பயத்தின் மத்தியில் பக்தனின் மனம்

எம்.எஸ்.வசந்தகுமார்
(ஜூலை-ஆகஸ்டு 2011)

தாவீதின் பண்பும் நன்றியும் (சங். 56:12-13)

உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில், அதிகளவு பயத்துடன் இருந்த தாவீதுக்கு, இது வரையில் தன்னை வழிநடத்திவந்த தேவன் தொடர்ந்தும் தன்னைப் பாதுகாப்பார் என்னும் நம்பிக்கை ஏற்பட்டதினால், அவனுடைய மனதிலிருந்த பயம் நீங்கிட, அவனுள்ளத்தில் தேவனை ஸ்தோத்தரிப்பதையும் நன்றி செலுத்துவதையும் பற்றிய சிந்தனைகள் எழுந்தன. இதனால், ஆலயத்திற்குச் சென்று அவருக்கு ஸ்தோத்திரப்பலி செலுத்துவதைப்பற்றிய எண்ணத்துடனும் எதிர்பார்ப்புடனும் தன்னுடைய ஜெபத்தைத் தாவீது நிறைவு செய்துள்ளான். தாவீது ஆரம்பத்தில் பயத்துடன் இருந்ததினால், இச்சங்கீதத்தின் முதலிரு வசனங்களிலும் மனிதர்கள் தனக்கு எதிராகச் செய்யும் காரியங்களைப்பற்றியே அதிகமாகக் குறிப்பிட்டுள்ளான். ஆனால், அவன் தேவனுடைய வார்த்தை, வழிநடத்துதல், வல்லமை என்பவற்றைக் கருத்திற்கொண்டு அவரை முழுமையாக நம்பியதினால், சங்கீதத்தின் இறுதி இரண்டு வசனங்களிலும் தேவனைப்பற்றி அதிகமாக எழுதியுள்ளான்.

மூலமொழியில், முதலிரு வசனங்களிலும் உள்ள ஐந்து வாக்கியங்களில் ஒரு வாக்கியத்தில் மட்டுமே தேவனைப்பற்றிய குறிப்பு உள்ளது. ஏனைய நான்கு வாக்கியங்களும் மனிதர் தாவீதுக்கு எதிராகச் செய்யும் காரியங்களைப்பற்றியே கூறுகின்றன. ஆனால், சங்கீதத்தின் கடைசி இரண்டு வசனங்களிலும், நான்கு வாக்கியங்களில் தேவனைப்பற்றியும், ஒரு வாக்கியத்தில் மாத்திரம் மனிதரைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விதமாக, நம்முடைய மனமும், நமக்கு பயமூட்டும் மனிதர்கள் சூழ்நிலைகள் என்பவற்றிலிருந்து விடுபட்டு, தேவனை முழுமையாக நோக்கிப் பார்க்கவேண்டும். அப்பொழுது பெரிதாகத் தென்படும் பிரச்சனைகள் நம்முடைய பார்வைக்கு சிறியதாக மாறிவிடும். பிரச்சனையைவிடத் தேவன் பெரியவராகவும், பிரச்சனையைத் தீர்க்கக்கூடியவராகவும் நமக்குத் தென்படுவார். இதனால், நம்முடைய ஜெப விண்ணப்பங்கள் ஸ்தோத்திரப் பாடல்களாக மாறிவிடும். அதாவது, நாம் தேவைகளுக்காக மன்றாடுகிறவர்களாக மாத்திரம் இராமல், தேவனை ஸ்தோத்தரித்து மகிமைப்படுத்துபவர்களாக இருப்போம்.

பவுலும் சீலாவும் இத்தகைய மனநிலையில் இருந்ததினாலேயே, அவர்கள் பலதடவைகள் அடிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டபோதும், ஜெபம் பண்ணி, தேவனைத் துதித்துப் பாடிக்கொண்டிருந்தார்கள் (அப்.16:22-25). இவர்களைப்போல, நெருக்கடியான சூழ்நிலையிலும் தேவனை முழுமையாக நம்பி அவரைப் போற்றித் துதித்து மகிமைப்படுத்துவதே கிறிஸ்தவ வாழ்வின் தன்மையாக உள்ளது.

தேவன்மீது நம்பிக்கையுள்ளவன் அவருக்கு நன்றி செலுத்தும் மனநிலையிலேயே இருப்பான் என்பதற்கு தாவீது மிகச்சிறந்த உதாரணமாக இருக்கின்றான். உண்மையில், நெருக்கடியான சூழ்நிலையிலும் நாம் தேவனுக்கு நன்றி செலுத்துபவர்களாக இருந்தால், அதுவே நாம் அவரை நம்புகிறோம் என்பதற்கான அடையாளமாயிருக்கும். நம்முடைய தேவைகளைத் தேவனுக்கு தெரியப்படுத்துவது மாத்திரம் ஜெபம் அல்ல. ஜெபமானது, நம்முடைய தேவைகளைத் தேவன் சந்திப்பார் என்னும் நம்பிக்கையில் அவரை ஸ்தோத்தரித்து மகிமைப்படுத்துவதையும் உள்ளடக்கியுள்ளது. இதனால்தான், தேவைகளுக்காக மன்றாடும் சங்கீதங்கள் அனைத்திலும், பக்தர்கள் தேவனைத் துதித்துப் பாடுவதையும் நாம் காணலாம். 56ஆம் சங்கீதத்திலும் தாவீதின் ஜெபம், தேவன் தன்னை விடுவிப்பார் என்னும் நம்பிக்கையுடன் அவரை ஸ்தோத்தரிக்கும் மன நிலையில் முடிவடைகிறது: தேவனே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனைகள் என் மேல் இருக்கிறது; உமக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்துவேன் (சங். 56:12).

இவ்வசனம், பொருத்தனைசெய்து ஜெபிக்கும் தாவீதின் பண்பையும், தேவன் தன்னை விடுவிப்பார் என்பதில் அவனுக்கிருந்த உறுதியான நம்பிக்கையையும் காண்பிக்கின்றது. உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் இருந்தபோது தாவீது பொருத்தனைசெய்து ஜெபித்துள்ளான். இதனால், தேவனே நான் உமக்குப் பண்ணின பொருத்தனைகள் என் மேலிருக்கிறது என்று 12ஆம் வசனத்தின் முதல் வாக்கியத்தில் அவன் குறிப்பிட்டுள்ளான். பொருத்தனை செய்து ஜெபித்த தாவீது, செய்த பொருத்தனையைக் கட்டாயம் நிறைவேற்றவேண்டும் என்னும் உறுதியுடன் இருந்துள்ளதை இவ்வாக்கியம் அறியத்தருகிறது. உமக்குப் பண்ணின பொருத்தனைகள் என்பது மூலமொழியில் உமது பொருத்தனைகள் என்றே உள்ளது. அதாவது, தாவீது செய்த பொருத்தனைகள் தேவனுடைய பொருத்தனைகளாக, தாவீது கட்டாயம் நிறைவேற்றவேண்டிய தெய்வீகக் கடமைகளாக இருப்பதை மூலமொழியில் இவ்வாக்கியம் அறியத்தருகின்றது. உண்மையில், மனிதர் செய்யும் பொருத்தனைகள், அவர்கள் கட்டாயம் நிறைவேற்றவேண்டிய தேவனுடைய கட்டளைகளாக மாறிவிடுகின்றன. இதனால்தான், தாவீது செய்த பொருத்தனைகள் தேவனுடைய பொருத்தனைகளாக மூலமொழியில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பழைய ஏற்பாட்டுக் கால பக்தர்கள், நெருக்கடியான சூழ்நிலைகளில் பொருத்தனை செய்து ஜெபிப்பதைத் தம் பழக்கமாகக் கொண்டிருந்தனர் (ஆதி.28:20-22, எண்.21:1-3, 1சாமு.1:11, நியா.11:30-31, யோனா.2:9). எனினும், பொருத்தனை செய்துதான் ஜெபிக்கவேண்டும் என்று தேவன் கட்டளையிடவில்லை. இதனால், மனிதர்கள் கட்டாயம் பொருத்தனைகள் செய்யவேண்டும் என்று தேவன் எதிர்பார்ப்பதும் இல்லை. உண்மையில், பொருத்தனைகள் மனிதர் தம் மனவிருப்பத்தின்படி செய்கிறவைகளாகவே இருந்தன. இதனால், மனிதர்கள் நெருக்கடியான சூழ்நிலைகளில் அவசரப்பட்டும், உணர்ச்சிவசப்பட்டும் பொருத்தனைகளைச் செய்கிறவர்களாகவும், பின்னர் அவற்றை நிறைவேற்றுவதில் உறுதியற்றவர்களாகவும் இருந்தனர்.

மனிதருடைய இத்தகைய நிலையைக் கருத்திற்கொண்டவராக, பொருத்தனைகள் செய்தால் அவற்றைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்றும், அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் தேவன் பழைய ஏற்பாட்டில் அறிவுறுத்தியுள்ளார். பொருத்தனைகள் எவ்வாறு செய்யப்படவேண்டும் என்பதைப் பற்றி லேவி.27ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருத்தனைகளைப்பற்றிய ஏனைய வேதாகம அறிவுறுத்தல்கள், செய்யப்படும் பொருத்தனைகள் கட்டாயம் நிறை வேற்றப்படவேண்டும், இல்லையென்றால் அது பாவம் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. இதனால்தான், நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணியிருந்தால், அதைச் செலுத்தத் தாமதம் செய்யாதே; உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாய் உன் கையில் கேட்பார்; அது உனக்குப் பாவமாகும் (உபா.23:21) என்று கூறும் தேவன், அடுத்த வசனத்தில் நீ பொருத்தனை பண்ணாதிருந்தால், உன்மேல் பாவம் இல்லை (உபா.23:22) என்று குறிப்பிட்டுள்ளார். தேவனுடைய இக்கட்டளையை மனிதர் சரியாகக் கைக்கொள்ளாததினால், பிற்காலத்தில் பிரசங்கி பின்வருமாறு தன் கால மக்களை எச்சரித்துள்ளார்.

நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக் கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்து கொண்டதைச் செய். நீ நேர்ந்து கொண்டதைச் செய்யாமற்போவதைப் பார்க்கிலும், நேர்ந்து கொள்ளாதிருப்பதே நலம். உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே; அது புத்தி பிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே; தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்? (பிர.5:4-6).

செய்யப்படும் பொருத்தனைகள் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும் என்பதை இவ்வசனங்கள் அறியத்தருகின்றன. இதனால், பொருத்தனை செய்து அதை நிறைவேற்றாமற்போவதைவிட, பொருத்தனை செய்யாமலிருப்பதே நல்லது என்று பிரசங்கி கூறுகிறார் (பிர.5:5). உண்மையில், பொருத்தனைகள் செய்யாமல் இருப்பது பாவம் அல்ல. ஆனால், பொருத்தனைகள் செய்து அதை நிறைவேற்றாமல் இருப்பதே பாவமாகும். இதனால், பொருத்தனைகள் செய்வதற்கு முன்னர், செய்யும் பொருத்தனையை நிறைவேற்ற முடியுமா என்று நிதானமாக யோசித்துப்பார்த்தே பொருத்தனை செய்யவேண்டும். பொருத்தனையை நிறைவேற்றமுடியாது என்றால், பொருத்தனைகள் செய்யாமல் இருக்க வேண்டும். பொருத்தனைகள் செய்வதைப் பிரசங்கி முழுமையாகத் தடைசெய்யவில்லை. நிறைவேற்ற முடியாத பொருத்தனைகளை செய்ய வேண்டாம் என்றே பிரசங்கி கூறுகிறார். மேலும், செய்த பொருத்தனையை நிறைவேற்றாதவனை பிரசங்கி மூடன் என்று குறிப்பிடுவதோடு, இத்தகைய மனிதரில் தேவன் பிரியமாயிருப்பதில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் (பிர.5:4). பொருத்தனை செய்தால் அதைக் கட்டாயம் நிறைவேற்றவேண்டும். இல்லாவிட்டால் அது பாவம் என்பதனால், பொருத்தனை செய்த பின்னர் அதை நிறைவேற்றாமல் இருப்பதற்கான காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது என்றும், இது தேவனைக் கோபப்படுத்தும் என்றும் பிரசங்கி 6ஆம் வசனத்தில் நம்மை எச்சரித்துள்ளார். உண்மையில், செய்த பொருத்தனையை நிறைவேற்றாதிருப்பது தேவ தண்டனையை வருவித்துக்கொள்வதாகவே உள்ளது. இவ்வசனத்தில் தூதன் என்று குறிப்பிடப்பட்டிருப்பது ஆலயத்தில் பணி புரியும் ஆசாரியனாகும். அக்காலத்தில் பொருத்தனைகள் செய்பவர்கள், அதைப் பற்றி ஆலயத்தில் ஆசாரியர்களிடம் சொல்வது வழக்கம். இதனால், செய்த பொருத்தனையை நிறைவேற்றாமல், அது புத்தி பிசகினால் செய்தது என்று ஆசாரியனிடம் சொல்லவேண்டாம் என்று பிரசங்கி கூறுகின்றார். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பக்தர்கள் பொருத்தனைகள் செய்து ஜெபித்த போதிலும், சிலருடைய பொருத்தனைகள் தேவனுடன் பேரம் பேசும் முயற்சிகளாகவே இருந்தன. அதாவது, “தேவனே நீர் இதைச் செய்தால் நான் இதைச்செய்கிறேன்” என்னும் மனநிலையிலேயே அவர்கள் பொருத்தனைகள் செய்துள்ளனர் (ஆதி.28:20-23, நியா.11:30-31).

(தொடரும்)

சத்தியவசனம்