மறுபிறப்பும் வெற்றியுள்ள வாழ்க்கையும்

டாக்டர் சாம் கமலேசன்
(ஜூலை-ஆகஸ்டு 2015)

நமது வாழ்க்கையிலே  எத்தனையோ விதமான அசெளகரியமான காரியங்கள் நடக்கிறது இல்லையா? இப்படிப்பட்ட அசெளகரியமான காரியங்கள் வந்து நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும்பொழுது, நாம் சாதாரணமாக  சோர்வடைந்துபோய், என்ன சொல்லுகிறோம்? “இனிமேல் முயற்சி செய்யமுடியாது; எவ்வளவோ பண்ணிப் பார்த்திட்டேன்; இந்த வாழ்க்கை எப்பொழுதுமே இப்படித்தான் போகும். ஏதோ நான் என்னுடைய காலத்தை தள்ளிக்கொண்டு போகணும்.” என்று சொல்லிக் கொண்டு சோர்வடைந்து விடுகிறோம்.

இல்லையென்றால், என்ன சொல்லுகிறோம்? “இப்படித்தான் எப்பொழுதுமே பழிக்குப்பழி வாங்குகிறவன், பொய் சொல்லி வாழுகிறவன், மற்றவர்களைக் காட்டிக் கொடுத்து அதினாலே முன்னேறுகிறவன், இப்படிப்பட்டவர்களுக்குத்தான் இந்த உலகம்” என்று சொல்லி, சத்தியத்தையும் கட்டுப்பாட்டையும் இழக்கிற நிலைமைக்கு வந்து விடுகிறோம்.

இதுவும் இல்லையென்றால் என்ன செய்கிறோம்?, “ஏமாந்து போனேன் ஐயா;  நன்மை செய்தால் நன்மைதான் கிடைக்கும் என்று யோசித்து என்னென்னமோ செய்தேன்; ஆனால் ஏமாந்து போனேன் ஐயா! இனி என் பிள்ளைகளுக்கும், என் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் இந்த மாதிரி அவதூறு வராத வண்ணமாக, ஏமாற்றி வாழும் இவ்வுலகிலே அவர்கள் பிழைப்பதற்கு அவர்களுக்கு இந்த உலகத்தின் தத்துவங்களையும், ஞானத்தையும், நல்ல வித்தைகளைக் கற்றுக்கொடுப்பேன்” என்று தீர்மானம் பண்ணுகிறோம்.

இப்படியான நிலையில், இயேசுவானவர் நமக்கு கொடுக்கும் நல்ல மொழிதான் என்ன? அதைப்பற்றி நாம் கொஞ்சம் தியானித்துப் பார்க்கலாமா? திரும்பத் திரும்ப வசனத்திலிருந்து நாம் கேட்கும் ஒரு மையப்பொருள் என்ன தெரியுமா? “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” (யோவான் 3:3). “நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும்…” (வச.7). இந்த வசனங்கள் நமக்கு திரும்பத் திரும்ப வற்புறுத்திச் சொல்லப்படுகிறது.

இது சரிதானா? சரியே! வாழ்க்கையிலே மனிதனுக்கு மறுபிறப்பு என்ற அனுபவம் இல்லையென்றால் வாழ்க்கை திருந்துவதற்கும் வழியே கிடையாது; சமுதாயம் மாறுவதற்கும் வழி கிடையாது. இப்படி, போன போக்கிலேயே அழிவுக்குள் போய்க்கொண்டே இருப்போமே ஒழிய திசை திரும்பி இந்த அழிவுக்கு தப்புவதற்கு வழியே இருக்காது. இயேசுவானவர், மறுபிறப்பு என்ற அனுபவம் இந்த பிறப்பிலேயே உண்டு என்பதை அழுத்தம் திருத்தமாக சொன்னார். ஆனால் அவர் சொன்னதின் இன்னொரு அம்சத்தை மறக்கவே கூடாது.

மறுபிறப்பு என்ற ஓர் அனுபவம் இருக்கு மென்றால் தேவனுடைய ராஜ்யம் உண்டு என்ற தரிசனம் இருக்கும் என்று சொல்லிவிட்டார். ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தை காணமாட்டான். ஆனால் மறுபடியும் பிறந்துவிட்டால் அந்த தரிசனம் உண்டா? நிச்சயமாக உண்டு. சுற்றியிருக்கும் என்னுடைய சூழ்நிலையிலே ஒரு புது ராஜ்யம், ஒரு புது ஆளுகை உருவாகிறது. தேவனுடைய ஆளுகை – தேவனுடைய ராஜ்யம் என்ற தரிசனம் பெற்றவன் மறுபிறப்பின் அனுபவத்தை உடையவன். இதை மாற்றிச் சொன்னால், மறுபிறப்பின் அனுபவத்தை உடையவன் இந்த தரிசனத்தைப் பெற்றவன் என்று சொல்லலாம். இது நிச்சயமாக இருக்கும்பொழுது, என்னுடைய சூழ்நிலையிலே பழைய ராஜ்யம் இருக்கிறதே, இந்தப் பிசாசின் ராஜ்யம், அதினுடைய கொள்கைகளையும் தத்துவங்களையும் நடைமுறைகளையும் நான் உணர்ந்த போதிலும் இந்த புது ராஜ்யத்தினுடைய அம்சங்களை நான் ஏற்று வாழவேண்டிய பெரும் பாக்கியத்தைப் பெற்றவனாகிறேன். தரிசனம் என்று ஒன்று வந்து விட்டதென்றால், அந்த தரிசனத்தை என்னுடைய சிந்தையிலே இருத்திக்கொள்ளுவேனேயென்றால், அந்த சிந்தையிலே இருத்தப்பட்ட அந்த தரிசனத்தின் அம்சங்கள் என்னை ஆளுமேயென்றால், இந்த புது ராஜ்யத்தின் ஒரு பிரதிநிதியாக நான் வாழ்வதற்கு என்னுடைய வாழ்க்கையிலே எனக்கு ஆண்டவர் கொடுக்கும் பாக்கியம் நிறைவேறிக்கொண்டே வரும்.

நீங்கள் கேட்கலாம், ஐயா, இப்படி இருக்கும்போது, இந்த இரண்டு ராஜ்யமும் ஒன்றை ஒன்று மோதும்பொழுது, நான் அதின் நடுவில் அடிபட்டு போகிறேனே, இதற்கு ஆண்டவர் வைத்திருக்கும் பரிகாரம் என்ன? அதைப்பற்றி சிறிது சிந்திப்போம்.

கொஞ்சம் அவருடைய வாழ்க்கையின் அழகைப் பாருங்கள். தேவன் மனிதனாக இவ்வுலகிற்கு வந்தார் அல்லவா? வந்த ராஜா இந்த உலகத்திலே வாழும்போது, ‘ஏதோ வந்தேன் ஓர் ஓரமாக ஒதுங்கி நின்று வாழ்ந்து விட்டுப் போகிறேன்’ என்று சொன்னாரா? இல்லவே இல்லையே! என்னை எதிர்க்கும் தத்துவங்கள் அவரை எதிர்த்தபொழுது அதற்கு இணங்கிவிட்டாரா? இல்லவே இல்லையே. அது மாத்திரமல்ல, அவருடைய லாப நஷ்டங்களை கருதிக்கொண்டு இனி இந்த போக்கிலே போனால் எல்லாம் நஷ்டம் என்று யோசித்து தளர்ந்துபோனாரா? இல்லையே! ஆம், இந்த உலகப்பிரகாரமாய் வாழ்ந்த அவருடைய விரோதிகள் இருந்தார்களே, அவர்களுடைய கையிலே சிக்குண்டு ஏதோ திக்கு திசை தெரியாதவனைப்போல மலைத்துப்போய் நின்று விட்டாரா? இல்லவே இல்லையே. தான் கொண்ட நோக்கம், தனக்கு இடப்பட்ட ஆணை, தான் கொண்டிருந்த கொள்கைகளாகிய இந்த தேவனுடைய ராஜ்யத்தின் அம்சங்கள் இவற்றைவிட்டு ஒரு நிமிஷம்கூட விலகாமல் வாழ்ந்தாரே! அவர் நம்மைப் போல சாதாரண நிலையிலேதான் இருந்தார். உங்களையும் என்னையும்விட இன்னும் ரொம்ப சாதாரண நிலையிலிருந்தாரே! ஆயினும் தேவனுடைய ராஜ்யத்தின் அம்சங்களை விட்டுவிலகாமல்  வாழ்ந்தாரே. அவர் எனக்குள்ளேயும் உனக்குள்ளேயும் இருப்பாரேயென்றால் அவருடைய குணம் என்னையும் உங்களையும் ஆளவேண்டாமா? அவர் குண நலன்களை வெளிப்படுத்தும் இரு சந்தர்ப்பங்களை மட்டும் பார்ப்போம்.

அவர் இந்த உலகத்திலே நடமாடின கடைசி நாட்களிலே, எத்தனையோ விதமான எதிரான காரியங்கள் அவருக்கு விளைந்தன அல்லவா. மத்தேயு 26:40,41ஆம் வசனங்களைக் கொஞ்சம் கவனியுங்கள். கெத்செமனே தோட்டத்தில் சீடர்கள் நன்றாகத் தூங்கிவிட்டார்கள். இயேசுவானவர் கொஞ்சம் தள்ளிப்போய் முகங்குப்புற விழுந்து ஆழ்ந்த மனவேதனையோடு வேண்டுதல் செய்கிறார். அப்படி அவர் வேண்டுதல் செய்யும்போது அவருடைய வியர்வைகூட இரத்தமாக மாறி சொட்டு சொட்டாக விழுந்தது என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் என்ன அர்த்தம்? உள்ளுக்குள்ளே அவருக்கு அவ்வளவு வேதனை இருந்தது. சிலுவையிலே அவர் தொங்கும்போது சரீரப்பிரகாரமான வேதனை மட்டுமல்ல, மனுவர்க்கத்தினுடைய பாவத்தின் விளைவுகளையெல்லாம் தான் சுமக்கும் பொழுது, என்றுமே பிரிவில்லாமல் உடன் வாழ்ந்து வந்த பிதாவிடமிருந்து அவருக்கு பிரிவு ஏற்பட்டது. அவரை விட்டு கொஞ்சம் தூரத்திலே போகவேண்டுமே! இதையெல்லாம் யோசித்து முகங்குப்புற விழுந்து தன்னுடைய வேதனையை பிதாவினிடத்திலே ஒப்புவிக்கிறார். அப்படி வேதனைப்பட்டுக் கொண்டிருந்த போதிலும் யார்மேல் அவர் அக்கறை காட்டுகிறார் பார்த்தீர்களா? எழுந்து வந்து, சீடர்கள் தூங்குவதைப் பார்த்து, ‘விழித்திருந்து ஜெபிக்கவில்லையென்றால் நீ சோதனையிலே மாட்டிக்கொள்வாய். நீ இப்படி செய்யக் கூடாதே,’ என்கிறார். அக்கறை யார்மேலே? சீடர்கள் மேலே. அவதி யாருக்கு? இயேசுவுக்கு! இப்படிப்பட்ட வாழ்க்கையிலே, வெற்றியோடு கடைசிவரைக்கும் என் ஆண்ட வர் நிலைத்திருந்தாரே! அவருடைய குணம் எனக்கு வரவேண்டாமா?

இன்னொரு சந்தர்ப்பத்தைப் பாருங்கள். பேதுரு என்ன பண்ணிவிடுகிறான், ஒரு வாளை உருவி அவரைப் பிடிக்க வந்தவர்களில் ஒருவனுடைய காதை வெட்டியே போடுகிறான் (மத்.26:52-54). பிடிக்கவந்தவுடனே ஒருவேளை பேதுருவுக்கு பயம் இருந்திருக்கலாம், இன்னொரு பக்கம் என்னுடைய ஆண்டவருக்கா நீ இதை செய்கிறாய் என்று கோபம் இருந்திருக்கலாம். ஏதோ துடுக்காக கையிலிருந்த பட்டயத்தை உருவி வெட்டி விடுகிறான். உடனே இயேசு பட்டயத்தை உள்ளே போடச் சொல்லுகிறார். உன்னுடைய உதவி, பட்டயத்தின் உதவி எனக்கு வேணுமென்றால் தேவ தூதரை நான் அழைத்திருக்க மாட்டேனா? பத்தாயிரம் பேர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்களே. ஆனால் அதற்காக நான் வரவில்லை என்று சொல்லிவிட்டு அறுபட்ட காதையும் வைத்து அவனுக்கு குணத்தைக் கொடுத்துவிட்டு மேற்கொண்டு செய்யவேண்டிய காரியங்களுக்கு முன்னேறிப் போகிறார். இவர் ஏதோ சந்தர்ப்பத்திலே அறியாமல் போய் சிக்கிக்கொண்டாரா என்ன? இல்லையே! வெற்றியோடு நடக்கிறார். இதுதான் வாழ்க்கை! இது எனக்கு வந்த பொறுப்பு என்று ஏற்று நடக்கிறார்!!

இப்படிப்பட்ட ஆண்டவர் நம்முடைய இருதயத்திலே குடிகொண்டிருக்கிறார். நீயும் நானும் வாழ்க்கையின் அசந்தர்ப்பங்களிலும், சிக்கல்களின் மத்தியிலும், மற்ற ராஜ்யத்தின் அதிபதி நம்மை எதிர்க்கும்போதும் கோழைகளாக மாறிவிட முடியுமோ? இதை என்னாலே எதிர்க்க முடியாது என்று சொல்ல முடியுமோ? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

ஜெபம்: சுவாமி, நாங்கள் சாதாரண மனிதர். எங்களுக்குள்ளே எத்தனையோ விதமான சிந்தனைகள் உண்டு சுவாமி. ஒருபுறம் உம்மை அண்டி உம்மைப்போல வாழ வேண்டுமென்ற ஆழ்ந்த ஆசை. இன்னொருபுறம் உலகத்தினுடைய தப்பான கொள்கைகள், உலகத்தினுடைய எதிர்ப்பு, அதினுடைய விளைவுகளை யோசித்தாலோ கோழைத்தனம், சுவாமி. என்னையும் எங்களையும் நீர் நிலைநிறுத்த வேண்டும். எவ்வளவு வைராக்கியத்தோடு, வீரராக நீர் நடந்தீரே, சுவாமி. உமக்கு இருந்த பாடுகளை மறந்து விட்டு மற்றவர்களுடைய தேவைகளைக் குறித்து சிந்தித்தீரே சுவாமி. அடிபட்டு இருக்கிற வனுக்கு சுகத்தைக் கொடுத்து, அவனே உம்மைப் பிடிப்பதற்கும் இணங்கினீரே, சுவாமி. இப்படிப்பட்ட வெற்றியோடு வாழ்க்கையை அதிகாரத்தோடு வாழும் அந்ததரத்திலே நானும் நாங்களும் வாழவேண்டும், சுவாமி. எங்களோடு பேசும், உம்முடைய நாமத்திலேயே கேட்கிறோம் இயேசு ராஜா. ஆமென்.

சத்தியவசனம்