ஒரே வழி ஒரே இரட்சகர்!

Dr.உட்ரோ குரோல்
(ஜூலை-ஆகஸ்டு 2015)

“நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்;” என்று உரைத்த இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள். உலகில் அநேக மதங்கள் இருந்தாலும் மக்களுக்கு ஒரே ஓர் இரட்சகர்தான் உண்டு. பல்வேறு மதத்தைப் பின்பற்றுவதற்கும் ஒரே தேவனுடன் உறவு கொள்வதற்கும் உள்ள வேறுபாட்டை இந்த இதழில் நாம் ஆராய்வோம். நீங்கள் எந்த மதத்தைப் பின்பற்றுகிறீர்கள் என்பதைவிட தம்முடைய ஒரே குமாரனை பலியாகத் தந்த தேவனுடன் உங்களுக்குள்ள உறவே முக்கியமான காரியமாகும்.

இயேசுகிறிஸ்து ஒருமுறை எருசலேமிலிருந்து கலிலேயாவுக்கு சமாரியா வழியாகச் சென்றார். ஏனெனில் சீகார் என்ற ஊரில் அவர் ஒரு சமாரியப் பெண்ணை சந்திக்க வேண்டியதாய் இருந்தது. இது அந்த பெண்ணுக்கே தெரியாது. கோத்திரப் பிதாவாகிய யாக்கோபு தனது மகன் யோசேப்புக்கு கொடுத்த நிலம் அங்கே இருந்தது. யோவான் 4ஆம் அதிகாரத்தில் இந்நிகழ்ச்சியை நாம் வாசிக்கிறோம். “அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார்; அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி வேளையாயிருந்தது. .. அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத்தா என்றார்” (வச.6,8).

இங்கே அவர் ஒரு சாதாரண வேண்டுகோளை வைக்கிறார். எருசலேமிலிருந்து அதிக தூரம் பிரயாணம் பண்ணி வந்ததால் களைப்படைந்தவராய் அக்கிணற்றினருகே அமர்ந்தவராய் தண்ணீர் கேட்பது ஓர் அசாதாரணமான வேண்டுகோள் அல்ல. ஆனால் இந்த உரையாடல் நிகழ்த்திய மனிதர்களை நாம் கவனிக்க வேண்டும். யூதராகிய இயேசுகிறிஸ்து ஒரு சமாரியப் பெண்ணுடன் பேசுகிறார். அவள் ஒரு வேற்று நாட்டினைச் சார்ந்தவள். சமாரியர்களும் யூதர்களும் கலாச்சாரத்தால் வேறுபட்ட வர்கள். ஆயினும் சமய மற்றும் கலாச்சாரத் தடைகளை மீறி இயேசுகிறிஸ்து இப்பெண்ணிடம் தாகத்துக்குத் தரும்படி கேட்கிறார். “யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங் கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரை நோக்கி: “நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம்” (வச.9) என்றார்.

இயேசுகிறிஸ்துவுக்கு இப்பெண் தண்ணீர் கொடுக்கும் சூழலில் அவளோ அல்லது மற்ற சமாரியர்களோ பயன்படுத்தும் பாத்திரத்தையே அவர் உபயோகித்தாக வேண்டும். யூதர்களுடன் சமாரியர்கள் சம்பந்தம் கலவாதவர்கள் என்பதால் அப்பாத்திரத்தை பயன் படுத்துவது யூதர்களுக்கு தீட்டு எனக் கருதப்படும். இயேசுகிறிஸ்துவின் இந்த கோரிக்கை அப்பெண்ணை அதிர்ச்சியடையச் செய்தது. “நீர் என்னிடத்தில் தண்ணீர் கேட்பானேன். உம்மிடத்தில் பாத்திரமும் இல்லையே, என்னுடைய பாத்திரத்தில் வாங்கிக் குடிப்பது என்பதும் இயலாத காரியம்” என்றாள்.

ஆனால் மக்களுடைய சரீரத் தேவைகளை விட வேறு பல முக்கிய தேவைகளும் உண்டு என்பதை அவளுக்கு உணர்த்துவதற்கு “இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்” (வச.10). இச்சமாரிய ஸ்திரீ அநேக காரியங்களில் அறியாமையுடையவளாய் இருந்தாள். முதலாவதாக அவள் தேவன் தரும் ஈவாகிய ஜீவத்தண்ணீரை அறியவில்லை. அப்பரிசு கிறிஸ்துவின் மூலமாகவே வரும் என்றும் அந்த கிறிஸ்துவே தன்னுடன் பேசிக்கொண்டு இருக்கிறார் என்பதையும் அவள் அறியவில்லை.

அந்த ஸ்திரீக்கு தான் தரவிருக்கும் பரிசினைப் பற்றி இயேசுகிறிஸ்து வசனம் 11 மற்றும் 12இல் விளக்குகிறார். தாம் பேசுவதை அப் பெண் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை இயேசு விரும்பினார். எனவேதான் “இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்” (வச.13,14) என்றார். சரீர தாகத்தைப் பூர்த்தி செய்யும் கிணற்று நீரைப்பற்றி அப் பெண் பேசினாள். ஆனால் இயேசு அதைப் பற்றி பேசவில்லை. இயேசு நித்திய ஜீவனை அளிக்கும் ஜீவத்தண்ணீரை அவளுக்கு விளக்கினார். ஆனால் அவள் இன்னும் அறியாமை யுடையவளாய் “ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும்” (வச.15) என்றாள்.

ஆத்துமாவின் தேவைக்கான தீர்வு யாக்கோபின் கிணற்றிலிருந்தோ சமாரியரின் மதத்திலிருந்தோ யூத கிறிஸ்தவ இஸ்லாமிய மற்றும் புத்த மதங்களிலிருந்தோ கிடைக்காது. அதை வேறு எந்தவொரு மதத்திலிருந்தும் பெற முடியாது. அது ஒரே மெய் தேவனுடனான உறவிலிருந்தே கிடைக்கும். தேவனிடமிருந்து வரும் இந்த ஜீவதண்ணீரை நான் எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்? தேவனுடன் நான் எவ்வாறு உறவாடலாம்? இந்த சமாரியப் பெண் ஒருவிதத்திலும், யூதர்கள் வேறு ஒருவிதத்திலும் தேவனை ஆராதித்து வந்தனர்.

“அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுது கொண்டுவந்தார்கள்”(வச.19,20) என்று தங்களுடைய தொழுகையை இயேசுகிறிஸ்துவுக்கு விவரிக்கிறாள். இங்கே அப்பெண் குறிப்பிடுவது கெரிசீம் மலையாகும். பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் மக்கள் கானானுக்குள் பிரவேசிக்கும்பொழுது ஒரு மலையின் மீது ஆசீர்வாதமும் மற்றொரு மலையின் மீது சாபமும் கூறப்பட்டன. சமாரிய ஸ்திரீ குறிப்பிடுவது இந்த இரு மலைகளில் ஒன்றாகும்.

“எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ள வேண்டும் என்கிறீர்களே” (வச.20) என்றாள். அதாவது “நாங்கள் இந்த கெரிசீம் மலையில் தேவனைத் தொழுதுகொள்ளுகிறோம். ஆனால் யூதர்களாகிய நீங்களோ மோரியா மலையில் தொழுதுகொள்ள வேண்டும் என்று சொல்லுகிறீர்களே” என்றாள்.

“அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுது கொள்ளுங்காலம் வருகிறது. நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ளவேண்டும்” (வச.21-24) என்றார்.

நம்முடைய தொழுகை நமது முழங்காலில் இருந்து ஆரம்பமாக வேண்டும். அது நம்முடைய கை தட்டுதலிலோ பாடல்களிலிருந்தோ துவங்குவதில்லை. அது நம்முடைய சிந்தனையிலிருந்து கிளம்பவேண்டும். பின்னர் அது மற்ற பகுதிகளுக்கும் பரவும். எனவேதான் அவரை ஆவியோடும் அவரைப் பற்றிய உண்மைகளை அறிந்தவர்களாயும் நாம் தொழுதுகொள்ள வேண்டும் என்று இயேசு உரைத்தார்.

அவரைத் தொழுதுகொள்ளுவதைப் பற்றி அவரது சத்திய வார்த்தைகள் நமக்கு அறிவிக்கிறது. தேவனைப் பற்றிய உண்மையை நீங்கள் அறிந்துகொள்ள இயேசுகிறிஸ்துவிடம் வர வேண்டும். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று அவர் வெளிப்படுத்தியுள்ளார். தேவனைப் பற்றிய உண்மைகளை அவருடைய வார்த்தையிலிருந்து நாம் அறிந்து கொள்ளுகிறோம். தேவனை நாம் தொழுது கொள்ளும் இடம் முக்கியமல்ல; அவரை அணுகும் முறையே முக்கியம். ஆவியோடும் உண்மையோடும் அவரை ஆராதிக்க வேண்டும்.

தேவனைப் பற்றிய குறைவான அறிவுடைய அந்த ஸ்திரீ மேசியாவைப் பற்றிய அறிவையும் பெற்றிருந்தாள். “அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்” (வச.25). மேலும் மேசியா வருகைக்காக அவள் காத்திருப்பதையும் தெரிவிக்கிறாள். ஆனாலும் இந்த மேசியாவைப் பற்றிய அறிவு அவளுக்கு இரட்சிப்பைத் தரவில்லை. இன்றும் அநேகர் பரிசுத்த வேதாகமத்தைப் பற்றியும் தேவனைப் பற்றியும் மதத் தொடர்பான பல காரியங்களையும் அறிந்துள்ளனர். தேவனை ஆராதிக்க பல்வேறு திருச்சபைகள், பல்வேறு பிரிவுகள், குழுக்கள் மற்றும் கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் பிதாவை அடைவதற்கு ஒரே வழியான இயேசு கிறிஸ்துவை அவர்கள் அறியாமலிருக்கிறார்கள். எனவேதான் வச.26 நமக்கு மிக முக்கியமானதாகும். “அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற  நானே அவர்  என்றார்”.

இயேசுகிறிஸ்துவும் இந்த சமாரியப் பெண்ணும் ஒருவரையொருவர் பார்த்ததுமில்லை; அறிந்ததுமில்லை. இந்த ஸ்திரீக்கு இயேசு கிறிஸ்து யார் என்றோ அவருடைய பெயர் என்னவென்றோ தெரியாது; இயேசுகிறிஸ்துவும் இந்த பெண்ணை பெயர் சொல்லி அழைக்கவில்லை. வேதாகமத்திலும் அவளுடைய பெயர் குறிப்பிடப்படவில்லை. இருவருடைய கலாச்சாரமும் மதமும் வெவ்வேறானவை. அதுபோலவே நாம் அனைவரும் மதத்தாலும் கலாச்சாரத்தாலும் இனத்தாலும் மொழியினாலும் நாட்டினாலும் வேறுபட்டிருந்தாலும் இயேசுகிறிஸ்துவை இரட்சகராக அறிந்திருக்க வேண்டும். “நீ ஆவலுடன் சந்திக்கக் காத்துக்கொண்டிருக்கும் மேசியா நான்தான்” என்று கிறிஸ்து அவளிடம் கூறுகிறார்.

இங்கு மூன்று காரியங்களை நாம் கவனிக்க வேண்டும். இயேசுகிறிஸ்து அந்த ஸ்திரீக்கு தம்மை மேசியா என்பதை வெளிப்படுத்த தயங்கவில்லை. “உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்கிறார். அநேக நேரங்களில் அவரை மேசியா என்று அசுத்த ஆவிகள் அறிக்கையிட்டபொழுது அமைதியாயிருக்கக் கட்டளையிட்ட இயேசுகிறிஸ்து இந்த சமாரியப் பெண்ணுக்கு தம்மை மேசியா என்று தாமே வலிய அறிமுகப்படுத்திக்கொண்டார்.

இரண்டாவதாக, அந்த மேசியாவே அவளுடன் பேசுகிறார் என்பதையும் எடுத்துச் சொல்லுவதில் கவனமாய் இருக்கிறார். எங்கோ ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளவராகவோ ஒரு மேடையில் சந்திக்க இருப்பவராகவோ அல்ல. அந்த யாக்கோபின் கிணற்றின் அருகே அமர்ந்தவராய் அவளுடனே உரையாடுபவராய் தம்மை அறிமுகம் செய்துகொண்டார். அவளுடன் உரையாடி ஒரு உறவை ஏற்படுத்தினார். அவர்களுக்கு இடையேயிருந்த தடைகளை “தாகத்துக்குத் தா” என்ற சாதாரண வேண்டுகோளினால் தகர்த்தெறிந்தார். சிலநேரங்களில் நாமும்கூட சாதாரண சில காரியங்களின் மூலம் இன, மத மற்றும் கலாச்சார தடைகளை உடைக்கமுடியும்.

மூன்றாவதாக, தாம் நித்திய ஜீவனை அவளுக்கு அளிப்பேன் என்றார். அதன்மூலம் தன்னுடன் ஒரு நித்திய உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதையும் விளக்கினார். இதுவே இப்பகுதியின் மையக் கருத்தாகும். “நீ ஜீவத்தண்ணீரைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அது இந்த கிணற்றிலிருந்து உனக்குக் கிடைக்காது. அதை நீ என்னிடமிருந்தே பெற்றுக் கொள்ள முடியும்” என்றார்.

இதனை இயேசுகிறிஸ்து ஒருவரால் மாத்திரமே கூறமுடியும். அவருடன் உள்ள உறவே நமக்கு நித்திய ஜீவனைத் தரும். மற்ற மனிதர்களுடனோ அல்லது அவர்கள் மூலமாகவோ உள்ள உறவினால் அல்ல; இயேசுவே அந்த உறவு. இந்த சமாரியப் பெண் யாக்கோபின் கிணற்றருகே இயேசுகிறிஸ்துவுடன் உரையாடியது போலவே நீங்களும் அவருடனே அமர்ந்து மனந்திறந்து உறவாட முடியும். சமாரியப் பெண்ணுடனான உரையாடலில் மதம் முக்கியமல்ல; தேவனுடனான உறவே முக்கியம். நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள இயேசு கிறிஸ்துவே வழி என்பதை தெளிவாக அவர் உணர்த்துகிறார். நம்முடைய பின்னணியோ நம்முடைய சாதனைகளோ நம்மை மன்னிப்பதற்கு தேவன் அவசியம் என்பவைகளோ முக்கியமானவைகள் அல்ல.

நாம் மனந்திரும்பும்பொழுது தேவன் சகலத்தையும் மன்னிக்க உயர்ந்தவரும் பெரியவருமாய் இருக்கிறார். நீங்கள் யார்? உங்களுடைய இனம் மதம் கலாச்சாரம் மொழி இவை எதுவும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு தடைகளல்ல. இந்த யாக்கோபின் கிணற்றருகே அமர்ந்து சமாரிய ஸ்திரீயுடன் உரையாடிய இயேசுகிறிஸ்து உங்களுடைய வாழ்க்கை கிணற்றிலும் அமர்ந்து தம்முடன் உரையாட உங்களை ஆவலுடன் அழைக்கிறார். நீங்கள் உங்களைக் குறித்தும் உங்களுடைய சாதனைகளைக் குறித்தும் பெருமைபாராட்டிக் கொண்டு ஜீவத்தண்ணீரை அருந்தாமல் இந்த பழைய கிணற்றின் நீரையே பருக விரும்புகிறீர்களா?

“நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது. நித்திய ஜீவகாலமாய் ஊறும் தண்ணீரை நான் தருவேன். நீ அமர்ந்திருந்து எனக்குச் செவிகொடுத்து இந்த சமாரியப் பெண்ணைப்போல விசுவாசிக்க வேண்டும்” என்று கிறிஸ்து கூறுவதை நீங்கள் உணர்ந்து கொள்ளுகிறீர்களா?

அந்த ஸ்திரீ தன் குடத்தை வைத்துவிட்டு ஊருக்குள்ளே போய் அனைவருக்கும் அறிவிக்கிறாள். அக்கிராமத்து மக்கள் யாவரும் புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள். அநேகர் அந்த ஸ்திரீயை நோக்கி: “உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலக ரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்”.

நீங்களும் நானும் செய்யவேண்டிய காரியம் இதுதான். இயேசுவே மெய்யான இரட்சகர் என்று உலகத்திற்கு நாம் அறிவிக்க வேண்டும்; அது நம்மேல் விழுந்த கடமை. இதில் மதங்களுக்கோ கலாச்சாரத்துக்கோ இடமில்லை. அவருடனான உறவே முக்கியம். ஆனால் இன்றைய உலகில் இவைகளால் நிறைய பிரிவினைகள் நிறைந்து காணப்படுகின்றன. நீங்கள் யாருடன் கிறிஸ்துவைப் பகிர்ந்துகொள்ளுகிறீர்கள் என்பதல்ல; கிறிஸ்துவே இரட்சகர் என்ற செய்தியை அறிவிப்பதே முக்கியம்.

கிறிஸ்தவர்களாகிய நம்மிடையேயும் அநேக பிரிவினைகள் காணப்படுகின்றன. ஆனால் கிறிஸ்துவைப் பற்றியும் அவருடைய போதனைகளையும் அவருடைய கட்டளைகளையுமே நாம் முக்கியப்படுத்த வேண்டும். தேவனுடைய வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவில் மாத்திரமே நாம் இவைகளைக் காணமுடியும். தேவனுடைய வார்த்தையே நம் அனைவரையும் ஒன்றுபடுத்தும். சபைகளில் உள்ள பிரிவினைகள், இறையியல் சித்தாந்தங்கள், சடங்காச்சாரங்கள், இனப்பிரிவுகள் எல்லாம் ‘தேவன் உரைக்கிறார்’ என்ற சொல்லில் மறைந்துவிடும். “இதுவே வழி” என்று வேதம் கூறும்பொழுது அது எனக்கல்ல என்று நாம் ஒதுக்கிவிடமுடியாது. அனைவருக்கும் அதுவே வழி. பரமபிதா நமக்கு இயேசுகிறிஸ்துவால் இரட்சிப்பைத் தந்தருளியுள்ளார். நாம் தேவனிடம் நெருங்கிச்சேர்வதற்கு தேவனுடைய ஆவியானவர் ஒத்தாசை செய்கிறார். மக்களிடையே ஜாதி, இன, கலாச்சாரம், மொழி மற்றும் பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் அனைவருக்கும் ஒரே ஒரு இரட்சகர்தான் உண்டு. எனவே ‘உலகம் உய்வதற்கு ஒரே வழி இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவே’ என நாம் அனைவருக்கும் கூவி அறிவிப்போம்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்