கிறிஸ்துவின் வருகையைக் குறித்த தேவனுடைய அனாதித் திட்டம்!

Dr.உட்ரோ குரோல்
(ஜனவரி-பிப்ரவரி 2016)

இன்னும் ஒரு புதிய ஆண்டினை நாம் காண நமக்கு ஜீவனை அருளிய தேவனுக்கு நன்றி கூறி உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேவனுடைய திட்டங்கள் உலகத்தோற்றத்துக்கு முன்னரே உருவாக்கப்பட்டுவிட்டன. அவர் உங்களைப் பற்றியும் என்னைப் பற்றியும் கொண்டுள்ள எதிர்காலத்தின் காரியங்களை 1தெசலோனிக்கேயர் 4ம் அதிகாரத்தில் நாம் காணலாம்.

கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக மரித்தவர்களைப் பற்றி அப்.பவுல் இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் தெசலோனிக்கேயில் இருந்தபொழுது, தேவனுடைய வார்த்தையைப் பற்றியும் நித்திய ஜீவனைப்பற்றியும். ஆண்டவராகிய இயேசு அளிக்கும் அழிவில்லாத வாழ்வைப்பற்றியும் அவர்களுக்குப் போதித்தார். ஆனால் அவர் அங்கிருந்து சென்ற பின்பு அச்சபையினரில் சிலர் மரித்துவிட்டனர். எனவே அம்மக்களுக்கு குழப்பம் உண்டானது. இக்குழப்பத்தை நீக்குவதற்காக அவர் இந்த நிருபத்தை எழுதினார்.

“சகோதரர்களே! இறந்தோர்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நம்பிக்கை இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக்கூடாது”. முதலாவதாக தேவன் உங்களைத் தமது சிந்தையில் வைத்துள்ளார் என்பதையும், இறந்தவர்களுக்கு என்ன நேரிட்டது என நீங்கள் அறியாதிருக்கவும் கூடாது. கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களைப் பற்றி வேதாகமம் அநேக இடங்களில் குறிப்பிட்டுள்ளது. அதாவது அவர்கள் கிறிஸ்துவை தமது இரட்சகராக ஏற்றுக்கொண்ட பின்னர் மரித்துவிட்டனர். அவர்களுடைய ஆவி சரீரத்தைவிட்டு நீங்கி தேவனிடம் சென்றுவிட்டது. சரீரம் மண்ணுக்கு மண்ணாக கல்லறைக்கு சென்று மற்றொரு நிகழ்வுக்காகக் காத்திருக்கிறது.

“இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; (இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் இவை நற்செய்தியின் ஒரு பகுதி) அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடே கூடக் கொண்டு வருவார்” (1தெச.4:14).

“கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள் மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். ஆகையால் இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள் (15-17)”. இவை அப்.பவுலின் சொந்த கருத்து அல்ல; வசனம் 15இல் கூறப்பட்டபடியே இது அவருக்கு தேவன் வெளிப்படுத்தினதாகும். இதுவே தேவனுடைய அனாதி திட்டம்!

இவ்வாறாக இது தேவனுடைய திட்டமாக இருப்பின் நாம் அதனை கவனமாகக் குறித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அது அப்.பவுலின் காலத்துக்கும் மார்டின் லூத்தர் காலத்திற்கும் கடந்த நூற்றாண்டு இந்த நூற்றாண்டு மற்றும் அனைத்து காலத்திலும் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். நமது காலத்திலேயே கிறிஸ்து மீண்டும் வருவார் என நாம் எதிர்பார்த்து வாழவேண்டும்.

அவர் பிரதான தூதராகிய மிகாவேலையோ காபிரியேலையோ தூதர்களின் சேனைகளையோ அனுப்பலாம். ஆனால் அவ்வாறில்லாமல் இயேசுகிறிஸ்து தாமே நேரடியாக வருகிறார். அவர் ஒலிவ மலையின் மேல் நின்று பிதாவினிடத்துக்கு வானங்களின் வழியாக பரத்துக்கு ஏறிச்சென்றார் (அப்.1:9,10). எதிரியான “ஆகாய மண்டலத்து அதிபதியான” சாத்தானின் எல்லையைக் கடந்து சென்றார் என கூறலாம். நாமும் இந்த உலகத்திலிருந்து வானத்துக்குச் செல்லும்பொழுது சாத்தானின் பயங்கரமான எல்லையைக் கடந்தே செல்லவேண்டும். நம்மை கிறிஸ்து பரத்துக்கு அழைக்கும் பொழுது, மேலேயிருந்துகொண்டே கூப்பிட மாட்டார். நம்மை அழைத்துச் செல்ல அவர் தாமே நம்மிடம் வருவார்.

இரண்டாவதாக, அங்கு எழும் ஒலிகளை கவனியுங்கள். அங்கே பிரதான தூதரின் சத்தம், தேவ எக்காளத்தின் சத்தம் ஆகியவை உண்டு. இந்த சப்தம் கிரேக்க மொழியில் ஒரே சத்தமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஒரு கட்டளை; இக்கட்டளையின் சத்தம் பிரதான தூதரின் சத்தமாகும். பழைய ஏற்பாட்டில் படைகளை அணி வகுக்க எக்காளம் ஊதப்பட்டது. இந்த தேவ எக்காளம் தேவபிரசன்னத்தை இஸ்ரவேல் ஜனங்களுக்கு அறிவிக்கப்பட்ட ஒரு கருவியாக இருந்தது. அவர்கள் அனைவரும் தேவ கட்டளையைக் கேட்பதற்கு ஒன்று கூடினர். இதனை எண்ணாகமம் 10, 31 மற்றும் வேறு சில அதிகாரங்களிலும் நீங்கள் வாசிக்கலாம். இதுவே ஆண்டவருடைய வருகையின் ஒழுங்கு!

“கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” (1தெச.4:16,17).

மரித்தவர்கள் உயிரோடிருப்பவர்களுக்கு முந்திக்கொள்ளுவர். பின்பு உயிரோடிருக்கும் நாம் கர்த்தருடனேகூட இருப்போம்.

இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டு மரித்துவிட்ட நமது பெற்றோரோ, உடன் பிறந்தவர்களோ பிள்ளைகளோ மரித்திருந்தாலும் அவர்கள் என்றும் அழிந்துவிடவில்லை. அவர்களுடைய சரீரங்கள் உயிர்த்தெழுந்து ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடம் ஏற்கனவே சென்றுள்ள ஆவியுடன் இணைந்து கொள்ளும். நீங்களும் நானும் அவர்களுடன் ஆகாயத்தில் இணைந்து என்றென்றும் அவருடன் இருப்போம்.

நமக்கு அருமையானவர்களின் மரணம் ஒரு நிரந்தரமான பிரிவு அல்ல; உயிர்த்தெழும் பொழுது நாம் மீண்டும் அவர்களை சந்திப்போம். எனவேதான் பவுல் இப்பகுதியை “ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்” என்று இறுதியாகக் கூறி முடிக்கிறார்.

இப்பகுதியில் ரேப்சர் (Rapture)  ‘இரகசிய வருகை’ என்ற சொல் காணப்படவில்லை. ஆனால், வசனம் 17ல் “பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக்கொள்ளப்பட்டு” என்று எழுதப்பட்டுள்ளது. இதற்குரிய கிரேக்க வார்த்தை ஹார்பசோ (Haspazo) என்பதாகும். இதன் பொருள் என்னவெனில் ‘எடுத்துச்செல்லுதல்’ “பறித்துக் கொள்ளுதல், பிடுங்குதல்” என்பதாகும். அதாவது கரைபுரண்டு ஓடும் வெள்ளத்திலிருந்து ஒருவரை பலவந்தமாய் பற்றி இழுத்து கரை சேர்ப்பதாகும். இவ்வார்த்தை யோவான் 6: 15 இலும் காணப்படுகிறது. “அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்”. இது “பலவந்தமாய் மக்களிடமிருந்து பிரித்துக்கொண்டு போதல்” என்ற பொருளையுடையது. மீண்டும் யோவான் 10:28,29இல் பிதாவின் கரத்தில் சீஷர்களின் பாதுகாப்பு உள்ளது என்பதனை போதிக்கிறார்:

“நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப் போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என்பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது”.

“கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம் வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார். அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன். அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார் (2கொரி.12:2-4).

இங்கு பவுல் தம்மைப் பற்றிக் கூறுகிறார். அவர் ‘எடுக்கப்பட்டான்’ என்ற சொல்லைப் பயன் படுத்துகிறார். அதாவது பூமியிலிருந்த ஒரு மனிதன் வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான். இதுவே வசனம் 17இல் காணப்படும் இலத்தீன் வார்த்தையாகும்.

“சகோதரரே, இவைகள் நடக்குங் காலங்களையும் சமயங்களையுங்குறித்து உங்களுக்கு எழுத வேண்டுவதில்லை; இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்” என்று  5: 1 இல் நம்மை தைரியப்படுத்துகிறார். கர்த்தருடைய நாள் என்பதும் சபை எடுத்துக்கொள்ளப்படும் நாள் என்பதும் ஒன்றுதானா? சபை எடுத்துக் கொள்ளப்படும் நாள் என்று கூறியவர் அடுத்ததாக கர்த்தருடைய நாள் என்று கூறியுள்ளார்; எனவே ஒரே கருத்தையே வலியுறுத்துகிறார். என நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அது தவறு. 5:1இல் விசுவாசிகளுக்கு நடக்க இருப்பதை விளக்கிய பின்னர் அவிசுவாசிகளுக்கு  நேரிடுவது யாது என்ற ஐயம் நமக்கு எழலாம். பதிலை அப்.பவுல் நமக்கு அளிக்கிறார்.

சபை எடுத்துக்கொண்ட பின்னர் இவ்வுல கத்திற்கு நியாயத்தீர்ப்பைக் கொண்டுவரும் ‘கர்த்தருடைய நாள்’ என்பது ஒரு நீண்ட காலத்தைக் குறிக்கும். கர்த்தருடைய நாள் இரவில் திருடன் வருவதைப்போல இருக்கும். ஏனெனில், அது சபை எடுத்துக்கொள்ளப்பட்ட உடனேயே ஆரம்பித்துவிடும். நாம் ஒரு கண்ணிமைப்பொழுதில் மறுரூபமாவோம். வசனம் 3இல் தேவனுடைய நியாயத்தீர்ப்பு பூமியில் சீக்கிரமாய் வரும் என்பது மாத்திரமல்ல, நிச்சயமாகவும் நிகழும். “சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும் போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறது போல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப் போவதில்லை”(1தெச.5:3).

ஒரு தாயின் வயிற்றிலிருந்து குழந்தை பிறப்பதை எவ்வாறு நாம் தடுக்கமுடியாதோ அதுபோலவே இதையும் நாம் தடுக்கமுடியாது. மேலும் கர்த்தருடைய நாளை, “சகோதரரே, அந்தநாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக் கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே. நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள். நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே. ஆகையால் மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்” (வச.4-6). சபை எடுத்துக்கொண்ட பின்னர் தேவனுடைய நியாயத்தீர்ப்பு உடனடியாக துவங்கிவிடும். உங்கள் அயலகத்தார், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உங்களுடன் எடுத்துக் கொள்ளப்படாவிட்டால் அவர்கள் உடனடியாக நியாயத்தீர்ப்பினை அடைவர்.

“தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள். பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச் சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம். தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார். நாம் விழித்திருப்பவர்களானாலும், நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனே கூட நாம் ஏகமாய் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே” (1தெச.5:7-10). இது மாத்திரமல்ல, “ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்தி விருத்தி உண்டாக்கும்படி செய்யுங்கள்” ( வச.11).

இயேசுகிறிஸ்து மீண்டும் வந்து நம்மை அழைத்துச் செல்வார் என்பது ஓர் ஆறுதலின் செய்தியாகும். ஆனால் கர்த்தருடைய நாள் நிச்சயமாக வருகிறது; அது சீக்கிரமாக வருகிறது என்பது அதிர்ச்சியை அளிக்கிறது. நீங்கள் இரவுக்கு உரியவர்கள் அல்ல; பகலுக்குரியவர்கள். எனவே எடுத்துக்கொள்ளப்படுவீர்கள் என்பது நம் அனைவருக்கும் ஆறுதலை அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் தேவனுடைய இந்த திட்டத்தை அறிவது அவர்களுக்கு ஆறுதலை அளிக்க வேண்டும். என்று தெசலோனிக்கே சபைக்கு பவுல் எழுதியுள்ளார். பவுலிடமிருந்து அந்த நிருபத்தைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து அவர்கள் இயேசுகிறிஸ்து எந்த வேளையிலும் வருவார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

இப்பொழுது இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. தேவன் தமது திட்டத்தை மாற்றியிருப்பாரா? இல்லை. தேவனுடைய காலங்களை நாம் பார்க்கும் கோணத்தை மாற்றியிருக்கிறது. இயேசுகிறிஸ்து இன்று வருவார் என நாம் எதிர்பார்த்திருக்கிறோம். ஒருவேளை அவர் வராவிட்டால் நான் ஏமாந்து போகமாட்டேன். தேவவார்த்தையால் மக்களை ஆறுதல்படுத்த எனக்கு மற்றொரு நாள் கொடுக்கப்பட்டுள்ளது என எண்ணிக்கொள்வேன்.

இவைகள் உங்களுக்கு ஆறுதலைத் தரும் என நான் நம்புகிறேன். இந்த வெற்றி நாம் போராடிப் பெறுவதில்லை. நமது இரட்சகருடன் நாமும் சேர்ந்து, சாத்தானை எதிர்த்து போராடி வெற்றியைப் பெறுவோம். அவர் ஜெயம் பெறுவதால் நாமும் ஜெயம் பெறுகிறோம். அவர் வரும்போது நாமும் அவருடன் வருவோம். அவர் அங்கே இருக்கிறார்; நாம் இங்கே இருக்கிறோம். அவருடன் வந்து போரில் வெற்றியடையவேண்டுமெனில் இங்கிருந்து நாம் அங்கே அவரிடம் செல்ல வேண்டும். நாம் இருக்கும் இவ்விடத்திலிருந்து ஆகாயமண்டலத்தில் அவருடன் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அவரது வருகை மிகச் சமீபமாயிற்று என்பதை நினைவில் கொண்டவர்களாய் அவருடைய வருகைக்கு நாம் எப்பொழுதும் ஆயத்த மாயிருக்க வேண்டும்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்