இனிமையற்ற இவ்வுலகின் வழிகள்

சகோ.எம்.எஸ்.வசந்தகுமார்
(ஜூலை-ஆகஸ்டு 2015)
மே-ஜுன் 2015 இதழ் தொடர்ச்சி

(ஆ). பாவிகளுடைய வழிகள்

துன்மார்க்கருடைய ஆலோசனைகளின்படி நடவாமல் இருப்பது மட்டுமல்ல, பாவிகளுடைய வழியில் நிற்கவும்கூடாது என்றும் முதலாம் சங்கீதம் கூறுகிறது. உண்மையில், துன்மார்க்கர், பாவிகள் என்னும் இரு சொற்களும் ஒரே அர்த்தமுடையவைகளாகவே வேதாகமத்தில் உள்ளன. எனினும் இச்சங்கீதத்தில் முதலாவது வாக்கியம் துன்மார்க்கருடைய ஆலோசனையின்படி நடப்பதைத் தவிர்க்கும்படி கூறுகையில், இரண்டாவது வாக்கியம், துன்மார்க்கருடைய பாவமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டாம் என்று கூறுகிறது.

பாவம் என்றால் என்ன என்பதை நாம் அறிந்துகொள்ளும் விதத்தில், பாவத்திற்கான வரைவிலக்கணமாக 1யோவான் 3:4 உள்ளது. எனினும் இவ்வசனம் தமிழ் வேதாகமங்களில் சரியாக மொழிபெயர்க்கப்படவில்லை. நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமத்தில் இவ் வசனம், “நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஜேம்ஸ் அரசனுடைய ஆங்கில வேதாகமத்தை அடிப்படையாகக்கொண்ட இம் மொழி பெயர்ப்பு தவறானது.

மூலமொழியில் இவ்வசனத்தில் உள்ள கிரேக்கச் சொல்லை “நியாயப்பிரமாணத்தை மீறுதல்” என்று மொழிபெயர்க்க முடியாது. ஏனெனில், பழைய ஏற்பாட்டில் தேவன் கொடுத்த நியாயப்பிரமாணத்தைப் பற்றி யோவான் இவ் வசனத்தில் எழுதவில்லை. மூலமொழியில் இது நியாயப்பிரமாணத்தைக் குறிப்பிடும் சொல்லும் அல்ல. இதனால், புதிய ஏற்பாட்டில் இச்சொல் இத்தகைய அர்த்தத்துடன் உபயோகிக்கப்படவும் இல்லை.

இயேசுகிறிஸ்து மனிதனாக இவ்வுலகத்திற்கு வரும் காலம்வரை செல்லுபடியாகக் கூடியதாக இருக்கும் விதத்திலேயே நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டிருந்தது (லூக்.16:16, கலா.3:19). இதனால், கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தைக் கைக் கொள்ளாமல் இருப்பதையே யோவான் பாவம் என்று இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளதாகக் கூற முடியாது. பாவம் என்றால் என்ன என்பதை அறியத்தரும் விதத்தில் 1 யோவான் 3:4இல் உபயோகிக்கப்பட்டுள்ள கிரேக்கச் சொல் “பிரமாணமில்லாதிருத்தல்” என்னும் அர்த்தமுடையது. இது “ஒழுக்க விதிமுறைகள் இல்லாத நிலையைக்” குறிக்கின்றது. மனிதனை சிருஷ்டித்த தேவன் அவனுடைய வாழ்க்கைக்கு அவசியமான ஒழுக்க விதிமுறைகளையும் நிர்ணயம் பண்ணியுள்ளார்.

இவை வேதாகமத்தில் மட்டுமல்ல, மனிதருடைய இருதயங்களிலும் எழுதப்பட்டுள்ளது (ரோ.2:14-15). உண்மையில், மானிட வாழ்வுக்கு தேவன் கொடுத்துள்ள ஒழுக்க விதிமுறைகளைக் கருத்திற்கொள்ளாமல் வாழ்வதுதான் பாவம் என்று 1யோவான் 3:4 கூறுகிறது.

“பாவி” என்பதற்கு மூலமொழியில் உபயோ கிக்கப்பட்டுள்ள எபிரெயச்சொல் “குறிதவறுதல்” என்னும் அர்த்தமுடையது. அதாவது மானிட வாழ்வுக்குத் தேவன் வைத்துள்ள இலக்கை அடையத் தவறுவதே பாவம் என்பதை இச்சொல் அறியத்தருகின்றது. புதிய ஏற்பாட்டிலும் பாவத்தைக் குறிப்பிட உபயோகிக்கப்பட்டுள்ள கிரேக்கச்சொல்லும் இதே அர்த்தத்தையே கொண்டுள்ளது. பாவிகள், மானிட வாழ்க்கைக்குத் தேவன் வைத்துள்ள ஆசீர்வாதங்களையும், தராதரங்களையும் இலக்கையும் அடைய முடியாதவர்களாக இருக்கின்றனர். மனிதர் எவ்வாறு இவ்வுலகில் வாழ வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கின்றாரோ, அவ்விதமாக இவர்கள் வாழ்வதில்லை. இதற்குக் காரணம், இவர்கள் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் வாழ்வதே யாகும். உண்மையில் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் இருப்பதே பாவமாக உள்ளது. இவ்வாறு வாழ்பவர்களைப்போல இருக்க வேண்டாம் என்று முதலாம் சங்கீதம் கூறுகிறது.

(இ). பரியாசக்காரரின் ஆசனம்

தேவனை அறியாத துன்மார்க்கருடைய ஆலோசனையைக் கைக்கொள்ளாமலும், பாவிகளுடைய வாழ்க்கை முறையைப் பின்பற்றாமலும் இருப்பது மட்டுமல்ல, பரியாசக்காரரின் ஆசனத்தில் உட்காரவும் வேண்டாம் என்றும் முதலாம் சங்கீதத்தின் முதல் வசனம் கூறுகிறது. பரியாசக்காரர் தேவனையும் அவருடைய பரிசுத்தமான வழிகளையும் பரிகசிப்பவர்களாவர். இவ்வசனத்தில் “உட்காரும் இடம்” என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள சொல், அறிவாளிகள் அல்லது அரசியல் தலைவர்கள் அமர்ந்திருந்து முக்கிய விஷயங்களைப் பற்றி கலந்துரையாடும் இடத்தைக் குறிக்கின்றது. 107ஆம் சங்கீதத்தில் இச்சொல், “ஜனங்களின் சபை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மோனஹன் மொழிபெயர்ப்பில் இவ்வாக்கியம், “பரியாசக்காரர் கூட்டத்தில் உட்காராமலும்” என்றும், திருவிவிலியத்தில் “இகழ்வாரின் குழுவில் அமராதவர்” என்றும் முதலாம் வசனத்தின் மூன்றாவது வாக்கியம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

தற்காலத்தில் படித்து பட்டம் பெற்றவர்கள் பல்கலைக் கழகப் பேரவைகளிலும், வேதாகமக் கல்லூரிகளின் வகுப்புகளிலும், ஊடகவியல் கூடுகைகளிலும் தேவனையும், வேதாகமத்தையும் இழிவுபடுத்துகின்ற விதத்தில் பேசுவதும், தர்க்கம்பண்ணுவதும் சாதாரணமான விஷயங்களாக உள்ளன. இத்தகைய இடங்களில் இருக்கவேண்டாம் என்றும் முதலாம் வசனம் கூறுகின்றது. இத்தகைய இடங்களில் படித்தவர்கள் சரித்திர ஆதாரமற்ற பொய்யான காரியங்களை அறிவுபூர்வமாகவும் தர்க்கரீதியாகவும் விளக்குவதனால் சாதாரண மக்கள் இவை உண்மை என்று நம்பிவிடுகின்றனர். அண்மைக் காலத்தில் வெளிவந்த “டாவின்சியின் கோட்” என்னும் நாவலும் திரைப்படமும் இதற்கு சிறந்த உதாரணங்களாக உள்ளன. இந்நாவலை வாசித்தவர்களில் பலர் இக்கதை உண்மையானது என்றும், வேதாகமம் பிழையானது என்றும் எண்ணத் தொடங்கியுள்ளனர். இதனால் வேதாகம காரியங்களைப் பரிகசிக்கும், அறிவாளிகள் கூடும் இடங்களில் இருப்பதைக் கிறிஸ்தவர்களாகிய நாம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

பரியாசக்காரர்கள் தேவனைவிட தாங்கள் அறிவாளிகள் என்று எண்ணுகின்றனர். இதனால் வேதாகமம் புராண கால மக்களுடைய மூடக்கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் கொண்டுள்ள புத்தகம் என்று இவர்கள் விமர்சிக்கின்றனர். மேலும் தேவன் மானிட வாழ்க்கைக்குக் கொடுத்துள்ள ஒழுக்கச் சட்ட விதிகள் தற்கால விஞ்ஞான உலகத்திற்குப் பொருத்தமற்றவைகள் என்றும் இவர்கள் கூறுகின்றனர்.

உண்மையில் இவர்கள் அகங்காரமும் இறுமாப்பும் உடையவர்கள் (நீதி.21:24).

தங்களுக்கு சகலமும் தெரியும் என்னும் எண்ணத்தில் இவர்கள் இருப்பதனால் எவருடைய அறிவுரையையும் ஆலோசனையையும் இவர்கள் கேட்பதில்லை (நீதி.9:7, 15:12).

ஆனால் வேதாகமம் இவர்களை அறிவற்ற மூடர்களாகவே வர்ணித்துள்ளது (நீதி.9:8,14:6).

இவர்கள் தங்களுடைய அறிவினால் ஏற்றுக் கொள்ளமுடியாத தேவனுடைய வழிகளை ஏளனம் செய்கின்றனர். இதுவே இவர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது (நீதி.22:10).

இத்தகைய மனிதர்களுடன் சேர்ந்து தேவனையும் அவருடைய வேதாகமத்தையும் பரிகசிப்பவர்களாக இருக்கவேண்டாம் என்று முதலாம் சங்கீதம் கூறுகிறது.

மானிட வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதற்கான வழிமுறைகளைத் தேவன் தம்முடைய வார்த்தையான வேதாகமத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தேவனை அறியாதவர்களும், (சில நேரங்களில் தேவனை அறிந்தவர்களும்) இவற்றிற்கு எதிரான ஆலோசனைகளை மக்களுக்கு கொடுப்பவர்களாகவும், தேவன் பாவமாகக் கருதும் வாழ்க்கை முறையை உடையவர்களாகவும், தேவனையும் அவருடைய சட்டதிட்டங்களையும் பரிகசிப்பவர்களாகவும் இருக்கின்றனர்.

இதனால் இவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்டு, இவர்களுடைய வாழ்க்கை முறையைப் பின்பற்றி, இவர்களைப் போல வாழவேண்டாம் என்று முதலாம் சங்கீதத்தின் முதல் வசனம் கூறுகிறது. இதுவே நாம் செல்லக்கூடாத இனிமையற்ற இவ்வுலகின் வழியாக உள்ளது.

சத்தியவசனம்