ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

ஜனவரி-பிப்ரவரி 2016

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இப்புதிய வருடத்திலும் இவ்விதழின் வாயிலாக தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சத்தியவசன விசுவாசபங்காளர்கள் நேயர்கள் யாவருக்கும் இப்புதிய ஆண்டு ஆசீர்வாதமான ஆண்டாக அமைய வேண்டுதல் செய்கிறோம். கடந்த ஆண்டு முழுவதும் சத்தியவசன ஊழியத்தை ஜெபங்களினாலும் நன்கொடையினாலும் ஆதரவளித்து வந்த அனைத்து பங்காளர்கள் ஆதரவாளர்கள் யாவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எதிர்பாராத காரணங்களால் இவ்வாண்டின் காலண்டரை சரியான நேரத்தில் பங்காளர்களுக்கு அனுப்பி வைக்க முடியாத சூழ்நிலைக்காக வருந்துகிறோம். இம்மாத இறுதியில் அனைவருக்கும் அனுப்பி வைக்கிறோம். இதுவரையிலும் தாங்கள் இந்த ஊழியத்தை ஜெபத்தினால் தாங்கி வந்ததுபோல இந்த ஆண்டிலும் ஜெபத்தினாலும் காணிக்கையினாலும் தாங்க அன்பாய் கேட்கிறோம். ஊழியத்தில் ஏற்பட்ட நிதி பற்றாக்குறையின் நிமித்தம் ஞாயிற்றுகிழமை புதுயுகம் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளை பிப்ரவரி மாதத்திலிருந்து தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவிலே நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பாவதற்கு ஜெபத்தோடு முயற்சிக்கிறோம். நீங்களும் ஜெபிக்க வேண்டுகிறோம். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்தின் அட்டவணைப்படி வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் உங்கள் பெயர்களை தெரியப்படுத்துங்கள். மார்ச் ஏப்ரல் மாத தியானபுத்தகத்தில் பெயர்களை பிரசுரம் செய்வோம் என்பதையும் தங்களுக்கு அறியத் தருகிறோம்.

இவ்விதழில் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்த தேவனுடைய அநாதிதிட்டத்தைப் பற்றிய செய்தியை Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதியுள்ளார்கள். புதிய ஆண்டில் பிரவேசித்திருக்கிற நமக்கு சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் ‘தூக்கியெடுத்து உயர்த்துகிறார்’ என்ற சிறப்புச்செய்தியைத் தந்துள்ளார்கள். கிறிஸ்துவுக்குள்ளாக நாம் எவ்வளவு சிலாக்கியங்களைப் பெற்றிருக்கிறோம் என்பதை விவரித்து சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் சிறப்புச் செய்தியை எழுதியுள்ளார்கள். இலக்கை நோக்கி ஓடுகிற நமது கிறிஸ்தவ ஓட்டத்திலே நமக்குத் தேவையான சிறப்பான ஆலோசனைகளை சகோ.உதயகுமார் அவர்கள் எழுதியுள்ளார்கள். ‘ஆண்டவரின் இன்பமான வழிகள்’ என்ற தலைப்பில் 1ஆம் சங்கீதத்திலிருந்து வேத விளக்கவுரைகளை வேத ஆராய்ச்சியாளர் வசந்தகுமார் அவர்கள் எழுதியுள்ளார்கள். Dr.தியோடர் எச்.எஃப். அவர்கள் எழுதிய ‘விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம்’ என்ற தொடர்செய்தியும் இடம் பெற்றுள்ளது. இக்கட்டுரைகள் யாவும் யாவருக்கும் ஆசீர்வாதமாக இருக்க ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்
சத்தியவசனம்