சபை அக்கினியாய் பற்றி எரியட்டும்!

சகோதரி.சாந்தி பொன்னு
(மே-ஜுன் 2015)

“சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்” (எபேசியர் 3:21)

“சபை” என்ற சொல் கிறிஸ்தவர்களாகிய நமக்குப் பழகிப்போன ஒன்றாகிவிட்டது. ஆனால், என்றும் பழையதாய்ப் போகமுடியாத சபையைக் குறித்து இன்றைய காலகட்டத்தில், கிறிஸ்தவர்களாகிய நாம் பாராமுகமாய், அல்லது பலவிதங்களிலும் நமக்கே சாதகமான ஒன்றாய், அல்லது நமது சுயத்துக்குப் பாதுகாப்பான ஒன்றாய் மாற்றிப்போட்டோமோ என்று எண்ணத்தோன்றுகிறது. பலநூறு அல்ல பல ஆயிரம் சபைகள் பல ஆயிரம் பெயர்களிலே இன்று உருவாக்கம் பெற்றிருந்தாலும், தேவனுடைய இருதயத்திலே பதிக்கப்பட்டிருப்பது ஒரேயொரு திருச்சபைதான். அது நேற்று இன்று அல்ல; அது தேவனுடைய ஒரு பின்யோசனையோ, பின் ஆக்கமோ அல்ல; அல்லது இரட்சிப்பின் செயலுக்கான ஒரு தற்செயல் திட்டமுமல்ல.

சபை

“அன்றியும், தேவபக்திக்குரிய இரகசிய மானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புற ஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்” (1தீமோ.3:16).

முழு சுவிசேஷத்தையும் உள்ளடக்கிய ஒரு அழகிய சுவிசேஷப் பாடல் இது. சுவிசேஷத்தின் இருதயம் என்று சொல்லக்கூடிய ‘மனித அறிவுக்கெட்டாத தெய்வத்துவத்தின் பரம இரகசியம்’ இது. இந்த சத்தியத்திற்குத் தூணும் ஆதாரமுமாயிருப்பதே திருச்சபை.

“சபையைக் கட்டுவதற்கு பதினொரு மனிதர்கள் தேவைப்பட்டனர். ஆனால் அதைத் தகர்ப்பதற்கு ஒரு மனிதன் போதுமென்று நான் நிரூபிக்கிறேன்” என்று ஒரு நாஸ்திகன் சொன்னான். ஆனால், சபை பதினொரு மனிதர்களால் கட்டப்படவில்லை என்பதுவும், ‘நான் என் சபையைக் கட்டுவேன்’ என்று சொன்ன கர்த்தராகிய இயேசு என்ற ஒருவராலேயே சபை கட்டப்பட்டது என்பதுவும் அந்த மனிதனுக்கு எங்கே தெரியப் போகிறது? சபை என்பது ஒரு கூட்டமோ கட்டடமோ அல்ல; அது கிறிஸ்துவின் சரீரம். அதை யாராலும் கட்டவும் முடியாது; அசைக்கவும் முடியாது. ஏனெனில் கிறிஸ்துவின் சரீரம் மரித்து, உயிர்த்தெழுந்த சரீரம்!

பரிசுத்தாவியானவரின் வழிநடத்துதலின் கீழ், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு, மறுபடியும் பிறந்த அனுபவத்தைப் பெற்று, தேவனைப் பிதாவாகவும், அவரது பிள்ளைகள் அனைவரையும் சகோதரராகவும் கொண்டு, தேவனோடே ஒரு புதிய உறவுக்குள் பிரவேசிக்கின்ற தேவ மக்களின் ஒன்றுகூடுகையே “சபை” ஆகும். “இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநு தினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்” (அப்.2:47) என்று வாசிக்கிறோம். இது தேவனுடைய வீடு! தேவமக்கள் ஒன்று கூடு கையில், தம்மோடு பேசுகின்ற, தமது ஜெபத்தைக் கேட்கின்ற, தாம் ஏறெடுக்கும் ஆராதனையில் மகிழ்ந்திருக்கின்ற தேவனுடைய பிரசன்னத்தை அவர்கள் உணருகிறார்கள். ஆக, சபை என்பது தேவனுக்குச் சொந்தமானது.

அநேகர் நினைக்கிறபடி சபை என்பது ஏதோ ஒரு மக்கள் கூட்டமோ, பாரம்பரியமான விஷயமோ, தற்கால அமைப்புக்கு ஒவ்வாத ஒன்றோ அல்ல. கறைபடிந்த இந்த உலகிற்கு சத்தியத்தை அறிமுகப்படுத்தவும், ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தவும், இயேசுவே ஆண்டவர் என்று பறைசாற்றவும் “சத்தியத்திற்குத் தூணாகவும் ஆதாரமாகவும்” உலகிலே ஸ்தாபிக்கப்பட்டதுதான் “சபை”. ஆரம்ப திருச்சபை இரட்சிக்கப் பட்டவர்களுடன்தான் ஆரம்பித்தது. அங்கே உறுதியான ஜெபம், தெய்வபயம், ஒருமனம், ஐக்கியம் இருந்தது. இவற்றுடனும், “மகிழ்ச்சி யோடும் கபடமில்லாத இருதயத்தோடும்” போஜனம்பண்ணி, தேவனைத் துதித்து ஜனங்கள் எல்லாரிடத்திலும் தயவும் பெற்றிருந்தனர் (அப்.2:42-47). எண்ணிக்கை கூடினால் பிரச்சனைகளும் அதிகரிக்கும் என்று நாம் சாதாரணமாகச் சொல்லுவதுண்டு. ஆனால், அன்று மூவாயிரம் பேருக்கும் அதிகமாக இருந்த போதே இந்த ஐக்கியம் தேவமக்கள் மத்தியில் உண்டாயிருந்தது என்பதைக் கவனிக்க வேண்டும்.

திருச்சபையின் உருவாக்கம்

சபை என்பது தேவனுடைய பின்யோசனையோ, பாவத்தில் விழுந்த மனிதனுடைய இரட்சிப்பின் கிரியைக்காகவென்று தற்செயலாக தேவனால் உருவாக்கம்பெற்ற திட்டமுமல்ல. சபை என்பது தேவனுடைய மனதில் ஆதியிலிருந்தே இருந்ததொன்று. ஏனெனில், இரட்சிப்பும் இரட்சகரும்கூட தேவனுடைய அநாதி திட்டமென்பதை, “அவர் (இயேசு) உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்” (1பேதுரு 1:20) என்று பேதுரு எழுதியதிலிருந்து நாம் விளங்கிக் கொள்கிறோம். ஆக, ஆதியிலிருந்தே தேவனுடைய மனதிலிருந்த இரட்சிப்பின் திட்டம் எப்படி நிறைவேறியதோ, அவருடைய மனதிலிருந்த சபையும் நித்தியத்திலும் தொடரும். சபை ஒரு வரலாறு மாத்திரமல்ல, எதிர்காலத்தையும் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்டதான ஒரு சபையின் மக்களாய் நாம் இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்!

“கிறிஸ்துவின் சரீரமாகிய சபை” (எபே.4:12) என்று பவுல் குறிப்பிடுவதை நாம் இங்கே கவனிக்க வேண்டும். ஆக, சபை என்றாலே அது கிறிஸ்துவுடன் சம்பந்தப்பட்டது. பழைய உடன்படிக்கையின் மக்களும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுமாகிய இஸ்ரவேலர் “சபை” என்று பழைய ஏற்பாட்டிலே அழைக்கப்பட்டனர். ஆனால், புதிய உடன் படிக்கையில், கிறிஸ்துவின் இரத்தத்தாலே கழுவப்பட்டு மீட்கப்பட்ட மக்கள் கூட்டம் “சபை” என்றானது.

“சபை”யின் மூலைக்கல்லானவர் இயேசு கிறிஸ்துவே. அதற்காக இயேசு ஒரு சபையை உருவாக்கி தமது பெயரை நிலைநாட்ட உலகிற்கு வரவில்லை. இன்றைய ஸ்தாபனங்கள் உருவாவதுபோல சபை உருவாக்கம் பெறவுமில்லை. தேவனுடைய அநாதி திட்டத்தின்படி, பரலோக ராஜ்ஜியத்தைப் பூலோகில் ஸ்தாபிக்கும்படிக்கு, அதற்குச் சாட்சியாக சபையை ஸ்தாபிக்கவே தேவனாகிய கிறிஸ்து மனிதனாக வேண்டியதிருந்தது. இந்த சபைக்காக அவர் அடிகள்பட்டு, வெறுக்கப்பட்டு, பல பாடுகள் பட்டு, பாளயத்துக்குப் புறம்பே தள்ளப்பட வேண்டியிருந்தது. இழிவான தண்டனையை ஏற்றுக்கொண்டு, முழு உலகத்தின் பாவத்தையும் தாமே சுமந்து, தமது பிதாவின் திருமுகம் மறைக்கப்பட்ட நிலையில் சிலுவையில் தொங்கி மரிக்கவேண்டியதிருந்தது. மரித்தோர் ஸ்தானத்திற்கு இறங்கி ஒரு மனிதன் எதையெல்லாம் கடக்கவேண்டுமோ அத்தனை பாதைகளையும் அவர் கடக்க வேண்டிய திருந்தது. மூன்றாம் நாள் உயிரோடெழுந்து, நாற்பது நாட்கள் பலருக்குத் தரிசனமாகி, நாற்பதாம் நாள் பரத்துக்கு ஏற வேண்டியதிருந்தது. இத்தனைக்கும் இயேசு யார்? வெறும் மனிதனா? அவர் தேவாதி தேவன்.

இயேசு பரத்துக்கு ஏறியபின்பே பரிசுத்தாவியானவர் உலகிற்குக் கொடுக்கப்பட்டார். சீஷர்கள் பரிசுத்தாவியால் நிரப்பப்பட்டனர் (அப்.2:1-4). பரிசுத்தாவியானவர் கொடுக்கப்பட்ட அன்று பேதுரு எழுந்துநின்று மரித்து உயிர்த்த கிறிஸ்துவைக் குறித்து அதிகாரத்துடன் பிரசங்கித்தார். அன்றைய தினமே மனந்திரும்பிய மூவாயிரம்பேர் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள் என்றும் (அப்.2:41), இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார் என்றும் (அப்.2:47) வாசிக்கிறோம். ஆக, சபை என்று ஒன்று ஸ்தாபிக்கப்படுவதற்காக கிறிஸ்து மரித்து, உயிர்த்து, பரலோகம் செல்ல வேண்டியதிருந்தது (எபே.1:15-23).

கிறிஸ்துவின் சரீரம் அடிக்கப்பட்டு, கிறிஸ்துவின் இரத்தம் விலைக்கிரயமாகக் கொடுக்கப்பட்டுத்தான், கிறிஸ்துவின் சரீரமாகிய சபை ஸ்தாபிக்கப்பட்டது. ஆம், “கிறிஸ்து” என்ற ஒருவரின் இரத்தத்தில் உருவானதுதான் இன்று நாம் அனுபவிக்கின்ற திருச்சபை. இப்படியாக கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்பட்டு ஸ்தாபிக்கப்பட்ட திருச்சபையை இன்று சபை மக்களாகிய நாம் எவ்வளவாகக் கனம்பண்ண வேண்டும்! இச்சபையைக் குறித்த தேவனுடைய வார்த்தை, அவருடைய சித்தம் திட்டம் என்பவற்றை ஆராய்ந்து பார்த்தால், இன்று நாம் எங்கே நிற்கிறோம் என்பது விளங்கும். போதாததற்கு, சத்துருவானவன் கிறிஸ்தவப் பணிகளை ஏராளமாக முடுக்கிவிட்டு, சபை தேவனோடு ஐக்கியம் கொள்ள நேரமற்றுப் போகின்ற ஒரு தந்திரோபாயத்தை விரித்து விட்டு, தேவன் சபையைக் குறித்து வைத்திருக்கிற நோக்கத்திலிருந்து சபையை அதாவது தேவ மக்களைத் திசைதிருப்புகின்ற முயற்சியில் அதீத கவனம் செலுத்தி வருகிறான் என்றால் அது மிகையாகாது.

திருச்சபையின் ஒரே நோக்கம்

அன்று ஆதாமுக்கு ஏற்ற துணையைப் பெற்றுக்கொடுப்பதற்கு தேவனாகிய கர்த்தர் அவனுடைய விலா எலும்பையும் சதையையும் எடுத்தே ஏவாளைப் படைத்தார். இங்கே, சிலுவையில் தொங்கிய இயேசு மரித்துவிட் டாரா என்று பார்ப்பதற்காக ஒரு போர்வீரன் ஒரு ஈட்டியினாலே அவரது விலாவிலே குத்தினான் என்றும், அதிலிருந்து இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது என்றும் வாசிக்கிறோம் (யோவான் 19:34). அவரது கடைசிச் சொட்டு இரத்தமும் சிந்தப்பட்டாயிற்று. அவர் மரித்துவிட்டார் என்று அதனால் அறியப்பட்டது. இயேசுவின் குத்தப்பட்ட விலா எலும்பிலிருந்துதான் சபைக்கு அஸ்திபாரமும் இடப்பட்டது.

கிறிஸ்தவ வாழ்வு என்பது தனிப்பட்டவனின் வாழ்வல்ல. அது ஒரு ஐக்கியம் அல்லது கூட்டு வாழ்க்கை. அந்த வகையில் சபை நமக்கு எடுத்துக்காட்டுவது என்ன? மணவாளனாகிய இயேசுவுக்கு (யோவான் 3:29) ஒப்புவிக்கப் படப்போகும் மணவாட்டிதான் திருச்சபை (வெளி.21:2). ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்காக (வெளி.19:7) முழு பிர பஞ்சமுமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. பரிசுத்தாவியானவர் அந்த மணவாட்டி திருச்சபையை இப்பூவுலகில் ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார். “…விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது…” (வெளி.19:9). கிறிஸ்து தமது இரத்தத்தையே சிந்தி ஏற்படுத்திய இந்த அற்புதமான தெய்வீக உறவை வெளிப்படுத்த வேண்டிய திருச்சபையாகிய நாம் இன்று என்ன செய்துகொண்டிருக்கிறோம்?

திருச்சபையின் பொறுப்பு

சபையின் பொறுப்பு என்பது என்ன? சபையின் பொறுப்பு என்ன, நிறைவேற்ற வேண்டிய பணி என்ன என்பதை சீஷருக்கு விளக்கமாகக் கூறிய பின்னரே இயேசு பரத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்” (அப்.1:8); இன்னும், “நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்” என்றார் என்றும் (மத்.28: 19,20) வாசிக்கிறோம். இந்தக் கட்டளையைக் கொடுக்கும் முன்னர் இயேசு கூறிய காரியம் மிக முக்கியமானது. ‘வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்பதே அது. “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” (மத்.24:14) என்று இயேசு முன்கூறியதும் இதுதான்.

அறிவிக்கப்படவேண்டிய சுவிசேஷத்திற்காக இயேசு காயப்பட்டார்; உபத்திரவப்பட்டார், ஜீவனையே கொடுத்தார். இந்த இயேசுவைப் பிரதிபலிக்கவேண்டிய திருச்சபையில் இன்று இந்தக் காயங்கள் காணப்படுகிறதா? ஆதி அப்போஸ்தலர்கள் இந்த சுவிசேஷத்திற்காகவே உபத்திரவப்படுத்தப்பட்டனர், கொல்லப்பட்டனர். பல சீஷர்கள் இரத்தச் சாட்சிகளாக மரித்தனர். வேதாகம காலத்தின் பின்னரும் அநேகர் விசேஷமாக மிஷனரிமார், பிரசங்கிமார் என்று ஏராளமானவர்கள் சுவிசேஷத்தினிமித்தம் தங்கள் ஜீவனையே இழந்தனர். பலர் தங்கள் விசுவாசத்தினிமித்தம் பல உபத்திரவங்களுக்கு உள்ளானார்கள். இன்று சபை மக்கள் நாம் என்ன செய்கிறோம்?

எரிந்தும் வேகாத முட்செடி:

இஸ்ரவேலின் மலைத்தொடர்களிலே முட்செடிகள் வளருவதும், வெப்பம்கூடி பற்றியெரிவதும் சாதாரண விஷயங்கள். ஆனால், அன்று மோசே கண்டதோ அசாதாரணக் காட்சி. மீதியான் தேசத்து வனாந்தரத்திலே மந்தை மேய்த்துக்கொண்டிருந்த மோசே, ஒருநாள் ஒரு அசாதாரணக் காட்சியைக் கண்டான். ஒரு முட்செடி அக்கினியால் ஜூவாலித்து எரிந்தது; ஆனால், அது வெந்து சாம்பலாகவில்லை. மோசேயின் கண்கள் பிரமித்தன. இந்த அசாதாரணக் காட்சிதான் மோசேயை அந்த முட்செடிக்கு அருகிலே கிட்டிச்சேரப் பண்ணியது. இங்கே கவனிக்கவேண்டியது என்னவெனில், இந்த முட்செடியின் ஒரு பகுதியோ சில கிளைகளோ அல்ல; முட்செடி முழுவதுமாகப் பற்றியெரிந்துகொண்டிருந்தது. அந்த ஜூவாலித்த முட்செடியின் நடுவிலிருந்துதான் கர்த்தருடைய தூதனானவர் மோசேக்குத் தரிசனமானார். ஆக, அன்று மோசேயை அந்த முட்செடியண்டைக்கு கவர்ந்து இழுத்ததற்கும், அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரவேலின் மீட்பின் செய்தியை மோசே பெற்றதற்கும் காரணம், முழுவதும் ஜூவாலித்து எரிந்தும் வெந்துபோகாத முட்செடியின் அசாதாரணக் காட்சியும், அதன் நடுவிலிருந்து பேசிய தேவசத்தமுமே!

அக்கினியிலும் கருகிப்போகாதவர்கள்

சூளை சூடாக்கப்படுவதும், தண்டனைக் குட்பட்டவர்கள் அதில் எறியப்பட்டு எரிந்து சாம்பலாவதும் அன்று நேபுகாத்நேச்சாருக்குச் சாதாரண காட்சிகள். ஆனால், அதே சூளை ஒருநாள் அவன் கவனத்தை ஈர்த்தது. அந்த அசாதாரணக் காட்சி அரசனைத் திகைக்க வைத்தது. அரச உத்தரவில் ஏழு மடங்காய் சூடாக்கப்பட்டு பற்றி எரிந்த அக்கினிச் சூளையின் நடுவிலே, கட்டப்பட்ட நிலையில் வீசி எறியப்பட்ட சாத்ராக், மேஷாக், ஆபேத் நேகோ என்ற மூன்று வாலிபர்களுக்கும் எதுவும் ஆகவில்லை. அதிலும் மேலாக, அவர்களுடன் இன்னுமொருவர் அக்கினியில் உலாவுகிறதை அரசன் கண்டு திடுக்கிட்டான். ‘சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்’ என்றான் அந்த அந்நிய அரசன். அன்று அவன் தேவனை அறிக்கைசெய்யக் காரணம், அந்த நண்பர்கள், பற்றி எரிந்த அக்கினியில் வீசி எறியப்பட்டும் கருகிப்போகாததுதான்!

ஒவ்வொருவர்மேலும் அமர்ந்தும் சேதப்படுத்தாத அக்கினி நாவுகள்

அன்று, எத்தனையோ பெந்தெகொஸ்தே நாட்கள் வந்துபோயின. அதேமாதிரி எருசலேமிலே சீஷர்கள் கூடியிருந்ததும் சாதாரண விஷயம். ஆனால், இயேசு பரத்துக்கேறிய பின்னர் வந்த பெந்தெகொஸ்தே நாளன்று கூடியிருந்த சீஷர்கள் மீது பரிசுத்தாவியானவர் முதன்முறையாக அருளப்பட்டார். வெறுமனே அல்ல; அன்று என்றுமில்லாமல் பலத்த காற்று, வானத்தில் முழக்கம், அத்துடன் அக்கினி மயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்கள்மேல் வந்து அமர்ந்தது. அதற்காக சீஷர்கள் பற்றி எரிந்து சாம்பலாகவில்லை; மாறாக, அவர்கள் அக்கினிபோல பிரகாசித்தார்கள். இந்த அசாதாரண காட்சியினால் பெந்தெகொஸ்தே நாள் பண்டிகைக்குக் கூடி வந்திருந்த ஏறத்தாழ 16 வேறுபட்ட இனத்தவர்களும் அவர்களண்டை ஈர்க்கப்பட்டார்கள். அங்கே கூடியிருந்த அத்தனை மக்களும் தங்கள் தங்கள் பாஷையிலே சுவிசேஷத்தைக் கேட்கும்படி கலிலேயராகிய சீஷர்கள் அங்கே கூடியிருந்தவர்களின் பாஷையிலே பேசினார்கள். என்ன ஆச்சரியம்! தங்கள் பாஷையிலே தேவனுடைய மகத்துவங்களைப் பேசிய அசாதாரண விஷயத்தை மக்கள் கண்டனர். பரிசுத்தாவியானவர் சபைக்கு அருளப்பட்ட உன்னதமான நாள் அதுவே. அன்றுதான் பேதுரு தனது முதற் பிரசங்கத்தை அதிகாரத்துடன் பிரசங்கித்தார். அந்த அக்கினி இன்று நமது சபைகளில் எங்கே?

திருச்சபை பற்றி எரிகிறதா?

இன்று நமது சபையை, சுற்றியிருக்கிற மக்கள் எப்படிக் காண்கிறார்கள். தம்மில் ஒன்றாக காண்கிறார்களா? அல்லது ஒரு அசாதாரண தன்மையைக் காண்கிறார்களா? மக்கள் நம்மை நாடி வருகிறார்களா? அல்ல, நம்மைவிட்டுத் தூர ஓடுகிறார்களா? தேவனை அறியாத மக்களைத் தன்பால் ஈர்க்கவும், திருச்சபையின் நடுவில் வீற்றிருக்கும் தேவனுடைய சத்தத்தை அவர்கள் கேட்கவும், இவரே தேவன் என்று சாட்சி சொல்லவும், திருச்சபையில் கொடுக்கப்படும் நற்செய்தியின் சந்தோஷத்தை அனுபவிக்கவும் தக்கதாக நமது திருச்சபை இன்று இருக்கிறதா?

இன்று சபை பரிசுத்தாவியினால் பற்றி எரிய முடியாதிருக்கத் தடைதான் என்ன? இதுதான் பரிசுத்தாவி என்று பல திருக்கான போதனைகள் சபை மக்களைக் குழப்புவது மிகத் துக்கமான விஷயமாகும். சபை கிறிஸ்துவுக்குள் தூய ஆவியானவரால் பற்றி எரிந்து சாட்சி பகர வேண்டும். சபை பகுதி பகுதியாக அல்ல; சபை ஒன்றுசேர்ந்து பற்றி எரிந்தும், வெந்துபோகாது காட்சி தரும்போதுதான் அது சாட்சி பகரும். நாம் தேவனுக்காய் பற்றியெரியும்போதுதான், நம்மைச் சூழ இருப்பவர்கள் தேவனண்டை வருவார்கள். (அதற்காக நெருப்பு காணப்பட வேண்டும் என்பது அல்ல என்றும், நெருப்புப் போல நாமும் திகழவேண்டும் என்பதை யாரும் சொல்லி நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அல்ல) இன்று சபையிலுள்ளவர்களும், ‘இங்கே அனலில்லை’ என்று ஓடுவார்களானால், சபையின் அனலற்ற நிலைமை சபைக்கு ஆபத்தையே கொண்டுவரும். தேவன் நம்மை வாந்திபண்ணிப் போடாதிருந்தால் நல்லது (வெளி.2:16).

சபை பற்றி எரியட்டும்

நாம் தேவ மக்களாக, சபையாக ஒன்று திரள்வோம். அக்கினியாய் பற்றி எரிய தேவன் நம்மை அழைக்கிறார். தேவன் நம் மத்தியில் இருப்பாரானால் நம்மைப்பற்றிய அக்கினி நம்மைச் சேதப்படுத்தாது. பதிலுக்கு அதுவே சாட்சியாய் எழுந்துநிற்கும். பற்றியெரியாத இடத்தில் தேவ தரிசனம் கிடையாது. பாகு பாடுகள் காட்டும் இடத்திலும் தேவபிரசன்னம் கிடையாது. உலகோடு ஒத்து ஓடாமல், ஒன்று சேர்ந்து, ஒரு அசாதாரண சபையாக, கிறிஸ்துவுக்காய் பற்றியெரிவோமானால், மக்கள் தேவனண்டை வருவார்கள். தேவமகிமையைக் காண்பார்கள். இனி காலம் அதிகம் செல்லாது. பிரிவினைகளும், வீண் தர்க்கங்களும் சபை ஒருமித்துப் பற்றியெரிவதைத் தடுத்துப்போடும். முட்செடி பற்றியெரிந்தும் வெந்துபோகவில்லை. பதிலுக்கு மோசே என்று உத்தம தலைவன் எழும்பினான். அக்கினி ஏழு மடங்கு பற்றியெரிந்தும் அந்த நண்பர்கள் சாம்பலாகவில்லை. பதிலுக்கு புறவின ராஜா தேவனை அறிந்துகொண்டான். அக்கினி நாவுகள் இறங்கி அமர்ந்தும் சீஷர்களை அழிக்கவில்லை. பதிலுக்கு மக்கள் தேவமகிமையைக் கண்டனர். புறவினத்தாரும் தேவனை அறிந்தனர்.

இன்று நமது சபை கொடுக்கும் சாட்சி என்ன? நாம் சாதாரணமானவர்கள் அல்லவே! சாதாரணத்தையும் அசாதாரணமாய் மாற்றுகின்ற தேவகரத்தில் சபையாய் நம்மை ஒப்புவிப்போம். உலகில் நாம் அசாதாரணமானவர்களாய் கிறிஸ்துவுக்கே சாட்சியாய் பற்றி எரிய தேவாவியானவர் நம்மில் அக்கினியாய் ஜூவாலித்து எரிவாராக. ஆமென்.

சத்தியவசனம்