விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம்

Dr.தியோடர் எச்.எஃப்
(நவம்பர்-டிசம்பர் 2015)

3. விசுவாசிகளின் எதிரிகளும், அவர்களுடைய
தாக்கும் உத்திகளும் (எபேசியர்6:11, 12,16)

நம்முடைய போராட்டம் மற்ற மனிதர்களுடனல்ல. சாத்தானுடன் போர் செய்யவேண்டும். எபே.6:11 கூறுகிறது “நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாக வேண்டும்”. 12ஆம் வசனத்தில் நமது போராட்டம் “…மாம்சத்தோடும் இரத்தத் தோடுமல்ல…” என்று கூறப்பட்டுள்ளது.

உண்மையான எதிரியை நம் கண்களால் பார்க்க முடியாது. அவன் வல்லமையுள்ள, பார்க்கப்பட முடியாத எதிரி. எனினும் அவன் காணப்படக்கூடியவை மூலமாகத் தன்னை வெளிப்படுத்துவான். அவை மக்களாகவோ, சூழ்நிலையாகவோ இருக்கலாம். அவன் விசுவாசிகளுக்குச் சோதனைகளைக் கொடுப்பான். அவர்கள் கிறிஸ்துவை ஒதுக்கித் தள்ளிவிட்டு அவன் பக்கம் சாய்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்ப்பான். நாம் சாத்தானோடும், அவனுடைய சேனைகளோடும் மட்டுமல்ல, “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” (எபே.6:12).

மனிதரால் செய்யப்பட்ட ஆயுதங்கள் இந்த ஆவிக்குரிய போராட்டத்தில் பிரயோஜனப்படுவதில்லை. மனிதனால் செய்யப்பட்ட ஆயுதங்கள் மாம்சத்துக்குரியவை. ஆனால் 2கொரி.10:3 முதல் 5 வரை உள்ள வசனங்கள் நமக்கு நினைப்பூட்டுவது என்ன? “நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர் செய்கிறவர்களல்ல. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவ பலமுள்ளவைகளாய் இருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்”.

சாத்தானின் சேனைகள் பரலோகத்திலிருந்து விழத்தள்ளப்பட்ட தேவதூதர்கள். அவர்கள் சாத்தானுடைய கட்டளைகளைச் செயல்படுத்துகின்றன. சாத்தான் சர்வ வியாபியல்லாதிருந்தாலும் அவனுடைய சித்தம் அகில உலக அளவிலும் செயல்படுத்தப்படுகிறது. சாத்தானின் தூதுவர்கள் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்துகிறார்கள். அவனே அவர்களுடைய தலைமைத் தளபதி. எபே.6:12 இல் “துரைத்தனங்களும் அதிகாரங்களும்” என்று குறிப்பிடப்பட்டிருப்பது இந்த வானத்திலிருந்து விழத்தள்ளப்பட்ட தேவ தூதர்களையே. இது சாத்தானின் தூதுவர்கள். நன்றாகத் திட்டமிடப்பட்டு ஒழுங்குபடுத்தப் பட்ட ஒரு சேனை. அது பற்பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. துரைத்தனங்கள் என்பது ஆட்சி செய்கிறவர்களைக் குறிக்கும்.

அதிகாரங்கள் என்பது அதிகாரிகளைக் குறிக்கும். இவ்விதமாகத் துரைத்தனங்களும், அதிகாரங்களும் என்பது சாத்தானின் சாம் ராஜ்யத்தில் ஆளுகை, அதிகாரம் என்பவற்றின் உயர்வான இடத்தைக் காட்டுகின்றன. “அந்தகார லோகாதிபதிகள்” என்னும் வார்த்தைகள் என்பது இந்த அந்தகார உலகின் ஆளுநர்களையே குறிக்கிறது. நமது போராட்டமானது உயர்ந்த இடங்களில் உள்ள ஆவிக்குரிய கொடுமைகளுக்கெதிராக நடக்கிறது என்பதில் வியப்பொன்றுமில்லை (வச.12) இதைத்தான் “வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” என்று வசனம் கூறுகிறது.

எபேசியர் 6:12 வசனத்தில் “வான மண்டலங்கள்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்கச் சொல்லின் பொருள் “உன்னதங்கள்” என்று கீழ்க்கண்ட வசனங்களில் காணப்படும் சொல்லுக்குச் சமமானது எபே.1:3,20; 2:7; 3:10. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் ‘பரலோக இராஜ்யம்’ என்னும் இடம் குறிக்கப்பட்டாலும், பரலோகத்தின் இன்னொரு பகுதி இங்கு குறிப்பிடப்படுகிறது. 2 கொரி.12:2 லிருந்து மூன்று வானங்கள் உண்டு என்று அறிகிறோம். பவுல் “கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் (பவுல்தான்) பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம் வரைக்கும் எடுக்கப்பட்டான்”. இந்த மூன்றாம் வானம்தான் தேவாதி தேவனின் மகிமை பொருந்திய இருப்பிடமாகும். இரண்டாவது வானம் நட்சத்திர மண்டலப் பகுதி வானம். (Stellar Heaven) மூன்றாவது வானம் பூமியைச் சுற்றிலும் இருக்கும் வானவெளி.

துரைத்தனங்களும், அதிகாரங்களும் வான மண்டலங்களில் இருந்தாலும், ஒரு விசுவாசிக்குக் கிறிஸ்துவோடுள்ள இருப்பிடம் இவைகள் எல்லாவற்றுக்கும் மேலானது. எபேசியர் 1:20, 21 வசனங்களின்படி, “எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத் தக்கதாக, அவரை உன்னதங்களில் தம்முடைய வலது பாரிசத்தில் உட்காரும்படி செய்தார்” என்று பார்க்கிறோம்.

“என்னுடைய பிதாவின் வீடு” என்று இயேசு குறிப்பிட்டது இந்த மூன்றாம் வானமே (யோவான் 14:2). அங்குதான் கிறிஸ்து தமது பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். கிறிஸ்துவோடு நமக்குள்ள ஐக்கிய இடம் இதுவே. ஆவிக்குரிய நிலையில் நாம் கிறிஸ்துவோடு ஒன்றாய் இருக்கப்போகிற இடமும் இதுவே. எனவே நாமும் அவருக்குள் (கிறிஸ்து) ஆவிக்குரிய அதிகாரத்துடன் சாத்தானின் எல்லா சக்திகளுக்கும் மேலாக இடம்பெற்றிருக்கிறோம். இது விசுவாசத்தின் மூலம் நமக்குக் கிடைக்கும் இடமாகும்.

சாத்தானின் உறைவிடம்

சாத்தான் – அப்போது அவன் பெயர் “லூசிபர்”. அவன் தேவனோடு மூன்றாம் வானத்தில் வாழ்ந்த காலம் ஒன்று உண்டு. ஏசாயா 14:12 முதல் 14 வரை உள்ள வசனங்களில் மூன்றாம் வானத்திலிருந்து சாத்தான் விழுந்த நிகழ்ச்சியை ஏசாயா கூறியுள்ளார்.

“அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே”.

எசேக்கியேல் 28:14,15 வசனங்கள் லூசிபர் பாவமில்லாதவனாகச் சிருஷ்டிக்கப்பட்டான் எனக் கூறுகின்றன. “நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய். நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்”.

சாத்தான் மூன்றாம் வானத்தில் குடியிருப்ப தில்லை. ஆனால் தேவனிடத்தில் விசுவாசம் உள்ள பரிசுத்தவான்கள் மீது குற்றம் சுமத்தும்படி அங்கு செல்ல அவனுக்கு முடியும். யோபு 1:6 முதல் 12 வசனங்களையும் 2:1 முதல் 7 வசனங்களையும் வாசித்துப் பாருங்கள். தேவ வாசஸ்தலமாகிய மூன்றாம் வானத்திலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்ட சாத்தானுக்கு இப்போது முதலாவதும் இரண்டாவதுமான வானங்கள் இருப்பிடமாக உள்ளன. முதலாம் வானமாகிய பூமியைச் சுற்றிய விண்வெளி மண்டலத்தையும், இரண்டாம் வானமாகிய நட்சத்திர மண்டல வட்டாரத்தையும் சாத்தான் சுற்றி வருகிறான். இங்கு, அவன் “ஆகாயத்து அதிகாரப் பிரபு” என அறியப்படுகிறான் (எபே.2:2).

வரப்போகும் உபத்திரவ காலத்தில் சாத்தானும் அவனுடைய தூதர்களும் முதலாம், இரண்டாம் வானங்களிலிருந்து பூமியில் விழும்படி தள்ளிவிடப்படுவார்கள் (வெளி.12:9). “உலக மனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்”.

மிகாவேலும் அவனுடைய தூதர்களும், சாத்தானும் அவனுடைய தூதர்களும் மோதி நடத்தப் போகிற யுத்தத்தைக் குறித்து எழுதப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தை தரிசனத்தில் கண்டு தீர்க்கதரிசனமாக அப்போஸ்தலனாகிய யோவான் கூறுவதைக் கேளுங்கள். “அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும் பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான்” (வெளி.12:10).

பூமியிலே தள்ளப்படும்போது சாத்தான் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறான் என்று கவனித்துப் பாருங்கள்: “மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்” (வெளி.12:11). கிறிஸ்து தம்முடைய இரத்தத்தைச் சிலுவையில் சிந்தியபோது, சாத்தானை முற்றிலும் நியாயந் தீர்த்துவிட்டபடியால், சாத்தானுக்குக் கிறிஸ்துவின் மரணத்தால் சம்பாதிக்கப்பட்ட நன்மைகள் மீது எந்த அதிகாரமும் இல்லை. அல்லது கர்த்தருடைய வார்த்தைக்கு எதிராகவும் எந்த அதிகாரமும் இல்லை.

பரலோகத்திலிருந்து இந்தப் பூமிக்குச் சாத்தானும், அவனுடைய தூதர்களும் தள்ளப்பட்டபோது, சாத்தானின் முழு வேகத்தையும், உக்கிர கோபத்தையும் காணமுடியும். ஏனென்றால், “.. பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்கால மாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக் கேட்டேன்” (வெளி.12:12). இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் மகா உபத்திரவகாலத்தில்தான் நடைபெறும். அப்பொழுது இயேசுகிறிஸ்துவின் திருச்சபை இந்த உலகத்தில் இராது. உபத்திரவ காலம் ஆரம்பிக்கும் முன் திருச்சபையானது எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும்.

எனவேதான் 12ஆம் வசனத்தில் இப்படிக் கூறப்பட்டிருக்கிறது: “ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள்”. இந்த வார்த்தைகள் கிறிஸ்துவுடன் பரலோகத்திலிருக்கும் திருச்சபைக்குக் கூறப்படுகின்றன. அதே நேரத்தில் பூமியெங்கும் மகா உபத்திரவத்தால் தவித்துக் கொண்டிருக்கும்.

(தொடரும்)

மொழியாக்கம்: G.வில்சன்

சத்தியவசனம்