நிலத்தினில் விழுந்த கோதுமை மணிகள்

கோதுமை மணி – 17
(ஜூலை-ஆகஸ்டு 2011)

இராபர்ட் மொஃபாட்

கடினமாக வேலை செய்து மொஃபாட் ஆப்பிரிக்க மக்களுக்கு அவர்களுடைய மொழியில் பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் மொழிபெயர்த்து, அச்சிட்டுக் கொடுத்தார். மேலும் பரதேசியின் மோட்ச பிரயாணம் என்னும் கதைச் சுருக்கத்தைப் புத்தகமாக அச்சிட்டுக் கொடுத்தார். இவ்வாறு தென்னாப்பிரிக்காவில் இராபர்ட் ஊழியம் செய்துகொண்டிருக்கும்போது, ஒரு பாமாலை பாட்டுபுத்தகம் தயாரித்து வெளியிட்டார். இரண்டு மிஷனரி புத்தகங்களையும் எழுதி வெளியிட்டார்.

ஒரு ஆதிவாசி மக்கள் கூட்டத்தை இராபர்ட் கவனித்த போது, அவர்கள் பிள்ளைகளுக்கு எழுத்தைக் கற்பிக்கும்போது ஒரு ராகத்தைப் பயன்படுத்தினர் என்பதைக் கண்டுபிடித்தார். அவர்கள் பயன்படுத்திய ராகம் ஆல்டு லாங் சைன் என்பது. இது A . B . C என்று இராகத்துடன் கற்பிக்கும் போது சுலபமாக இருந்தது.

இராபர்ட் மொஃபாட்டின் ஊழியம் வளர்ந்தது. ஊழியம் வளர, வளர அவருடைய புகழும் உயர்ந்தது. இவரது ஊழியத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட பல கிராம மக்கள் தங்கள் கிராமத்துக்கு வந்து தேவசெய்தியைக் கூறுமாறு அழைத்தனர். இப்படி ஊழியம் விரிவடைந்தபோது அவர்கள் மொழியில் அச்சிடப்பட்ட புதிய ஏற்பாடுகள் அதிக அளவில் தேவைப்பட்டன.

இப்படி நீண்டகாலம் ஊழியம் செய்தபின் மொஃபாட் தம்பதிகள் சிறிதுகால ஓய்வுக்காக லண்டன் செல்லத் தீர்மானித்தனர். 1839 இல் லண்டன் வந்தனர். லண்டனில் வந்தவர்களுக்கு ஓய்வு ஒன்றுதான் கிடைக்கவில்லை. முழுநேரமும் நிகழ்ச்சிகள், கூட்டங்கள், கூட்டங்களுக்கு அழைப்புகள். எனவே ஒவ்வொரு இடமாகச் சென்று தமது மிஷனரிப் பணிகளையும், அனுபவங்களையும் எடுத்துக் கூறி வந்தார். ஆப்பிரிக்க மிஷனரி இராபர்ட் மொஃபாட் என்று இவரது புகழ் இங்கிலாந்து முழுவதும் பரவிற்று. இது இராபர்ட்டுக்கு மிகவும் அதிகக் களைப்பைத் தந்தபோதிலும், இவரது ஊழியத்துக்கு மக்கள் அளித்த ஊக்கமும், உற்சாகமும், பாராட்டும், உதவிகளும் இவர் இன்னும் பல காரியங்களைப் பணித்தளங்களில் செய்ய உதவியாய் அமைந்தன.

இங்கிலாந்தில் இருக்கும்போது மொஃபாட், டேவிட் லிவிங்ஸ்டனைச் சந்தித்தார். இந்த இளைஞருக்கும் ஊழியத்தில் வாஞ்சை உண்டு என்று இராபர்ட் அறிந்தார். எங்கே மிஷனரியாகப் போகப் போகிறீர்? என்று கேட்டார். லிவிங்ஸ்டன் சீனாவுக்கு என்று பதிலளித்தார். ஏன் சீனாவுக்குப் போக விரும்புகிறீர்? என்று இராபர்ட் கேட்டார். இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் இராபர்ட் ஆப்பிரிக்காவின் நாட்டு நிலையையும், மக்களின் நிலமையையும், அவர்களுடைய தேவைகளையும் அதுவரை தான் அங்கு செய்திருந்த ஊழியங்களையும், புதியஏற்பாடு அச்சிட்டதையும் கூறினார். பின்னர் வயதான மிஷனரியாகிய நான் ஆப்பிரிக்காவில் மிஷனரிப் பணியைத் தொடங்கியுள்ளேன். ஆயத்த வேலைகளைச் செய்திருக்கிறேன். நல்ல அடித்தளம் இட்டுள்ளேன். உங்களைப் போன்ற இளைஞர்கள் வந்தால் இந்தப்பணியை அதிக உற்சாகத்துடன் தொடர்ந்து செய்யலாம். ஆப்பிரிக்காவின் உட்பகுதி வரை சென்று புதிய இடங்களையும் கண்டுபிடிக்கலாம் என்றார். இதைக் கேட்ட லிவிங்ஸ்டனுக்கு ஆப்பிரிக்காவில் மிஷனரிப்பணி அறைகூவல் விடுப்பதாயிருந்தது. எனவே தலைமையகத்தில் பதிவுசெய்து அனுமதிபெற்று ஒரு மிஷனரியாக ஆப்பிரிக்காவுக்குப் பயணமானார். ஆப்பிரிக்கா என்னும் இருண்ட கண்டம் அவரை வரவேற்றது. அவர் தனது மிஷனரிப் பணியை ஆரம்பித்தார்.

சில நாட்களுக்குப் பின் இராபர்ட் மொஃபாட் தம்பதிகள் ஆப்பிரிக்காவுக்குத் திரும்பி வந்து சேர்ந்தனர். அப்பொழுது அங்கு மிஷனரியாக வந்திருந்த டேவிட் லிவிங்ஸ்டனை ஒரு சிங்கம் தாக்கிவிட்டது என்றும், அவருடைய இடது கை முறிந்து சேதமடைந்துள்ளது என்றும் அறிந்தனர். லிவிங்ஸ்டன் மொஃபாட்டின் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டார். அவருடைய வீட்டில் அவரைப் படுக்கவைத்து மருத்துவ உதவியளித்தனர். அப்பொழுது அவருக்கு மொஃபாட்டின் மகள் உதவி செய்தாள். டேவிட் லிவிங்ஸ்டன் சுகமாகித் தன் பணியைச் செய்யத் தொடங்கினார். அப்போது மொஃபாட்டின் மகளுக்கும் லிவிங்ஸ்டனுக்கும் திருமணம் நடந்தது. இந்தப் புதுத் தம்பதிகள் ஆப்பிரிக்காவின் வடபகுதியில் உள்ள ஒரு புதிய பணித்தளத்தில் ஊழியம் செய்யச் சென்றனர்.

இராபர்ட் மொஃபாட், அவருடைய மனைவி இருவருக்கும் பல துன்பங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இராபர்ட்டின் மூத்த மகன் இறந்துவிட்டான். சில நாட்களுக்குப்பின் டேவிட் லிவிங்ஸ்டனிடமிருந்து தன்னுடைய மனைவி காய்ச்சல் வந்து இறந்து விட்டதாகத் தகவல் வந்தது. இப்படி சோகத்தின் மேல் சோகம் ஏற்பட்ட போதிலும் மொஃபாட் தம்பதிகள் தங்களுடைய மிஷனரிப் பணியையும், மொழிபெயர்ப்புப் பணியையும் தொடர்ந்து செய்து வந்தனர்.

இப்பொழுது இராபர்ட் மொஃபாட்டுக்கு வயது 70ஐ தாண்டிவிட்டது. உடல் மிகவும் சோர்வடைந்து விட்டது. ஒருநாள் இவர் கட்ட உதவி செய்திருந்த ஒரு கிராமத்தின் சிறு ஆலயத்தில் பிரசங்கம் செய்தார். அதுதான் அவர் செய்த கடைசிப் பிரசங்கம் ஆயிற்று. பின்னர் 1870இல் தன் மனைவியுடன் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார். அடுத்த வருடத்தில் மொஃபாட்டின் மனைவி இறந்து போனார். மனைவியின் மறைவால் மொஃபாட் மிகவும் துக்கமடைந்தார். இருந்தபோதிலும், உடல் சோர்வு, மனக்கவலை, சோகம் இவற்றைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பலவித வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்.

1.எழுதுதல் 2.சொற்பொழிவாற்றுதல் 3. பிரசங்கம் செய்தல். இந்தப் பணிகள் அவருடைய 80வயதுக்கு மேலும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. 1872-ம் வருடம் எடின்பர்க் பல்கலைக் கழகம் மொஃபாட்டுக்கு கெளரவ “D.D” பட்டம் வழங்கியது. ஒரு இரவில் அவர்தன் படுக்கையில் அமர்ந்து, தனது கைக்கடிகாரத்தை எடுத்து அதற்கு சாவி கொடுத்தார். இதுதான் கடைசித் தடவை என்று கூறினார்.

அது அப்படியே ஆயிற்று. அன்று இரவு அமைதியாகப் படுக்கச்சென்றார். 1883 ஆகஸ்ட் பத்தாம் நாள், தனது 88 ஆம் வயதில் இராபர்ட் மொஃபாட் இறைவனடி சேர்ந்தார். அவர் தன் 88 வது வயது வரையிலும் ஆண்டவருக்கு அர்ப்பணிப்புடன் வேலை செய்தார். ஆப்பிரிக்காவில் 50 வருடங்களுக்கு மேல் ஊழியம் செய்து, வழிகாட்டி தன் ஊழியத்தைத் தொடர்ந்து செய்யத் தனது மருமகன் டேவிட் லிவிங்ஸ்டனை ஆப்பிரிக்காவில் விட்டுவந்தார். பிரிட்டனிலும் அவருடைய ஊழியம் முடிவடைந்தது.

மொழியாக்கம்: G.வில்சன்

சத்தியவசனம்