Dr.தியோடர் எச்.எஃப்
(மே-ஜுன் 2015)

அத்தியாயம்-2

இயேசுகிறிஸ்து நமது பாவங்களுக்கு மீட்பைப் பெற்றுத்தந்தது மட்டுமல்ல, நம்முடைய சத்துருக்களைத் தமது வல்லமையினால் மேற்கொண்டுமிருக்கிறார். தமது மரணத்தின் மூலம் அவர் சாத்தானின் வல்லமையை முறியடித்திருக்கிறார். எனவே நாம் அவனால் தோற்கடிக்கப்படுவதில்லை.

இதை நாம் எபிரெயர் 2:14,15 வசனங்களில் பார்க்கிறோம்: “ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார்”. இதே கருத்து கொலோசெயர் 2:14,15 வசனங்களிலும் காணப்படுகிறது “நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்து கொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றி சிறந்தார்”. மேலும் எபேசியர் 1:19-23 மற்றும் 4:8 ஆகிய வசனங்களையும் வாசித்துப் பார்க்கவும்.

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் இந்த உலகின் துரைத்தனங்களுக்கும், அதிகாரங்களுக்கும் மேலான ஒரு உன்னத அதிகாரத்தால் அவரை நிரப்பியது (பிலி.2:9-11). அவரே அதிகாரம் மிகுந்தவராய் இருக்கிறபடியால், நாம் ஆண்டவருக்குள் அதிகாரம் நிறைந்தவர்களாய் இருக்க வேண்டும் (எபே.6:10). ஏனெனில் அவர் ஜெயங் கொண்டவராய் இருக்கிறார். நாம் அவரைப் பற்றி நினைக்கும்போது, நாம் அவரை ஜெயங் கொண்டவராகப் பார்க்கவேண்டும். நாமும் அவரில் ஜெயங்கொண்டவர்களின் நிலைக்கு உயர்த்தப்படுகிறோம். எபேசியர் 2: 5-7இல் பவுல் இவ்வாறு எழுதியுள்ளார்: “அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனே கூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.”

யோசுவாவின் புத்தகத்தில் காணப்படும் நிகழ்ச்சிகள், எபேசியர் நிருபத்தில் கூறப்பட்டிருக்கும் அநேக சத்தியங்களை நிரூபிக்கிறவைகளாயிருக்கின்றன என்று காண்கிறோம்.

தேவ ஜனங்களின் தலைவனாக மோசே இருந்த ஸ்தானத்தில் யோசுவா இருந்ததைக் காண்கிறோம். அதுபோலவே விசுவாசிகளாகிய நம் அனைவரின் தலைவராகவும் இயேசுவை நாம் பெற்றிருக்கிறோம்.

யோசுவா கானானுக்குள் பிரவேசித்தபோது அவனுக்கு முன்னால் அத்தேசத்தில் குடியிருந்த பற்பல ஜாதியாரோடு யுத்தம் செய்து, அவர்களைத் துரத்தியடித்துவிட்டு கானான் தேசத்தைப் பிடிக்க வேண்டியதிருந்தது. தேவன் வாக்குத்தத்தம் செய்திருந்ததுபோல அந்தத் தேசத்தை இஸ்ரவேலர் சுதந்தரித்துக் கொள்வது முடியாததுபோல் தோன்றியது. யோசுவா திகைத்துநின்ற வேளையில், கையில் உருவிய வாளுடன் ஒரு மனிதன் அவன்முன் நின்றார். யோசுவா அவரிடம் போய், “…நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான். அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்; அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புற விழுந்து பணிந்துகொண்டு, அவரை நோக்கி: என் ஆண்டவர் தமது அடியேனுக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான்” (யோசுவா 5:13,14). பின்னர் தேவன் யோசுவா செய்யவேண்டிய காரியங்களைக் கட்டளையிட்டார். அது போலவே நாமும் நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை நமது தலைவராக ஏற்றுக்கொண்டால் நமக்குப் பலமாயிருந்து யுத்தத்தில் நமக்கு வழிகாட்டுவார்.

யோசுவா என்னும் புத்தகம் இயேசுகிறிஸ்துவை “ஆண்டவர்” (கர்த்தர்) என்று அறிமுகப்படுத்துகிறது. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தின் எல்லையண்டையில் இஸ்ரவேலர் வந்து நின்றபோது, ஆண்டவர் அவர்களுக்கு முன்பாக “ஜெயங்கொள்ளுகிறவர்” என்று காட்சியளித்தார். விசுவாசிகளைப் பலப்படுத்துகிற ஆண்டவர் மூலமாகத் தன்னால் எல்லாக் காரியங்களையும் செய்துமுடிக்க முடியும் என்று யோசுவா கற்றுக்கொண்டான். ஆண்டவர் யோசுவாவிடம் இப்படிக் கூறியிருந்தார்: “நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்” (யோசுவா 1:3).

ஆனால் 5ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறபடி தேவன் யோசுவாவுக்குத் தோன்றியபோது, யோசுவாவிடம் இப்படிக் கூறினார்: “நான் இந்தத் தேசத்தை உங்களுக்குத் தருவதாக வாக்குத்தத்தம் செய்திருக்கிறேன். ஆனால் நீங்கள் அதைச் சுதந்தரித்துக்கொள்ள வேண்டுமானால் எனக்குக் கீழ்ப்படிந்து, என்னைப் பின்பற்றி வரவேண்டும். அப்பொழுதுதான் அதைச் சுதந்தரித்துக்கொள்ள உங்களுக்கு உதவி செய்வேன். உங்களைத் தகுதிப்படுத்துவேன்” என்றார்.

வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசம் பரலோகத்துக்கு அடையாளமானதல்ல. ஆனால் “பாலும் தேனும் ஓடுகிற” செழிப்பான தேசம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அது போராட்டங்கள் நிறைந்த ஒரு இடம். ஆனால் இஸ்ரவேல் மக்கள் தேவன் சொன்ன வார்த்தைகளை ஏற்று, அவற்றுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தபடியால் அவர்கள் தங்கள் எல்லா முயற்சிகளிலும் வெற்றியைக் கண்டடைந்தனர். கானான் தேசத்தில் அவர்கள் செய்த யுத்தங்களில் தெய்வீக ஒத்தாசையினால் வெற்றி கண்டார்கள். எரிகோ பட்டணம் விழச் செய்த நிகழ்ச்சியிலிருந்து தெய்வீக நடத்துதல் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஆறு நாட்கள், தினம் ஒரு தடவை வீதம் இஸ்ரவேலர் எரிகோ பட்டணத்தைச் சுற்றி வந்தார்கள். ஆனால் ஏழாம் நாளில் அவர்கள் எரிகோ பட்டணத்தை ஏழுதடவை சுற்றி வந்தார்கள். “ஏழாந்தரம் ஆசாரியர் எக்காளங்களை ஊதுகையில், யோசுவா ஜனங்களை நோக்கி: ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தைக் கர்த்தர் உங்களுக்கு ஒப்புக் கொடுத்தார்” என்றான் (யோசு.6:16).

வெற்றியோடு ஐக்கியமாகுதல்

இஸ்ரவேல் மக்களுக்கு தேவன் செய்த அநேக காரியங்கள் இயற்கைக்கு மாறான, மனிதனால் முடியாத, தெய்வீக அற்புதச் செயல்கள் என்று காண்கிறோம். யோசுவாவின் காலத்தில் இருந்த தேவன்தான் இன்றும் இருக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவரது வல்லமை குறைந்து போகவில்லை. அந்த வல்லமையும், பலமும் விசுவாசத்தின் மூலம் நமக்குக் கிடைக்கக் கூடியதாயிருக்கிறது. நாம் கிறிஸ்துவை நமது தளபதியாகவும், யுத்தத்தில் வெற்றி பெறுபவராகவும் பார்ப்பது மட்டுமல்ல, அவரது வெற்றியில் நாமும் நம்மை பங்காளிகளாக ஆக்கிக்கொள்ள வேண்டும். வெற்றிக்குத் திறவுகோல், நாம் நம்மைக் கிறிஸ்துவுடன் இணை வெற்றியாளராக ஆக்கிக் கொள்வதே. நாம் அவர்மீது உறுதியான விசுவாசம் கொண்டிருப்பதால், நம் அனுதின வாழ்க்கையில் வெற்றிகளை அனுபவமாக்கிக் கொள்வோம். நமது கிரியைகள், நம்முடைய விசுவாசத்தை ஆதாரமாகக்கொண்டது என்பதை மறந்துவிட வேண்டாம். கிரியையில்லாத விசுவாசம் உண்மையான விசுவாசம் அல்ல. வெற்றியில் நாம் கிறிஸ்துவின் உடன் பங்காளிகள் என்பதை நாம் வெளிப்படுத்த வேண்டும்.

யோசுவா 10ஆம் அதிகாரத்தில் யோசுவா இஸ்ரவேல் மக்களை ஜெயங்கொண்டவர்களாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டான்.

ஒரு மாபெரும் யுத்தத்தில் யோசுவா சூரியனை நிலைத்து நிற்கச் செய்தபின், கில்காலில் உள்ள முகாமுக்குத் திரும்பினான். அப்பொழுது எதிரிகளான ஐந்து இராஜாக்களும் ஓடி ஒரு குகைக்குள் நுழைந்து மறைந்திருப்பதாகக் கேள்விப்பட்டான் (யோசுவா 10:16). அப்பொழுது யோசுவா தன் ஜனங்களை நோக்கி, நீங்கள் பெரிய கற்களைப் புரட்டி அந்தக் கெபியின் வாசலை அடையுங்கள். இராஜாக்கள் தப்பிப் போகாதபடிக்குக் காவல் வையுங்கள் என்றான். தன்னுடைய வீரர்கள் எதிரிகளை முற்றிலும் சங்கரித்தபின் யோசுவாவிடம் திரும்பிவந்தார்கள். அப்பொழுது யோசுவா குகைக்குள் இருக்கும் ஐந்து இராஜாக்களையும் வெளியேற்றித் தன்முன் நிறுத்தும்படி கட்டளையிட்டான். அதன்படி குகையின் வாயிலில் இருந்த கற்கள் புரட்டப்பட்டு, அதற்குள் மறைந்திருந்த இராஜாக்கள் வெளியே கொண்டுவரப்பட்டனர்.

அவர்கள் எருசலேமின் இராஜா, எபிரோனின் இராஜா, யர்மூத்தின் இராஜா, லாகீசின் இராஜா, எக்லோனின் இராஜா. இவர்கள் யோசுவாவின் முன் கொண்டு வரப்பட்டனர். யோசுவா இஸ்ரவேல் மக்கள் அனைவரையும் கூடிவரச்செய்து, தன் யுத்த மனுஷரின் அதிபதிகளை நோக்கி: “நீங்கள் கிட்டவந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள்” என்றான். அவர்கள் அப்படியே செய்தார்கள். யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: “நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் பலத்துத் திடமனதாயிருங்கள்; நீங்கள் யுத்தம் பண்ணும் உங்கள் சத்துருக்களுக்கெல்லாம் கர்த்தர் இப்படியே செய்வார் என்றான்” (யோசு. 10:25).

எதிரிகளின் கழுத்தில் கால் வைப்பது யோசுவாவின் காலத்தில், ஜெயங்கொள்ளுகிறவர்களின் வெற்றிக்கு அடையாளமாயிருந்தது. யோசுவா தன் போர்ப்படைத் தளபதிகள் எல்லோரும் தங்கள் யுத்தத்தில் வெற்றி காணும்போது இப்படிச் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டான். அவர்களுக்கு யுத்தங்களில் எல்லாம் ஆண்டவர் வெற்றியைக் கட்டளையிடுவார் என்று அறிவித்தான்.

நமக்கும் ஒரு வெற்றிகரமான நிலை உண்டு. அதைக் கிறிஸ்து நமக்காகப் பெற்றுத் தந்தார். “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்” (எபே.2:7). நமது சரீரத்தோடே பரலோகத்துக்கு எடுத்துச்செல்லப்படுவோம் என்று இந்த வசனம் குறிக்கவில்லை. ஆனால் விசுவாசத்துடன் நாம் இந்த வெற்றியின் ஸ்தலத்தில் இருக்கிறோம் என்பதே இதன் கருத்தாகும்.

இயேசுகிறிஸ்து முற்றிலுமாகத் தமது சத்துருவை அடக்கிக் கீழ்ப்படுத்திவிட்டார். ஆனால் சத்துருவாகிய சாத்தான் கிறிஸ்துவோடு நாம் ஜெயங்கொண்ட நிலையை அடைவது வரை நம்மைத் தொடர்ந்து தாக்கித் துன்புறுத்திக் கொண்டே இருப்பான். இது மாம்ச சரீரத்துடன் சண்டையிடுவது போன்றது. இச்சண்டையில் ஒருவன் ஒரு குன்றின் உச்சியில் நின்று சண்டையிட்டால் அது அவனுக்குச் சாதகமாக இருக்கும். கிறிஸ்து குன்றின் உச்சியில் நின்று கொண்டிருக்கிறார். ஏனென்றால் அவர் சாத்தானை வென்று கீழ்ப்படுத்திவிட்டார். நாம் கிறிஸ்துவைப் போன்ற ஸ்தானத்தைப் பெற்றுக்கொண்டால்தான் சாத்தானை நாம் தோற்கடித்து ஜெயம்கொள்ள முடியும்.

கிறிஸ்துவில் நாம் பெற்றிருக்கும் ஸ்தானத்தின் அடிப்படையில், விசுவாசத்துடன் கிரியை செய்யவேண்டும். விசுவாசிகள் செய்வதற்கு ஒரு கிரியையும் இல்லை. விசுவாசத்தோடு வாழ்ந்துகொண்டிருந்தால் போதும் என்று யாராவது சொன்னால் அதை நம்பி ஏமாந்து விடாமல் எச்சரிக்கையாக இருங்கள். சிலர் இப்படிக் கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். விசுவாசிகள் எந்தக் கிரியையும் செய்யாமல் செயலற்றவர்களாக இருந்தால் போதும், விசுவாசியின் ஆளத்துவம், சித்தம் இவற்றுக்கு மாறாக தேவனே எல்லாவற்றையும் செய்து தருவார் என்று; இது தவறான கருத்து. ஒரு போராட்டத்தில் வெற்றியை தேவன் தருவார். ஆனால் அது விசுவாசியாலும், அவன் மூலமாகவுமே செய்யப்படும். விசுவாசி போராடவேண்டும். அவனுடைய முயற்சியை வெற்றி அடையச்செய்வது தேவன். நாம் நம்முடைய சுயபெலத்தையும், திறமையையும் நம்பி கிரியை செய்யக்கூடாது. ஆண்டவருக்குக் கீழ்ப்படிவதில் சோம்பேறித்தனம் காட்டவும் கூடாது. கீழ்ப்படியாமையும் நம்மிடம் இருக்கக்கூடாது. தேவன் நமது சித்தத்தை மேற்கொள்வதில்லை.

நாம் நமது விசுவாசத்தை அவர் மீது வைத்து, அவரது சித்தத்தின்படி வாழ்ந்து செயல்படுவோமானால், அவர் நமது போராட்டத்திற்கு வெற்றியைத் தருவார். கிரியையை நாம்தான் செய்யவேண்டும். நம்மிலும், நம் மூலமாகவும் கிரியை செய்ய வைக்கும்போது தேவன் அவரது சித்தத்தைச் செய்யும் விருப்பத்தையும் நமக்குத் தருகிறார். “தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” (பிலி.2:13). முந்தின வசனம் கூறுகிறது, தேவன் நம்மில் கிரியை செய்வதுபோலவே நாமும் நம்முடைய வாழ்வில் தேவனுக்கு உகந்தவர்களாக வாழ வேண்டும். இதற்குக் கீழ்ப்படிதல் தேவை.

நாம் கீழ்ப்படிதல் உள்ளவர்களாய் இருந்தால் மட்டுமே ஆண்டவருக்குள் வல்லமை உள்ளவர்களாய் நாம் இருக்கமுடியும்.

(தொடரும்)

மொழியாக்கம்: G.வில்சன்