வொரு தண்டோடு இணைத்துப் பரிசீலிப்பது மகிழ்ச்சி தரும். ஏசாயா11:2 இல் இவற்றை காண்கிறோம்.

முதலாவதாக பரிசுத்த ஆவி. கர்த்தருடைய ஆவியானவர் என்று அழைக்கப்படுகிறார். வசனம் 2 கடைசிப் பகுதி, கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் இருப்பார் என்று ஏசாயா கூறுவதால் அது குத்துவிளக்கின் நடுத் தண்டைக் குறிக்கலாம்.

அடுத்தபடியாக ஒரு ஜோடியாக ஞானத்தையும்” “உணர்வையும் அருளும் ஆவி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஞானம் (Wisdom) என்பது அறிவைக் காட்டிலும் உயர்ந்தது. அறிவை நல்ல முறையில் பயன்படுத்துவதே ஞானம் எனப்படும். உணர்வு என்பது (Understanding) புரிந்துகொள்ளுதல். இந்த ஆவிதான் நாம் சத்தியத்தை அறிந்து உணர்ந்து கொள்ள உதவுகிறது.

அடுத்தபடியாக இரண்டு அம்சங்கள் இணைத்துக் கூறப்பட்டுள்ளன. அவை ஆலோசனையையும், பெலனையும் அருளும் ஆவி. ஆலோசனை (Counsellor) ஏசாயா.9:6 இல் இயேசுவுக்குப் பல நாமங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று ஆலோசனைக் கர்த்தர். பரிசுத்த ஆவியானவர் நாம் கர்த்தருடைய வார்த்தையை வேதாகமத்தில் வாசிக்கும்போதும், அவற்றை நம் வாழ்வில் செயல்படுத்த முற்படும்போதும் பரிசுத்த ஆவியானவர் நமக்கு ஆலோசனை தருகிறார்.

அடுத்தது பெலன் (Might). பரிசுத்த ஆவியானவர் நமக்கு கிறிஸ்துவின் வல்லமையையும், பெலனையும் தருகிறார். கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள் (எபே.6:10). பரிசுத்த ஆவியின் மூலமாக ஒவ்வொரு விசுவாசியும் கிறிஸ்துவுக்குள் பலமுள்ளவர்களாக இருக்க முடியும்.

மூன்றாவது இணையாகக் கூறப்பட்டிருப்பது: அறிவையும், கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவி.

அறிவு பரிசுத்த ஆவியானவர் நமக்கு இயேசுகிறிஸ்துவைக் குறித்த அறிவைத் தருகிறார். இயேசு இப்படிக் கூறியிருக்கிறார்: சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக் குறித்துச் சாட்சி கொடுப்பார் (யோவா.15:26). பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து, உங்களுக்கு அறிவிப்பார் (யோவான் 16:15). இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்…. (பிலி.3:10). இப்படிப் பவுலின் தணியாத ஆசை கிறிஸ்துவைப் பற்றி இன்னும் அதிகமாக அறிய வேண்டும் என்பதே.

பரிசுத்த ஆவியானவர் நமக்குச் சர்வவல்லமையுள்ள தேவனைப் பற்றிய அறிவைத் தருகிறார். பக்தன் யோபு இவ்வாறு கூறுகிறார் என் காதினால் உம்மைக் குறித்துக் கேள்விப் பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது (யோபு 42:5). நாம் ஆண்டவரை நன்றாகப் புரிந்து கொள்ளும்போது, நம்மிடத்தில் ஒரு பயம் உண்டாகும். நாம் எதைக் கண்டோ பயப்படுவது போன்ற பயம் அல்ல. இது பயபக்தியுடன் கூடிய ஒரு பயம். பரிசுத்த ஆவியின் ஊழியம் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தை உண்டாக்க வேண்டும் (ஏசா.11:2).

வரப்போகும் மகா உபத்திரவ காலத்தின் போது, கிறிஸ்துவோடிருக்கும்படி சபையானது எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர், ஏழுவகை ஆவிகளும் ஆவிக்குரிய ஒளியைத் தரும். அதனால் முற்றிலும் சரியான நியாயத்தீர்ப்பு தரப்படும். இந்தக் காலத்தில் இயேசு இந்த உலகத்தில் தம்மை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது நியாயத்தீர்ப்பை அனுப்புவார். அவர் இந்த ஏழுவகை ஆவிகளின் மூலமாக நியாயத்தீர்ப்பு செய்வார். அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன (வெளி.4:5). யோவான் இந்தக் காட்சிகளைக் காண அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக் கண்டேன்; அது ஏழு கொம்புகளையும், ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம் (வெளி.5:6) என்று யோவான் கூறினார்.

பொன் குத்துவிளக்கு காட்டும் ஏழு உட்கருத்துக்கள்

பொன் குத்துவிளக்குக்கு ஏழு உட்கருத்துக்கள் உள்ளன. அவை அடையாளப் பூர்வமானவை.

முதலாவது காரியம் அந்தப் பொன் குத்துவிளக்கு ஒரே பெரிய பொன் பாளத்திலிருந்து அடித்து செய்யப்பட்டிருந்தது. (யாத்.25:31). இது அடித்து, துன்புறுத்தப்பட்ட இயேசுவைக் குறிக்கிறது. இயேசு உயிர்த்தெழுந்து மகிமையடைந்திருக்கிறார். பொன் பாளம் உருக்கப்படாமல் அடிப்பு வேலையாய் கிளைகளும், கிண்ணங்களும், பூக்களும், மொக்குகளுமாகச் செய்யப்பட்டன. குத்து விளக்கு செய்து முடிந்ததும் தீபம் ஏற்றப்பட்ட பின் அழகாக ஒளிவீசிக் கொண்டிருக்கும். அதுபோலவே இயேசுகிறிஸ்துவும் பலபாடுகள் பட்டு, அடித்து நொறுக்கப்பட்ட போதிலும், இறுதியில் உயிர்த்தெழுந்து, மகிமையடைந்ததை இது காட்டுகிறது.

பொன்னினால் குத்துவிளக்கு செய்யப்பட்டது. பொன் தெய்வீகத்தைக் குறித்தது. சிலவேளைகளில் ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் தேவன் என்ன செய்ய விரும்புகிறார் என்பதை இது காட்டுகிறது. யோபு இப்படிக் கூறினார்: தேவன் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன் (யோபு23:10). இதில் விசுவாசி தேவனுக்கு முன்பாக சுத்தப் பொன்னாக விளங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. பேதுரு இப்படிக் கூறுகிறார்: அழிந்து போகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப் பார்க்கிலும் அதிகம் விலையேறப் பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும் (1பேது.1:7).

இரண்டாவதாக, பொன் குத்துவிளக்கு பரிசுத்த ஸ்தலத்தின் உள்ளே வைக்கப்பட்டது. ஆசரிப்புக்கூடாரத்தின் வெளியே வைக்கப்படவில்லை. இதிலிருந்து கிறிஸ்து உலகத்திலிருந்து மறைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் உள்ளே விசுவாசிகளுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார். ஏனெனில் விசுவாசிகள் ஆசாரியக்கூட்டமாய் இருக்கிறார்கள். பரிசுத்த ஸ்தலத்தில் ஆசாரியர்கள்மட்டுமே போகமுடியும். இப்பொழுது விசுவாசிகள் அனைவரும் ஆசாரியர்களாய் இருப்பதால் கிறிஸ்துவைத் தரிசிக்கும் வாய்ப்பு அவர்கள் அனைவருக்கும் உண்டு. உலகத்தார் வெளியில் இருந்து கொண்டு இயேசுவைப் பார்க்கும்போது, அவரை ஒரு பெரிய ஆசிரியர் அல்லது பெரிய மனிதன் என்றுதான் காண்கிறார்களேயன்றி, அவருடைய உண்மையான தெய்வீகத்தை அறிவதில்லை. இயேசுவை விசுவாசித்து, இரட்சகராக ஏற்றுக்கொள்ளுகிறவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுலுக்கு இருந்த அதே விருப்பம் இருந்தது. இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அவருடைய பாடுகளின் ஐக்கியத்தை அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன் (பிலி.3:10,11). கிறிஸ்துவைப்பற்றிய இத்தகைய அறிவு பரிசுத்த ஆவியின் மூலமே கிடைக்கிறது.

பொன் குத்துவிளக்கின் வெளிச்சம் நமக்குப் பரிசுத்த ஆவியை நினைவூட்டுகிறது. அவர் கிறிஸ்துவின் மேன்மையை நமக்கு நினைவுபடுத்துகிறார். இந்த மகிமையும், அழகும் உள்ளிருந்து மட்டுமே காணமுடியும். வெளியே இருப்பவர்களுக்கு உள்ளே இருக்கும் அழகைப் பற்றியும், குத்துவிளக்கு எரியும் சிறப்பைப் பற்றியும் ஒன்றும் தெரிந்து கொள்ள முடியாது.

கிறிஸ்துவைப் பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆவலில், நான் அவரைப்பற்றித் தெரிந்துகொண்டேன் என்று நினைக்காமல், நாம் தொடர்ந்து முன்னேற வேண்டும். இதை உணர்ந்துதான் அப்போஸ்தலனாகிய பவுல் இப்படிக் கூறினார். சகோதரரே, அதைப் பிடித்துக் கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக, இலக்கை நோக்கித் தொடருகிறேன் (பிலி.3:13,14).

மூன்றாவதாக, அந்தக் குத்துவிளக்கின் ஏழு தண்டுகள் மேலும் ஒரு கிண்ணம் போன்ற அமைப்பு உண்டு. அதில் சுத்தமான எண்ணெய் நிரப்பப்பட்டிருக்கும். இது கிறிஸ்துவின் ஆவி போதுமானது என்பதைக் குறிக்கும். அவர் விசுவாசிகளுக்கு ஆவியின் நிறைவைத் தந்துள்ளார். ஏசா.11:2 இலிருந்து தேவனுடைய ஏழு வகை ஆவிகளும் நமக்குத் தேவையான அனைத்தையும் தரவல்லவை என்று அறிகிறோம்.

மொழியாக்கம்: G.வில்சன்

சத்தியவசனம்